றெக்க கட்டி பறக்குதய்யா அண்ணாமலை சைக்கிள்... எளிய மக்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் சென்னை சைக்கிளிங் குழு!



‘‘சென்னையில் அன்றாடத் தேவைக்காக சைக்கிளை பயன்படுத்துறவங்க நிறையப் பேர் இருக்காங்க. அவங்க தினமும் சாலைகள்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாங்க. நாம்தான் அவங்கள பெரிசா கவனிக்கிறதில்ல. இவங்கள பொதுவெளியில் காட்டவும், இவங்கள இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டு நிறைய பேர் சைக்கிள் வாங்க முன்வருவாங்கனு நினைச்சும், சின்னச் சின்ன பயணத்திற்காக இனி சைக்கிள் பயன்படுத்தணும்ங்கிறதை வலியுறுத்தவும் இந்த ‘அண்ணாமலை புரொஜெக்ட்டை’ கையிலெடுத்திருக்கோம்...’’ இயல்பாகப் பேசுகிறார் திவாகரன்.
டபுள்யூ.சி.சி.ஜி எனப்படும் வி ஆர் சென்னை சைக்கிளிங் குரூப்பின் நிறுவன உறுப்பினர் இவர். உடல்ஆரோக்கியத்திற்காகவும், பயணத்திற்காகவும் சைக்கிளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் சைக்கிளிங்கை ஊக்கப்படுத்தி வரும் நம்பிக்கைக் குழு இவருடையது.

இப்போது இவரின் குழு வாழ்வாதாரத்திற்காக சைக்கிள் தேவைப்படுவோருக்கு இலவசமாக சைக்கிள் வழங்கத் தொடங்கியிருக்கிறது. அதுவே, ‘அண்ணாமலை புரொஜெக்ட்’. கடந்த இரண்டு மாதங்களில் ஒன்பது பேருக்கு சைக்கிள் வழங்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. ‘‘இந்த வி ஆர் சென்னை சைக்கிளிங் குரூப்பை ஐந்து நண்பர்கள் சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு அண்ணாநகர்ல ஆரம்பிச்சோம். சைக்கிளிங்கை ஊக்கப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடங்கப்பட்ட குழு இது.

இப்ப ஒன்பது ஆண்டுகள் நிறைவடைஞ்சிருக்கு. சென்னைக்குள் வெவ்வேறு ஏரியாக்களில் 19 சேப்டர் இருக்கு. எங்க கான்செப்ட்டே அக்கம்பக்கத்தில் சைக்கிள் ஓட்டணும் என்
பதுதான். இப்ப நாங்க எல்லாம் சேர்ந்து இந்த அண்ணாமலை புரொஜெக்ட்டை முன்னெடுத்திருக்கோம்.

எங்களுடன் ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த பிஒய்சிஎஸ் குழுவால் நியமிக்கப்பட்ட சென்னையின் சைக்கிளிங் மேயரான ஃபெலிக்ஸ் ஜானும் இணைந்திருக்கார். விரைவில், அனைத்து சைக்கிளிங் குழுவுடன் சேர்ந்து இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய இருக்கோம்...’’ என்கிற திவாகரன், திட்டம் பற்றி விரிவாகப் பேசினார்.  

‘‘ரஜினி சார் நடிச்ச ‘அண்ணாமலை’ படத்தின் பெயரைத்தான் திட்டத்திற்கு வச்சிருக்கோம். அதுல ரஜினி சார் பால்காரரா சாதாரண சைக்கிளை வச்சிக்கிட்டு வருவார். ஒருகட்டத்துல பெரிய பணக்காரனா ஆகிடுவார். அப்பவும் தன்னுடைய சைக்கிளை மறக்கமாட்டார். நம்ம சென்னையிலும் இந்த சாதாரண சைக்கிளை பயன்படுத்துறவங்க நிறையப் பேர் இருக்காங்க.

கடந்த கொரோனா முதல் அலையின்போது லாக்டவுன் போட்டப்ப எல்லா போக்குவரத்தும் நிறுத்திட்டாங்க. இப்ப ரெண்டாவது அலையின்போதும் நிறுத்தினாங்க. இதுல அதிகம் பாதிக்கப்பட்டது அன்றாட ஏழை எளிய மக்கள்தான்.

அவங்ககிட்ட டூவீலர் கிடையாது. முன்னாடி பொதுப் போக்குவரத்தான பஸ், ரயில்ல பயணிச்சு வேலைக்குப் போனாங்க. இந்நேரம் எந்த போக்குவரத்தும் இல்லாததால நடந்துதான் வேலைக்குப் போயிட்டு இருந்தாங்க. வெகுதூரமா போக வேண்டிய இடத்துக்குக் கூட நடந்தே போனாங்க.

