வாட் ஏ கருவாடுஆன்லைன் பிசினஸில் சக்கைப்போடு போடுகிறார் கலை கதிரவன்

எஞ்சினியரிங் முடித்துவிட்டு நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் பல இளைஞர்கள் திடீரென அந்த வேலையை உதறிவிட்டு சொந்தமாக பிசினஸ் தொடங்குவதும், இயற்கை விவசாயம் நோக்கி நகர்வதும் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவரும் ட்ரெண்ட்!  அப்படியாக சொந்த ஊரில் சொந்த பிசினஸிற்குள் நகர்ந்த இளைஞர் கலை கதிரவன். ஆனால், யாருமே எதிர்பார்க்காத ஒரு பிசினஸிற்குள் நுழைந்தார் என்பது ரொம்பவே ஆச்சரியம். அதுமட்டுமல்ல. அந்தத் தொழில் அவருக்கும்கூட புதியதுதான்.

அவருடன் அவரின் நண்பர் கிருஷ்ணசாமியும் கைகோர்க்க, இருவரும் தங்களுடைய கடினமான உழைப்பாலும், தரமான தயாரிப்பாலும் இன்று பலரின் கவனத்தைப் பெற்ற இளைஞர்களாக நிமிர்ந்து நிற்கிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு அரசின் டான்சிம் (TANSIM - Startup TN) சிறந்த ஸ்டார்ட்அப்பாகப் பாராட்டி இவர்களின் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது. இதனால், இன்னும் உத்வேகத்துடன் பணிகளைச் செய்து வருகின்றனர் கலை கதிரவனும், கிருஷ்ணசாமியும்.

சரி, இருவரும் அப்படி என்ன பிசினஸ் செய்கிறார்கள் என்றுதானே கேட்கிறீர்கள்?

கருவாடு. ஆம். ஆன்லைனில் கருவாடு விற்பனையை இந்தியா முழுவதும் கனஜோராகச் செய்துகொண்டிருக்கும் இளைஞர்கள் இவர்கள். மதுரை ரயில்நிலையத்திலும், ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தில் இவர்கள் கடைவிரித்துள்ளனர். ‘‘கடந்த அஞ்சு ஆண்டுகளாக இந்த பிசினஸில் இருக்கோம். கொரோனாவுக்குப் பிறகு இப்பதான் நல்லபடியாக டேக்அப் ஆகிருக்கு. ஆரம்பத்துல கருவாடு பத்தி எனக்கு எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் படிப்பினைகள் மூலமே கத்துக்கிட்டேன்...’’ எனச் சிரித்தபடியே பேசுகிறார் கலை கதிரவன்.

‘‘எனக்கு ராமநாதபுரம் பக்கத்துல தெற்குவாணிவீதினு ஒரு கிராமம். பிளஸ் டூ வரை ராமநாதபுரத்துலதான் படிச்சேன். பிறகு, ஓசூர்ல பி.டெக் பயோடெக்னாலஜி பண்ணினேன். அப்புறம், பெங்களூர்ல சில ஆண்டுகள் வேலை செய்தேன். பிறகு, சென்னையில் வேலை செய்தேன். கடைசியாக கடலூர்ல ஒரு பூச்சிக்கொல்லி மருந்து நிறுவனத்துல சுற்றுச்சூழல் துைற பிரிவுல உதவி மேலாளராக இருந்தேன். 
அங்கிருந்து 2019ல் வெளியே வந்தேன்.எனக்கு சின்ன வயசுல இருந்தே நம்மூர்ல இருந்து சம்பாதிக்கணும்னு ஓர் எண்ணம் இருந்தது. ஆனா, படிச்சு முடிச்சதும் பெங்களூர்ல வேலைக்கு சேரும்படி ஆனது. அப்பெல்லாம் நம்மூர்ல இதே அளவு சம்பாதித்தால் நன்றாக இருக்குமேனு மனசு ஏங்கும். நான் பேசின என் சீனியர்கள் எல்லோருமே வயசான காலத்துல ஊர்ல போய் ஏதாவது பண்ணணும்னு சொன்னாங்க.

