தமிழ்த் திரைப்பட புகைப்படங்களை பாதுகாக்கும் அமெரிக்கா!எம்ஜிஆர், சிவாஜி போன்ற திரைநட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் காந்தி, நேரு, ஜின்னா போன்ற அரசியல் ஆளுமைகளையும் தன் வித்தியாசமான கோணங்கள், நுணுக்கங்களில் புகைப்படங்களாக பதிவு செய்தவர் சென்னையைச் சேர்ந்த நாகராஜ ராவ். 1950 முதல் 1985 வரை அவர் தன் கேமரா லென்ஸில் கவ்விய சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்களை அமெரிக்காவின் பிரபல நூலகமான கலிஃபோர்னியாவின் யுசிஎல்ஏ பாதுகாக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்த பாலுமகேந்திராவின் கனவுகள் தமிழகத்தில் பலிக்காமல் போனநிலையில் அமெரிக்கா அந்த முயற்சியில் இறங்கியிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நல்வாய்ப்பு. பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு நிறுவனத்தின் முயற்சியில் நாகராஜ ராவின் பல லட்சம் புகைப்படங்களில் பூச்சிகள் தின்று மிச்சமிருக்கும் புகைப்பட நெகடிவ்களை தூசி தட்டியபடி அவரது உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடன் இணைந்து பணியாற்றியபடி இருந்த நாகராஜ ராவின் மகன் பிரேம்நாத்தை சந்தித்தோம்.‘‘பூர்வீகம் அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியின் விஜயவாடா. இந்திய சுதந்திரக் காலத்தில் தாத்தா அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். தாத்தா ஒரு விலங்கியல் மருத்துவராக இருந்ததால் வேலை நிமித்தம் இங்கே வந்திருக்கிறார். 
தஞ்சையில் இருந்த மராத்திய பூர்வ குடிகளின் வழிவந்தவர் தாத்தா. அப்பா நாகராஜ ராவ், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். படிப்பு முடித்ததும் சென்னையில் இருந்த வால்காட் பிரதர்ஸ் எனும் ஆங்கிலேயர்களின் கம்பெனியில் அவருக்கு சென்னையிலேயே வேலை கிடைத்தது.

ரேடியோ டிரான்ஸ்மிட்டர் உற்பத்தி செய்யும் தொழிலில் அந்தக் கம்பெனி ஈடுபட்டது. ஒருநாள் அந்தக் கம்பெனியின் டிரான்ஸ்மிட்டர் உற்பத்தியாகும் அறைக்குப் போய் அப்பா தன் கேமராவில் புகைப்படம் எடுத்திருக்கிறார். 
இதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரி அப்பாவைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார்...’’ என்று சொல்லும் பிரேம்நாத், நாகராஜராவின் வேலையை பலிவாங்கிய அப்பாவின் கேமரா மோகத்தைப் பற்றி விவரித்தார்.‘‘அப்பா கல்லூரி படிக்கும்போதே ஒரு கேமரா அடிக்ட் ஆக இருந்தார். தாத்தா இதற்கு ஒத்துழைக்காவிட்டாலும் பாட்டி காசு கொடுத்து அப்பாவின் ஆசையை நிறைவேற்றினார்.

அப்பாவும் பலவித கேமரா, கேமரா நுணுக்கங்களை சொல்லும் பல புத்தகங்களை தொடர்ச்சியாக படித்திருக்கிறார். வால்காட் வேலை போனதும் சென்னை இராயப்பேட்டையில் இருந்த அப்போதைய பிரபல பத்திரிகையான ‘சுதேசமித்திரனில்’ அப்பாவுக்கு பிரஸ் ஃபோட்டோகிராஃபராக வேலை கிடைத்தது. அது தினசரி என்பதால் தினமும் பல தலைவர்கள் மற்றும் பிரபலங்களை புகைப்படம் எடுக்க அப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது...’’ என்று சொல்லும் பிரேம்நாத், நாகராஜ ராவின் சினிமா தொடர்பின் முதல் புள்ளி எம்ஜிஆர் என்கிறார்.

