பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட பாகிஸ்தான் படம்!



ஜிந்தகி தமாஷா’ (Circus of life)

இது பாகிஸ்தானின் லாலிவுட்டிலிருந்து வந்திருக்கும் ஓர் அழகான உருது மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படம். வேடிக்கையான வாழ்க்கை எனப் பொருள்படும் இந்தப் படம், கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு வேடிக்கைகளைச் சந்தித்து சமீபத்தில்தான் வெளியானது. அதுவும் யூ
டியூப்பில்!

ஆசிய சினிமாவின் ஒரு சாளரம் எனப் புகழாரம் சூட்டப்படும் இந்தத் திரைப்படம் கடந்த 2020ம் ஆண்டே திரையரங்குகளில் வந்திருக்கவேண்டியது. ஆனால், மத அமைப்பு களின் கண்டனங்களாலும் அரசியல் கட்சி ஒன்றின் போராட்டங்களாலும் வெளியாகாமலேயே போனது. அதனாலேயே உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்தப்
படம்.

அதுமட்டுமல்ல. விமர்சன ரீதியாகவும் சிறந்த படமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தென்கொரியாவின் பூசான் சர்வதேச திரைப்பட விழாவில் முதன்முதலில் இப்படம்
திரையிடப்பட்டது. 

அப்போது சிறந்த படத்திற்கான கிம் ஜி-சியோக் விருதினை வென்றது. தொடர்ந்து, 93வது ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பாகிஸ்தானின் அதிகாரபூர்வ நுழைவாகவும் இத்திரைப்படம் சென்றது. ஆனால், ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைக்குள் நாமினேட் ஆகவில்லை.

பின்னர், 2021ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 6வது ஆசிய உலகத் திரைப்பட விழாவில் நான்கு விருதுகளை வென்றது. இப்படி பல்வேறு கவனங்களைப் பெற்றிருந்தபோதும் பாகிஸ்தான் திரையரங்குகளில் மட்டும் வெளியாகவே இல்லை. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் உறுதியாகப் படம் வெளியாகும் என அறிவிப்பு செய்தது படக்குழு. ஆனால், காரணங்கள் எதுவும் சொல்லப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளடக்கம் இருப்பதாகக் கூறி, பாகிஸ்தான் அரசாங்கம் திரையிடலை ஒத்திவைத்தது. தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகளும், இயக்குநர் சர்மத் கூசாத்திற்குக் கொலை மிரட்டல்களும் வந்தன. படமும் சில இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. 

இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி இயக்குநர் சர்மத் கூசாத் யூடியூப்பிலேயே, ‘ஜிந்தகி தமாஷா’வை வெளியிட்டார். அதுவும் தரமான ஹெச்.டி குவாலிட்டியில். வெளியான கடந்த மூன்று மாதத்தில் சுமார் 10 லட்சம் பேர் இந்தப் படத்தை உலகம் முழுவதும் பார்வையிட்டுள்ளனர். இது சர்மத்துக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.  

சரி, இயக்குநர் சர்மத் அப்படி என்னதான் சர்ச்சையான விஷயங்களைப் படத்தில் பேசியிருக்கிறார்?

அதற்குமுன் படத்தின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம். ஹீரோ ரஹத் கவாஜா கேரக்டரில் ஆரிப் ஹாசன் என்பவர் நடித்திருக்கிறார். லாகூரில் வசிக்கும் ரஹத் கவாஜா, முகமது நபியைப் புகழ்ந்து கவிதைகள் எழுதி, இசையமைத்து, அதைப் பாடலாக பதிவுசெய்யும் ஒரு பக்தியுள்ள முஸ்லிம். ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையைச் செய்பவர். இவரின் மனைவி ஃபர்கந்தா படுத்த படுக்கையாக வாழ்க்கை நகர்த்துபவர். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூவருக்கும் திருமணமாகி இருவர் வெளிநாட்டிலும், ஒருவர் உள்ளூரிலுமாக வசிக்கின்றனர். ரஹத் கவாஜா, அந்தப் பகுதி மக்கள் மதிக்கும் ஒரு மனிதராக இருக்கிறார்.

படம் ரஹத் கவாஜா, முகமது நபியைப் புகழ்ந்துபாடும் கவிதையில் இருந்து துவங்குகிறது. பிறகு, பாகிஸ்தானின் பழைய லாகூர் நகரின் மங்கலான இருண்ட பகுதிகள் சிலவற்றைக் காட்டுகிறது. இந்நிலையில், ரஹத் கவாஜாவின் நண்பரின் மகன் திருமணம் வருகிறது. அங்கு கவிதைகள் வாசிக்கிறார். 

பிறகு, இரவு நான்கு நண்பர்களுடன் அரட்டை அரங்கேறுகிறது. அப்போது ரஹத் கவாஜா ஒரு பழைய படத்திலுள்ள, ‘ஜிந்தகி தமாஷா’ என்கிற பாடலுக்கு நடனம் ஆடுகிறார். அதையே இந்தப் படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர்சர்மத்.