அப்ப நான், ‘ஒண்ணும்முடியாத காலத்துல அங்க  போய் என்ன பண்ணப் போறோம்? அதுக்கு இப்பவே போய் ஏதாவது பண்ணுவோமே’னு நினைச்சேன். ராமநாதபுரம் மாவட்டத்துல கடலும், பனையும்தான் பிரதானம். இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணு பண்ணணும்னு தோணுச்சு. குறிப்பாக ராமேஸ்வரம் கருவாடு புகழ்பெற்றது.
இதுக்குக் காரணம், எங்க பகுதி மீனவர்கள் பத்து, பதினைந்து நாட்கள் தங்கி ஆழ்கடல்ல மீன்பிடிக்கிறதில்ல. அதிகபட்சம் ஓரிரு நாட்கள்ல கரைக்கு வந்திடுவாங்க. அதனால மீனும் சரி, அதிலிருந்து உருவாக்கப்படுகிற கருவாடும் சரி ஃப்ரஷ்ஷாக இருக்கும். அதனால, கருவாடு பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். முதல்ல வீட்டுல சொன்னேன். என் மனைவி அனிதாவும், என் பெற்றோரும் சப்போர்ட் செய்தாங்க.

இதற்கிடையில், சென்னையில் வேலை செய்யும்போது என்னுடன் அறை நண்பராக கிருஷ்ணசாமி இருந்தார். அவர் படிச்சதெல்லாம் ராமநாதபுரத்துலதான். பி.இ முடிச்சிருக்கார். அவருக்கும் இந்தமாதிரி ஏதாவது பண்ணணும்னு ஓர் ஆசை இருந்தது. பிறகு, நான் சென்னையிலிருந்து கடலூருக்கு வேலைக்கு வந்திட்டேன். அவர் சென்னையிலிருந்து பெங்களூர் போயிட்டார். ஆனா, அவ்வப்போது சென்னைக்கு வந்து பழைய அறை நண்பர்களைச் சந்திக்கிறது வழக்கம்.

இந்நேரம், கடலூர்ல வேலை செய்யும்போதே Lemurianbazaar.comனு ஒரு வெப்சைட் தொடங்கிட்டேன். எனக்கு வெப்சைட் தொடங்குறதுல ரொம்ப ஆர்வம். இதை ஓய்வுநேரங்கள்ல ஒரு பொழுதுபோக்காகவே செய்திட்டு இருந்தேன். சென்னையில் அவரைச் சந்திச்ச நேரம், இந்த வெப்சைட் பற்றி சொன்னேன். சரி, பண்ணலாம்னு சொன்னார்.

ரெண்டு நாட்கள் கழிச்சு இந்தமாதிரி ரிசைன் லெட்டர் தரப்போறேன்னு சொன்னதும், அவர் ஷாக்காகிட்டார். ‘செய்றதுனு முடிவாகிடுச்சு. பிறகென்ன? பண்ண வேண்டியதுதானே’னு சொன்னேன். அப்படியாகத்தான் இந்த கருவாடு பிசினஸ் ஆரம்பமானது...’’ என்கிறவருக்கு கருவாடு பற்றி அப்போது எதுவும் தெரியாது.

‘‘எங்க வீட்டுல தாத்தாதான் கருவாடு வாங்கிட்டு வருவாங்க. எங்கப்பா மின்சாரத்துறையில் வேலை செய்தார். அவருக்கு கருவாடு பத்தி அவ்வளவாகத் தெரியாது. எங்க ஊரைப் பொறுத்தவரை சந்தைக்குப் போய்தான் கருவாடு வாங்க முடியும். அங்கேயும் குவிச்சு வச்சிருப்பாங்க. அதுல எது நல்லாயிருக்கும், எது நல்லாயிருக்காதுனு தெரியாது.  