இதையெல்லாம் நாங்க பார்த்தோம். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதனால, சாதாரண மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக யார் யாருக்கெல்லாம் சைக்கிள் தேவைப்படுதோ அவங்களுக்கு இலவசமா சைக்கிள் கொடுக்கலாம்னு யோசிச்சோம். உடனே இந்த புரொஜெக்ட் அண்ணாமலை திட்டத்தைத் தொடங்கினோம். இதை கடந்த ஆண்டே ஆரம்பிச்சிட்டோம். ஆனா, சில காரணங்களால வேகப்படுத்த முடியல. இந்தாண்டு அதை முன்னெடுத்திருக்கோம். இப்ப செருப்பு தைக்கிறவரோ, வாட்ச்மேனோ, செக்யூரிட்டியோ அல்லது நம் வீட்டில் வேலை செய்பவரோ அவங்க வேலைக்கு தினமும் 5 கிமீ தூரம் வரை நடந்தேதான் போகணும்.

அவங்களை அடையாளம் கண்டு அவங்களுக்கு சைக்கிள் ஸ்பான்சர் செய்றோம். இப்ப பஸ், ரயில் ஓட ஆரம்பிச்சிடுச்சு. இருந்தாலும் சைக்கிள்னு ஒண்ணு இருந்தால் போக்குவரத்துக்காக செலவழிக்கிற காசு மிச்சமாகும். அதுக்காக காத்திருக்கிற நேரமும் குறையும். மிச்சப் பணத்தை அவங்க வேறெதாவது செலவுக்குப் பயன்படுத்திக்கலாம். இதை பின்புலமா வச்சு நன்கொடையாளர்கள், பயனாளர்கள் என்கிற கான்செப்ட்ல இந்த சைக்கிளை வழங்குறோம்.  

இதுல நீங்க ஒருத்தருக்கு சைக்கிள் ஸ்பான்சர் செய்ய பங்கெடுக்கலாம். அல்லது, பயனாளருக்காக விண்ணப்பம் செய்யலாம். அதாவது, உங்க வீட்டுக்கு வேலைக்கு வர்ற சமையல்காரங்களுக்கோ, மெக்கானிக்கிற்கோ, பிளம்பருக்கோ, யாருக்கு வேணும்னாலும் இருக்கலாம். அவங்களால் சைக்கிள் வாங்க முடியாது. ஆனா, சைக்கிள் இருந்தால் உதவியா இருக்கும்னு நினைப்பாங்க. அவங்களுக்காக நீங்க விண்ணப்பிக்கலாம். அதை அடிப்படையா வச்சு நாங்க ஸ்பான்சர் பண்ணுவோம்.

இந்த விண்ணப்பத்தை கூகுள் ஃபார்ம் வழியா செய்றோம். அதனால, எளிய மக்களால் இதைப் பார்த்து விண்ணப்பம் செய்ய முடியாது. அதனாலயே, இன்னொருவர் ரெஃபர் பண்ணலாம்னு சொல்றோம். இல்லனா எங்க வெப்சைட் போய் எங்க நம்பருக்கு போன் பண்ணலாம். எங்களுக்கு விண்ணப்பம் வந்ததும் எங்க டீம் நேரில் போய் சரிபார்ப்பாங்க. அவங்க தேவை என்ன... வேலைக்காக எவ்வளவு தூரம் போகவேண்டி இருக்கு... இப்ப எப்படி போயிட்டு இருக்காங்க... தவிர, சைக்கிள் ஏற்கனவே இருக்கா... இதையெல்லாம் கேட்டு தெரிஞ்சுப்பாங்க. அப்புறம், சைக்கிள் வாங்கமுடியாதுனு தெரிஞ்சதும் நாங்க சரிபார்த்திட்டு சைக்கிள் வழங்குறோம்.

இப்ப டபுள்யூ.சி.சி.ஜி ஒன்பதாவது ஆண்டு நிறைவடைஞ்சதை ஒட்டி இதைக் கொண்டாடும்விதமா, எங்க குரூப்பே 9 சைக்கிளை ஸ்பான்சர் செய்திருக்கு. அடுத்து, முப்பது விண்ணப்பங்கள் வரை வந்திருக்கு. அதை ப்ராசஸ் பண்ணி சீக்கிரமே ஸ்பான்சர் செய்வோம்...’’ என உற்சாகமாகக் குறிப்பிடும் திவாகரன் பயனாளிகள் பற்றி குறிப்பிட்டார்.  

