மரண மொய்



கண்ணகி பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகம்.‘பிரபஞ்சனின் கதைப்பெண்கள்’ எனும் தலைப்பில் டாக்டரேட் பண்ணும் ஆராய்ச்சி மாணவன் கிருஷ்ணகாந்த்  பிரபஞ்சன் நாவல் ஒன்றை படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தான்.கிருஷ்ணகாந்த்துக்கு வயது 24. உயரம் 165செமீ. மாநிறம். கோரை முடி தலைக்கேசம். சொந்த ஊர் திருவண்ணாமலை. ரமண மகரிஷி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவன். பல்கலை விடுதியில் தங்கிப் படிக்கிறான்.

இரவு மணி எட்டாகப் போகிறது என துணை நூலகர் நினைவூட்டினார். ஒவ்வொருவராக எழுந்து நூலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். கடைசி ஆளாக கிருஷ்ணகாந்த் எழுந்தான். வெளிவாசலுக்கு வந்தான். தனது மொபெட்டை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.பல்கலைக்கும் பல்கலை குடியிருப்புகளுக்கும் குடிநீர்  வழங்க சாலையின் இருபுறமும் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. குளங்களுக்குத் தேவையான நீர் வீராணத்திலிருந்து வரும். வருடத்தில் இருமுறை குளத்தின் விரால் மீன்கள் பிடிக்கப்பட்டு குளக்கரையிலேயே ஏலம் நடக்கும்.

ஒவ்வொரு விரால்மீனும் கிரானைட் பளபளப்பில் மூன்று கிலோவுக்கு குறையாமல்  இருக்கும். கடந்த முறை ஏலம் நடந்தபோது கூட்டத்தோடு கூட்டமாய் நின்று ஏலத்தையும் மீன்களையும் வேடிக்கை பார்த்தான் கிருஷ்ணகாந்த். துணைவேந்தர் மாளிகையைத் தாண்டினான்.பொறியியல் புல அலங்கார வளைவு குறுக்கிட்டது. கடைசி கட்டடம்தான் ஆராய்ச்சி மாணவர்களின் விடுதி. விடுதியை நெருங்கும் போது அந்தக்காட்சி கண்ணில் தென்பட்டது.

திறந்திருந்த வட்டசாக்கடைக்குள் மனித அம்புக்குறி போல தலைகீழாய் செருகியிருந்தான் அவன். சாக்கடைக்கு அருகே இரும்பிலான மேன்ஹோல் கவர் சுவரில் நெட்டுக்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மொபெட்டை ஸ்டாண்டிட்டு விட்டு ஓடினான். சாக்கடையில் செருகியிருந்த ஆளை வெளியே இழுத்துப் போட்டான். இழுத்துப் போடப்பட்டவன் முகம் முழுக்க சாக்கடை அப்பியிருந்தது. சிறிதும் சங்கோஜப்படாமல் முகத்தை தனது கர்ச்சிப்பால் துடைத்து சாக்கடைக் கழிவுகளை அகற்றினான்.

கைக்குட்டையை தூக்கி வீசிவிட்டு அதிர்ந்தான்.ஆஹா! இவன் கலியன் ஆயிற்றே! கடந்த மூன்று வருடங்களாக கலியன், கிருஷ்ணகாந்த்துக்கு நல்ல பரிச்சயம். விடுதி சாக்கடைகளை சுத்தம் செய்யும் தினக்கூலி ஊழியன் அவன். கிருஷ்ணகாந்த்தை விட பத்து வயது மூத்தவன். கிருஷ்ணகாந்த்தின்  பழைய சட்டைகளைக் கேட்டு வாங்கிக் கொண்டு போவான். சிலநேரம் குடிக்க நூறு இருநூறு ரூபாய் கடன் கேட்டு வாங்கிச் செல்வான்.  சிலநேரம் குடிக்காதே என அறிவுரை கூறினால் நமட்டுச் சிரிப்பு சிரிப்பான்.

‘‘உன் தினக்கூலி என்ன?’’

‘‘இருநூறு ருபா...’’‘‘தினம் எவ்வளவுக்கு குடிப்ப? வீட்டுக்கு எவ்வளவு தருவ?’’‘‘நூத்திஅம்பது ரூபாய்க்கு குடிப்பேன். இருபது ரூபா செலவுக்கு வச்சுக்கிட்டு முப்பது ரூபாய் வீட்டுக்கு தருவேன்!’’
‘‘உனக்கு எத்னி பிள்ளைகள்?’’‘‘மூணு பொம்பிள்ளைப் பிள்ளைகள்!’’
‘‘உன் பொண்டாட்டி வேலைக்கு போகுதா?’’

