நிகழ்காலம் கடந்தகாலம்...Via Phone!
கதைப்படி ஒருவருடைய கடந்த கால வாழ்க்கையை மாத்த முடியும். அதற்கு ஒரு போன் உதவும். அந்த போன் மூலம் கடந்த காலத்துக்குப் போகவும் முடியும்; நடக்கப்போகும் விபரீதத்தைத் தடுக்கவும் முடியும்.  இதை ஸ்க்ரீன்ல சொன்னால் எப்படி இருக்கும் என்ற ஐடியாவுல ஆர்வத்தோட ‘மார்க் ஆண்டனி’ கதையை எழுதினேன்...’’ உற்சாகமாய் பேச ஆரம்பிக்கிறார் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். சினிமாவில் ஏராளமான கேங்ஸ்டர் கதைகள் வந்துள்ளன. இதில் ‘மார்க் ஆண்டனி’ எந்த விதத்தில் வித்தியாசப்படுகிறது?
 சினிமா ஆரம்பிச்ச காலத்திலிருந்தே தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் இல்லாமல் நிறைய கேங்ஸ்டர் படங்களை நாம் பார்த்துள்ளோம். பான் இந்தியா கான்செப்ட் வந்தபிறகு அந்த மாதிரி படங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் மக்களுக்கு ஆக்ஷன் படங்கள் பிடிச்சிருக்கு.‘மார்க் ஆண்டனி’யில் ஆக்ஷனைத்தாண்டி சை-ஃபை எலிமென்ட்ஸ் இருக்கிறது. இந்தப் படத்தை கேங்ஸ்டர் படமாக மட்டும் பார்க்காமல் ஒரு போன் சம்பந்தப்பட்ட டைம் டிராவல் படமாக பார்க்கணும்.
 1970களில் ஒரு போன் கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த போனை மையமாக வெச்சு கேங்ஸ்டருக்குள் சண்டை நடக்குது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்துக்குப் பிறகு ஆதிக் படம்னா இப்படிதான் இருக்கும் என்ற ஒரு பிராண்ட் கிரியேட் ஆயிடுச்சு. அந்த ஜானரை விட்டு வெளியே வரணும்னு சிம்பு சாரை வெச்சு ஆக்ஷன் படம் எடுக்க முயற்சி பண்ணினேன். சில காரணங்களால அது சரியா நடக்கவில்லை.என் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. புதுப் புது ஜானரை என்னால சக்சஸ் பண்ண முடியும்னு நம்பினேன். அப்படி உருவாக்கிய படம் இது.
விஷால் மாதிரியான ஆக்ஷன் ஹீரோவுக்கும், எஸ்.ஜே.சூர்யா மாதிரியான பெர்ஃபாமருக்கும் என்ன மாதிரியான படம் பண்ணலாம் என்ற ஐடியாவுல இந்த ஸ்கிரிப்ட் பண்ணினேன். எல்லா டைம் டிராவல் படத்திலும் நாம் ஃபிசிக்கலா டைம் டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவோம். இந்தப் படத்துல ஃபிசிக்கலாக போக முடியாது. அதை கதையோட பெரிய முடிச்சாக கருதுகிறேன்.
மற்றபடி கதையை ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து குறிப்பிட்ட இடத்துல முடியுதுனு ஒரு வரியில் இந்தக் கதையை சொல்ல முடியாது. எல்லோருடைய வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் கசப்பான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கும். அதை மறக்க முடியாமல் பல வருடங்கள் பயணம் செய்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மாதிரி போன் கிடைச்சா கசப்பை மாற்றுவார்கள் என்பதை படத்தோட ஒன்லைன் ஸ்டோரியாக பார்க்கிறேன்.
விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உட்பட எல்லோரும் டைரக்ஷன்ல கெட்டிக்காரர்கள். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது?
தலையீடு இருந்துச்சானு சுத்தி வளைச்சு கேட்கிறீங்கனு புரியுது! உண்மையில் அவர்களுடன் வேலை செய்தது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. நமக்கு என்ன வேணும்னு சொன்னால் போதும். அருவி மாதிரி கொட்ட ஆரம்பிச்சுடுவாங்க.டைரக்டர், ஆக்டர் என எந்த வித்தியாசத்தையும் அவர்களிடம் பார்க்கமுடியவில்லை. அவர்கள் எல்லோருமே டைரக்டராக இருப்பதால் நான் என்ன யோசிக்கிறேன், எப்படி யோசிக்கிறேன், எதுக்காக இன்னொரு டேக் கேட்கிறேன் என்பதை ஈஸியா புரிஞ்சுக்கிட்டாங்க. அது என் வேலையை ரொம்ப சுலபமாக்கிடுச்சு.