‘‘அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இருவருமே அக்கா, தங்கைகள். மூத்த மனைவி டிபியால் அவதிப்பட்டபோது, எம்ஜிஆரின் மனைவி லீலாவதியும் அதே நோயால் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில்தான் அப்பாவுக்கும் எம்ஜிஆருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான புகைப்படங்களின் அற்புதத்தைப் பார்த்த எஸ்.எஸ்.வாசன், அப்பாவை தன் ‘சந்திரலேகா’ திரைப்படத்தில் வேலை செய்யக் கேட்டுக்கொண்டார். 

பிரபலமாக பேசப்பட்ட ‘சந்திரலேகா’ படத்தில் பெரிய பெரிய டிரம்களில் அப்போதைய கனவுக் கன்னியான ராஜகுமாரி ஆடிய நடனத்தை முதன்முதலாக தன் ஸ்டில் கேமராவில் படமாக்கியதன் மூலம் அப்பாவின் திரையுலகப் பயணம் ஆரம்பமானது...’’ என்று சொல்லும் பிரேம்நாத், நாகராஜ ராவின் அந்தப் பயணத்தின் வரலாற்றையும் விவரித்தார்.

‘‘அப்பா சுமார் 1000 திரைப்படங்களிலாவது வேலை செய்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திப் படங்களும் இவற்றில் அடங்கும். அதிகபட்சமாக எம்ஜிஆரின் 60 படங்களிலும், சிவாஜியின் 30 படங்களிலும் வேலை செய்திருக்கிறார். ஒரு படத்துக்கு டெஸ்ட் ஷூட் செய்வது முதல் படத்தின் முழு ஷூட்டிங்கையும் ஆல்பமாக தயாரிப்பது வரை அப்பாவின் வேலையாக இருக்கும். 

படங்களில் ஸ்டில் கேமரா என்று டைட்டில் வருமே... அப்படியாக 1000 படங்கள் செய்திருக்கிறார். ஒரு படத்தில் ஒரு பாத்திரத்தின் கன்டினியூட்டி வரவேண்டும் என்றால் அந்தப் பாத்திரத்தின் டெஸ்ட் ஷூட் அவசியம். டெஸ்ட் ஷூட்டில் கிடைக்கும் ஒரு பாத்திரத்தின் லுக்தான் படம் முழுவதும் இருக்கவேண்டும். அதனால்தான் டெஸ் ஷூட் அவசியம்.

ஸ்கின் டோன், லைட்டிங், முக கோணங்கள்... இப்படி எல்லாமே இந்த டெஸ்ட் ஷூட்டில்தான் நிச்சயிக்கப்படும். அப்பா 2000ம் ஆண்டு தன் 90வது வயதில் இறந்தார்.
‘சுதேசமித்திரன்’ வேலைக்கிடையில் சினிமா வேலையையும் ஃப்ரீலான்சாக ஆரம்பத்தில் பார்த்தார். ‘சுதேசமித்திரனில்’ வேலை செய்தபோதுதான் பல அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களை படம் பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

சுபாஷ் சந்திரபோசை நாம் அனைவரும் இராணுவ உடையில்தானே பார்த்திருப்போம்... அப்பா எடுத்த புகைப்படத்தில் அவர் சாதாரண உடையில் இருப்பார்.
சினிமா வேலை பிசியாக... அப்பா ‘சுதேசமித்திரனில்’ இருந்தும் பிறகு விலகிவிட்டார்...’’ என்று சொல்லும் பிரேம்நாத், நாகராஜ ராவின் சுவாரசியமான டெஸ்ட் ஷூட் அனுபவங்கள் பற்றி
கலகலப்பாகப் பேசினார்.

