நடிகையாக மோசமான அனுபவங்களை சந்தித்துள்ளேன்!



மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான்யா ஹோப். ‘மிஸ் கொல்கத்தா’ அழகி பட்டம் வென்றவர். ‘மிஸ் இந்தியா’ போட்டியில் இறுதிச் சுற்று சென்றவர். ‘தடம்’ படத்தின் மூலம் தமிழில் தடம் பதித்தவர். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பிஸி. ‘லேபிள்’ வெப் சீரீஸ் வெளியான நிலையில் தான்யா ஹோப்பிடம் பேசினோம்.
எப்போதும் நடிகையாக இருக்க விரும்புகிறீர்களா?

இல்லை. எப்போதும் அப்படி இருக்க விரும்பியது இல்லை. ஆனால், என்னுடைய முதல் படம் பண்ணும்போது மனப்பூர்வமாக நடித்தேன். நீங்கள் வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அதைத்தான் என் வாழ்க்கையில் எஞ்சியுள்ள நாட்களிலும் செய்ய விரும்புகிறேன்.
நிஜ வாழ்க்கையில் என்னை நானே கண்டுபிடித்து வெளிப்படுத்துவது கடினம். ஆனால், நான் நடிக்கும்போது எனக்குள் இருக்கும் அனைத்தையும் வெளிப்படுத்த அது எனக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை அளிக்கிறது. அடுத்து, யாரும் அதுதான் உங்கள்  கேரக்டர் என்று மதிப்பிட முடியாது. ஏனெனில், அவர்கள் பார்வையில் நான்  நடிப்பை மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.

‘லேபிள்’ அனுபவம் எப்படி?

இயக்குநர் அருண்ராஜா சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. மிகச் சிறந்த எழுத்தாளர். சமூக சிந்தனையும், முற்போக்கு எண்ணங்களும் அவருடைய படைப்பில் இயல்பாகவே இடம்பிடித்திருக்கும். அவர் இயக்கிய ‘கனா’ படம் எனக்கு பிடிக்கும். நடிப்பு பசியோடு இருக்கும் எந்தவொரு நடிகர், நடிகைக்கும் அருண்ராஜா கனவு இயக்குநராகத் தெரிவது நிச்சயம். ஏனெனில், ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் அவர் வேலை வாங்கும்விதம் அப்படி.

கதை, கேரக்டர், காட்சியின் தன்மை என அனைத்தும் எப்படி வரப்போகிறது என்பதை மிக எளிமையாகச் சொல்லி புரியவைத்து, நம்மிடமிருக்கும் முழுத் திறமையையும் வெளியே கொண்டு வருவதற்கு சுதந்திரம் கொடுப்பார். அது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைக்கும் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு கொண்டாட்டம் போல் இருக்கும். ஏனெனில், நம்முடைய உணர்வுகளையும், நடிப்பையும் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் கொண்டுபோய் நிறுத்தலாம்.

அந்தவகையில் மகிதா கேரக்டரை நான் ரசித்துப் பண்ணும்படியாக அருண்ராஜா சார் இடம் கொடுத்தார். எந்த இடத்திலும் இயக்குநருக்கான முன்னுரிமையையும் எடுக்கவில்லை. சிறியளவிலான கட்டுப்பாடுகளைக் கூட  விதிக்கவில்லை. நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை முழுமையாக ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் விட்டுவிடுவார்.

என்ன சொல்கிறார் உங்கள் ஹீரோ ஜெய்?

ஜெய் உடன் நடித்தது நல்ல அனுபவம். பழகுவதற்கு இனிமையானவர். பொறுமைசாலி. படப்பிடிப்பின்போது எங்கள் இருவருக்கும் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம், மிகவும் அழுத்தமான கதை என்பதால் கதையைப் பற்றியும், எங்கள் கேரக்டர் பற்றியும் சிந்திக்கவே எங்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

எந்தப் படத்தில் நடிக்கும்போது உங்கள் நிஜ  வாழ்க்கை கேரக்டருடன் ஒப்பீட்டு நடிக்க முடிந்தது?

‘லேபிள்’ படத்தில் நான் ஏற்று நடித்த மகிதா கேரக்டரை அப்படி என்னால் சம்பந்தப்படுத்தி பார்க்க முடிந்தது. அதில் எனக்கு பல லட்சியங்களை விருப்பத்தோடு செய்யக்கூடிய  பத்திரிகையாளர் வேடம். அதில், மகிதா தன் சொந்தக் காலில் அவளுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் சுதந்திரப் பெண்ணாகக் காண்பித்திருப்பார்கள். அதுதான் தான்யா ஹோப்.

பான் இந்தியா சீசனில் நடிகையாக திறமையை வெளிப்படுத்துவதில் அதிக அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக நினைக்கிறீர்களா?

