இசைஞானியின் ஆசீர்வாதம்தான் ‘நாதமுனி’



‘‘இந்தப் படத்தின் பலமும் ஆசீர்வாதமும் இசைஞானி ஐயாவின் இசை எங்களுக்கு கிடைத்ததுதான். சொல்லப்போனால் இந்த படத்திற்கு ‘நாதமுனி’ என்கிற பெயரே அவரை மனசிலே வச்சுதான் வச்சிருக்கேன்...’’நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர பேசத் துவங்கினார் இயக்குநர் மாதவன். 
2016ல் ‘நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் மாதவன். கிராமத்து கதைக்களத்தில் தற்போது ‘நாதமுனி’ படம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.

‘நாதமுனி’ எங்கு எப்படி உருவானது?

சின்ன வயதிலிருந்து நிறைய படங்கள் பார்ப்பதுண்டு. அதிலும் இந்த 1985 காலகட்டங்களில் வீட்டில் நல்ல விசேஷம் என்றாலும் சரி கெட்ட காரியம் நடந்தாலும் சரி நான்கு படங்களைக் கொண்டு வந்து போட்டு விடுவாங்க. 
அதனால் எங்க தெருவில் எங்கே என்ன நிகழ்ச்சி என்ன விசேஷம் நடந்தாலும் படம் பார்க்கிறதுக்காகவே முதலில் போய் நான் உட்கார்ந்திடுவேன்.
அந்த அளவுக்கு சினிமா மேலே ஆர்வம் அதிகம். இந்த ஆர்வம் அப்படியே வாய்ப்பு தேடத் துவங்கி இயக்குநர் நாகா சாரிடம் அசிஸ்டென்டாக சேரும் வாய்ப்பைக் கொடுத்துச்சு. அவர் கூட நிறைய சீரியல்கள், படம் வேலை செய்தேன்.  

தொடர்ந்து ‘நாலு பேர்,  நாலு விதமா பேசுவாங்க’ படத்தை இயக்கினேன். அந்தப் படம் கொஞ்சம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கலை. இதோ இப்போ ‘நாதமுனி’ திரைப்படம். நம்பிக்கையுடன் காத்திருக்கேன். எங்க ஏரியாவில் 1, 2 ரூபாய்கள் வாங்கிட்டு வீடுகளிலேயே போய் முடி திருத்தம் செய்கிற நபர் ஒருத்தர் இருந்தார். அவர் கூடவே நானும் சின்ன வயதில் போவதுண்டு. அந்த நபரின் இன்ஸ்பிரேஷன்தான் இந்த கதைக்கான முதல் புள்ளி.

தொடர்ந்து ஒரு எளிமையான குடும்பம்... அவங்க வாழ்க்கையில் நடக்கக் கூடாத ஒரு சம்பவம் நடக்குது. அதில் அந்தக் குடும்பமும் குடும்பச் சூழலும் எந்த அளவிற்கு பாதிக்கப்படுது அப்படிங்கிறதுதான் கதைக்களம். இப்போதைய காலகட்டத்திற்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு ரொம்ப அவசியம். படம் அது சார்ந்துதான் நிறைய பேசும்.

ஐஸ்வர்யா தத்தாவை யாரும் இந்தக் கோணத்தில் யோசித்திருக்க மாட்டாங்க..?

படத்தின் நாயகன் இந்திரஜித் இதற்கு முன்பு என்னுடைய ‘நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க’ படத்திலேயே ஹீரோவா நடிச்சிருந்தார். அவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். இப்போ இந்த படத்திலும் அவர்தான் ஹீரோ. 

ஐஸ்வர்யா தத்தா... உண்மையில் அவங்க ஒரு நல்ல நடிகை. சரியா அவங்க திறமையை பயன்படுத்தினால் ரொம்ப சாதாரணமா கடினமான கேரக்டரையும் கூட உள்வாங்கி நடிப்பாங்க. அவங்க கரியரிலேயே இப்படி ஒரு கேரக்டர் அவங்க செய்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எமோஷன் காட்சிகளிலும் கூட நல்லாவேநடிச்சிருக்காங்க.

பாடகர் அந்தோணி தாசன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிச்சிருக்காரு. நடிகர் ஜான் விஜய் சாருக்கு பயங்கரமான ஒரு போலீஸ் கேரக்டர். ஏ.வெங்கடேசன் சார் ஒரு அரசியல்வாதியா நடிச்சிருக்கார். இயக்குநர் சரவண சுப்பையா சாருக்கு ஒரு நல்ல கேரக்டர். வினோதினி மேடமுக்கு ஒரு நெகட்டிவ் ரோல். 