விஷால் சாரைப் பொறுத்தவரை அவர் ஆக்ஷன் ஹீரோவாக பல பேரை அடிச்சாலும் அதுல நம்பகத்தன்மை இருக்குமளவுக்கு தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.அப்படிப்பட்ட ஆக்ஷன் ஹீரோவை பயந்தாங்கொள்ளி, எதற்கெடுத்தாலும் பயப்படுகிறவர், சண்டையை விரும்பாதவர் என காண்பித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் மார்க் கேரக்டர். அதை பிரமாதமா பண்ணினார்.
மார்க், கனவிலும் சண்டையை விரும்பாதவர். ஆனால், அவருடைய அப்பா ஆண்டனி சண்டையோட குடித்தனம் பண்ணுபவர். பெரிய தாதாவா அதகளம் பண்ணுவார். இந்த இருவேறு கேரக்டர்களையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத வகையில் செமையாகப் பண்ணினார்.எஸ்.ஜே.சூர்யா சாரை நானே விரும்பி அழைத்து வந்தேன்னு சொல்லலாம்.
பொதுவா வில்லன் நடிகர்கள் அவருடைய கேரக்டரை பண்ணமுடியாது. பெர்ஃபாமன்ஸ் தேவைப்படுகிற கேரக்டர். ரசிகர்களை சிரிக்க வைக்கணும், பயப்பட வைக்கணும், பதட்டமடையச் செய்யணும். அப்படி எல்லாத்தையும் ஒரே சமயத்துல அதுவும் வித்தியாசமாக பண்ணக்கூடியவராகத் தெரிந்தார் எஸ்.ஜே.சூர்யா. அதனால் எஸ்.ஜே.சூர்யா சார்தான் வேணும் என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய தயாரிப்பாளரும் கதையைப் புரிஞ்சுக்கிட்டு உங்களுடைய டிமாண்ட் கரெக்ட்தான்னு ஒப்புக்கொண்டு எஸ்.ஜே.சூர்யா சாரை கமிட் பண்ண உதவியாக இருந்தார். பொதுவா வில்லனை வெறுப்பாங்க. இதுல வில்லனை லவ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. படத்துல எந்த இடத்திலும் அவரை வில்லனா நெனைச்சு பார்க்க முடியாதளவுக்கு அவருடைய கேரக்டர் சுவாரஸ்யமாக இருக்கும்.
செல்வராகவன் சாரைப் பொறுத்தவரை அவரை சீரியஸ் முகமாக நெனைக்கிறோம். இதுல முதல் முறையாக ஜாலியான கேரக்டர் பண்ணியிருக்கிறார். அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்து நடிக்கச் சொன்னோம். ஸோ, தன்னுடைய கேரக்டரை ரசிச்சு பண்ணினார்.‘புஷ்பா’ சுனில் இருக்கிறார். ‘புஷ்பா’வுக்குப் பிறகு அவர் நடிச்ச முதல் தமிழ்ப் படம் இதுதான். அதன் பிறகுதான் ‘ஜெயிலர்’, ‘மாவீரன்’ போன்ற படங்கள் பண்ணினார். கதை எனக்கு பிடிச்சிருக்கு. அந்த சந்தோஷத்தால்தான் படம் பண்ண வர்றேன்னு கமிட்டானார்.
நாயகியாக ரீதுவர்மா. கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர்ல அசத்தினார். இன்னொரு நாயகியாக அபிநயா. இதுவரை பார்க்காத அபிநயாவாக அவருடைய கேரக்டர் புதுசாக இருக்கும். அவருடைய நிஜவாழ்க்கையில் உடல் ரீதியாக சில குறைகள் இருந்தாலும் அதை ஸ்கிரீன்ல காண்பிச்சது கிடையாது. இதுல அடுத்த லெவல் எனுமளவுக்கு துப்பாக்கி ஏந்தி அதிரடி பண்ணியிருக்கிறார்.
உங்கள் நண்பர் ஜி.வி.பிரகாஷ் மியூசிக்ல என்ன ஸ்பெஷல்?
நடிகர்களுக்குப் பிறகு படத்தோட முக்கியமான பலம் அவர்தான். ஒரு கதைக்கு நடிகர், நடிகைகள் எவ்வளவு முக்கியமோ அதுமாதிரி மியூசிக்கும் மிக முக்கியம். பின்னணி இசை அதைவிட முக்கியம். பின்னணி இசையைப் பொறுத்தவரை அவருடைய பெஸ்ட்டை கொடுத்தார். ஒவ்வொரு பி.ஜி.எம்.மும் டிரெண்டிங் ஆகும்.‘பஞ்சு மிட்டாய்’ ரீமிக்ஸ் பாடல் டிரெண்டிங்ல முன்னிலையில் இருக்கிறது. பாடலோட சாராம்சத்தையும் கெடுக்காமல் இப்போது இருக்கிற எனர்ஜியுடன் கொடுத்தார். ஜி.வி.பி.
