அர்த்த சாஸ்திரம் வகுத்து கொடுத்த டாஸ்மாக் ப்ளு பிரிண்ட்!



அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்க ‘சுராதயக் ஷா’ என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்குகீழ் ‘அதயாக் ஷா’ எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறார் கவுடில்யர்.
மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினார். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமூகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும்.

மது அருந்தும் உயர்குடியினர் (nobles) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்...
இன்றைய டாஸ்மாக்கின் நடைமுறை அப்படியே ‘அர்த்த சாஸ்திரத்தை’ அடியொற்றி இருப்பதைக் காணலாம்.

இதனையடுத்து வந்த அனைத்து அரசுகளுமே குடியை அரசு கஜானாவை நிரப்பும் கண்ணியாகவே பார்த்தன. பிற்காலச்சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (அதாவது ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை 1902 - 03ம் ஆண்டுகளில் அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ.9,28,000 என உயர்ந்துள்ளது (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்).

1857ம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களைப் பயன்படுத்திப் பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளையும், வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டது. குடிநிர்வாகம் குறித்த ஆங்கிலேயரின் அணுகல் முறைக்கு அவர்கள் அயர்லாந்தில் 1799ல் மேற்கொண்ட முயற்சிகளே முன்னுதாரணமாக இருந்தது.

அதன்படி இந்தியாவில் சமுதாய அளவிலான குடி விவசாயங்களைத் தடை செய்து மையப்படுத்தப்பட்ட சாராய உற்பத்தி சாலைகள் ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமுமுள்ள பெருவியாபாரிகளிடம்’ ஒப்படைக்கப்பட்டன... சாராயக் கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது... அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது என்றும் -கள் உற்பத்தி மற்றும் கள் குடிக்கும் பழக்கத்தைப் படிப்படியாகக் குறைத்து ரசாயனங்களைக்கலந்து மதுவைத் தயாரிப்பது என்றும் முடிவுக்கு வந்தனர்.

இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினர். இதனையடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்துப் பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்துவந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் மும்பை மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியைத் தொடங்கியது. 1951ல் விட்டல் மல்லையா - விஜய் மல்லையாவின் தந்தை - இந்நிறுவனத்தை ‘முயன்று’ வாங்கினார். இப்படித்தான் நாடு முழுவதுமே சாராய முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.

1947 ஆகஸ்ட் 15க்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுச் செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது.
இவை எல்லாம் கடந்தகால விவரங்கள் மட்டுமல்ல, இன்றைய நிதர்சனமும் கூட. எனவேதான்,அதிகாரங்கள் மாறினாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், வருவாய்க்கு ‘குடி’யையே சார்ந்து நிற்கின்றனர்.இந்த நிலை மாறி, அரசுக்கான வருவாயை பல்வேறு துறைகளின் மூலம் பெற முயலும் போதே - அதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தும்போதே - எந்த ஒரு அரசாங்கத்தாலும் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.

கே.என்.சிவராமன்