‘‘எம்ஜிஆர், சிவாஜி, லதா, ஜெயலலிதா, எம்.ஆர். ராதா, பத்மினி, ரஜினி... என்று பல நடசத்திரங்கள் இந்த வீட்டுக்கு டெஸ்ட் ஷூட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த வீடு தாத்தா வாங்கியது. வீட்டின் ஒரு பகுதிதான் ஸ்டூடியோவாகவும் இயங்கியது. ஷூட்டிங் அறை, டார்க் ரூம் என்று வீட்டையே ஒரு மெகா ஸ்டூடியோவாக அப்பா மாற்றி
யிருந்தார்.

என்.எஸ். கிருஷ்ணன் டைரக்ட் பண்ணிய ‘பிச்சைக்காரன்’ படத்துக்காக எம்ஜிஆர் வந்தது, ‘பராசக்தி’க்காக சிவாஜி வந்தது, ‘படகோட்டி’ படத்துக்காக மீனவப்பெண்ணாக  
சரோஜாதேவியை டெஸ்ட் ஷூட் நடத்தியது... எல்லாம் இங்கேதான். ‘பராசக்தி’ டெஸ்ட் ஷூட் சமயத்தில் புகைப்படம் எடுத்ததும் ‘என் முகம் அழகாக இருக்கிறதா’ என்று ஏக்கத்துடன் சிவாஜி கேட்ட அதிசயமும் இங்கேதான் நடந்தது.

அப்பாவின் கேமரா கோணம், லைட்டிங் எல்லாம் பலருக்கும் பிடிக்கும். எம்ஜிஆரைப் பொறுத்தவரை அவருக்கு ரெட்டை நாடி என்பது பலருக்கும் தெரியும். ஆனால், திரைப்படங்களில் அந்த ரெட்டை நாடியை யாரும் பார்க்கமுடியாது. காரணம், அந்த ெரட்டை நாடி தெரியாதமாதிரி அந்த நாடியில் ஒரு நிழல் விழும். இது லைட்டிங்கால் அப்பா கொண்டுவருவது.

ஒருமுறை ஸ்ரீதரின் படத்துக்காக ஒரு கதாநாயகியை அப்பா படம் பிடித்தார். அதை ஸ்ரீதருக்கு அனுப்பினார். அந்தப் பெண்ணை ஸ்ரீதர் நேரில் வரச் சொன்னார். ஆனால், நேரில் அவரைப் பார்த்ததும் ஸ்ரீதர் அதிர்ந்தார். அவரால் அந்தப் புகைப்படத்தை நம்பமுடியவில்லை.

காரணம், நேரில் அந்தப் பெண் சுமாராகவும், புகைப்படத்தில் மெழுகு பொம்மையாகவும் இருந்திருக்கிறார். ஸ்ரீதரைப் பொறுத்தளவில் யதார்த்தமான கதாநாயகிகளைத்தான் அவர் விரும்புவார். அதனால் அப்பாவிடம் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்று அட்வைஸ் செய்ததாக அப்பா சொல்லியிருக்கிறார்.உண்மையில் இது அப்பாவுக்குக் கிடைத்த பாராட்டு...’’ என்று சொல்லும் பிரேம்நாத், தன் அப்பாவின் புகைப்பட சேகரிப்புக்காக அமெரிக்கா எடுத்திருக்கும் முயற்சியை சிலாகிக்கிறார்.

‘‘சுமார் 3 வருடங்களுக்கு முன் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஃபிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் புகைப்பட ஆவணக் காப்பகத்தின் தலைவரான ரமேஷ்குமார் எங்கள் விலாசத்தை விசாரித்து வீட்டுக்கு வந்தார். அப்பா எடுத்து என்னால் பாதுகாக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நெகடிவ்கள் ஏற்கனவே மழை மற்றும் ஈரப்பதத்தால் செல்லரித்துப் போய்விட்டது. அப்படி சுமார் 3 மூட்டைகளையாவது குப்பையில் போடவேண்டிய அவலம் ஏற்பட்டது.

அப்படி இருக்கும்போதுதான் மீதமிருக்கும் மேலும் ஒரு லட்சம் நெகடிவ்களையாவது பாதுகாக்க, தான் முயற்சிக்கப்போவதாக ரமேஷ்குமார் சொன்னார். அதன்படிதான் அவர் முயற்சியில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பிரபல லைப்ரரி இதை பாதுகாக்க நிதியுதவி அளிக்க முன்வந்தது. 