இல்லை. அந்த மாதிரியான அழுத்தத்தை என்னுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறேன். இப்போது எவ்வளவு கடினமான வேடத்தைக் கொடுத்தாலும் என்னால் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.நான் நடித்த படங்களைப் பார்க்கும்போது என்னால் பெருமைகொள்ள முடிகிறது. சினிமாவில் எனக்கானவைகளை நிரூபிக்க வேண்டுமானால் அதை நான் மட்டுமே செய்ய முடியும். அதை நான் ஏற்கனவே செய்து முடித்துள்ளேன்.

ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். நானும் ரசிகர்களை நேசிக்கிறேன். என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கான அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்டு வேலை செய்து வருகிறேன். அதனால் இப்போது என் வேலையை மகிழ்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன்.  

நடிகையாக இருப்பதால் கிடைக்கும் நன்மை, தீமை என்ன?

நன்மை என்று பார்த்தால் ஏராளமான மக்கள் என்னுடைய வேலையைப் பாராட்டுகிறார்கள். அது எனக்கான ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு என் திறமைகளைக் காட்சிப்படுத்த உதவுகிறது.தீமைகள் என்று பார்க்கும்போது ரகசியம் என்றில்லாமல் எல்லாமே பொதுவெளியில் வெளியாகிவிடுகிறது. 

ஆர்ட்டிஸ்ட்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆராய்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. அப்படி சில வேளைகளில் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அது எனக்கு பெரியளவில் பாதிப்பைக் கொடுக்காது. என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் அன்பானவர்கள். நானும் அவர்களை நேசிக்கிறேன்.

எந்த மாதிரி படங்கள், நடிகர்கள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளார்கள்?

எந்தப் படம் என்று எனக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை. ஆனால், சில படங்கள் என்னை அழவைத்துள்ளது. அப்படி ஒருவருக்குள் இருக்கும் உணர்வுகளை சினிமா தூண்டுகிறது என்றால் அது மிகவும் வலிமையான அம்சம். அப்படி பல வேளைகளில் சினிமா எவ்வளவு மகத்தான சக்தி என்பதை உணர்ந்துள்ளேன். மக்கள் சிந்திக்கும்படியான படங்களை எடுப்பது சினிமாவின் ஆரோக்யத்தை வெளிப்படுத்துகிறது.

இப்போது சினிமா பல தளங்களிள் இயங்கிவருவதால் போட்டியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ஆழ்ந்த தியானம் என்னுடைய அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக என்னுடைய பயணத்தைத் தொடர்கிறேன். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நாம் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளவில்லை என்றால் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடும்.

வெற்றி, தோல்வி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட், ஏற்றம், இறக்கம் என எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு மகிழ்ச்சியாகப் பார்க்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். தினமும் நான் வேலைக்குப் போகும்போது என்னுடைய வேலையை நேசித்துச் செய்யவேண்டும் எனற மனநிலையுடன்தான் போகிறேன். அந்த மனநிலை வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கு போதும்.

நீங்கள் சிங்கிளா?

ஆமாம். எனக்குப் பொருத்தமான ஆண் துணைக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய அப்பா, அப்படியொரு தகுதியுள்ள ஆண் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று சொல்லியுள்ளார்.

ஆண்களிடம் என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்?

என்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாகவே என்னையும் என்னுடைய தொழிலையும் மதிக்கக்கூடியவராக இருக்கவேண்டும். மரியாதை தருவதுபோல் நடிக்கக்கூடாது. அவராகவே சிந்தித்து எனக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடையவராக இருக்க வேண்டும்.

ஒரு நடிகையாக மோசமான அனுபவங்களைச் சந்தித்துள்ளீர்களா?

ஏன் இல்லை. என்னுடைய படம் தோல்வி அடையும்போது மனச் சோர்வைக் கொடுப்பதாக உணர்ந்துள்ளேன். படங்கள் வெற்றிபெறும்போது பரவசமும் அடைந்திருக்கிறேன். என்னைப் பற்றி மோசமாக விமர்சிக்கும்போது மனம் உடைந்துபோவதும், பாராட்டி எழுதும்போது துள்ளிக்குதித்த நிகழ்வுகளும் நடந்துள்ளது. பேட்டிகளில் என்னை அசிங்கப்படுத்தும்போது மோசமான அனுபவமாகவும், கவனிக்கத்தக்க வகையில் நடித்ததைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பார்த்துள்ளேன்.

அடுத்து என்ன படம் செய்கிறீர்கள்?

‘வெப்பன்’. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. சத்யராஜ், வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளார்கள். குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.

சினிமா தவிர வேறு என்ன பிடிக்கும்?

குதிரை சவாரி, நடனம், ஆழ்கடல் நீச்சல், வானத்திலிருந்து குதிப்பது (ஸ்கை டிவைங்). அடிப்படையில் ஆர்வத்தைத் தூண்டும் எந்த அம்சங்களும் பிடிக்கும். கூடவே இந்த நேர்காணலின் கேள்விகள் அனைத்தும் பிடிக்கும்.  

எஸ்.ராஜா