உன்னோட நடந்தா... என தமிழுக்கு வந்திருக்கும் கன்னட பைங்கிளி!



கோலிவுட் சினிமாவில் தவிர்க்கமுடியாத பாடகியாக மாறியுள்ளார் அனன்யா பட். சமீபத்தில் வெளியான ‘விடுதலை’யில் சூப்பர் ஹிட்டான ‘வழி நெடுக காட்டுமல்லி...’, ‘உன்னோட நடந்தா...’ பாடல்களைப் பாடியவர்.  தேன் குரல் பாடகி என்று ஆச்சர்யப்படும் அதே வேளையில் ‘புஷ்பா’, ‘கே.ஜி.எப்’, ‘காந்தாரா’ என சூப்பர் ஹிட் படங்களில் பாடியவர் என்ற ஆச்சர்யத்தைத் தருகிறார்.
இப்போது ‘மாடர்ன் லவ் சென்னை’, ‘நினைவெல்லாம் நீயடா’, ‘சஷ்டிபூர்த்தி’ (தெலுங்கு) உட்பட ஏராளமான படங்களில் பாடியுள்ளார். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட இவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட ஐந்து மொழிகள் அத்துப்படி என்பதால் தமிழிலேயே ஆரம்பித்தார்.

பின்னணி பாடகியாக வரணும்னு எப்படி, எப்போது தோன்றியது?

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பாட ஆரம்பிச்சுட்டேன். அடுத்தடுத்து பாடும்போதுதான் என்னால் சிங்கரா வரமுடியும்னு தோணுச்சு. அப்படியொரு எண்ணம் வந்ததும் பாடகிக்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பிச்சேன். ஒருபக்கம் பாடகியாக என்னை தயார்படுத்திக்கொண்டாலும் எதற்கும் நான் அவசரப்படல.
கையில ஒரு டிகிரி இருந்தாதான் சொந்தக் காலில் நிற்க முடியும்னு நெனைச்சு டிகிரி முடிச்சேன்.பட்டம் வாங்கியதும் சினிமாவுல டிரை பண்ணலாம்னு சொந்த ஊரிலிருந்து பெங்களூருக்கு ஷிப்ட் ஆனேன். 2015ல் கன்னட சினிமாவில் பாட ஆரம்பிச்சேன். பின்னணி பாடகியாக பாட ஆரம்பிச்ச சில வருடங்களிலேயே சிறந்த பாடகிக்கான ‘ஃபிலிம்ஃபேர்’ விருது கிடைச்சது.

தொடர்ந்து கிடைத்த வாய்ப்பு, விருதுகள் இந்தத் துறையில் இயங்குவதற்கு பெரியளவில் ஊக்கம் கொடுத்ததால் என்னுடைய எதிர்காலம் சினிமாதான்னு முடிவு செஞ்சேன்.
இசையைப் பொறுத்தவரை எங்கள் குடும்பத்துக்கு என்று எந்தவித பின்னணியும் இல்ல. அப்பா சமஸ்கிருத விரிவுரையாளர். மிடில் கிளாஸ் ஃபேமிலியில் பெண் குழந்தைகளை எப்படி வளர்ப்பார்களோ அப்படிதான் நான் வளர்க்கப்பட்டேன்.

மூன்றாவது படிக்கும்போது மியூசிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கிளாசிக், இந்துஸ்தானி, கர்நாடிக் என படிப்படியாக இசை கற்றுக்கொண்டேன். இப்போது வெஸ்டர்ன் கற்று வருகிறேன்.
நான் பாடகியா எப்படி மாறினேன் என்று யோசிக்கும்போது என்னுடைய பெற்றோர்தான் கண்முன் வந்தார்கள். அவர்கள்தான் என்னுடைய குரல் வளத்தைக் கண்டுபிடிச்சு நான் பாடகியாக உருவாக ஊக்கம் கொடுத்தார்கள்.

இசையில் என்னுடைய குரு ராஜு அனந்த சாமி. அவருடைய அப்பா மைசூர் அனந்தசாமி . இவர்கள்தான் கன்னட லைட் மியூசிக்கின் முன்னோடிகள். கர்நாடகாவின் லைட் மியூசிக் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள். அவர்களிடம்தான் லைட் மியூசிக்குக்கான நுட்பங்களை கற்றுக்கொண்டேன். நான், தேர்ந்த பாடகியாக உருவாகக் காரணமாக இருந்தவர் ராஜு அனந்தசாமி.

