சந்திரபாபு நாயுடு கைது ஏன்..?



ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு 2015ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது.இதற்காக ஜெர்மனியைச் சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்தத் திட்டத்தில் மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டும்.

ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி ரசீது, இன்வாய்ஸ் மூலம் ஜிஎஸ்டியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு நீள்கிறது. 

இதையெல்லாம் பட்டியலிட்டு புகார் ஒன்றை திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடியில் புகார் அளித்தார்.இதனையடுத்து திறன் மேம்பாட்டுக் கழக முன்னாள் தலைவர், இயக்குனர் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநில அரசின் சார்பில் ஜூலை 2021ல் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இந்த சிஐடி அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததா என விசாரணையில் இறங்கியது.இந்த வழக்கில், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் நிர்வாகி காந்தா சுப்பாராவ், இயக்குனர் கே.லட்சுமிநாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நாராயணனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த லட்சுமி நாராயணன், முதல்வராக இருந்தபோது சந்திரபாபு நாயுடுவிடம் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியவர்! ஓய்வு பெற்றபிறகு இவர் ஆந்திர அரசின் ஆலோசகராகவும், அம்மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் இயக்குனரகவும் பணியாற்றினார்.திரும்பத் திரும்ப இந்த வழக்கில் திறன் மேம்பாட்டுக் கழகம் என்ற சொல் இடம்பெறுகிறதல்லவா..?

இதற்கான முழு அர்த்தத்தையும் அறிந்தால்தான் முழுமையாக இந்த வழக்கு புரியும்.சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியில் வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.இந்தப் பயிற்சி மையங்களில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்தான் லட்சுமி நாராயணன் வீட்டில் சிஐடி சோதனை நடத்தப்பட்டது. விசாரணையில் ஜூன், 2015ல் திறன் மேம்பாட்டுக் கழகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகளில் இறங்கியதாகக் கண்டறியப்பட்டது.

அரசாணை எண் 4ன்படி, சீமென்ஸ் எம்டி செளம்யாத்ரி சேகர் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்டி விகாஸ் கன்வில்கர் ஆகியோருக்கு சந்திரபாபு அரசால் ரூ.241 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பணம் 7 ஷெல் நிறுவனங்களுக்கு தவறான விலைப்பட்டியல் மூலம் நிதி மாற்றப்பட்டது என்பது குற்றச்சாட்டு.

இந்தத் திட்டத்துக்கான செலவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக - 2017 - 18ல் ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்ததாக - சிஐடி ரிமாண்ட் அறிக்கை வழியாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜான்சி