நடிப்புக்கு முன் இவர்கள் என்ன செய்தார்கள்?



லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் விஜய் இயக்கத்தில் விரைவில் ஒரு தமிழ்த் திரைப்படம் என அதிகாரபூர்வமாக செய்தி / அறிவிப்பு வெளியாகியிருக்கும் / சமீபத்தில் தமிழில் அறிவித்திருக்கும் நிலையில் -அங்கே பாலிவுட்டிலும் ஒரு டாப் ஸ்டார் நடிகரின் மகன் இயக்குநராகும் கனவுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர்தான் ‘கிங் கான்’ ஷாருக்கானின் மூத்த மகன் ஆர்யன் கான். 
இதற்கென பிரத்யேகமாக சினிமா கலை, திரைப்படம், தொலைக்காட்சி ப்ரொடக்‌ஷனில் பட்டம் பெற்றிருக்கிறார். தவிர ஆர்யன் கான் ‘த இன்கிரிடிபிள்ஸ்’, ‘த லயன் கிங்’, ‘ஃபுளோர் பேபி’ உள்ளிட்ட படங்களில் பின்னணி குரல் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இடையில் சில சறுக்கல்கள், பிரச்னைகள் எனப் புரட்டிப் போட்டாலும் மீண்டும் அவரது கரியரில் தற்போது கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறாராம்.

இவர்கள் இருவர் மட்டும்தான் இப்படி இயக்குநர் அல்லது சினிமாவுக்கு பின்னணியில் வேலை செய்யும் கனவுடன் சினிமாவிற்குள் வந்த சினிமா வாரிசுகளா... என்றால் இல்லை.
இதோ அனுபவமிக்க அல்லது மெகா ஸ்டார் அந்தஸ்து கொண்ட நடிகர்கள், படா சினிமா குடும்பப் பின்னணி இருந்தும் நடிப்பெல்லாம் வேண்டாம் என பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு சினிமாவிலேயே கேமராவுக்குப் பின்னணியில் இருந்து வேலை செய்ய எண்ணம் கொண்டு சில நாட்கள் வேலையும் செய்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால், எங்கே சுற்றினாலும் அங்கேதான் வந்து நிற்கும் என்பார்களே... அப்படி நடிப்பிற்கே வந்த சில நடிகர் / நடிகைகளின் ஷார்ட், க்யூட் பட்டியல் இது...

விஷால்

தந்தை ஜி.கே.ரெட்டி தெலுங்கில் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர். விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவும் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்தும், நடித்தும் இருக்கிறார். ஆனால், இந்த இரண்டு துறைக்கும் சம்பந்தம் இல்லாமல் துணை இயக்குநராக ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுடன் இணைந்து ‘வேதம்’, ‘ஏழுமலை’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜெயபிரகாஷ் கேட்டுக்கொள்ள முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக்கொண்டு ‘செல்லமே’ படம் மூலம் சினிமா நடிப்புக்கு வந்துவிட்டார். அந்த நட்பின் நிமித்தமே ‘இரும்புத்திரை’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தார் அர்ஜுன்.

ஷ்ருதி ஹாசன்

இசையமைப்பும், பின்னணி பாடல் மற்றும் தனியிசைப் பாடல்களுமே கனவு என அமெரிக்காவில் இசை குறித்து பல்வேறு படிப்புகள், நுணுக்கங்கள் எனக் கற்றுத் தேர்ந்தவர் ஷ்ருதி ஹாசன்.
தனது முதல் பாடலாக ‘தேவர் மகன்’ (1992) படத்தில் ‘போற்றிப் பாடடி...’ பாடலைப் பாடினார். பின்னர் ‘அவ்வை சண்முகி’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘சாச்சி 420’ படத்தில் ‘சுப்படி...’ பாடலையும் பாடினார். தனது தந்தையின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இசையமைப்பாளரும் ஷ்ருதி ஹாசன்தான். ஆனால், நடிப்பு இவரையும் விட்டு வைக்கவில்லை.

