உலக சாதனைகளை உலுக்கிய இந்தியத் திரைப்படங்கள்!



உலக அளவில் பொழுதுபோக்குகள் என வகைப்படுத்தினால் நிச்சயம் அதில் சினிமாவிற்குத்தான் முதல் பங்கு. உலகின் கடைக்கோடி மனிதனின் வாழ்க்கையிலும் கூட ஏதோ ஒரு வகையில் சினிமா மாற்றங்களையும், மகிழ்வையும், சோகங்களையும், தாக்கத்தையும் கடத்திக்கொண்டுதான் இருக்கிறது. 
உலகின் அத்தனை சினிமா கலைஞனும் ஏதோ ஒரு வகையில் தனது பார்வையாளனைத் திருப்திப்படுத்த எங்கோ ஒரு ஓரத்தில் நான்கு சுவருக்குள் அமர்ந்து யோசித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இன்னும் சிலர் கொஞ்சம் அதிகமாகவே பாக்ஸ் ஆஃபீஸ், விருதுகள் எனத் தொடங்கி உலக சாதனை அளவிற்கு எல்லாம் கூட யோசித்துக்கொண்டிருப்பார்கள். அப்படி யோசித்து உலக அளவில் என்னென்ன காரணங்களுக்காக எந்தெந்த இந்தியப் படங்கள் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன?

இதோ ஒரு தேடல்...

  உலகின் மாபெரும் சினிமா துறை நம் இந்திய சினிமா துறைதான். வருடம் தோறும் 800 முதல் 1000 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகின்றன. ஹாலிவுட்டிலோ வெறும் 600 திரைப்படங்கள்தான் வெளியாகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! 2008ம் வருடம் மட்டும் இந்திய மொழிகளில் 1288க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. போதாதா..? இந்த சாதனை அந்த வருடம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதே வருடத்தில் ஹாலிவுட்டில் 606 திரைப்படங்கள்தான் வெளியாயின.  

‘லவ் அண்ட் காட்’ - ‘கைசே அவுர் லைலா’ (1986) - இந்தப் படம் பாலிவுட் வரலாற்றில் மிக நீளமான தயாரிப்பாக உலக சாதனை படைத்தது. ஆம்... 1971ம் ஆண்டு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த குருதத் இறந்தார்... பிறகு படத்தின் இயக்குநர் கே.ஆசிப் காலமானார். இதனால் கிடப்பில் போடப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து 1986ல், சஞ்சீவ் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படம் முடிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் ‘சுயம்வரம்’ (1999) படத்தை யாராலும் மறக்க முடியாது. 14 இயக்குநர்கள், நான்கு இசையமைப்பாளர்கள், 45 துணை இயக்குநர்கள், 17 சினிமாட்டோகிராபர்கள், 14 முன்னணி நடிகர்கள், 12 முன்னணி நடிகைகள்... என மொத்தமாக 1483 சினிமா கலைஞர்கள் பணியாற்றி 24 மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்ட முழுமையான திரைப்படம் என்னும் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது.

சுனில் தத் தயாரித்து இயக்கிய படம் ‘யாதேன்’ (1964). படத்தின் நாயகனும் அவர்தான். படத்தில் இவரைத் தவிர எந்த நடிகரும் கிடையாது. கடைசிக் காட்சியில் நிழலாகத் தோன்றிய நர்கிஸ் தத், இரண்டாவது நடிகராக நடித்திருந்தார். அவரும் நிழலாக திரையில் நிற்பார்.  ஒரே ஒரு நடிகரைக் கொண்ட முதல் படம் என கின்னஸ் புத்தகத்தில் இப்படம் இடம் பிடித்தது.

வி.கிருஷ்ணமூர்த்தி எழுதி இயக்கிய தமிழ்ப் படம் ‘சிவப்பு மழை’ (2010). 11 நாட்கள் 23 மணி 45 நிமிட நேரத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டது. அதாவது கதை எழுதத் துவங்கியது முதல், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு உட்பட அத்தனையும் கண்காணிக்கப்பட்டு மொத்தமாக இவ்வளவு மணி நேரத்தில் இப்படத்தை
முடித்தார்கள்.

