அறுவை சிகிச்சை மூலம் பவுத்திரத்தை எளிதாகக் குணப்படுத்தலாம்!பொதுவாக ஆசனவாய்ப் பகுதியில் எந்தப் பிரச்னை வந்தாலும் நாம் எல்லோருமே ‘மூலம்’ என்றுதான் நினைப்போம். ஆனால், பவுத்திரம் மற்றும் ஆசனவாய் வெடிப்பு (Fissure in ano) போன்றவையும் முக்கியமானதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

சரி, பவுத்திரம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதற்கான சிகிச்சைகள் என்ன?

இதுகுறித்து இரைப்பை, குடல், கல்லீரல் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணரும், பிரேம் இந்தியன் மருத்துவமனையின் சேர்மனுமான டாக்டர் ஆர்.கண்ண
னிடம் பேசினோம். ‘‘ஆசனவாய்ப் பகுதியில் ஆசனவாய்ச் சுரப்பிகள் (Anal Glands) உள்ளன. பல காரணங்களால் இதில் நோய்த்தொற்று ஏற்பட்டால் சீழ்க்கட்டி ஏற்படும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்யாவிட்டால், சீழ்க்கட்டியானது ஆசனவாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பரவி சீழ் வடியும். இதனையே பவுத்திரம் என்கிறோம்.

இதை எளிமையாக ஆசனவாய்க்கும், ஆசனவாயின் வெளியே உள்ள  தோலுக்கும் இடையே உள்ள துளை என்றும் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல. பவுத்திரம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘பவத்’ என்றால் துளை என்றுபொருள். புரையோடி சீழ்கட்டி துளை உண்டாவதால்தான் இதனை பவுத்திரம் (Fistula in ano) என்கிறோம்.
இதற்கு முக்கிய காரணங்கள் நோய்த்தொற்று, மலச்சிக்கல், ஆசனவாய் பகுதியில் சீழ்க்கட்டி, குடல்பகுதி காசநோய், குடல் புண், மலக்குடல் புற்றுநோய் போன்றவை ஆகும்...’’ என்றவர், இதன் அறிகுறிகள் பற்றித் தொடர்ந்தார்.

‘‘முதலில் ஆசனவாய்ப் பகுதியில் தொடர்ந்து சீழ்வடியும். பிறகு வலி ஏற்படும். அடுத்து, ஆசனவாய்ப் பகுதியில் புண் உருவாகும். நிறைவில், வீக்கத்துடன் கூடிய வலி ஏற்படும். சில சமயங்களில் காய்ச்சல் ஏற்படும். இவையே முக்கியமான அறிகுறிகள். 

இதனை கண்டறிய சில பரிசோதனைகள் உள்ளன. முதலில், விரல் பரிசோதனை. அதாவது ஆசனவாயின் உள்பகுதியில் ஆள்காட்டி விரலை செலுத்தி அதன் தன்மையைக் கண்டறிவோம். இரண்டாவதாக Anoscope/Protoscope என்ற கருவியை ஆசனவாயின் உட்பகுதியில் செலுத்தி அதன் தன்மையைக் கண்டுபிடிக்கலாம்.

மூன்றாவதாக Fistulogram/CT Scan மூலமாகவும் பவுத்திரத்தின் தன்மையைக் கண்டுபிடிக்கலாம். நான்காவதாக, MRI Fistulo Gram என்ற பரிசோதனை மூலம், மிகத் தெளிவாக ஆசனவாயில் எந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரம், எந்த கோணத்தில் எவ்வளவு நீளத்திற்கு எப்படி பரவியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பரிசோதனைகளின் முடிவைப் பொருத்தே அறுவை சிகிச்சை பற்றி தீர்மானிக்கப்படும். பொதுவாக பவுத்திரத்தை, கீழ்நிலை பவுத்திரம் (Low anal fistula), மேல்நிலை பவுத்திரம் (High anal fistula), Horseshoe பவுத்திரம் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில், கீழ்நிலை பவுத்திரத்திற்கு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்தாலே போதும். சரிசெய்து விடலாம். ஆனால், மேல்நிலை பவுத்திரத்திற்கு பல சமயங்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை தேவைப்படும்...’’ என்றவர், இதுகுறித்து விவரமாக விவரித்தார்.
 
‘‘பவுத்திரத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என பல விளம்பரங்களை நாம் பார்த்திருப்போம். அதில் உண்மை இல்லை. பவுத்திரத்தை மருந்தால் குணப்படுத்தி விடுகிறோம் என்பார்கள். அதுவும் பொய்தான். ஏனெனில், பவுத்திரத்தை மருந்தால் குணப்படுத்த முடியாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. இதில் பல முறைகள் உள்ளன. பவுத்திரத்தின் தன்மையைப் பொருத்து, அதாவது, அதன் நீளம், உயரம், ஒன்றுக்கு மேற்பட்ட துளைகளைப் பொருத்து அறுவை சிகிச்சை மாறுபடும்.

இதில் முதலாவது சீழ்கட்டியை அகற்றுதலாகும். இதன்படி ஆசனவாய்ப் பகுதியில் உள்ள கட்டியில் இருந்து சீழை முற்றிலுமாக அகற்றிவிட்டு, பிறகு சிலவாரங்கள் கழித்து பவுத்திரத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும். சில சமயங்களில் சீழ்க்கட்டி, பவுத்திரம் இரண்டையும் ஒரே அறுவை சிகிச்சையிலும் சரிசெய்து விடலாம்.

இரண்டாவதாக Fistulotomy முறை இருக்கிறது. இதில், பவுத்திரம் முழுவதுமாக திறக்கப்பட்டு சரிசெய்யப்படுகிறது. மூன்றாவதாக Fistulectomy என்கிற முறை. பெரும்பாலும் பவுத்திரத்திற்கு இந்த முறையில்தான் அறுவை சிகிச்சை செய்கிறோம். இதில் பவுத்திரம் முழுவதுமாக அகற்றப்படுவதால் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

நான்காவதாக Seton’s Knot என்போம். இந்த வகை அறுவை சிகிச்சையில் பவுத்திரம் மிக நீளமாக இருக்கும்போது, கீழ்ப்பகுதியில் உள்ள பவுத்திரம் அகற்றப்பட்டு (Stage I  Fistulectomy) மேல்
பகுதியில் உள்ள பவுத்திரத்திற்கு நூலைக் (Seton) கட்டி வைக்க வேண்டும். பிறகு 6 வாரம் முதல் 3 மாதம் கழித்து Seton’s Knot அடையாளமாகக் கொண்டு மீதியுள்ள பவுத்திரம் முழுவதுமாக அகற்றப்படும் (Stage II Fistulectomy).  பொதுவாக இந்த முறை மேல்நிலைப் பவுத்திரத்திற்கு சிறந்த அறுவை சிகிச்சையாகும்.

இதுதவிர, VAAFT என்ற புதிய முறையில் வீடியோ கருவி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அடுத்து, Fistula Plug என்ற முறையில் பவுத்திரத்திற்கு உள் இந்த Fistula Plugஐப் பொருத்தி பவுத்திரத்தை குணப்படுத்தலாம். இந்த அறுவை சிகிச்சை முறைகளால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. எனவே, குறித்த காலத்தில் தகுந்த அறுவை சிகிச்சை செய்து பவுத்திரத்தைக் குணப்படுத்துவதே சாலச்சிறந்தது...’’ என நம்பிக்கையாகச் சொல்கிறார் டாக்டர் ஆர்.கண்ணன்.

பி.கே