இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை சரிகிறதா



ஆட்டோமொபைல் எனப்படும் போக்குவரத்து வாகனங்களின் சந்தை வளர்ச்சிதான் ஒரு சமூகத்தின் வளர்ச்சிப் பாதையின் இண்டிகேட்டர் என்பார்கள். அதாவது, ஒரு பொருளாதாரம் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அங்கு ஆட்டோமொபைல் சந்தை நன்றாக இருக்க வேண்டும்.
இந்நிலையில்தான் அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தங்களது வாகன உற்பத்தியை முற்றிலும் நிறுத்திக்கொண்டு இந்திய சந்தையைவிட்டு வெளியேறப் போவதாக சமீபத்தில் அறிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆண்டுதோறும் ஐந்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுள்ள தொழிற்சாலை இவர்களுடையது. இதில் வெறும் இருபது சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யும் அளவுக்குத்தான் அவர்களுக்கு இங்கு விற்பனை நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வாகனத் தேவையில் ஃபோர்டு நிறுவனத்தால் வெறும் இரண்டு சதவீத சந்தையையே வசப்படுத்த முடிந்தது. இத்தனைக்கும் இருபத்தைந்து ஆண்டு காலமாக இந்தச் சந்தையில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.இது தனிப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் வீழ்ச்சியா அல்லது இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் சரிவா என பொருளாதார நிபுணர்களுக்கு இடையே விவாதங்கள் நிகழத் தொடங்கிவிட்டன.
இந்தியாவில் தொடர்ந்து வரும் பொருளாதாரப் பின்னடைவு நாளுக்கு நாள் கூர்மையடைவது, வேலை வாய்ப்பு குறைந்து வருவது, மக்களின் வாங்கும் சக்தியில் உருவாகிவரும் மந்தம் ஆகியவை காரணமாக இந்தியாவில் தங்களுக்கு இனி எதிர்காலம் குறைவு என்று எண்ணி இந்த நிறுவனங்கள் வெளியேற முடிவு செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

ஏற்கெனவே 2017ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், ஹார்ட்லி - டேவிட்சன் பைக் தயாரிக்கும் நிறுவனமும் இந்தியச் சந்தையைவிட்டு வெளியேறிவிட்டன. இத்தனைக்கும் அப்போது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக ஹார்ட்லி- டேவிட்சன் போன்ற ஐகானிக் பைக் நிறுவனங்களுக்கு சிறப்பு இறக்குமதி சலுகைகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகுதான் இந்த வெளியேற்றம் நிகழ்ந்தது. ஆனால், இந்த அமெரிக்க பிராண்டுகள் வெளியேறுவதற்கு இவர்களின் விற்பனைக் குறைவுதான் பிரதான காரணம் என்று சொல்கிறார்கள்.

கால் நூற்றாண்டு கால நிறுவனமான ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறுவது தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கு ஒரு பின்னடைவு. அவரது மேக் இந்தியா ப்ராஜக்ட்டுக்கு கிடைத்த அடி இது. அதுவும் அவரின் அமெரிக்க பயணம் சமீபத்திருக்கும் தருணத்தில் இது நிகழ்ந்திருக்கிறது என்பது ஒரு தர்மசங்கடம்.

இதில் இன்னொரு பெரிய சிக்கலில் மாட்டியிருப்பது ஆட்டோமொபைல் டீலர்கள்தான். அவர்கள் சக்திக்கு பெரிய அளவில் முதலீடு செய்து, அட்வான்ஸ் தொகை கொடுத்து, இட வாடகை கொடுத்து, ஆட்களைப் பணியில் அமர்த்தி ஒரு பெரிய கட்டுமானத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். ஃபோர்டு நிறுவனத்தில் நேரடியாகப் பணியாற்றிய ஊழியர்களைவிட இந்த டீலர்களிடம் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

ஏற்கெனவே புதிய கார்களுக்கான முன்பதிவுகளைக்கூட நிராகரித்துவிட்டு மொத்தமாக கம்பெனியை இழுத்து மூடப்போவதாகச் சொல்லியுள்ளது ஃபோர்டு நிறுவனம்.
நிதியமைச்சகத்தின் ஒரு மூத்த அதிகாரி, ‘ஃபோர்டு வெளியேறி இருப்பதற்கு அவர்களின் திறனற்ற நிர்வாகம்தான் காரணம். மற்றபடி இந்தியாவின் ஆட்டோ மொபைல் சந்தை நன்றாகவே உள்ளது...’ என்று சொல்லியிருக்கிறார்.