‘அகடம்’ (2014) முகமது இசாக் இயக்கத்தில் முற்றிலும் புது முகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம். சிங்கிள் ஷாட் திரைப்படமாக இரண்டு மணி நேரம் 3 நிமிடங்கள் 30 விநாடிகள் எடுக்கப்பட்டுள்ள படமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான ‘கஹோ நா பியார் ஹை’ (2002), ‘ஃ பிலிம் பேர்’ விருதுகள், ‘ஸ்டார் ஸ்கிரீன்’ விருதுகள் உட்பட மொத்தம் 92 விருதுகளைப் பெற்றது! உலகிலேயே அதிகமான விருதுகளைப் பெற்ற திரைப்படப்  பட்டியலில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகம் மற்றும் லிம்கா புத்தகத்தில் இப்படம் இடம் பிடித்திருக்கிறது.

ராஜ்குமார் ஹிரானி இயக்க, ஆமிர் கான், அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங் ராஜ்புத், போமன் இரானி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘பிகே’ (2014). இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனங்களையும், ஆன்மீகத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் மூடநம்பிக்கைகளையும் கூட ஆட்டுவித்த திரைப்படம். சர்வதேச அளவில் அதிக வசூல் படைத்த இந்தியத் திரைப்படம் என்னும் சாதனையால் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.

ஃபர்ஹத் சாஜித் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், ஷிவ் பண்டிட், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தித் திரைப்படம் ‘பாஸ்’ (2013). இந்தப் படத்திற்காக உலகிலேயே பெரிய போஸ்டர் வெளியிடப்பட்டது. அக்டோபர் 3, 2013 அன்று இங்கிலாந்தில் உள்ள லிட்டில் கிரான்ஸ்டன் ஏர்ஃபீல்டில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரை மேக்ரோ ஆர்ட்ஸ் தயாரித்தது. 58.87 மீட்டர் அகலமும் 54.94 மீட்டர் உயரமும் கொண்ட போஸ்டர் உலகிலேயே பெரிய போஸ்டராக கின்னஸில் இடம் பிடித்தது.

‘பாஸ்’ படத்தின் போஸ்டரை முறியடித்ததும் நம் இந்தியப் படம்தான். எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ‘பாகுபலி’ திரைப்படம்தான் அது. 50,000 சதுர அடிக்கு மேல் மிகப்பெரிய போஸ்டரை உருவாக்கி கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த போஸ்டர் 4,793.65 மீட்டர் சதுர பரப்பளவைக் கொண்டது.

ஜூன் 27, 2015 அன்று கொச்சியில் உள்ள குளோபல் யுனைடெட் மீடியா கம்பெனி பிரைவேட் லிமிடெட் மூலம் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டது. இந்த போஸ்டர்தான் தற்போது உலகின் மிகப்பெரிய திரைப்பட போஸ்டராக மாஸ் காட்டி நிற்கிறது. இவ்விரு திரைப்படங்களுக்கும் முன்பு உலகப் புகழ் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ ஆல்பம்தான் இந்த போஸ்டர் கின்னஸ் சாதனையைப் பெற்றிருந்தது.

இந்த வரிசையில் திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியின் பிரபல சீரியலான ‘நாதஸ்வரம்’ சீரியலும் கூட இணைந்திருக்கிறது. இந்த சீரியலின் 1000மாவது எபிசோடை லைவ் ஆக ஒளிபரப்ப வேண்டும் என்று திருமுருகன் எடுத்த முயற்சியின் பலனாக 23 நிமிடங்கள் 25 விநாடிகளில் சிங்கிள் ஷாட்டில் எடுத்து அப்படியே நேரலையில் சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். இதற்காக ‘நாதஸ்வரம்’ குழு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது.

ஷாலினி நியூட்டன்