டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கும் கொடைக்கானல் காளான போதை!த்த்ரிஷா இல்லன்னா நயன்தாரா மாதிரி பாண்டிச்சேரியும் கொடைக்கானலும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு விஷயத்துக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. அது என்ன...? சுற்றுலாவா..?
ஆமாம். அத்தோடு இன்னும் ஒன்று. அது பாண்டிக்கு சரக்கு. கொடைக்கானலுக்கு? ஆம்லெட்.என்னது ஆம்லெட்டா என்று வாய் பிளப்பவர்களுக்கு அந்த ஆம்லெட் மேஜிக் காளான் பொடி தூவியது என்றால் கேட்க ஆச்சரியமாக இருக்கிறதா..?

மலைகளின் இளவரசி... வருடந்தோறும் குளிர் சீசன்... என்று பெத்த பெயர் எடுத்த கொடைக்கானலுக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வெறும் கோழிமுட்டை ஆம்லெட்டுக்காக படையெடுத்துவருவது ஆச்சரியம்தான். ஆனால், பாண்டி சரக்கு உடம்பை முறுக்கும் என்றால் கொடைக்கானல் பொடி ஆம்லெட் சந்திராயனுக்கே கூட்டிச்செல்லும் என்பதால் இப்போதைக்கு பாண்டிக்கு அடுத்து மட்டை ஆசாமிகளின் சொர்க்கபுரி சாட்சாத் கொடைக்கானல்தான்.

கடந்த 20 வருடங்களாக கொடைக்கானலை ஆக்கிரமித்திருக்கும்... காவல்துறையை சுறுசுறுப்பாக்கியிருக்கும் மேஜிக் காளான் பற்றியும் அது கொடைக்கானல் சுற்றுலாவுக்கு அடுத்து மிகவும் பிரபலமாவதற்கான காரணங்கள் பற்றியும் தொடர்பான ஆர்வலர்களை சந்தித்து உரையாடினோம்.

கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும், துணைவேந்தருமான கிருஷ்ணமூர்த்தி புன்னகையுடன் இது குறித்து பேச ஆரம்பித்தார். ‘‘ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலவிதமான காளான்கள் வளர்கின்றன. சிலர் 400 வகை என்கின்றனர். 
ஆனால், அதையும்விட அதிகம் என்பதுதான் எங்களது ஆய்வின் முடிவு. மழை, காட்டு மரம், செடி, கொடிகளின் குப்பைகள்தான் பொதுவாக எல்லா காளான்களுமே வளர்வதற்கான சரியான சூழல். காளான்களில் உண்ணக் கூடிய காளான், மருத்துவ குணமுள்ள காளான், விஷக் காளான்... என்று 3 விதமான காளான்கள் உண்டு.

இந்த மேஜிக் காளான் என்று சொல்லப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிடைக்கும் காளானை ஆங்கிலத்தில் சைலோசைப் (psilocybe ) என்பார்கள். இந்தக் காளானில் மருத்துவ குணமும் உண்டு. மெக்சிகோ, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த காளானில் இருக்கும் ஒருவகை ஆல்கலைட் வேதிப் பொருளான சைலோசைபினைப்(psilocybin)பிரித்து ஒரு மருந்துப் பொருள் தயாரிக்கிறார்கள்.

நம்ம ஊரில் ஒரு மூலிகையில் பலவித குணங்கள் இருப்பதுபோலவே இந்த சைலோசைபிலும் ஒருவகை மயக்கம் தரக்கூடிய, நரம்புகளை சாந்தப் படுத்தும் குணம் இருப்பதாக
கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த மருந்தை பொதுவாக மன அழுத்தம் போன்ற வெகு சில மனம் சார்ந்த நோய்களுக்கு இந்த நாடுகளில் பரிந்துரைக்கின்றனர். ஆல்கலைட் என்று சொல்லும்போது ஆல்கஹால் குணம் என்றும் சொல்லலாம். ஆகவே ஓர் அளவுக்கு எடுத்துக்கொண்டால் அது மருந்தாக வேலை செய்யும். அதையே மிதமிஞ்சி எடுத்தால் அதிக போதை உண்டாகும்.
இந்த அதிக போதைக்காகத்தான் கொடைக்கானலில் கிடைக்கும் மேஜிக் காளான் பிரபலமாகியிருக்கலாம்...’’ என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி,மூன்று வகையான காளான்கள் குறித்தும் பொதுவாக தன் கருத்தை பகிர்ந்துகொண்டார்.

‘‘காளான்களை பூஞ்சை, பூசணம் என்றும்; ஆங்கிலத்தில் ஃபங்கஸ் (fungus) என்றும் அழைப்பார்கள். பொதுவாக நம் கிராமங்களில் புத்து காளான் என்ற ஒருவகை காளானை கிராம மக்கள் வயல்வெளிகளிலேயே அப்படியே பறித்து உண்ணும் பழக்கம்  உண்டு. அது பாம்புப் புற்றில் வளர்வதால் அப்படிப் பெயர். அது பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் அப்படிச் செய்கிறார்கள்.

