24 தலைமுறைகளுக்குப் பிறகு பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் முதல் தலைமுறை நரிக்குறவர் மாணவர்



நாடோடி சமூகத்தின் முதல் விதை!

Be the change என்றார் மகாத்மா காந்தி. I am the change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்பவர் தங்கபாண்டியன். சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் படித்த நரிக்குறவ நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மாணவன்.
பனிரெண்டாம் வகுப்புவரை படித்த முதல் மாணவனாக +2 பொதுத் தேர்வில் 438 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியிருக்கிறார். பள்ளி இறுதி படிப்பைத் தாண்டிய முதல் தலைமுறை என்பதே இவரின் சிறப்பு. மாணவன் தங்கபாண்டியனை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி நேரில் அழைத்து புத்தகங்களைப் பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் பழமலை நகரில் 200க்கும் மேற்பட்ட ஊசிமணி, பாசிமணி விற்கும் நரிக்குறவ நாடோடி சமூக மக்கள் பல தலைமுறைகளைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் பழமலை நகருக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் இருக்கிறது. 
அதாவது, 1988இல் சிவகங்கை மாவட்டக் கலெக்டராக இருந்த எல்.பழமலை ஐஏஎஸ், நரிக்குறவ சமூக மக்கள் வாழ்வாதாரத்திற்காக, சிவகங்கை அருகே உள்ள பையூர் கிராமத்தில் அவர்கள் குடியிருப்புக்கென இடத்தை உருவாக்கிக் கொடுத்தார். இதனால் அவர் பெயரிலேயே அந்தப் பகுதி பழமலை நகர் எனப் பெயர் பெற்றது.

1988ல் உருவான பழமலை நகரில், கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் கழித்து, 2023இல்தான் ஒரு மாணவன் +2 வகுப்பைத் தாண்டியிருக்கிறார். இந்தப் பகுதியில் இதுவரை யாரும் +2 படிக்கவில்லை என்பதுடன், தங்கபாண்டியன் +2இல் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருப்பது வரவேற்பைப் பெற்றிருக்கிறது.“கல்வி எங்கள் நாடோடி வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது...” உற்சாகத்துடன் சொல்கிறார் தங்க பாண்டியன். ‘‘கல்வி பெரியதொரு சக்தின்னு புரிஞ்சிக்கிட்டு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில படிக்கத் தொடங்கினேன்.

என் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் வளையல், ஊசிமணி, பாசி மணி வியாபாரம் செய்பவர்கள். அருகே இருக்கும் கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்கு வியாபாரத்திற்கு அவர்கள் செல்லும்போது நானும் சில நேரங்களில் செல்ல வேண்டி இருக்கும்.

அங்கிருந்தபடியே பள்ளிக்கு வருவேன். பெரும்பாலும் இரவில்தான் கண்விழித்து அதிக நேரம் படிப்பேன்...’’ என்கிற தங்கபாண்டியன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி பாடத்தில் 90 மதிப்பெண்களும், தியரியில் 83 மதிப்பெண்களும், பிராக்டிக்கல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்று அசத்தியிருக்கிறார்.

‘‘எங்களை நரிக்குறவர் சமூகத்துப் பிள்ளைகள்தானே என்று ஒதுக்கி வைக்காமல் அக்கறையோடு கவனித்து, படிப்பிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியதற்கு என்னுடைய பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியருமே முக்கியக் காரணம்...’’ என்றவர், பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க விருப்பம் இருப்பதாகத் தெரிவித்து, அரசு கல்விச் செலவுக்கு உதவி செய்தால் மகிழ்ச்சி என்கிறார்.‘‘நாங்கள் வேட்டையாடி சமூகம்தான். என் மகனிடம் கவட்டையை இப்போது கொடுத்தால்கூட குறிபார்த்து சரியாக அடிப்பான்.

அது எங்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம். வேட்டையாடுவதை அரசு தடை செய்தபிறகு, பாசிமணி, ஊசி மணி விற்பனையுடன், சில விளையாட்டுப் பொருட்களையும் சேர்த்து கோயில் திருவிழாக்களில் கடைவிரிக்கிறோம். இதில் வரும் வருமானம் மட்டுமே எங்கள் செலவுக்கு...’’ என்கிறார் தங்க பாண்டியனின் தந்தையான ஜெயபாண்டியன்.

‘‘பழமலை கிராமத்தில் இருக்கிற 200 வீடுகளில் மொத்தம் 500 குடும்பங்கள் வசிக்கிறார்கள். எல்லா குடும்பங்களிலும் உள்ள குழந்தைகள் முதல் தலைமுறைகளாக இப்போதுதான் பள்ளிக்குச் செல்லவே ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எனக்கு முன்னுள்ள 24 தலைமுறைகளுக்கும் சேர்த்து என் மகன்தான் +2 வரை படித்த முதல் மாணவன். கல்லூரிவரை அவனைப் படிக்க வைத்து அரசு வேலை வாங்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

நான் படிக்க ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. விளைவு, வியாபாரத்திற்கு வெளியூர் செல்லும்போது பேருந்துகளில் எழுதியிருப்பதை படிக்கத் தெரியாமலும், வங்கிகளுக்குச் சென்றால் கையெழுத்து போடத் தெரியாமலும் முழிப்பேன். என் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது. அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்...’’ என்னும் ஜெயபாண்டியனின் இன்னொரு மகன் 9ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

செய்தி: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: சே. கார்த்திகைராஜா