அந்தப் பாடலில் அந்தப் பெண் எப்படி நளினமாக ஆடியிருப்பாரோ அதை அப்படியே நண்பர்கள் முன் ஜாலியாக ஆடிக்காட்டுகிறார். இதனை உறவினரான இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துவிடுகிறார். இதிலிருந்து படம் சூடுபிடிக்கிறது.   இந்த வீடியோ வைரலாக, பக்தி நிறைந்த இஸ்லாமிய கவிதைகள் பாடியவர் இப்படியா... என ரஹத்தை, அவரின் சமூகம் மோசமாகப் பார்க்கிறது. குறிப்பாக, டிவி ஷோ ஒன்றில் வேலை செய்யும் அவரின் மகள் சதாஃப், அவரை வெறுக்கிறார்.

அப்பாவைப் பற்றி வரும் மீம்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் கண்டு அவருடன் பேசாமல் இருக்கிறார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பேசமறுக்கிறார்கள். விழாக்களில் அவருக்குக் கவிதைகள் பாட அனுமதி மறுக்கப்படுகிறது. இதனுடன் அவரைக் கண்டித்து, அவர் வசிக்கும் தெரு முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்படுகின்றன. 

இதையெல்லாம்விட அவர் அதிகம் நேசிக்கும் மகளே தன்னை வெறுப்பதை நினைத்து வேதனையடைகிறார். மகள், அப்பாவின் வீடியோ பற்றி கணவரிடம் சொல்கிறார். கணவர், அவர் அப்பாவிடம் பேசி உடனடியாக ஒரு மதகுரு மூலம் விஷயத்தை முடிக்க நினைக்கிறார். ஆனால், மதகுரு சில விஷயங்களை அந்த மன்னிப்பு வீடியோவில் சொல்லச் சொல்கிறார்.

அதைச் சொல்ல மறுக்கும் ரஹத், ‘‘என்னுடைய நடனம் பெரும் பாவம்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் வீடு கட்ட மசூதி நிதியை மோசடி செய்யவில்லையே... குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் அந்த மதகுருக்களை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறார்களா...’’ என்றெல்லாம் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார். உடனே மதகுரு அவர்மீது செருப்பை வீசுகிறார். பதிலுக்கு ரஹத்தும் அடிக்கப் பாய்கிறார்.

இந்த இடம்தான் பெரும் சர்ச்சையானது. அறிஞர்களுக்கு எதிராகப் பேச நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பினார் தெஹ்ரீக்-இ-லப்பைக் என்ற அரசியல் கட்சியின் நிறுவனர் காதிம் ஹுசைன் ரிஸ்வி. பிறகு, அந்தக் கட்சி படத்தை எதிர்த்து ஒரு பேரணியே நடத்தியது.  இதுமட்டுமல்ல. படத்தின் டிரெய்லர் வெளியான அன்றே அதனைப் பார்த்துவிட்டு மத
குருக்களை தவறாக சித்தரிப்பதாகக் கூறி படத்தைத் தடை செய்ய வேண்டுமென மதக்குழுக்கள் பலவும் வலியுறுத்தின.

இந்நிலையில்தான் பாகிஸ்தான் அரசு திரையரங்குகளில் படம் வெளியாவதை ஒத்திவைத்தது. அத்துடன் நாட்டின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவினை, ‘விமர்சன மதிப்பாய்வு’ நடத்துமாறு கேட்டுக் கொண்டது. இதுகுறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளரான ராசா ரூமி, ‘‘பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அதிகாரிகள் திரைப்படங்களில் மதஉரிமைகளை நிலைநாட்டும் பணிகளைச் செய்துவருகின்றனர். 

மத ஆதரவாளர்களிடம் இருந்து வரும் அதிக அழுத்தத்தால் இதைச் செய்கின்றனர். பாகிஸ்தானில் முல்லாக்களுக்கு தெரு அதிகாரம் உள்ளதால் ஒவ்வொரு அரசாங்கமும் அவர்களை சமாதானப்படுத்தவே நினைக்கிறது...’’ என வேதனையுடன் சொல்கிறார்.  

உண்மையில் இயக்குநர் சர்மத் கூசாத்தின் இந்தப் படம், சிவில் சமூகத்தில் ஒரு நாகரிகத்தின் சிறிய பகுதிகள் ஏற்கனவே நிர்ணயித்து வைத்திருக்கும் கோட்பாட்டுக்குள் எப்படி ஒட்டாமல் போகிறது என்பதை ஆராயவே விரும்புகிறது. கவாஜா, நபியைப் புகழ்ந்து பாடுகிறார். அப்படியானால் அவர் இழிவான பாடல்களை ரசிக்கலாமா கூடாதா அல்லது அப்படியானவர் தனக்குப் பிடித்த நாயகியைப் போல் நடனமாடக்கூடாதா உள்ளிட்ட விஷயங்களைப் பேச முனைந்திருக்கிறது.  

உள்ளூர் செய்திச் சேனலில் தயாரிப்பாளராக இருக்கும் மகள் சதாஃப், யூடியூப் பில் தந்தையை பற்றி பார்த்தாலும் அவரிடம் நேரடியாக அதைக் கேட்காமல் பேச மறுக்கிறார். அறிவார்ந்த பெண்ணாக, டிவி ஷோவின் தயாரிப்பாளராக இருந்தாலும் அவருடைய உலகக் கண்ணோட்டம் பழமைவாதமாகவே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.ஈரானிய படம்போல அத்தனை நேர்த்தியுடன் வந்திருக்கும் சர்மத் கூசாத்தின் இந்தத் திரைப்படம் பிடிவாதமும் கடினத்தன்மையும் கொண்ட ஒரு சமூகத்தை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அவ்வளவுதான்.