அதேபோல நம் கோவை விவசாயப் பல்கலைக்கழகம்தான் பால் காளான் என்ற ஒன்றைக் கண்டுபிடித்தது. உலகத்திலேயே எங்கும் இல்லாத காளான் இது. இதை ஆங்கிலத்தில் மில்கி மஷ்ரூம் என்போம். சாப்பிடக்கூடியது. அடுத்து நாய்க்குடை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் நாய்க்குடை காளானை காலையில் சாப்பிடலாம். மதியமோ அல்லது இரவிலோ அதை சாப்பிடக்கூடாது.

உதாரணமாக நாய்க்குடை காளான் காலையில் நம் சட்டை பட்டன் மாதிரி மிகவும் சிறிய அளவில் இருக்கும். இதைச் சாப்பிடுவது நல்லது. ஆனால், மதியத்தில் அந்த பட்டன் அளவு கொஞ்சம் பெரிதாக மாறியிருக்கும். மாலையில் அந்தப் பெரிய அளவு மேலும் விரிந்து பரந்து மெகா சைஸில் மாறியிருக்கும். அத்தோடு ஒருவகை கறுப்பு நிறத்திலான திரவமும் அதிலிருந்து வடியும். ஆகவே மதியமோ அல்லது மாலையிலோ அதைச் சாப்பிடுவது மிக ஆபத்தானது.

ஒரு காளானே காலையில் ஒருவிதமாகவும் மாலையில் வேறுவிதமாகவும் இருப்பது ஆச்சரியம் என்றால் போதை தரக்கூடிய, மயக்கம் ஏற்படுத்தும் காளான்களுக்கு நாம் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என யோசிக்க வேண்டும்...’’ என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறினார்.‘‘நாம் உண்ணத் தகுந்த காளான்களில் புரதம், வைட்டமின் டி, மற்றும் பலவித மருத்துவ குணங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அதேபோல மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கும் பலவித காளான்களையும் மருத்துவ உலகம் பலவித ஆய்வுகளுக்குப் பின் மருந்துகளாக தயாரிக்கின்றன.

ஆனால், நம் நாட்டில் பலவித மருத்துவக் காளான்கள் இருந்தாலும் அதுதொடர்புடைய தொழில்நுட்பம் இருந்தாலும் அதை ஒரு தொழிலாகக் கொண்டு செல்லும்படியான அரசியல் முன்னெடுப்புகள் இல்லை. அதேபோல இந்த மேஜிக் காளானை, போதைப் பொருள் எனும் ஒரு பிரிவில் இந்திய மருத்துவப் பட்டியலில் நாம் பட்டியலிடவில்லை. எனவே, அதை சட்டப்படி குற்றமாகவும் கருதி தண்டிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

பொதுவாக காளான்கள் பற்றி பலரும் விதவிதமான பொய்களைப் பரப்பி வருகின்றனர். உதாரணமாக கலர் கலராக இருக்கும் காளானை சாப்பிடக்கூடாது... வெள்ளை நிறத்தில் இருக்கும் காளானை மட்டுமே சாபிடலாம் என்று சொல்கிறார்கள். அதிலும் பாதிதான் உண்மை. இதிலும் பல வேறுபாடுகள் உண்டு. நாம் விஷக் காளான் என்று சொல்லப்படும் சிவப்பு காளானான அமானிட்டா மஸ்காரியா (amanita muscaria) காளானில் இருந்துதான் நம் புராண காலத்து மக்கள் சோம பானம், சுரா பானம் எல்லாம் தயாரித்தார்கள்.

எதிலுமே ஓர் அளவு இருக்கிறது. அதனால்தான் அளவுக்கு மீறிப் போனால் அமுதமும் நஞ்சாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மனதில் வைத்து காளான்களின் வேறுபாடு
களைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அப்பொழுதுதான் போதை  எனும் பெயரில் இந்த காளான்களை உண்டு ஆபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படாது...’’ என்று கிருஷ்ணமூர்த்தி முடிக்க, கொடைக்கானலின் சுற்றுச்சூழல் தொடர்பாக பலவேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ‘எஃபக்ட் (EFECT) கொடை’ எனும் நிறுவனத்தின் நிறுவனரான வீரபத்திரன் தொடர்ந்தார்.

