2K கிட்ஸ் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல...ஜிகிரி தோஸ்து சீக்ரெட்ஸ்!

‘‘கண்முன்பு ஒரு பெண் கடத்தப்படுகிறார். அதைப் பார்க்கும் மூன்று நண்பர்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் கதை...’’ இப்படி படத்தின் ஒன்லைனிலேயே நமது எதிர்பார்ப்பை தூண்டுகிறார் ‘ஜிகிரி தோஸ்து’ படத்தின் அறிமுக இயக்குநர் அறன்.

உங்களைப் பற்றி சொல்லுங்கள்..?

சென்னைதான் சொந்த ஊர். அண்ணா யுனிவர்சிட்டியில் மேல் படிப்பு. சினிமாவில் நடிகனாகணும் என்பதுதான் கனவு. ஆனால், சரியான வழி கிடைக்கவில்லை. இயக்குநராக பயிற்சி எடுத்துக் கொண்டால் இன்னும் நல்ல வாய்ப்புகள் வரும் என என்னால் முடிந்தவரை நிறைய ஷார்ட் ஃபிலிம்கள் உருவாக்கினேன். 
அதன் மூலமாக இயக்குநர் ஷங்கர் சார் உடன் இணைந்து ‘எந்திரன்’ திரைப்படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குநராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.  அங்கே ரஜினி சாரிடம் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு... அவருக்கு வசனங்கள்... இதில் எல்லாம் உடன் துணையாக இருக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் எனக்கு சினிமா வெல்கம் போர்டு கொடுத்தது.

‘ஜிகிரி தோஸ்து’?

சின்ன வயதில் இருந்தே கூடவே சுற்றித் திரிகிற நண்பர்களை ‘ஜிகிரி தோஸ்த்’ என சொல்வதுண்டு. பொதுவாகவே இந்தக் கால தலைமுறை மேலே ஒரு நம்பிக்கை இல்லாத சூழல் அதிகமாகவே இருக்கு. ‘நீங்க எல்லாம் என்ன செய்திடப் போறீங்க...’ என்கிற மனநிலையும் நிறையவே பார்க்க முடியுது.அதற்கு பதில் சொல்லும் விதமாதான் இந்தப் படத்தை நான் உருவாக்கி இருக்கேன். சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களான மூணு பேர். அதில் ஒருவருக்கு பிறந்தநாள், அதைக் கொண்டாட மகாபலிபுரம் நோக்கி ஒரு ட்ரிப்புக்காக செல்கிறார்கள்.

அந்தப் பயணத்தின்போது, இவர்கள் கண்முன் ஒரு பெண் பயங்கரமான கும்பலால் காரில் கடத்தப்படுறாங்க. கண்ணு முன்னாடியே நடக்கும் இந்தக்  குற்றத்தைப் பார்த்து அவர்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன... அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஏதேனும் முயற்சி செய்கிறார்களா... இல்லையா... இதுதான் படத்தின் கதை.

படத்தின் மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்கள்..?

கதைப்படி நான் கண்டுபிடிச்ச ஒரு டிவைஸ் கொண்டுதான் படம் நகரும். ரியாஸ் கான் சார் மற்றும் உமா ரியாஸ் சாருடைய மகன் ஷாரிக் ஹாசன் முதன்மை நாயகன். இந்தக் கதையில் நடிகனாகும் கனவுடன் இருக்கும் இளைஞர். எனக்கு நடிப்பு கனவாக இருந்தது. ஆனாலும் ஒரு தயக்கம். அப்போதான் ஒரு குறும்படத்தில் நான் நடிச்சதற்கு சைமா விருது உட்பட சில விருதுகள் சிறந்த நடிப்பிற்காக கிடைச்சது. அப்பதான் எனக்கு இன்னும் நம்பிக்கை அதிகமானது.

இந்தப் படத்தில் நான் ஒரு விஞ்ஞானியாகத் துடிக்கும் இளைஞரா நடிச்சிருக்கேன். நான் கண்டுபிடிச்ச ஒரு டிவைஸ் கொண்டுதான் கதை நகரும். ஆஷிக், யூடியூப் பிரபலம் மற்றும் நிறைய படங்களில் நடிச்சிருக்கார். இந்தக் கதையிலே கல்லூரியிலே சீன் போட்டுத் திரியும் பந்தா பார்ட்டி. இவர்கள் இல்லாமல் அம்மு அபிராமி, பவித்ராலட்சுமி, அனுபமா குமார் மேடம், சிவம் சார், கௌதம் சுந்தர ராஜன் சார், சரத் உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க.

‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ உள்ளிட்ட படங்கள் செய்த ஆர்.வி.சரண் இந்தப் படத்துக்கு சினிமாட்டோகிராபி. பிரபல சின்னத்திரை நிகழ்ச்சிகள் செய்த அருள்மொழி வர்மன் இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கார். ஸ்டண்ட், சில்வா சார் அஸிஸ்டெண்ட் அகேஷ் மேத்யூ. படத்துக்கு இசை அஸ்வின் விநாயகமூர்த்தி. மூணு பாடல்கள் இருக்கு. உடன் பின்னணி இசையும் அருமையா செய்திருக்கார்.

லார்ட்ஸ் பி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக பிரதீப் ஜோஸ் கே, மற்றும் விவிகே எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நானும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்கோம்.
இயக்குநர் ஷங்கரிடம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

ஒரு சம்பவம் சொல்றேன்... ‘எந்திரன்’ படத்தில் ஒரு பஸ்... அதிலே ரஜினி சாரும், ஐஸ்வர்யா மேடமும் பயணம் செய்து அதிலே சண்டைக் காட்சிகள் எல்லாம் எடுத்திருப்பாங்க. அந்தக் காட்சியிலே ‘பஸ் வந்திருச்சா’ அப்படின்னு ஷங்கர் சார் கேட்டார்.

நாங்களும் ஆல் செட் கோ என நிற்கும்போது சார் கேட்டார்... ‘பெட்ரோல் இருக்கா?’.

எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. என்ன இதெல்லாம் அவ்வளவு முக்கியமா எனத் தோன்றியது. ஆனால், சொன்னால் நம்ப மாட்டீங்க... அந்தக் காட்சி படமாக்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்திலே பஸ் நின்னுடுச்சு. இதிலே சோகம் என்னன்னா நாங்க ஷூட்டிங் செய்த இடத்திலே இருந்து 25 கிமீ போனாதான் பெட்ரோல் கிடைக்கும்.

ஓர் இயக்குநருக்கு என்னவெல்லாம் பொறுப்பு இருக்கணும்ன்னு அப்போதான் புரிஞ்சது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட கேட்டு உறுதி செய்துப்பார். அதைத்தான்
கத்துக்கிட்டேன்.

‘ஜிகிரி தோஸ்து’ எப்படிப்பட்ட படம்?

எக்காலத்திலும் இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற கருத்து இருக்கும். நட்பு, காதல், ஆக்‌ஷன், திரில்லர் அத்தனையும் சேர்ந்த படமாக நிச்சயம்
இருக்கும்.

ஷாலினி நியூட்டன்