நன்றியுணர்வு கொண்டவன் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்!



‘‘‘ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவங்க வாயில மண்ணு...’ இது இப்ப இங்க தேவையில்ல... ‘அல்லாவும், அய்யனாரும் ஒண்ணு... இது அறியாதவங்க வாயில மண்ணு...’ இதுதான் இப்போ இங்க தேவை...’’ இப்படி ட்ரெய்லரிலேயே மத நல்லிணக்கம், சமத்துவம் எனப் பேசி கருப்பு சட்டை கருப்பு வேட்டி சகிதமாக மாஸ் காட்டுகிறார் ஆர்யா.
இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் பரபரவென தயாராகியிருக்கிறது ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.‘‘என்னுடைய எட்டாவது படம் மறுபடியும் மண் சார்ந்த, உறவு சார்ந்த ஒரு கதை. என்னை தேர்வு செய்தது ஆர்யா சார்தான். அவருக்கு இப்படியான ஒரு கிராமத்து மண் சார்ந்த கதையில் நடிக்கணும்னு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்திருக்கு. குறிப்பா என் இயக்கத்துல. அப்படித்தான் இந்தப் படம் உருவாச்சு.

பொதுவா கிராமப்புறங்களில் குலசாமி பெயர், அல்லது முன்னோர்கள், அப்பா அம்மா பெயர்களை நன்றி உணர்வு காரணமாக வைக்கிறது வழக்கம். ஆனா, இந்தக் கதையில் ஒரு தாய் தன்னை பாதுகாத்த ஒரு நல்லவருடைய பெயரை தனக்கு பிறந்த குழந்தைக்கு வைக்கிறாங்க. அதுதான் ‘காதர் பாட்சா’. யார் அந்த காதர் பாட்சா? எதனால் இந்த நன்றி உணர்வு?
அதுதான் படத்தின் கதைக்களம்...’’ புன்னகைக்கிறார் முத்தையா.   

கதைக் களம் முழுவதும் எதைச் சார்ந்து பேசப்போகிறது?

கதையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு நன்றி உணர்வை சொல்லிக்கிட்டே இருக்கும். பிரபு சார் பெயரும் காதர் பாட்சாதான். அவருக்கும் ஒரு நன்றி உணர்ச்சி இருக்கும். ஆர்யாவின் பெயரும் காதர் பாட்சா. அவரின் பெயர்க் காரணமும் கூட ஒரு நன்றி உணர்வால் வச்சதுதான். ஹீரோயின் சித்தி இத்னானி. அவங்க ஒரு மூணு குழந்தைகளுக்காகத்தான் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருப்பாங்க.
அதுவும் ஒரு நன்றி உணர்வு சார்ந்ததுதான். அந்த குழந்தைகள் யாரு... இப்படி படம் முழுக்க நன்றி உணர்வும் விசுவாசமும் இருக்கும். இதற்கிடையிலே எதிர்மறை மனிதர்களும் சம்பவங்களும் இருக்கத்தானே செய்வாங்க... அவங்க யாரு... இந்த நன்றி உணர்வுள்ள நல்லவர்கள் ஒன்று சேர்ந்தா என்ன நடக்குது? இதுதான் கதைக்களம்.

‘புர்கா’, ‘கேரளா ஸ்டோரி’, ‘ஃபர்ஹானா’... இடையில் ‘காதர் பாட்சா’?

இந்த பிரச்னைகளுக்கெல்லாம் பதிலாதான் இந்தப் படம். படம் முழுக்க மத நல்லிணக்கம் வேணும்னுதான் சொல்லி இருப்போம். எந்த மதத்தையும் எந்த சாதியையும் குறைவாகவோ மிகைப்படுத்தியோ காட்டவே இல்லை. இப்ப வரைக்கும் எனக்கும் அந்த சர்ச்சைக்குரிய பிரச்னைகள் வரவும் இல்லை.

கிராமத்து கதையில் ஆர்யா... இந்த காம்பினேஷன் எங்கே உருவானது?

ரொம்ப நாளாகவே சிட்டி, ஆக்‌ஷன்னுதான் ஆர்யா சார் படங்கள் பண்ணிட்டு இருந்தார். அவருக்கு நேட்டிவிட்டி படம் பண்ண ஆசையிருந்தது. கன்னட ‘டகரு’ படத்தின் ரீமேக்கை நான் வாங்கி வச்சிருந்தேன். அந்தப் படத்தினுடைய கதையைச் சொல்லத்தான் ஆர்யா சார் கிட்ட நான் நேரம் கேட்டிருந்தேன். ஆனா, அவர் ‘அதெல்லாம் வேண்டாம் ணே... நல்ல நேட்டிவிட்டி கதையா சொல்லுங்க’னு சொன்னார். இந்தக் கதை அவருக்குப் பிடிக்கவே டேக் ஆஃப் ஆகிடுச்சு.

முத்தையா அப்படின்னாலே ஒரு டெம்ப்ளேட் இருக்கே... இந்த அடையாளமே போதும் என நினைக்கிறீர்களா?