அவரின்  உதவியுடன் சில விஸ்காம் பெண்கள் இங்கிருக்கும் நெகடிவ்களை தூசு தட்டி, சுத்தப்படுத்தி டிஜிட்டலைஸ் பண்ணும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரியில் இந்தப் பணி ஆரம்பமானது. விரைவில் இந்தப் புகைப் படங்கள் ஆவணமாக மாறி தமிழ் சினிமாவின் வரலாற்றை அறிய உதவும்...’’ உற்சாகமாகவும் நெகிழ்ச்சியாகவும் சொல்கிறார் பிரேம்நாத்.

தமிழக வரலாற்றை புகைப்படங்கள் வழியாகவும் எழுதலாம்

‘‘எம்ஜிஆர், கலைஞர், என்.டி ராமராவ் மற்றும் ஜெயலலிதா எனும் 4 முதலமைச்சர்களுடனும் பணிபுரிந்த நாகராஜ ராவின் சாதனை மிக முக்கியமானது.ஃபிரான்சில் 1839ல் அறிமுகமான புகைப்படக் கலை சில வருடங்களிலேயே - அதாவது 1845ல் இந்தியாவில் அறிமுகமானது. 

இந்தியாவில் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள்தான் புகைப்படம் எடுக்கும் பணியில் இருந்தார்கள். பிறகு 1870களில்தான் இந்தியர்கள் ஸ்டூடியோ வைத்து புகைப்படம் எடுக்கும் பணி ஆரம்பமானது. 1870 முதல் 1970 வரையிலான 100 வருடத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் புகைப்படங்களை தமிழக ஸ்டூடியோக்களில் தேடித் தேடி சேகரித்து பிரிட்டிஷ் நூலகம் மூலம் சில வருடங்களுக்கு முன் ஆவணமாக்கினோம்.

பிரிட்டிஷ் நூலகம் 1950க்கு முந்தைய ஆவணங்களுக்குத்தான் நிதிஉதவி அளிக்கும். ஆனால், அமெரிக்காவின் யுசிஎல்ஏ நூலகம் நவீன சமகால ஆவணங்களுக்கும் நிதியுதவி அளிக்கும் என்பதால்தான் நாகராஜ ராவின் புகைப்படங்களைப் பாக்காக்க கோரிக்கை வைத்தோம். கைமேல் பலனும் கிடைத்தது. 1970க்குப் பிறகு புகைப்படக் கலையிலும் தானியங்கி இயந்திரங்களால் அக் கலையானது மாற்றம் கண்டது. அதற்கு முன்பு எல்லாமே மானுவலாகத் தான் உருவானது.

ஆகவே, தமிழக வரலாற்றை அறியவேண்டும் என்றால் புகைப்படக் கலை வழியாகவும் அறியலாம். உதாரணமாக ஆரம்ப புகைப்படக் காலத்தில் சுமார் 1000 டெக்னிக்காவது புகைப்படக் கலையில் இருந்தது. இது எல்லாம் இப்போது காணாமல் போய்விட்டது. இந்த வரலாற்றை எழுதவும் அதன்மூலம் தமிழ் சமூகத்தின் வரலாற்றை அறிந்துகொள்ளவும் இந்த புகைப்பட ஆவணம் முக்கியமாகத் திகழும்.

அந்த விதத்தில் சுமார் 35 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவின் பல சரித்திரங்களைச் சொல்லும் செய்திகள் நாகராஜ ராவின் புகைப்படங்களிலும் இருக்கிறது என்பதால்தான் அவரது புகைப்படங்களைச் சேமித்து வைப்பது முக்கியமானதாக இருக்கிறது...’’ என்கிறார் பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் புகைப்பட ஆவணக் காப்பகத்தின் தலைவரான
ரமேஷ்குமார்.

செய்தி: டி.ரஞ்சித்

படங்கள்: ஆர்.சி.எஸ்.