நான் கடலூர்ல வேலை செய்றப்ப அமேசான், ஃபிளிப்கார்ட்டுல எப்படி கருவாடு போகுதுனு பார்த்திருக்கேன். எங்க ஊர்ல நூறு ரூபாய்க்கு விற்கிற கருவாடு, அந்த தளங்கள்ல எழுநூறு, எண்ணூறு ரூபாய்க்கு போகும். இப்ப நாமும் முயற்சி செய்து பார்ப்போமேனு நினைச்சேன்.  எங்க டார்கெட் நகரத்துல உள்ளவங்க மட்டும்தான். அவங்களுக்குக் கருவாடு எங்க போய், எப்படி வாங்கணும்னு தெரியாது. அவங்களை நோக்கி தொடங்கினேன். ஆரம்பத்துல எனக்கும் கருவாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. நான் கேட்குறது ஒண்ணாகவும் அவங்க கொடுக்குறது ஒண்ணாகவும் இருந்தது.

அதனால, கருவாட்டைவிடுத்து ஆட்களை அடையாளம் கண்டோம். இவங்ககிட்ட வாங்கினால் சரியாக இருக்கும்னு ரெகுலராக வாங்கினோம். ஆனா, இப்ப அப்படியில்ல. எங்களுக்கென்றே தனியாக ஆட்கள் வச்சு கருவாடு தயாரிக்கிறோம். ஆரம்பத்துல நானும், என் மனைவி அனிதாவும்தான் வேலைகள் செய்தோம். பிறகு நண்பர் கிருஷ்ணசாமி வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்திட்டார். நாங்க பெரிய அளவில் மூலதனம் போட்டு பிசினஸை ஆரம்பிக்கல. எங்க வீடுதான் எல்லாமே.  

2020ம் ஆண்டு மார்ச் 18ம் தேதிதான் அமேசான்ல வெளியிட்டோம்.  அடுத்த நான்கு நாட்கள்ல லாக்டவுன் அறிவிச்சிட்டாங்க. முதல் ஆர்டரே கேன்சல் பண்ற மாதிரி ஆகிடுச்சு. அப்புறம், இரண்டு மாசம் கழிச்சு நாங்களே அந்த ஆர்டருக்கு அனுப்பினோம். இந்த பிசினஸுக்கு எனக்கு யாரும் ரெஃபரன்ஸாக அமையல. எல்லாமே நானாகவே கத்துக்கிட்டதுதான். ஒவ்வொரு விஷயத்தையும் சரியாக திட்டமிட்டே செய்தோம். குறிப்பாக, பேக்கிங் சரியாக பண்ணினோம். பேக்கிங் டிசைன் பண்ணும்போதே அமேசான்.காம் பார்த்தோம்.

அதுல எல்லா நாட்டிலிருந்தும் தயாரிப்புகள் வரும். அது எப்படியெல்லாம் இருக்குனு பார்த்து அதைத்தாண்டி சரியான பேக்கிங் செய்யணும்னு முடிவெடுத்தோம். ஏன்னா, கருவாடு கவிச்சி அதிகம் உள்ள உணவு. பேக்கிங் சரியாக இல்லனா ரொம்ப நாத்தம் வந்திடும். வெளியில் வச்சால் எறும்பு மொய்ச்சிடும். இதன்பிறகு, எங்க தயாரிப்புக்கான எஃப்எஸ்எஸ்ஏஐ சான்றிதழ் வாங்கினோம். இதுல கருவாட்டுக்கென 22 பாராமீட்டர் வச்சிருக்காங்க. அதை ஃபாேலா பண்ணிதான் கருவாடு பதப்படுத்துறது, பேக்கிங் பண்றது எல்லாம் செய்யணும். இதை இப்ப வரை ஃபாலோ பண்றோம்.