தமிழில் எப்போது பாட ஆரம்பித்தீர்கள்?

இமான் சார் இசையில் ‘கருப்பன்’ படத்துல வரும் ‘உசுரே... உசுரே...’ பாடல்தான் என்னுடைய முதல் தமிழ் பாடல். அதன் பிறகு ‘கே.ஜி.எப்’, ‘ஜெயில்’ என தமிழில் பல படங்களில் பாடினேன்.

இளையராஜா இசையில் பாடிய அனுபவம்?

எனக்கு பெரிய வாய்ப்பு அது. இளையராஜா சார் இசையில் பாட விரும்பாத பாடகர், பாடகினு யாரும் இருக்கவே முடியாது. வாழ்க்கையில் ஒரு பாடலாவது அவர் இசையில் பாடணும்னுதான் பலர் லட்சியத்துடன் இருப்பாங்க. அவருடைய கம்போஸிங்ல பாடியது என் அதிர்ஷ்டம். என்ன புண்ணியம் செய்தேனோ சீக்கிரத்துல அவர் இசையில் பாடும் வாய்ப்பு கிடைச்சது.

ஒரு பாடகியாக அவரிடம் கற்றுக்கொண்டவை ஏராளம். இளையராஜா சார் இசையில் பாடியது அதிர்ஷ்டம் என்றால் அவருடன் சேர்ந்து டூயட் பாடியது இரண்டாவது அதிர்ஷ்டம்.
ரிக்கார்டிங் அனுபவத்தைப் பொறுத்தவரை எனக்கு முழுச் சுதந்திரம் இருந்ததால் எந்தவித டென்ஷனும் இல்லாமல் பாட முடிஞ்சது. ராஜா சாருக்கு கன்னடம் தெரியும் என்பதால் கன்னடத்துல பேசி என்னுடைய பயத்தைப் போக்கினார். அதனால் எனக்கு தமிழில் பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பாடலுக்கான விவரங்கள் அனைத்தையும் கன்னடத்தில் சொல்லி புரியவைத்தார். குறிப்பாக, பாடலில் எந்த இடத்தில் ஏற்ற, இறக்கம் வரணும், குரல் வளத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதை சொல்லிக்கொடுத்தார். பாடலைப்  பொறுத்தவரை ராகம் என்று வரும்போது குறிப்பிட்ட ஸ்டைலில் இருக்கும். ஆனா, ராஜா சார் உங்க சொந்த ஸ்டைலில் பாடுங்கனு சொன்னார். முக்கியமா என்னுடைய சிக்நேச்சர் ஸ்டைல் எதுவோ அதை அப்படியே மெயின்டெயின் பண்ணச் சொன்னார். அவர் சொன்னதும் என்னையும் அறியாமல் ஆழ ஆரம்பிச்சுட்டேன். ராஜா சார் அழ வேண்டாம்னு சொல்லி என்கரேஜ் பண்ணி பாட வெச்சார்.

சூப்பர்ஹிட் பாடல்கள் உங்களையே தேடி வரும் ரகசியம் என்ன?

எல்லா பாடல்களும் என்னுடைய குரலுக்கு பொருந்தும் என்று சொல்லமுடியாது. என்னுடைய குரல் வளம் பற்றி இசையமைப்பாளர்களுக்கு தெரியும். சில சமயம் கம்போஸிங் சமயத்தில் சேர்ந்து பணியாற்றும்போது என்னுடைய குரல் வளத்துக்கு ஏற்ற மாதிரி பாடலை வடிவமைப்பதால் பாடல்கள் வெற்றியடைகிறது. மற்ற சமயங்களில் டியூன் போட்டு முடித்தபிறகு அந்தப் பாடல் என்னிடம் வந்தால் அதை முழுமையாக என்னுடைய பாடலாக மாற்றுவதில் சவால் இருக்கும். ‘விடுதலையைப்’ பொறுத்தவரை எந்தவித ஆயத்தமும் இல்லாமல் ராஜா சார் ஸ்டூடியோவுக்கு போனேன். சில மணி நேரம் ராஜா சாருடன் சேர்ந்து கலந்துரையாடியபிறகுதான் பாட ஆரம்பிச்சேன்.