‘‘ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்த காலத்திலிருந்து இந்த மேஜிக் காளான் பற்றிய வரலாறு கொடைக்கானலில் தொடங்குகிறது. கொடைக்கானலில் இருக்கும் பாம்பே ஷோலா எனும் பசுமைக்காடுகளில் தங்கியிருந்த பிரிட்டிஷ் இராணுவத்தினர் களைப்பைப் போக்குவதற்காகவும் உடல் வலியைப் போக்குவதற்காகவும் இரவில் இந்த மேஜிக் காளானை உண்டு காலையில் ஃபிரஷ்ஷாக இருக்க இந்த காளான் உதவியிருப்பதாக அறிகிறோம்.

பிறகு இஸ்‌ரேலிய சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலின் குளிரையும், இயற்கைக் காட்சிகளைக் காணவும் கடந்த பல வருடங்களாக கொடைக்கானலின் இன்னொரு பசுமைக் காடான பம்பா ஷோலா எனும் வனப் பகுதிகளில் கட்டப்பட்டிருந்த உல்லாச விடுதிகளுக்கு வந்தபோது இந்த மேஜிக் காளான்களை அவர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் கேள்விப்படுகிறோம்.

உண்மையில் இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் நாட்டிலேயே இதுபற்றித் தெரிந்திருந்தது. அவர்கள் கொடைக்கானலின் வட்டக்கானல் பகுதிக்கு வந்தது குளிரை அனுபவிக்கவும், இங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் காணவும்தான்.

இஸ்ரேலில் கட்டாய  இராணுவம் அமலில் இருந்ததால், அதில் இருந்து கொஞ்சம் சுவாசம் பெற அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் போகவேண்டி இருந்தது. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதிதான் கொடைக்கானலின் வட்டக்கானல் பகுதி...’’ என்று சொல்லும் வீரபத்திரன், மேஜிக் காளான் எப்படி கொடைக்கானலை ஒரு போதை நகரமாக மாற்றியது என்பது பற்றியும் விவரித்தார்.

‘‘இந்தக் காளான் அடர்ந்த காடுகளில் விளைவதில்லை. உதாரணமாக வட்டக்கானல் பம்பா ஷோலா, மற்றும் பாம்பே ஷோலா பகுதிகளில் எல்லாம் விளையாது. காரணம்
அடர்ந்த காடு. மேஜிக் காளான் விளைய புல்வெளியும், அந்த புல்வெளியில் மேயக்கூடிய விலங்குகளும் அவசியம். அப்படி பார்க்கும்போது மன்னவனூர், சின்னப் பள்ளம், பெரிய பள்ளம் போன்ற பகுதிகளில்தான் இந்த காளான் விளைந்திருந்தது.

விலங்குகள் போடும் சாணம், புல்வெளியில் இருக்கும் குப்பை, உடைந்த மரம் செடி கொடிகள்தான் இந்தக் காளானும் மற்ற காளானும் வளரக் காரணம்.கொடைக்கானலில் சுமார் 20 வகையான காளானாவது ஒருகாலத்தில் வளர்ந்தது. ஆனால், இந்த போதைக் காளான் பிரச்னையால் போலீஸ் கெடுபிடி, உள்ளூர்வாசிகளுக்கு பிரச்னை என்பதால் எந்தக் காளானுமே இப்போது கொடைக்கானலில் கிடைப்பதில்லை.

இஸ்ரேலியர்கள் ஒருகாலத்தில் தெரிந்து இதை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி தெரியாத பலர் கொடைக்கானலில் புகுந்து அதை ஒரு வியாபாரமாக செய்தபோதுதான் இந்த மேஜிக் காளான் போதை பல பிரச்னைகளைக்கொண்டுவந்தது. ஒருகாலத்தில் உண்ணும் காளானே பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு விற்றன. இன்றோ போதை காளான் என்று சொல்லி ஆயிரம் ரூபாய்க்கும், இரண்டாயிரம் ரூபாய்க்கும் போலியாக விற்று வருவது அமைதி விரும்பும் கொடைக்கானல்வாசிகளை அச்சுறுத்துகிறது.

ஆனால், ஒருசில வருடங்களாக கொடைக்கானல் காவல்துறையின் கண்காணிப்பால் இந்தப் பிரச்னையின் அளவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. முன்பு இஸ்ரேலியர்கள் மேஜிக் காளான் பொடியை பச்சை வாழைப் பழத்தில் வைத்து சாப்பிட்டதும், துண்டுகளை ஆம்லெட்டில் வைத்து உண்டதும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள். 

ஆனால், அதையே போலியான விஷக் காளான்களையும், நாம் உண்ணக்கூடிய காளான்களையும் காயவைத்து பொடியாக்கி போதைக் காளான் என்ற பெயரில் பணம் பார்க்கும் கும்பல் போட்ட ஆட்டம் காவல்துறையின் கண்காணிப்பால் இன்று அடங்கியிருக்கிறது. இது உள்ளூர் கொடைக்கானல்வாசிகளின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது...’’ என்கிறார் வீரபத்திரன்.

டி.ரஞ்சித்