‘‘முன்னாடி போச்சு. இப்ப கால்ல அடிபட்டு வீட்லதான் இருக்கு. வீட்டு செலவுக்கு நாலஞ்சு பன்னி வளக்குது!’’
‘‘எத்னி வருஷமா தினக்கூலியா இருக்க?’’
‘‘பன்னிரெண்டு வருஷமா...’’
‘‘உன்னை பணிநிரந்தரம் செய்யலையா?’’

‘‘பல்கலை நிர்வாகமும் யூனியனும் தூங்குது!’’
‘‘நீ கொஞ்சம் குடியை குறைச்சிக்கக் கூடாதா?’’
‘‘முடியலியே சாமீ!’’

அசைவற்று படுத்திருந்த கலியனை உலுப்பினான். அசைவில்லை. மூக்கில் விரல்களை நெருக்கமாக வைத்துப் பார்த்தான். சுவாசம் இல்லை.
சில நிமிடங்கள் கண்களை மூடி வேதனையில் அமிழ்ந்தான் கிருஷ்ணகாந்த். விடுதி ஊழியர்கள் சிலர் ஓடி வந்தனர்.‘‘ஆஹா கலியன் செத்துக்கிடக்கிறானா?’’

‘‘ஆமாம்ப்பா...’’
‘‘எப்படி செத்திருக்கான்னு உங்களுக்குத் தெரியாது. எங்களுக்கு தெரியும். குடிச்சிட்டு வந்த கலியனுக்கு போதை பத்தல. மேல குடிக்கறதுக்கு திட்டம் போட்டிருக்கான். இந்த இரும்பு மேன்ஹோலைத் திருடிட்டு போய் வித்தா நல்ல காசு கிடைக்கும். அதை தூக்கிட்டுப் போக யத்தனிச்சிருக்கான். கடும்போதைல சாக்கடை வட்டத்துக்குள்ள தலைகீழா கவிழ்ந்திட்டான்!’’
‘‘கண்ல பாக்காம திருட்டுப் பட்டம் கட்டாதிங்கப்பா...’’

‘‘சார்! கடந்த ஒரு வருஷத்ல கலியன் மேன்ஹோலை திருடி மூணு தடவை பிடிபட்டிருக்கான்... இப்பக்கூட இன்னொரு சாத்தியம் இருக்கு. கலியனும் இன்னொருத்தனும் மேன்ஹோலைத் திருட வந்து திருட வந்த இடத்துல ரெண்டு பயலுகளுக்கும் எதனாலேயோ சண்டை வந்து இவனை அவன் அடிச்சுக் கொன்னு சாக்கடை வட்டத்ல போட்டுட்டு போய்ட்டானோ என்னவோ?  பேசாம போலீஸுக்கு போன் பண்ணிட்டு ஒதுங்குவோம்...’’‘‘மேன்ஹோலுக்காக கொலை நடந்திருந்தா கொன்னவன் மேன்ஹோலை ஏன் தூக்கிட்டுப் போகல?’’
‘‘வெயிட்டா இருக்குன்னு ஆட்டோ பிடிச்சிட்டு வரப்போயிருப்பான். அதுக்குள்ள நாம வந்துட்டம்!’’

கண்ணகி நகர் காவல்நிலையத்துக்கு விடுதி ஊழியர் கைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.நீண்ட யோசனையில் உறைந்து போய் நின்றிருந்தான் கிருஷ்ணகாந்த்.

இடது குளக்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் முளைத்திருந்தன. அவற்றில்தான் பல்கலையின் அடிமட்ட ஊழியர்கள் குடியிருந்தனர்.

குடிசைகளைச் சுற்றி பன்றிகளின் நடமாட்டம் மிகைத்திருந்தது.ஒரு குடிசையின் முன் ஷாமியானா போடப்பட்டிருந்தது.கால்கட்டு போட்ட பவுனம்மாள் அழுதபடி அமர்ந்திருந்தாள். அவளைச்சுற்றி அவளது மூன்று மகள்கள். சிலர் பாடை கட்டிக் கொண்டிருந்தனர். தாரை தப்பட்டம் ஒலித்தது.

போஸ்ட்மார்ட்டம் பண்ணும்வரை காத்திருந்து உடலை வாங்கிக்கொண்டு சேரிப்பகுதியில் இறங்கினான் கிருஷ்ணகாந்த். அவனுடன் ஆறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள்.
பிணத்தைக் கிடத்தினர். உறவினர்களும் நண்பர்களும் பெரும் குரலெடுத்து அழுதனர்.‘‘குடியாலேயே அழிஞ்சு போய்ட்டியே கலியா... இனி உன் குடும்பத்தை யார் கவனிச்சிப்பா?’’