எப்போதும் எனக்கு பெஸ்ட் கொடுப்பார். இதுல கூடுதலாக கொடுத்தார். 70களுக்கு ஒருவிதமான வின்டேஜ் சவுண்ட், 90களுக்கு ஒருவிதமான வின்டேஜ் சவுண்ட் என பல வெரைட்டி கொடுத்தார்.ஒளிப்பதிவு அபிநந்தன் ராமானுஜம். ‘கவண்’, ‘கவலை வேண்டாம்’ என நிறையப் படங்கள் பண்ணியவர். பெரிய ஜாம்பவான் கேமராமேன்கள் மைண்ட் செட்ல உள்ள அற்புதமான டெக்னீஷியன். எனக்குத் தெரிஞ்சு இந்தப் படத்துக்குப் பிறகு அவருடைய ஒர்க் தமிழ் சினிமாவுல பெரியளவில் பேசப்படும்.
மொத்தம் 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்துச்சு. அதுல இரண்டு, மூன்று நாட்கள்தான் பகலில் எடுத்தோம். மற்ற நாட்கள் எல்லாமே நைட் ஷூட்.என்னை நம்பி விஷால் சார் கால்ஷீட் கொடுத்தார். அதே மாதிரி நான் சொன்ன கதையை நம்பி இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தவர் வினோத்குமார். விஷால் சார் கரியர்ல இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படமாக இருக்கும்னு நெனைக்கிறேன். எனக்கும் இதுதான் பெரிய படம். எல்லாவிதத்திலும் சப்போர்ட் பண்ணக்கூடிய தயாரிப்பாளர் கிடைச்சது என் அதிர்ஷ்டம்.
க்ளைமாக்ஸ் காட்சியில் நடந்த விபத்து எல்லோருக்கும் தெரியும். லாரி இடித்துவிட்டு ஒரு இடத்துல நிற்கணும். டைமிங் மிஸ்ஸானதால் லாரி நிற்காமல் விஷால் சார் மீது மோதாத குறையாக ஓடியது. அப்போது படப்பிடிப்புல 600 துணை நடிகர்கள் இருந்தார்கள். கடவுள் அருளால் எல்லோரும் அசம்பாவிதத்துல இருந்து தப்பித்தார்கள்.தமிழ் சினிமாவில் யதார்த்த படங்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கக்கூடிய காலம் இது. இப்போது விக், பழைய காலத்து உடைகள் என படத்தின் தோற்றம் வெற்றிக்கு எந்தவிதத்துல கைகொடுக்கும்?
எல்லோரும் எல்லாவிதமான படங்களையும் பார்க்கிறார்கள். கமர்ஷியல் படங்களை குறிப்பிட்ட இயக்குநர்கள் எடுப்பார்கள். வாழ்வியல் சார்ந்த கதைகளை சிலர் எடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை என் வயசுக்கு ஏற்றமாதிரி ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ எடுத்தேன்.
இப்போது எனக்கு பக்குவம் வந்துவிட்டது. அதனால் விஷால் சாரிடம் போனேன். இன்னும் பத்து ஆண்டுகள் போனால் என்னுடைய அனுபவம் கூடும். அப்போது வாழ்வியல் சார்ந்த கதைகள் பண்ணலாம். சினிமாவுக்கான கதை என்பது நம்முடைய மைண்ட் செட் என்ன சொல்லுதோ அதுதான் படமாக வெளிவரும். ஜி.வி.பிரகாஷ், சிம்பு, விஷால்னு உங்கள் வளர்ச்சி வேகம் எடுத்துள்ளது. விஜய், அஜித் படங்கள் எப்போது பண்ணப்போகிறீர்கள்?
அஜித் சாருடைய தீவிர ரசிகன் நான். ‘மார்க் ஆண்டனி’ எடுக்கக் காரணமே அஜித் சார்தான். இந்த மாதிரி பிரம்மாண்டமான படம் எடுக்க எனக்குள் பொறியை உண்டாக்கியவர் அவர். சின்னதாக யோசிக்காமல் பெரிதாக யோசித்தால்தான் பெரிய படம் பண்ண முடியும்னு என்னை தட்டிக்கொடுத்தார். அஜித் சாரை வெச்சு படம் பண்ண வேண்டும் என்பது என் கனவு.
‘மார்க் ஆண்டனி’ ரிலீசுக்குப் பிறகு அந்தத் தகுதி கிடைக்கும்னு நம்புகிறேன். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிச்சப்ப அஜித் சாரை நேரில் சந்தித்து, பேசிப் பழகும் வாய்ப்பு கிடைச்சது. அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்தான் விஷால் சார் படம் பண்ணுமளவுக்கு உயர்த்தியுள்ளது.
எஸ்.ராஜா
|