அதிகரிக்கும் டெங்கு... தமிழ்நாடு என்ன செய்ய வேண்டும்..?



இரு ஆண்டுகளாகவே கொரோனாவுடன் இந்தியா தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டின் சில மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் இப்போது அதிகரிக்கத்

தொடங்கியுள்ளது. டெங்கு வைரஸ் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வட மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழகத்திலும் டெங்கு பாதிப்பு இருக்குமா... அப்படி வந்தால் அதை எவ்வாறு எதிர் கொள்வது... போன்ற கேள்விகளோடு ஆராய்ச்சியாளர் வின்சென்டை சந்தித்தோம்.

“சமீப நாட்களாக டெங்கு உலகம் முழுவதும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதுவரை உலக அளவில் 2.5 பில்லியன் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1.3 பில்லியன் பேர் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதில் இந்தியாவும் வருகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா, தில்லி, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   

தமிழகத்தைப் பொறுத்தவரை 2015 - 2019 காலகட்டங்களில் 38,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 96 பேர் இறந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 63 பேர். தமிழகத்தில் ஜூன் மாதம் டெங்குவின் தாக்கம் ஆரம்பித்து, அக்டோபரில் அதிக அளவில் இருக்கும். அடுத்து வரும் நவம்பர், டிசம்பரில் குறைய ஆரம்பிக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக இப்படித்தான் இருந்துள்ளது. இதற்குக் காரணம் அக்டோபரில் பெய்யும் பருவ மழை.    

டெங்குவிற்கு முன் மலேரியாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிலும் 80% சென்னையிலும் மீதமுள்ள 20% தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இருக்கும். அந்த நேரத்தில் இன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தார். அப்போது  ‘சிங்காரச் சென்னை’ திட்டத்தின் மூலம் செயல்படுத்திய பல நடவடிக்கைகள் மூலம் மலேரியாவின் பாதிப்பு குறைக்கப்பட்டது.

இதனால் கார்ப்பரேஷனில் ‘மலேரியா டிப்பார்ட்மென்ட்’ என்றிருந்தது ‘வெக்டர் கன்ட்ரோல்’ (Vector control) என மாறி இருக்கிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகள்தான் டெங்கு, சிக்கன் குன்யா, எலிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தேவைப்படுகின்றன. அது ‘சிங்காரச் சென்னை - 2’ல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்...” என்கிற வின்சென்ட், சென்னையில் மட்டும் இதுபோன்ற நோய்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்களை விளக்கினார்.

‘‘இதற்கு முதல் காரணம் சென்னையில் உள்ள நீர் இணைப்புகள் சரியாக பராமரிக்கப்படாதது. 235 கிமீ உள்ள வாய்க்காலும், அதனோடு 2000 கிமீ மழைநீர் வடிகால் வாய்க்காலும் முதலில் பராமரிக்கப்பட வேண்டும். குடிநீர் இணைப்புகளில் கழிவுநீர் கலக்கவே கூடாது. ஆனால், பல இடங்களில் கலக்கிறது. கடந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  மழைநீர் வடிகால் குறித்து ஓர் ஆய்வு செய்தேன். அதில் பெரும்பாலும் சரியாக இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. அதை உடனே சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபின், 600 கிமீக்கு நாங்கள் சொன்ன முறையில் ஆரம்பித்தார்கள். அது அப்படியே இருக்கிறது.

இப்போது ‘சிங்காரச் சென்னை 2’ல் அதை கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தினால் சென்னையில் பெருமழைக் காலங்களில் வெள்ளமோ, கொசுத் தொல்லைகளோ இருக்காது.  
ஸ்மார்ட் சிட்டி என்று பெயர் வாங்குவதை விட சுகாதாரச் சென்னையாக - நகரமாக மாற வேண்டும். கொசு சம்பந்தமான எல்லாவிதமான நோய்களும் 80% இருப்பது சென்னையில்தான். எனவே, சென்னைக்கு தனி கவனம் செலுத்தி அதை சரி செய்யும் போது, லண்டனில் தேம்ஸ் நதி எப்படி சிறப்பாக இருக்கிறதோ அதே போல் சென்னையும் மாறும்.    

தமிழ் நாடு அரசு பூச்சி தடுப்பு துறையை ஆரம்பிக்க வேண்டும். ‘வெக்டார் கன்ட்ரோலை’ தனி துறையாக மாற்றினால் தமிழ் நாடுதான் முன்மாதிரி மாநிலமாக இருக்கும். கொசுத் தடுப்பு துறை ஆரம்பித்து அதற்கு சரியான கொள்கை வடிவமைப்புகள் கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டில் 140 பூச்சியியல் நிபுணர்கள் அல்லது அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது கவனிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.

டெங்கு, மலேரியா, சிக்கன் குன்யா போன்று கொசுக்கள் வழியாக பரவக்கூடிய நோய்களைத் தடுக்க வேண்டுமென்றால் இவர்களுடைய பணியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக இங்கு நோய்கள் பரவுதலைத் தடுக்காத போதுதான் பிரச்னைகள் வருகிறது.

கொசுவினால் வருகிற நோய்களோடு, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் கொசு கடிக்கும்போது உறக்கம் கெடுவதால் சிலர் மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். எனவே மக்களிடம் இருந்து வருகிற கொசு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அதை தீவிரமாக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்...” என்கிற வின்சென்ட், நோய் பரவுதலுக்கான ஆராய்ச்சி மேற்கொண்டு, அதை இந்திய அரசிடம் கொடுத்திருக்கிறார்.

‘‘ஒரு குக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பவர்களுக்கு, டிஜிட்டல் முறையில் பயிற்சி அளித்து தமிழ்நாட்டில் எந்தெந்த இடத்தில் என்னென்ன நோய்கள் தாக்கியிருக்கிறது என்பதை அன்று மாலையே தெரிந்துகொள்ளும் அளவிற்கு வகை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நோய் நிலை பரவுதல் தன்மை புரிந்துகொள்கிறபோது, அதற்கான முன்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம் என்கிற நோக்கில் செயலிகளையும் உருவாக்கினோம்.

வருமுன் காப்போம் என்பதுதான் திட்டமாக அமைய வேண்டும். வந்தபின் அதை எதிர்கொண்டு நேரத்தையும், பொருளையும் செலவழிக்காமல் இருக்க அரசு சிறப்புத் திட்டங்கள் கொண்டுவர வேண்டும். டெங்குவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததுதான் பெரும் பிரச்னை. ஆனால், அதற்கு சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. எனவே, இதுபோன்ற நோய்களை எதிர்கொள்ளும்போது ஒருங்கிணைந்த மருத்துவத்தினை ஊக்கப்படுத்த வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்...” என்கிறார் ஆராய்ச்சியாளர் வின்சென்ட்.

அன்னம் அரசு