Must Watch
 பிக் ஜார்ஜ் ஃபோர்மேன் சமீபத்தில் விளையாட்டு சம்பந்தமாக வெளியான படங்களில் முதன்மையானது ‘பிக் ஜார்ஜ் ஃபோர்மேன்’ எனும் ஆங்கிலப்படம். ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜார்ஜ் ஃபோர்மேன். ஒரு பன்னை வாங்கி ஆறு பேர் பகிர்ந்து சாப்பிட வேண்டிய சூழல். பள்ளிக்குச் சென்றால் அங்கேயும் உணவில்லாமல் அவதிப்படுகிறார். சக மாணவ, மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சாப்பிட எதுவும் இல்லாமல் தனியாக இருக்கிறார்.
சக மாணவன் ஒருவன் ஜார்ஜ் ஃபோர்மேனை புவர் மேன் என்று கிண்டல் செய்கிறான். கோபத்தில் அவனை அடித்து நொறுக்குகிறான் ஜார்ஜ். இப்படியான ஜார்ஜ் வளர்ந்து, பெரியவனாகி உலகப் புகழ்பெற்ற ஒரு குத்துச்சண்டை வீரனாக எப்படி மாறுகிறார்... இடையில் அவருக்கு என்னவாகிறது... வயதான பிறகும் ஏன் குத்துச்சண்டைக்குத் திரும்புகிறார்... என்பதுதான் மீதிக்கதை.
குத்துச்சண்டைக்காக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், ஹெவி வெயிட் குத்துச்சண்டையில் உலக சாம்பியன், அதிக வயதில் ஹெவி வெயிட் சாம்பியன் மற்றும் மத போதகர் என பன்முக ஆளுமையாக வலம் வந்த ஜார்ஜ் ஃபோர்மேனின் நிஜ வாழ்க்கையைத் தழுவியது இந்தப் படம். இதன் இயக்குநர் ஜார்ஜ் தில்மேன்.
 ஏ டே அண்ட் ஏ ஹாஃப்
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஸ்வீடிஷ் மொழிப் படம் ‘ஏ டே அண்ட் ஏ ஹாஃப்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது. ஆர்டனுக்கும், அவன் மனைவி லூயிஸுக்கும் இடையில் விவாகரத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்டன. நகரத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஹெல்த் சென்டருக்குள் நுழைகிறான் ஆர்டன். அங்கே பல பேர் மருத்துவர்களைப் பார்க்க வரிசையில் காத்திருக்கின்றனர். லூயிஸும் அங்கேதான் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
ஹெல்த் சென்டர் அலுவலரிடம் லூயிஸைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறான் ஆர்டன். லூயிஸ் பிஸியாக இருக்கிறார். டோக்கன் வாங்கிவிட்டு வரிசையாக வரும்படி ஆர்டனிடம் சொல்கிறார் அந்த அலுவலர். டோக்கன் வாங்கிவிட்டு வரிசையில் காத்திருக்கிறான் ஆர்டன். அவன் வரிசை வருகிறது. லூயிஸ் வரவில்லை. மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆர்டன் தன்னிடமிருக்கும் துப்பாக்கியை எடுத்து மிரட்டுகிறான்.
லூயிஸ் வருகிறார். லூயிஸை பணயக் கைதியாக்கி ஒரு கோரிக்கை வைக்கிறான் ஆர்டன். தன் மனைவியை ஆர்டன் பணயக் கைதியாக்க என்ன காரணம் என்பதே படம். ஒரு சிறிய விஷயத்தை எடுத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் ஃபரேஸ் ஃபரேஸ்.
சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை
‘ஜீ 5’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் இந்திப் படம், ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’. சுருக்கமாக ‘பண்டா’. தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி நூ, தன் பெற்றோருடன் காவல் நிலையத்துக்கு வருகிறாள். நாட்டிலேயே செல்வாக்கான ஒரு சாமியார் மீது வன்புணர்வு வழக்கு தொடுக்கிறாள் நூ. எல்லா செய்தித்தாள்களிலும் தலைப்புச் செய்தியாகிறது இந்த வழக்கு. தன் மீது அந்தச் சிறுமி பொய்க்குற்றம் சுமத்துகிறாள். சுலபமாக வழக்கை முடித்துவிடலாம் என்று நினைக்கிறார் அந்தச்சாமியார்.
வழக்கு விசாரணைக்கு வருகிறது. நூ சார்பாக வாதிடும் வழக்கறிஞர் சாமியாரிடமிருந்து பணத்தை ஆட்டையைப் போடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதை நூவின் தந்தை அறிந்துவிட, வழக்கறிஞர் சோலங்கியின் உதவியை நாடுகிறார். சாதாரண மனிதனான சோலங்கி எப்படி செல்வாக்கு மிகுந்த அந்தச் சாமியாருக்கு தண்டனை பெற்றுத் தருகிறார் என்பதே மீதிக்கதை.
உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்து கதை பின்னப்பட்டிருப்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. வழக்கறிஞர் சோலங்கியாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனோஜ் பாஜ்பாயி. படத்தின் இயக்குநர் ஆபூர்வ் சிங் கார்க்கி.
ஆச்சர் அண்ட் கோ
‘அமேசான் ப்ரைமை’க் கலக்கிக் கொண்டிருக்கும் கன்னடப் படம், ‘ ஆச்சர் அண்ட் கோ’. அறுபதுகளின் ஆரம்பத்தில் பெங்களூருவில் உள்ள ஓர் ஆச்சாரமான குடும்பம். பழமையான மரபுகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார் அக்குடும்பத்தின் தலைவர் மதுசூதன் ஆச்சர். அரசுத் துறையில் சிவில் எஞ்சினியராக இருக்கிறார். இந்த வேலையின் காரணமாக அவருக்கு வீடு, கார் எல்லாம் கிடைத்திருக்கிறது.
மதுசூதனுக்கு சுமா, ஜக்கு, ரகு என பத்துக் குழந்தைகள். ஆண் குழந்தைகளை எல்லாம் தன்னைப் போலவே எஞ்சினியராக்க வேண்டும் என்று நினைக்கிறார் மதுசூதன். அவரது வாரிசுகள் வளர்ந்த பிறகு தங்களின் வழிகளில் போக நினைக்கின்றனர். அந்த மாற்றத்தை மதுசூதனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இக்குடும்பத்தின் மூலமாக அறுபது, எழுபதுகளில் பெங்களூரு வாசிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த நவீன மாற்றங்களையும், குறிப்பாக பெண்கள் தங்களின் சொந்தக் காலில் நிற்க ஆரம்பித்ததையும் இப்படம் பதிவு செய்திருக்கிறது.
கடந்த ஐம்பது வருடங்களில் வாழ்க்கை எப்படி நவீனமாக மாறிவிட்டது என்பதை சிந்திக்க வைக்கிறது ‘ஆச்சர் அண்ட் கோ’. படத்தை இயக்கி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார் சிந்து ஸ்ரீனிவாசமூர்த்தி.
தொகுப்பு: த.சக்திவேல்
|