மெலடி, குத்துப்பாடல் என பாடல்களில் உங்களுக்கு என்று தனித் தேர்வு ஏதேனும் இருக்கிறதா?

அப்படி எதுவும் இல்லை. எனக்கு வரும் வாய்ப்புகளில் எந்தளவுக்கு வெரைட்டியாக பாட முடியுமோ அப்படி பாடுகிறேன். முதலில், பாடல் என்னுடைய குரல் வளத்துக்கு ஒத்துப்போகணும்னு நினைப்பேன். அப்படி அமையும்போது நூறு சதவீத உழைப்பு கொடுக்கிறேன்.

கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் தமிழ் பாடல்களின் அர்த்தத்தை எப்படி புரிந்து பாடுகிறீர்கள்?

சின்ன வயசுலேயே தமிழ் பேச கத்துக்கிட்டேன். பாடகியா டிராவல் பண்ண ஆரம்பிச்சதுமே என்றாவது ஒரு நாள் தமிழிலும் பாடுவோம் என்று தெரிந்தது. அதனால் என்னுடைய தமிழ் மொழி வளத்தை இம்ப்ரூவ் பண்ண ஆரம்பிச்சேன். ஏனெனில், இந்தத் துறையில் போட்டி அதிகம். அப்படியொரு நிலையில், கன்னட பாடகி தமிழ் பாடலை கன்னட பாடல் மாதிரியே பாடியிருக்கிறார் என்ற விமர்சனம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமா இருந்தேன்.

தமிழ் பாடலை தமிழ் பாடலாகவே பாடி நியாயம் சேர்க்கணும் என்பதில் முழு கவனம் செலுத்துகிறேன். வார்த்தைகளுக்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள பாடலாசிரியர்கள் உதவி செய்கிறார்கள். அவர்களிடம் கடினமான வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பது, எந்த வட்டாரத்தில் அப்படி பேசுவார்கள் என பல விபரங்களைக் கேட்டு, ஸ்டோரி போர்டு ரெடி பண்ணி ஆயத்தமாவேன். பாடலாசிரியர்களிடம் வார்த்தைகளை உச்சரித்து ரிகர்சல் பண்ணுவேன்.

பாடகி அனன்யாவுக்கு மியூசிக் டைரக்டராகணும்னு ஆசை இருக்கிறதா?

‘அனன்யா பட் கான்சர்ட்’ என்ற பேர்ல எனக்கு பேண்ட் இருக்கிறது. அதில் பல மொழிகள், பல கலாசாரம் சார்ந்து ஃபோக் சாங்ஸ் உருவாக்கி வருகிறோம். அடுத்த தலைமுறை நம் கலாசாரத்தை புரிந்துகொள்ளும்வகையில் அந்த இசைப் பணியை செய்து வருகிறோம். அமெரிக்கா, லண்டன், துபாய் உட்பட பல நாடுகளில் இதுவரை 500 நிகழ்ச்சிகள் பண்ணியுள்ளோம். இந்த நிகழ்ச்சிகளுக்கு நான்தான் மியூசிக் டைரக்டர். தனி ஆல்பமும் வெளியிட்டு வருகிறேன். இன்னும் சில ப்ளான்கள் இருக்கு.

தனி குரல் அல்லது டூயட்... இதில் எந்தப் பாடல்  பாடுவது சுலபம்?

ஒவ்வொரு பாடகர், பாடகிக்கும் வித்தியாசமான குரல் வளம் இருக்கும். தனிப் பாடல் என்று வரும்போது பின்னியெடுக்கலாம். டூயட் பாடும்போது சில வரைமுறை இருக்கும். என்னுடைய குரல் வளம் கடவுள் கொடுத்த வரம். என்னுடைய எல்லை எது என்று தெரியும். அதற்குள் நான் பாடுகிறேன்.

உங்களுக்கு பிடித்த பாடகர், பாடல் எது?

கஷ்டமான கேள்வியை கேட்டிருக்கீங்க. பிடித்த பாடல், பிடித்த பாடகர் நிறைய பேர் இருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் பலர் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார்கள்.

எஸ்.ராஜா