எந்த அளவுக்கு அசிஸ்டெண்ட் டைரக்டரா இருந்து ஒரு இயக்குநராக மாற கஷ்டப்பட்டேனோ, அதே அளவுக்கு ஒரு கிராமத்து இயக்குநரா இருந்து சிட்டி இயக்குநரா மாற கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். என்னால ஒரு நகரத்து கதையும் பண்ண முடியும்னு என்னுடைய ஸ்டைலை மாத்திக் காட்டத்தான் முழுக்க முழுக்க ஒரு நகரத்து சப்ஜெக்ட் செய்யணும்னு திட்டமிட்டேன்.
ஆனா, எல்லாரும் என்கிட்ட கேட்கறது ஒரு கிராமத்து கதைதான். கூடிய சீக்கிரம் இந்த கதைகளின் வெர்ஷனிலிருந்து நிச்சயமாக வேறு ஒரு கதைக்களத்தில் படம் செய்வேன்.

பிரபு, பாக்யராஜ், விஜி... இப்படி நடிப்புக்கு பெயர் போன பலரும் இருக்கிறார்களே?

ஆர்யா கதையின் நாயகன். அவர் பகுதி மாஸ் கிளாஸ் ஆக இருக்கும். ஹீரோயின் சித்தி இத்னானி. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் முழுக்க முழுக்க மும்பை தமிழ்ப் பெண்ணாக நடிச்சிருந்தாங்க. அவர்களை முழுமையாக தென்னாட்டுப் பெண்ணாக மாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைச்சிருக்கோம்.

படிச்ச பொண்ணு, அதனால சல்வார், தாவணினு மாறி மாறி வருவாங்க. ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ் இந்த படத்தில் வேறு ஒரு கெட்டப்பில் பார்க்கலாம். நரேன் அண்ணன்... அவர் பெயரே வெறியாண்டி. பேருக்கு ஏத்த மாதிரியே ஒரு கேரக்டர் அவருக்கு. ‘பசங்க’ படம் பார்த்துட்டு மதுசூதன் ராவ் அண்ணனை முதல் படத்திலேயே நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அது மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்.  

விஜி மேடம் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியது இல்லை. ‘மதயானை கூட்டம்’ படத்திலேயே அவங்க நடிப்பு பிடிச்சுப் போயி ‘விருமன்’ படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். ஆனால், மிஸ் ஆகிடுச்சு. இந்தப் படத்தில் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர். இவங்க எல்லாருக்கும் தலைமை மாதிரி பிரபு சார்... அமைதியா சாந்தமா ரொம்ப நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரைச் சுற்றிதான் கதைக்களம் இருக்கும். பாக்யராஜ் சார் இதுவரையிலும் நடிக்காத ஒரு பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிச்சிருக்கிறார்.

டெக்னீஷியன்ஸ்..?

‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஜிவி பிரகாஷ் மியூசிக். பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. பின்னணி இசையும் படத்துக்கு ஏத்த மாதிரி சூப்பரா கொடுத்திருக்கறார்.
வேல்ராஜ் அண்ணன் சினிமாட்டோகிராபி. கடந்த மூன்று படங்களா அவர் கூட வேலை செய்திட்டு இருக்கேன். கோவில்பட்டி அழகை கண்ணு முன்னாடி மிக அற்புதமாக காட்டியிருக்கார். ஆக்‌ஷன் அனல் அரசு, ஆர்ட் டைரக்‌ஷன் வீரமணி கணேசன், எடிட்டர் வெங்கட் ராஜென். தயாரிப்பு ஜீ ஸ்டூடியோ & வெடிக்காரன்பட்டி சக்திவேல்.

‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ஆடியன்ஸ்க்கு என்ன கொடுக்கும்?

புகழ்பெற்ற பாடலாசிரியர் வாழ்க்கைல நடந்த சம்பவங்களோட நான் படிச்ச வேற ஒரு செய்தியைக் கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருக்கேன். நன்றி உணர்வை ரொம்ப ஆழமாக இந்தப் படம் எடுத்துக்காட்டும். எல்லாவற்றுக்கும் மேல இஸ்லாத்தின் முக்கியத்துவத்தையும் அதனுடைய பின்னணியையும் கூட படத்தில் பார்க்கலாம். இப்போதைய தேவையான மத நல்லிணக்கத்தையும் நிறைய இடங்களில் இந்தப் படம் பேசும்.

நான் இன்னைக்கு இந்த நிலையிலே இருக்க முதல் விதை போட்டவங்க எனக்கு தொழில் சொல்லிக் கொடுத்த இயக்குநர்கள்; இயக்குநராக முதல் வாய்ப்பு கொடுத்தவங்க சசிகுமார் அண்ணனும், புரொடியூஸர் முருகானந்தன் சாரும்தான். நம்ம வாழ்க்கையிலே நாம ஒவ்வொருத்தரும் யாருக்கோ நன்றிக்கடன் பட்டிருப்போம். அப்படியான கதைதான் இது.

ஷாலினி நியூட்டன்