சொல்ல மறந்த தியேட்டர்களின் கதை!



இந்தியா போன்ற வளரும் நாடுகளைப் பொறுத்தவரை மக்களின் மிக முக்கிய பொழுதுபோக்கும், அவர்கள் வாழ்வியலுடன் கலந்த கலாசாரமும் சினிமாவைச் சுற்றித்தான் நிகழும்.
காரணம், கிடைக்கும் அளவான வருமானம், குடும்பமாக வாழும் வாழ்க்கை முறைக்கு சினிமாதான் பட்ஜெட்டில் சரிப்பட்டு வரும். எனவே, கோயிலுக்குப் பிறகு குடும்பமாக மக்கள் சந்தோஷமாக வந்து செல்லும் இடமாக சினிமா திரையரங்குகள் திகழ்கின்றன.

அதிலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வந்த தமிழர்களின் அடிப்படை நாதம் இந்த சினிமாதான். வேலைக்கு இடையே பாடல்களாக, நண்பர்கள் சந்திப்பில் நடனமாக, குடும்ப நிகழ்வில் ஏதோ ஒரு படமாக, கோயில் திருவிழாக்களில் திரை கட்டிய படங்களாக, பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடனமாக... என எங்கும் சினிமா ஏதோ ஒரு வடிவத்தில் அவர்களுடன் கலந்திருக்கிறது.

இந்நிலையில் ஊரில் ஏதேனும் ஒரு திரையரங்கம் மூடப்பட்டால் வெளியில் சொல்லி அழ முடியவில்லை என்றாலும், மனதுக்குள் புழுங்குவதும், நண்பர்களுடன் நெகிழ்ந்து, வருந்தி பேசும் நிகழ்வுகளும் இன்றும் நிகழ்வதை மறுக்க முடியாது. டிஜிட்டல் ஒலிக்கலவை, டால்ஃபி அட்மாஸ், ஐமேக்ஸ், மல்டிபிளக்ஸ்... என ஆயிரம் வரலாம்; ஆனாலும் என்றோ மூடப்பட்ட எதோ ஒரு சினிமா திரையரங்கமும் அதனால் உருவான நினைவுகளும் மட்டும் ஒவ்வொருவருக்குள்ளும் பசுமையான நினைவலைகளைத் தட்டிக் கொண்டே இருக்கும்.
அப்படி நினைவுகளுடன் மூடப்பட்ட தமிழக திரையரங்குகள் ஏராளம்.

சினிமா விநியோகஸ்தர்கள் தமிழக நிலப்பரப்பை ஒன்பது பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவை முறையே சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, கோயமுத்தூர், மதுரை - ராமநாதபுரம், திருச்சி - தஞ்சாவூர், சேலம் - தர்மபுரி, திருநெல்வேலி - கன்னியாகுமரி.இந்தப் பிரதேசங்களில் இப்பொழுது 1104 திரையரங்குகள் மட்டுமே உள்ளன. 1104 திரையரங்குகளா என ஆச்சர்யம் அடையாதீர்கள். சுமார் 3000+ திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இவை அனைத்தும் இந்தக் கடைசி 15 வருடங்களில்தான் அதிகம் மூடப்பட்டுள்ளன என்பதுதான் சோகம்.

தமிழ்ச் சினிமா வேண்டுமானால் பிறந்து, வளர்ந்தது சென்னையாக அல்லது பழைய மெட்ராஸாக இருக்கலாம். ஆனால், திரையரங்க சகாப்தம் கோவைமக்களால் ஆரம்பிக்கப்பட்டு, மதுரை மக்களால்தான் வளர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு மட்டுமல்ல தென்னிந்தியாவிற்கே முதல் திரையரங்கம் வெரைட்டி ஹால் அரங்கம்தான். இது 1914ம் ஆண்டு கோயமுத்தூரில் நிறுவப்பட்டது. 2024 பிறந்தால் இந்த அரங்கத்தின் வயது சரியாக 100 வருடங்கள்.

