ஊரையே வகுப்பறையாக மாற்றிய ஆசிரியர்!



மேற்கு வங்க மாநிலம் பர்ஷான் பர்தான் மாவட்டத்தில் பழங்குடியின கிராமம் ஒன்று உள்ளது. கொரோனா ஊரடங்கால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த பழங்குடியின மாணவர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் வித்நாராயண் நாயக் என்பவர் புது வழி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ஊர் முழுவதும் உள்ள வீடுகளின் சுவர்களில் கரும்பலகையை வரைந்து அதையே வகுப்பறையாக மாற்றியிருப்பதோடு, பாடம் படிக்க வருகை தரும் மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கி வீட்டுத் திண்ணைகளிலே அவர்களை இடைவெளி விட்டு அமரவைக்கிறார்.

திண்ணைகளில் இடம் இல்லையென்றால் திண்ணை ஓரம் உள்ள தெருவில் மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர். பின்னர் ஆசிரியர் நாயக் வீதிகளில் நடந்தபடியே மாணவர்களுக்கு பாடம் நடத்தி மாணவர்கள் கரும்பலகையில் எழுதப் பயிற்சி தருகிறார்.

ஆன்லைனில் பாடம் கற்க ஸ்மார்ட் போன்கள், போதுமான இணைய இணைப்புகள் இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு திறந்த வெளியில் வைத்து பாடம் கற்றுக் கொடுப்பதாகத் தெரிவிக்கும் இவர், தன் கைவசம் உள்ள இரண்டு மடிக் கணினிகளை வைத்தும் பாடம் எடுக்கிறார். வகுப்பு முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் அவர்களை உடற்பயிற்சி செய்ய வைத்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.

மகேஸ்வரி நாகராஜன்