ஏன் சித்தராமையா? Inside Story



இந்த மில்லியன் டாலர் கேள்விதான் தேசம் முழுக்க சுற்றிச் சுற்றி வருகிறது.காரணம், தொடக்கம் முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும், பல ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தவரும் டி.கே.சிவக்குமார்தான். எனவே, தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் அவர்தான் மாநில முதல்வராக அறிவிக்கப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாரத வகையில், கட்சி மாறி வந்தவரும், வயதானவருமான சித்தராமையா கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்பார் என கட்சி மேலிடம் அறிவித்தது.
அதற்கேற்ப கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும்; துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து அதிருப்தியில் டி.கே.சிவக்குமார் இருக்கிறார்... எனவே, கட்சி உடையும்... விரைவில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி கவிழும்... என்றெல்லாம் ஆருடங்கள் ஜெட் வேகத்தில் பறக்கின்றன.  

கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு அடிப்படையாக டி.கே.சிவக்குமாரின் அயராத உழைப்பும், தேர்தல் பணிகளை தீவிரமாகச் செயல்படுத்திய விதமும்தான் காரணம் என்பது அம்மாநிலத்தைச் சேர்ந்த சிறு குழந்தைக்கும் தெரியும். அதற்காக சித்தராமையா லேசுப்பட்டவர் என அர்த்தமல்ல.
கர்நாடகத்தின் அசைக்க முடியாத தலைவர். அமைதியான முறையில் வாக்குகளைக் கவர்பவர். ஆனால், ஒரிஜினல் காங்கிரஸ்காரர் அல்ல. ஜனதா, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் என கட்சிகளைக் கடந்து 2006ம் ஆண்டு முதல் காங்கிரஸில் இருப்பவர்.

டி.கே சிவக்குமார் அப்படியல்ல; கல்லூரிக்காலம் முதலே ஒரு கட்சிதான். அது காங்கிரஸ்தான்.சித்தராமையா ஏற்கனவே ஒரு முறை கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.
இந்தப் பின்புலத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் மேலிடம் செய்த முடிவைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏன் சித்தராமையாவை மாநில முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்..?
இந்த வினாவுக்கான பதில், கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிவிப்பில இருக்கிறது. “We have decided on Siddaramiah as CM of Karnataka; D K Shivakumar will be Deputy CM. D K Shivakumar to continue as party’s Karnataka state president till Parliamentary elections...” இந்த வாசகங்களை ரீடிங் இன் பிட்வீன் லைன்ஸில் வாசிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதாவது முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் பதிவியேற்பார்கள் என்று சொல்லிவிட்டு, ‘அடுத்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை டிக்கே சிவக்குமார் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிப்பார்...’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படியென்றால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்..?

இங்குதான் டி.கே.சிவக்குமாருக்கு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும் என்ற யூகங்கள் தோன்றுகின்றன. அதற்கேற்ப இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தின் 24வது முதல்வராக டி.கே சிவக்குமார் பதவியேற்கலாம்.

அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படலாம்.இந்த இரண்டு வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

எல்லாம் சரி... நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டி.கே.சிவக்குமாருக்கு மேலும் பதவிகள் வழங்கப்படலாம் என்றால் அதை ஏன் இப்பொழுதே செய்யக் கூடாது..?

நல்ல கேள்விதான். இதற்கும் விடையாக பலவற்றை அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கிறார்கள்.அதில் முதலாவது, இப்பொழுதே டி.கே.சிவக்குமாரை முதல்வராக்குவதில் காங்கிரசுக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன என்பது.ஆம். டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத் துறை வழக்குகள் இருக்கின்றன. அதேநேரம் சித்தராமையா மீது பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் கிடையாது.

அதேபோல் டி.கே.சிவக்குமார், வொக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவர். சித்தராமையா குருபா சமூகத்தைச் சார்ந்தவர்.கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினர்தான் அதிகம். அதற்கடுத்து வொக்கலிகா மற்றும் குருபா சமூகத்தினர் அதிகமாக இருக்கிறார்கள்.

சித்தாராமையாவை முதல்வராக்கினால் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் கருதுகிறது. சிவக்குமாரை முதல்வராக்கினால் மற்றொரு பெரிய சமூகத்தினரான லிங்காயத்துகள் எரிச்சலடைய வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் நினைப்பதாக சொல்கிறார்கள். இதை பாஜக பயன்படுத்திக் கொள்ளுமோ என்றும் எச்சரிக்கையாக யோசிக்கிறார்கள்.

அதாவது டி.கே.சிவக்குமாரை இப்பொழுதே முதல்வராக்கினால் அவர் மீதிருக்கும் அமலாக்கத்துறை வழக்குகளை மத்திய பாஜக தூசு தட்டலாம். கறைபடிந்த முதல்வர் என்ற பிரசாரத்தை கர்நாடக மாநிலம் முழுக்க மேற்கொண்டு மக்களை திசைதிருப்பப் பார்க்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது.

இப்படி பல திசைகளில் ஆராய்ந்து தொலைநோக்குப் பார்வையுடனேயே சித்தராமையாவை முதல்வராக காங்கிரஸ் அமர்த்தியிருப்பதாகச் சொல்கிறார்கள். கூடவே டி.கே.சிவக்குமாரை கட்சி மேலிடம் சமாதானப்படுத்தி, தொடர்ந்து அவர் உற்சாகம் குறையாமல் செயல்பட வழிசெய்திருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

கர்நாடக மாநிலத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றதும் தில்லி சென்று சோனியா காந்தியை டி.கே.சிவக்குமார் சந்தித்தார். அப்பொழுது, ‘உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். நீங்கள் கர்நாடகாவை ஜெயித்துக் கொடுப்பீர்கள் என்று நம்பினேன். சாதித்துக் காட்டிவிட்டீர்கள்...’ என மனப்பூர்வமாக சோனியா சொன்னதாக சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்தே கட்சி மேலிடம் எடுத்த முடிவுக்கு டி.கே.சிவக்குமார் கட்டுப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள். ஏனெனில் ராஜீவ் காந்தி குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுடையவர் சிவக்குமார். அப்படிப்பட்டவர் உடனே சோனியா காந்தியின் யோசனைகளை ஏற்றுக் கொண்டாராம்.

சித்தாரமையாவுக்கு அமைதியான, ஆழ்ந்த யோசனையுடைய நபர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், சிவக்குமாருக்கு அதிரடி ஆட்டக்காரர் என்ற பிம்பம் இருக்கிறது. இப்போதைக்கு வம்புகள் எதுவும் வேண்டாம், அமைதியான ஒரு முதல்வரையே தேர்ந்தெடுப்போம் என்பது காங்கிரஸ் தலைமையின் முடிவாக இருக்கிறது.நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் இந்த அமைதி இருக்குமா என்பது அப்போது வரும் முடிவுகளைப் பொறுத்தது.

என்.ஆனந்தி