‘‘பாபுனு கோடம்பாக்கம் பாம்குரோவ் பக்கத்துல செருப்பு, ஷூக்கள் தைக்கிற தொழிலாளி இருக்கார். இவரின் வீடு பெரும்பாக்கத்துல இருக்கு. தினமும் அங்கிருந்து பஸ்ல வந்திட்டு இருக்கார். காலையில் ரெண்டு மணி நேரம், இரவு ரெண்டு மணி நேரம்னு பயணிக்கணும். இந்தக் கடையை முப்பது ஆண்டுகளாக நடத்திட்டு இருக்கார். அதை அவர் மாற்ற விரும்பல.

லாக்டவுன் நேரத்துல இந்த இடத்திற்கு பெரும்பாக்கத்திலிருந்து நடந்தேதான் வந்திருக்கார். அவருக்கு வயசு 72. அவர் சைக்கிள் நல்லா ஓட்டுவார். இவருக்காக ஹரிப்ரியானு ஒருத்தங்க விண்ணப்பம் செய்தாங்க. இவங்க சைக்கிளிங் குரூப்ல இருக்காங்க. இப்படி நண்பர்கள் வழியாதான் இப்போதைக்கு நாங்க விண்ணப்பங்களைப் பெறுகிறோம். உடனே, அவருக்கு ஸ்பான்சர் வழியா சைக்கிள் கொடுத்தோம்.

அடுத்து, அம்பிகானு ஒருத்தங்க கீழ்க்கட்டளையில் இருக்காங்க. இவங்க மாற்றுத்திறனாளி. கொஞ்சம் கஷ்டப்பட்டு நடப்பாங்க. ஆனா, சைக்கிள் நல்லா ஓட்டுவாங்க. வீட்டு வேலைக்குத்தான் போறாங்க. சைக்கிள் வாங்க அவங்களுக்கு காசில்ல. உடனே, அவங்க விண்ணப்பத்தைப் பார்த்து சைக்கிள் வழங்கினோம். இனி, வீட்டு வேலைக்குப் போறதுக்கு அவங்களுக்கு சிரமம் இருக்காது.
நாங்க சைக்கிள் வழங்கின ஒன்பது பேர்ல ரெண்டு பேர் பெண்கள்.

இப்ப சமீபமா வருகிற விண்ணப்பங்கள் எல்லாமே பெண்களா இருக்காங்க. பெரும்பாலும் வீட்டு வேலை செய்றவங்க. இவங்க ஒரு ஏரியாவிற்குள் ஐந்து வீட்டில் வேலை செய்வாங்க. ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்துதான் போகணும். சில வீடுகள் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இல்ல ஐந்து கிமீ தூரமாவும் இருக்கும். அதனால, ஒரு வீட்டுல வேலையை முடிச்சிட்டு இன்னொரு வீட்டுக்குப் போறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாகிடும். அவங்களுக்கு இந்த சைக்கிள் நிச்சயம் ஒரு வரப்பிரசாதமா இருக்கும்னு நினைக்கிறோம்.   

இந்த சைக்கிள் பழசோ, புதுசோ, எதுவா இருந்தாலும் ஸ்பான்சர் பண்றோம். பொதுவா, பயணத்திற்கு சைக்கிள் வேணும். அது ஓட்டுகிற நல்ல நிலையில் இருந்தால் போதும். அதனால, நன்கொடையாளர்கள் காசுதான் கொடுக்கணும்னு இல்ல. சைக்கிளாகவும் நன்கொடை செய்யலாம். அதை நாங்க பயனாளருக்குக் கொடுப்போம்...’’ என்கிறார் திவாகரன்.
‘‘எங்களுக்கு குறிக்கோள்னு எதுவும் கிடையாது. நிறைய கொடுக்கணும் என்பதுதான் நோக்கம். ஆனா, எடுத்ததும் மிகப்பெரிய அளவில் போகமுடியாது. மெதுவா போகலாம்னு ஆரம்பிச்சு
பண்றோம்.

இப்ப ஒன்பது ஸ்பான்சர் செய்திட்டோம். இந்த ஒன்பது நூறா மாறும். அடுத்து ஆயிரமா உயரும். ஆனா, எங்களைப் பொறுத்தவரை பக்கத்துல இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கிற சூப்பர் மார்க்கெட்டிற்கோ, உறவினர்கள் வீட்டிற்கோ காரிலோ, டூவீலரிலோ போறதைவிட சைக்கிளை பயன்படுத்துங்கனு கேட்டுக்கிறோம். எல்லாரும் அதிகமா சைக்கிள் பயன்படுத்த முன்வரணும்னு ஆசைப்படுறோம். அப்பதான் உடல் மட்டுமல்ல, மனமும் ஆரோக்கியமா இருக்கும். வாழ்விலும் சிறப்பா மிளிரமுடியும்...’’ நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் திவாகரன்.