இது உண்மை என்று சொன்னால், 2019 - 20ம் ஆண்டில் இந்தத் துறை ஏன் முப்பது சதவீதம் சரிவடைந்திருக்கிறது..? கொரோனா என்பார்கள். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல என்பதுதான் நிதர்சனம்., 2018 - 19ம் நிதியாண்டில் இந்தியாவில் நாற்பது லட்சம் கார்கள் தயாராகின. அது அடுத்த ஒரே ஆண்டில் முப்பது லட்சம் கார்களாகக் குறைந்துவிட்டது. கொரோனாவுக்குப் பிறகு இந்த சந்தை மேலும் மோசமாகிவிட்டது. இந்த ஆண்டில் மிகச் சிறிய அளவில் ஒரு மாற்றம் உருவாகியிருக்கிறதுதான்.

ஆனால், பெரு நிறுவனங்களை மகிழ்ச்சிப்படுத்தும் அளவுக்கான பெரிய முன்னேற்றம் எல்லாம் எதுவுமில்லை. சீனா போன்ற பெரும் சந்தைகளோடு ஒப்பிடும்போது நம் சந்தை ஒன்றுமே இல்லை. அங்கு ஆண்டு தோறும் இரண்டு கோடி கார்கள் உற்பத்தியாகின்றன. இந்த அளவுக்கு நம் சந்தையும் பெருகினால் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்த சந்தையில் ஊக்கமுடன் இறங்குவார்கள்.எனவே, நிதியமைச்சகத்தின் தரப்பான இந்திய ஆட்டோ மொபைல் சந்தை வளர்ந்து வருகிறது என்ற கூற்று சிறு விள்ளல் உப்பின் அளவுக்கே உண்மை.

சரி... ஒரு பேச்சுக்கு ஃபோர்டு வேண்டுமானால் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு அவர்களின் திறனற்ற நிர்வாகமும் ஒரு காரணம் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், உலகம் முழுதும் ஜாம்பவானாக இருக்கும் டொயோட்டா ஏன் இங்குள்ள சந்தையில் வெறும் மூன்று சதவீதமே இருக்கிறது? கடந்த வருடம் இந்நிறுவனத்தின் இந்தியத் தலைமை, இந்தியாவில் தங்களது எதிகால முதலீடு எப்படி இருக்கும் என்பதை சொல்வது கடினம் என்றிருக்கிறது. இந்தியாவில் உருவாகச் சாத்தியமான கார்களின் தேவைக் குறைவு, உயர்ந்தபட்ச வரிகள் போன்றவை இதன் காரணங்கள் என்று அந்த நிறுவனம் குறை சொல்லியுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

வோல்க்ஸ்வேகன் நிறுவனமும் இதேபோல் பாதிக்கப்பட்டுத் தான் இருக்கிறது. மிகப்பெரிய முதலீட்டுடன் இந்தியாவில் களமிறங்கிய இந்நிறுவனம் நமது ஆட்டோமொபைல் தேவையில் வெறும் ஒரு சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்கிறது.

மிகப்பெரிய முதலீடுகள் நிகழவேண்டுமானால் அதற்கான குறைந்தபட்ச விற்பனை அளவாவது உருவாக வேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலுக்கு அது நல்லது. இந்தியாவில் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் தவிர எல்லா வெளிநாட்டு ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் சரிவைத்தான் அடைந்துவருகின்றன. இவற்றின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறன் நாற்பது சதவீதம்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏன் உலகின் பல முன்னணி கார் உற்பத்தியாளர்களுக்கு ஒரு புதைகுழியாக இருக்கிறது என்ற கேள்வி முக்கியமானது. இந்தியாவின் சந்தை மதிப்பிடப்பட்டது போல் இல்லை என்பதே எதார்த்தம்.

இந்தியாவின் கார் சந்தையை அதன் மதிப்பைக் கொண்டு அல்லாது விற்கப்படும் கார்களின் எண்ணிக்கையைக் கொண்டே மதிப்பிட வேண்டும். உலகின் முன்னணி கார் தேவை கொண்ட நாடுகள் பட்டியலில் நான்காம் இடத்திலிருந்து இந்தியா மூன்றாம் இடத்துக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஐந்தாம் இடத்துக்குப் பின் தங்கியது. ஜெர்மன் நம்மை எதிர்பாராவிதமாக முந்தியது.

இந்த வெளிநாட்டுக் கார்கள் இந்திய சாலைகளை மனதில் கொள்ளாமல் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் சாலைகளை மனதில்கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான் இங்கு மாருதி, மஹேந்திரா போன்ற நிறுவனங்களே விற்பனையில் சாதிக்க முடிகிறது என்கிறார்கள். இதில் சிறிது உண்மை உள்ளதுதான்.

ஆனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இப்படி வரிசையாக வெளியேறுவது தொடர்ந்தால், அது நம் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும்.மோடியின் அமெரிக்கப் பயணத்தில் இதற்கான செயல்திட்டம் ஏதும் இருக்குமானால் அது நம் பொருளாதாரத்துக்கு நல்லது. ஆனால், அப்படி நிகழுமா என்பது ஒரு கேள்விக்குறி. ஏனெனில் நம்ம ஜியின் எஸ்டிடி அப்படி.

இளங்கோ கிருஷ்ணன்