கோவை மக்களும் , மதுரை மக்களும் தமிழகத்தின் மற்ற ஊர் மக்களைக் காட்டிலும் சற்றே வித்தியாசமானவர்கள். ஆனால், இவ்விரு ஊர் மக்களின் வாழ்வியலைப் பொறுத்தவரை ஒற்றுமையானவர்கள். விவசாயம் மற்றும் அச்சுப் பதிப்பகங்களுக்கும், ஹோட்டல் தொழிலுக்கும் மதுரை பெயர் போனது எனில் கோவை முழுக்க தொழிற்சாலைகளால் ஆனது. இரு ஊர் மக்களுமே தங்கள் ஊரில் இருந்துகொண்டு மற்ற ஊர்களுக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை அனுப்பியவர்கள். அதனாலேயே ஊரை விட்டு அவ்வளவு சுலபமாகக் கிளம்ப மாட்டார்கள். எனில் அவர்கள் ஊரிலேயே ஓய்வுக்கான பொழுதுபோக்கு..? வேறென்ன, சினிமாதான்.

ஆனால், அந்த நிலை இப்பொழுதில்லை. 20 வருடங்களுக்கு முன்பு வரை மதுரையைப் பொறுத்தவரை மாலை மணி 6.30 அடித்தாலே சினிமா திரையரங்கங்களும், அவற்றின் ஒலிகளும் சுற்றுவட்டாரத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு தெருவின் எல்லையிலும் ஒரு கோயில், ஒரு கொட்டகை. இதுதான் மதுரை மண்ணின் அக்கால வடிவமைப்பு. காரணம், மேடை நாடகங்கள் களைகட்டிய தெருக்கள் அங்கேதான் அதிகம். என்றோ நாடக அரங்கமாக இருந்த கூடாரங்கள்தான் பிற்காலத்தில் சினிமா திரையரங்கங்களாக மாறின.

இதனாலேயே ‘மதுரையைச் சுற்றிய கழுதை வேறு எங்கும் போகாது’ என்பர். ஆனால், இன்று மதுரையின் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. 1990களில் 52 திரையரங்குகள் இருந்த மதுரையில் இன்று 24 அரங்கங்கள்தான் உள்ளன. இத்தனைக்கும் அப்போதெல்லாம் வருடத்திற்கு 20 படங்கள் வருவதே அரிது. ஆனால், இன்று வாரத்துக்கு பத்து படங்கள் வெளியாகும் நிலை. இருப்பினும் இந்தத் திரையரங்குகள் ஏன் வருமானமின்றி மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன..?

முதல் பிரச்னை ஆரம்பித்தது திருட்டு விசிடி விற்பனையில் எனில், அதுவே டிஜிட்டல் மயமாக்கலில் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத் திருடர்களால் மேலும் நலிவைச் சந்தித்தன. ஓரளவிற்கு இந்த திருட்டு விசிடிக்கள் ஒழிந்து சற்றே தலை நிமிர்ந்தால் வந்தடித்தது ஜி.எஸ்.டி, பொழுதுபோக்கு வரிகள் என்னும் பேய். அதிகரிக்கப்பட்ட விலையேற்றம், அதிக விலைக்கு தின்பண்டங்கள் என நடுத்தரக் குடும்பங்களுக்கு சினிமா எட்டாக் கனியாகிக் கொண்டே போனது. அடுத்த அடி ஓடிடி.

இதற்கு மேலும் பொறுமையுடன் இருந்தால் திரையரங்க சகாப்தமே முற்றுப்பெறும் என்பதைப் புரிந்து கொண்டு மல்டிபிளக்ஸ் அமைப்பைக் கொண்டு இந்த இரண்டு வருடங்களில் பல மாற்றங்களை திரைத்துறை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் சினிமா தொழில் சற்றே மூச்சு விடத் துவங்கியுள்ளது. ஆனாலும், எத்தனையோ 200 வாரங்கள், 250 வாரங்கள், மூன்று தீபாவளிகள் என விசில்கள் பறந்த பல திரையரங்குகள் இன்று நம்மிடையே இல்லை.