கார்த்தி சிவகுமார்

சினிமாவின் ‘மார்க்கண்டேயன்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன். அண்ணன் சூர்யாவும் பெரிய ஸ்டார்... ஆனாலும் ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இயக்குநராகும் கனவுடன் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ‘ஆயுத எழுத்து’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றினார் கார்த்தி. வந்த நடிப்பு வாய்ப்புகளை எல்லாம் கூட வேண்டாம் என நிராகரித்தார்.

அப்பாவின் வேண்டுகோளுக்குக் கூட செவி சாய்க்காமல் இயக்கம்தான் பிரதானம் என்றிருந்தார். இதற்காகவே நியூயார்க்கில் சினிமா படமாக்கலில் இரண்டு கோர்ஸ்கள் கூட முடித்தார். ஆனால், அமீரின் ‘பருத்தி வீரன்’ படம் அவரை சினிமா நடிப்பிற்கு இழுத்து வந்துவிட்டது.

அர்ஜுன் கபூர்

பாலிவுட்டின் காதல் மன்னனாக அத்தனை காதல் திரைப்படங்களின் கதாநாயகனாக இன்று ஜொலிக்கிறார். ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவரின் முன்னாள் மனைவி மோனா ஷௌரி கபூரின் மகன். ஆரம்பத்தில் இயக்குநராகும் ஆசையில் ‘சக்தி’, ‘கல் ஹோ நா ஹோ’, ‘சலாம்-இ-இஷ்க்’ உள்ளிட்ட படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனம் கபூர்

அனில் கபூரின் செல்லமான மூத்த மகள். தொடக்கத்தில் சற்றே பருமனாக இருந்தவர் தொடர்ந்து நடிப்பிலும் ஆர்வம் காட்டாமல் இயக்குநராகும் ஆர்வத்தில் இருந்தார். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பிளாக்’ இந்திப் படத்தில் அவருக்கு துணை இயக்குநராகவும் பணியாற்றினார். ஆனால், அவரை ‘சாவரியா’ படம் மூலம் நடிப்பிற்குக் கொண்டு வந்தார் அதே சஞ்சய் லீலா பன்சாலி.

வருண் தவான்

40 படங்களுக்கு மேல் இயக்கிய பாலிவுட் இயக்குநர் டேவிட் தவானின் மகன்... இந்தித் திரையுலகின் தவான் குடும்பப் பின்னணி... ஆனால், வருண் தவானும் தன் தந்தை வழியில் இயக்கமே ஆர்வமாக கரண் ஜோஹரின் ‘மை நேம் ஈஸ் கான்’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றினார். அதனால் என்ன... பாலிவுட் எப்படி விட்டு வைக்கும்?! ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ இந்தித் திரைப்படம் அவரை நடிப்பில் சுருட்டிப்போட்டது.

ஜெயம் ரவி

எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர் மோகனின் மகன், இயக்குநர் மோகன் ராஜாவின் சகோதரர். ஆரம்பத்தில் அப்பா, அண்ணன் வழியில் சினிமா தொழில்நுட்பம், இயக்கம் என்னும் கனவுடன்தான் ‘ஜெயம்’ ரவி சினிமாவுக்குள் நுழைந்தார். விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்ற கையோடு முதற்கட்டமாக ‘ஆளவந்தான்’ படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் துணை இயக்குநராக பணியாற்றத் துவங்கியவரை அப்பா தயாரிப்பில், அண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம்’ படத்தில் நடிகராக அறிமுகப்படுத்த... நடிப்பே வாழ்க்கை என மாறிவிட்டது இவருக்கு.
இன்று ‘பொன்னியின் செல்வனாக’ திரையுலகில் நிற்பார் என்று ‘ஜெயம்’ ரவி கனவு கூடக் கண்டிருக்க மாட்டார்.