இந்தப் படத்தில் ஒரு சவாலான நெகட்டிவ் ரோல் இருக்கு. இதிலே நடிக்க ஒரு 20 வயது நடிகர் தேவைப்பட்டார். யாருமே இதற்கு ஒத்துக்கலை. கடைசியாக என் மகன் ஜீவா மாதவனையே நடிக்க வெச்சிருக்கேன். அவருக்கும் இசைஞானி ஐயா ஒரு தனி பாடலே கொடுத்திருக்கார். குழந்தையாக கேரளாவைச் சேர்ந்த ஃபெமின் என்கிற பொண்ணு நடிச்சிருக்காங்க. ரொம்ப சென்சிட்டிவான ரோல். நல்லா நடிச்சிருக்காங்க.  

‘நாதமுனி’ படத்தில் இசைஞானி மேஜிக் எப்படி நடந்தது?

‘எத்தனையோ பேர் நீங்கள் கொடுத்த வாழ்க்கையால் இன்னைக்கு பெரிய அளவில் வளர்ந்து நிற்கறாங்க. அந்த மாதிரி எங்களுக்கும் உங்களுடைய தயவு வேணும்...’ அப்படின்னு கேட்டேன். ‘பத்து நிமிஷத்தில் கதை சொல்லுவியா’ அப்படின்னு கேட்டார். கதை சொன்னேன். ரொம்ப பிடிச்சி இருந்தது அவருக்கும். அவர்கிட்ட கேட்பதற்கு முன்னாடி ‘நிறைய பேர் ராஜா சார் கிட்ட வேலை வாங்க முடியாது’ அப்படின்னு சொன்னாங்க. அவர்கிட்ட வேலை வாங்குகிற அளவுக்கு நமக்கு என்ன திறமை இருக்கு... நமக்கு என்ன இசை ஞானம் இருக்கு... கதையை சொல்லி அவர்கிட்ட நாங்க மொத்தமா சரண் அடைஞ்சிட்டோம்.

நாங்க எதிர்பார்த்ததை விட அற்புதமான இசை எங்களுக்குக் கொடுத்தார். அவரும் கதையிலே சின்னச்சின்ன ஆலோசனைகள் கூட கொடுத்தார். தனுஷ் சார் நடித்த ‘தங்க மகன்’ பட சினிமாட்டோகிராபர் குமரன் இந்தப் படத்திலே வேலை செய்திருக்கார். தேனி, கேரளா எல்லைகளை அற்புதமா காட்சிப்படுத்தியிருக்கார். எடிட்டர் சுரேஷ். 369 சினிமா புரொடக்‌ஷன் இந்த படத்தை தயாரிச்சிருக்காங்க.

பாலியல் வன்கொடுமை சார்ந்து நிறைய படங்கள் வருகின்றன, நீங்களும் இதில் இணைந்தது எதனால்?

இதுபற்றி அதிகமாக சொல்ல வேண்டிய காலம் இது. இணைய உலகம் பெரிய அளவில் பரந்து விரிஞ்சிருக்கு. எதை நினைக்கிறோமோ அதை கையிலேயே இருக்கும் மொபைலில் பார்க்க முடியும். இதனால் தவறுகளும் கூட அதிகமாவே நடக்குது. இந்தக் காரணத்தால்தான் இப்போ சினிமா இந்த கதைகளை அதிகம் பேசத் துவங்கி இருக்கு. இதை திரும்பத் திரும்ப காட்டுகிறதால பெற்றோர்களை பயமுறுத்துறதா அர்த்தம் கிடையாது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்கிற அலாரம்தான் இது. குழந்தைக்கு நடக்கும் கொடூரத்தை விஷுவலாக எங்கேயும் நான் பதிவு செய்யலை. சம்பவம்... அதைச் சார்ந்து அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளாதான் கடக்கும்.

‘நாதமுனி’?

குழந்தைகளுக்கான பாதுகாப்பை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏற்கனவே இந்தியா, சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் குழந்தை பிறப்பும் எதிர்கால சந்ததியினரின் உருவாக்கமும் குறைஞ்சுக்கிட்டே வருது. இந்த நிலையில் நம்மிடம் இருக்கும் குழந்தைகள் என்னும் எதிர்காலத்தை இப்படியான ஆபத்துகளால் தொலைச்சிடக் கூடாது. அதற்கான அலாரமாக இந்த படத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க.