சென்னையின் முதல் ஏசி திரையரங்கமாக வரலாறு படைத்த ‘சாந்தி’ தியேட்டரை இப்போதைய 2கே தலைமுறையினரும் கூட மறந்திருக்க மாட்டார்கள். 1961ம் ஆண்டு துவங்கப்பட்ட ‘சாந்தி’ தியேட்டர் 2016ம் ஆண்டு மூடப்பட்டது. ’‘பாவ மன்னிப்பு’, ‘திருவிளையாடல்’ உள்ளிட்ட பல வெற்றிவிழா படங்களைக் கண்ட இந்த அரங்கத்தில் 2005ல் வெளியான ‘சந்திரமுகி’ படம் 888 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படமும், இந்த தியேட்டரும் இன்றே கடைசி என சூர்யாவின் ‘24’ படம்தான் ‘சாந்தி’ தியேட்டரில் ஓடிய கடைசிப் படம். இன்று சாந்தி திரையரங்கம் கமர்ஷியல் காம்ப்ளக்ஸாக இருக்கிறது.

சென்னையில் இப்படி பல தியேட்டர்களைச் சொல்லலாம். மல்டிபிளக்ஸ் காலத்திலும் கூட ரூ.50க்கு டிக்கெட்டுகள் விற்ற ‘ஏவி.எம் ராஜேஸ்வரி’, வட சென்னையின் ஒரே 70எம்.எம் திரையரங்கமாக ஒரு காலத்தில் ஒய்யாரமாக நின்ற ‘அகஸ்தியா’ தியேட்டர்... ஆகியவை கொரோனா பிரச்னையால் 2020ல் மூடப்பட்டன. 65 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட ‘காமதேனு’ தியேட்டர் இன்று கல்யாண மண்டபமாக நிற்கிறது. மேலும் ‘நாகேஷ்’ தியேட்டர், ‘ஆனந்த்’ தியேட்டர், ‘வெல்லிங்டன்’, ‘கெயிட்டி’, ‘சித்ரா’, ‘உமா’... ஆகிய திரையரங்கங்கள் ஷாப்பிங் மால்களாக அல்லது கமர்ஷியல் கட்டடங்களாக அல்லது கல்யாண மண்டபங்களாக இன்று நிற்கின்றன.

சென்னை மட்டுமல்ல. கொஞ்சம் தெற்கு நோக்கி மேலும் சென்றால் இப்படி வரலாறு படைத்துவிட்டு அமைதியாக மூடப்பட்ட அரங்கங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
திருச்சிவாசிகளுக்கு ஹாலிவுட் பட வாசனையைக் கொடுத்த பெருமை ‘சிப்பி’ தியேட்டருக்கு உண்டு. 70 எம்.எம் தியேட்டர், ஏசி வசதி; ஜாக்கிசான், புரூஸ் லீ, டாம் குரூஸ் என ஹாலிவுட் படங்கள் மட்டுமே வெளியாகும் அடையாளம் கொண்ட அரங்கம் இது. ‘சிப்பி’ இன்று இல்லை. போலவே ‘ஜூபிடர்’, ‘ராஜ்’, ‘மகாராணி’, ‘பிரபாஸ்’ உள்ளிட்ட அரங்கங்களும் கூட இன்று இல்லை.

அப்படியே வண்டியை தஞ்சைப் பக்கம் திருப்பினால் ‘ராஜராஜன்’, ‘ஜூபிடர்’, ‘அருள்’, ‘பர்வீன்’, ‘குமரன்’, ‘யாகப்பா’, ‘ராஜா கலையரங்கம்’ இவையும் இன்றில்லை.
பொதுவாகவே திருச்சி - தஞ்சை (கரூர், ஈரோடு, சேலம்) மக்கள் சினிமாவிற்கு அவ்வளவாக செலவிடுவதில்லை. இந்த ஊர்களின் மக்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிப் பணியாளர்கள். வேலை, சம்பளம், படிப்பு என இவர்கள் இருப்பதால் இங்கே தியேட்டர்கள் பிஸினஸ் மாஸ் காட்டுவதில்லை. மதுரை மண்ணை ஆசிய அளவில் அறியச் செய்தது ‘தங்கம்’ அரங்கம். விலை அதிகமான முதல் வகுப்பு டிக்கெட்டுகளை தங்க ஃபாயில்களில் அச்சிட்டுக் கொடுத்த அரங்கம்.