இம்ரான் ஹாஷ்மி

இம்ரான் ஹாஷ்மிக்கு இந்திய டாப் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், இயக்குநர்களான மஹேஷ் பட் மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் அன்னை வழி தாய் மாமாக்கள். அப்பா சையது அன்வர் ஹாஷ்மியும் நடிகர்தான்.ஆனால், இம்ரான் ஹாஷ்மி நடிப்பில் ஆர்வம் காட்டாமல் ஆரம்பத்தில் தனது மாமா மஹேஷ் பட்டிடம் துணை இயக்குநராக ‘ராஸ்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்தார். இன்று இந்தியாவின் ‘கிஸ்ஸிங் ஸ்டார்’ என செல்லமாக நடிப்புக்காக அழைக்கப்படுகிறார்.

கீர்த்தி சுரேஷ்

80களின் நாயகி மேனகா மற்றும் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ் குமாரின் மகள். ஆரம்பத்தில் ஃபேஷன் டிசைனிங் - குறிப்பாக சினிமா காஸ்ட்யூம் டிசைனிங் ஆர்வத்துடன் அதற்கென பிரத்யேகப் படிப்பாக லண்டன் சென்று படித்து வந்தவர். ஆனால், சற்றும் எதிர்பாராமல் சினிமா நடிப்பு அவரை ஏற்றுக்கொண்டதோடு தேசிய விருதையும் கையில் திணித்துவிட்டது. இன்று தென்னிந்திய நடிகைகளை கீர்த்தி இல்லாமல் பட்டியலிட முடியாது.

ரன்வீர் சிங்

முன்னாள் பாலிவுட் குணச்சித்திர நடிகை சந்த் புர்க்கின் பேரன் மற்றும் அனில் கபூரின் நெருங்கிய சொந்தம்... ஆனாலும் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் தனது கரியரைத் துவக்கியது துணை இயக்குநராகத்தான். ‘பன்டி அவுர் பப்ளி’ உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் பல விளம்பரங்களில் துணை இயக்குநராக வேலை செய்திருக்கிறார்.
ஆனால், இன்று இவரின் வித்யாசமான நடிப்பிற்காகவே இந்தியாவின் ஜிம் கேரி என செல்லமாக அழைக்கப்படுகிறார். மேலும் இந்திய டாப் நடிகை தீபிகா படுகோனின் கணவராகவும் வலம் வருகிறார்.

ரன்பீர் கபூர்

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரிஷி கபூர் மற்றும் நடிகை நீது சிங் ஆகியோரின் மகன். ராஜ் கபூர் குடும்பம். ஆனால், ஆரம்பத்தில் இயக்குநராகும் கனவுடன் ‘பிரேம்கிரந்த்’, ‘பிளாக்’ உள்ளிட்ட படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அதெப்படி கபூர் குடும்பத்து வாரிசை பாலிவுட் விட்டு வைக்கும்?! சோனம் கபூர் அறிமுகமான அதே ‘சாவரியா’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ரன்பீர் கபூர். இவரின் இயற்கையான நடிப்பிற்காகவே பாலிவுட் தாண்டி இந்தியா முழுக்க பேசப்பட்ட படங்கள் ஏராளம். மேலும் தேசிய விருது பெற்ற அலியா பட்டின் கணவர் இவர்.

ஹிருத்திக் ரோஷன்

தேசிய விருது பெற்ற இயக்குநர் மற்றும் 80 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் ராகேஷ் ரோஷனின் மகன். ஆனால், ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் அவரது அப்பாவுக்கே பல படங்களில் துணை இயக்குநராக வேலை செய்திருக்கிறார். ‘கஹோ நா பியார் ஹை’ படத்தில் நடிகராக அறிமுகமானவருக்கு இன்று இந்தியா முழுக்க ரசிகர்கள் என்பதைத் தாண்டி பெண் ரசிகைகள் ஏராளம்.

ஷாலினி நியூட்டன்