‘‘உன்னை மாதிரி சாக்கடை அடைப்பை எடுக்கறவன் உலகத்திலேயே யாரும் இல்லையடா... பிரமாதமான  வேலைக்காரன்... தினக்கூலியாகவே நாறிக் கிடக்றோமேன்ற  வேதனைலதான் செத்த... பல்கலை நிர்வாகம் உங்களை எல்லாம் நிரந்தரம் பண்ணிருக்கலாம்!’’‘‘முப்பத்தியைஞ்சு வயசு சாகிற வயசாடா?”குடிசையின் இடதுபக்கம் இரு மேஜையையும் ஸ்டுலையும் போட்டு உட்கார்ந்தான் ஒரு ஆராய்ச்சி மாணவன்.

வந்தவர்கள் அனைவருக்கும் தேநீரும் உணவும் வழங்கினான் இன்னொரு ஆராய்ச்சி மாணவன்.இரண்டு சக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் முகம் தெரியாத நபர்கள் வந்து இறந்து போன கலியனுக்கு அஞ்சலி செலுத்தினர். 

செலுத்தினவர்கள் ஒரு கவரை ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த  ஒரு ஆராய்ச்சி மாணவனிடம் கொடுத்துச் சென்றனர்.சேரி மக்கள் கசங்கின ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து தங்கள் பெயர் கூறினர்.பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள், நகரமக்கள் இப்படி ஆயிரக்கணக்கானோர் க்யூவில் நின்று அஞ்சலி செலுத்தி கவர் நீட்டினர்.

குடிசைவாசலில் நின்று உரத்த குரலில் அறிவித்தான் கிருஷ்ணகாந்த். ‘‘குடித்துவிட்டு யாரும் துக்கம் விசாரிக்கவோ தகனத்தில் கலந்து கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். குடிநோயாளிகள் விலகி நில்லுங்கள், ப்ளீஸ்...’’பாடையை நான்கு ஆராய்ச்சி மாணவர்கள் தூக்கிக்கொள்ள மயானத்துக்கு நடந்தனர். வெட்டியானுக்கு பணம் தந்தான் கிருஷ்ணகாந்த். சிதை கொழுந்து விட்டு எரிந்தது.

மறுநாள் பகல் 12 மணி.கிருஷ்ணகாந்த்தும் அவனது சகாக்களும் கலியனின் வீட்டுக்குப் போயினர். பவுனம்மாளை வணங்கினர். ‘‘அம்மா! வணக்கம். நேற்றைய மரணமொய்யின் வரவு ஆறுலட்சத்தி எழுபதாயிரம். உங்களின் மூன்று குழந்தைகள் பெயரில் தலா இரண்டு இரண்டு லட்சம் நிரந்தர வைப்பில் போட்டுள்ளோம்.  இந்தாங்க அதற்கான சான்றிதழ். மீதி எழுபதாயிரம் ரொக்கத்தை கையளிக்கிறோம். கால் குணமாகிற வரைக்கும் குடும்ப செலவுக்கு வச்சுக்கங்க!’’‘‘இதெப்படி நடந்தது தம்பி?’’

‘‘ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு ஊர் முழுக்க சுற்றி கீழ்க்கண்ட அறிவிப்பை செய்தோம். ‘கண்ணகிபுர மக்களே! பல்கலையின் தினக்கூலி ஊழியர் கலியன் குடிநோயாளியாகி நேற்றிரவு இறந்து விட்டார். அவரது குடும்பம் நிர்க்கதியாய் நிற்கிறது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு போய் மொய் வைப்பீர்கள். நொடித்துப் போனவர்கள் மீண்டு வர சில இடங்களில் மொய்விருந்து நடைபெறுகிறது. குடியால் வீழ்ந்து கிடக்கும் ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்த மரணமொய் வையுங்கள்.  

அந்த மரண மொய் அரசாங்கங்களை வழிநடத்தத் தெரியாத நமக்கான அபராதமும் கூட. ஒரு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் மரணமொய் வைக்கலாம்...’ என அறிவித்தோம்.
அதற்கான பலன்தான் 670000 ரூபாய் வசூல்!’’கிருஷ்ணகாந்த் கொடுத்த பணக்கட்டின் மீது முகம் கவிழ்த்து பெரும் குரலில் பவுனம்மாள் அழ ஆரம்பித்தாள்.  

ஆர்னிகா நாசர்