இன்று ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் இருந்த இடத்தில் பிரபல ஜவுளிக் கடை இயங்கிவருகிறது. அதேபோல் மதுரையின் முதல் திரையரங்கமான ‘இம்பீரியல்’ தியேட்டரும் இன்று இல்லை. அங்கே கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் இயங்கி வருகிறது. இந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் ‘சிந்தாமணி’ அரங்கமும் இணைந்தது.

மதுரையின் ‘சென்ட்ரல் சினிமா’வுக்கு நான்கு பேர் உரிமையாளர்கள். அவர்களில் மூவர் இன்று இல்லை. நான்காமவர் கோவிந்தராஜன். தான், இறக்கும்போது சென்ட்ரல் திரையரங்க உரிமையாளராக இறக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதால் அவரது மகன் இன்றும் அந்த அரங்கை படங்கள் ஏதும் திரையிடாமல் பராமரித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கேதான் ‘சுப்ரமணியபுரம்’ படம் எடுக்கப்பட்டது. அடுத்த பெரும் வரலாறு திருநெல்வேலியின் ‘சென்ட்ரல்’ திரையரங்கத்திற்கு உண்டு. எப்படி மதுரையின் ‘தங்கம்’ சினிமா ஆசியாவிலேயே பெரிய தியேட்டராக இன்றும் வரலாற்றில் நிற்கிறதோ அதே போன்றதொரு வரலாறு இந்தத் தியேட்டருக்கும் உண்டு. ஆம். இந்தியாவிலிருந்து ஒரு தியேட்டர் ஆசிய அளவில் பெரியதாக சொல்லப்பட்ட வரலாற்றைத் தொடங்கி வைத்தது இந்த திருநெல்வேலி ‘சென்ட்ரல்’தான். முதன்முதலில் கைக்குழந்தையுடன் வருவோருக்கு தொட்டில்கள் கொடுக்கப்பட்ட அரங்கமும் இதுதான்.
 
தூத்துக்குடியின் ‘சார்லஸ்’ திரையரங்கம், அதன் முகப்பு வாயில் கட்டமைப்பிற்காகவே கொண்டாடப்பட்டது. இந்த தியேட்டர் கட்டப்பட்டு முதல் படம் வெளியிடக் கூட காசு இல்லாமல் நின்ற உரிமையாளருக்கு தனது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் மூலம் உயிர் கொடுத்தார் எம்ஜிஆர் என இப்போதும் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலாகித்துச் சொல்வதுண்டு.
இப்படி இழந்த திரையரங்குகள் எத்தனையோ உள்ளன. அவற்றுக்கு எத்தனையோ அழிக்க முடியாத வரலாறுகள் உள்ளன. இன்னும் இந்தக் கட்டுரையில் சொல்லப்படாத, எழுதப்படாத வரலாறுகள், ஏன்... சில திரையரங்கங்களின் புகைப்படங்கள் கூட கிடைக்காத அரங்கங்களும் உள்ளன.

1988ம் ஆண்டு ‘சினிமா பாரடைஸோ’ எனும் இத்தாலியத் திரைப்படம் வெளியானது. அந்த சினிமாவில் சினிமாத் திரையரங்கமொன்று இடிக்கப்படும். அதுவரை தங்களது வாழ்வின் அங்கம் போல இருந்து அத்தனை இன்ப துன்பங்களையும் இருளில் பகிர்ந்து கொண்ட அத்திரையரங்கம் இடிக்கப்படும் போது ஊர் மக்கள் கூடி நின்று கண்ணீர் சிந்துவர்.

இந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. நிச்சயம் அப்படியான ஆழ்மன கண்ணீர் ஒவ்வொரு ஊர் சினிமா ரசிகனின் மனதிலும் இன்றும் நீங்காமல் நிலைபெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதோ அடுத்த கட்டமாக ஐநாக்ஸ் தனது 50 திரையரங்கங்களை மூடும் நோக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மூடல்களுக்கு ஒரு முடிவு வந்தால் நன்றாக இருக்கும். அதுவும் ரசிகர்களான நம் கைகளில்தான் உள்ளது.

ஷாலினி நியூட்டன்