நாங்க கருவாட்டுல புதுசா ஒரு வெரைட்டியைக் கொண்டு வர்றோம்னா முதல்ல அதை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவோம். அந்த அறிக்கையை வாங்கினபிறகுதான் சந்தைக்குக் கொண்டு வருவோம். இப்ப நாங்க கருவாடு பேக்கிங்கிலும் க்யூஆர் கோடு கொடுத்திருக்கோம். அந்தக் கோடினை நீங்க ஸ்கேன் செய்தால் இந்த அறிக்கையைப் பார்க்கலாம். அப்புறம், இந்தக் கருவாடு எங்கிருந்து வாங்கினது, அதுல என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கு என்கிற விவரங்களையும் கொடுக்குறோம்.

இதனுடன் இந்தக் கருவாட்டில் என்னென்ன டிஷ் செய்யலாம் என்கிற விவரங்களையும் க்யூஆர் கோடு வழியாகப் பார்க்கலாம். பொதுவாக கருவாட்டுல தொக்கு வைக்கலாம். குழம்பு செய்யலாம். ரசம் பண்ணலாம். கிரேவி ரொம்ப சூப்பராக இருக்கும். இந்தத் தகவல்களை நாங்க தனியாக பண்ணல. ஏற்கனவே யூடியூப்ல லட்சக்கணக்குல வீடியோஸ் இருக்கு. 

அதைக் கொண்டு ஒவ்வொரு கருவாட்டுக்கும் ஒரு ப்ளேலிஸ்ட் உருவாக்கியிருக்கோம். இப்ப நெத்திலிக்கு மட்டும் 25 செய்முறை இருக்கு. இதை ப்ளேலிஸ்ட்ல போய் பார்க்கலாம். கருவாட்டுக்கும் ஒரு தனித்துவம் வேணும்னு செய்தோம். இப்ப எங்களைப் பார்த்து நிறையபேர் செய்றாங்க.

நாங்க 250 கிராம், 400 கிராம், ஒரு கிலோ வரை பேக் செய்றோம். ஒவ்வொரு வாரமும் கருவாடு தயாரிச்சு பேக் பண்றதால எப்பவும் எங்க கருவாடு ஃப்ரஷ்ஷாகவே இருக்கும். ஷிப்பிங்ல போடும்போது நாங்க ஆறு மாதங்கள் வரை எக்ஸ்பயரி டேட் தருவோம். இப்ப 25 வகையான கருவாடு கொடுக்குறோம். நெத்திலியில் மட்டுமே ஆறு வெரைட்டி தர்றோம். 

சைஸ் வாரியாக பிரிச்சுக் கொடுக்குறோம். உப்பு இல்லாத கருவாடும் ஆன்லைன்ல நாங்கதான் தர்றோம். இதுல நெத்திலி, சூடைனு ரெண்டு வெரைட்டி வரும். தவிர, இன்னும் ரெண்டு மூணு ஐட்டத்திற்கு உப்பு இல்லாமல் ட்ரையல் பார்க்குறோம்...’’ என்கிறவர், முதலீடு பற்றித் தொடர்ந்தார்.   

‘‘இப்ப நாங்க நிதி மூலம் இந்த பிசினஸை விரிவுபடுத்தியிருக்கோம். எங்க ஊர்ல உள்ள அக்ரி ஃபார்ம் வழியாக மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் ஃபோரத்திற்குப் போனோம். அங்க நபார்டு வங்கி, புதுசா அக்ரி சார்ந்து தொழில் பண்றவங்கள அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போகணும்னு நிதி கொடுக்குது. அப்படியாக எங்க நிறுவனத்துல 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தாங்க.

இதைப் பயன்படுத்தி நாங்க மதுரை ரயில்நிலையத்தில் கடை விரிச்சோம். ராமநாதபுரத்துல நல்ல ஃபீட்பேக் இருந்ததால செய்தோம். இந்தியாவுல கருவாட்டுக்கு ஒரு ஷோரூம் என்கிற மாதிரி மதுரையில் உருவாக்கினோம்.

இந்தச் செய்தி எல்லா சேனலிலும் வந்தது. தமிழ்நாடு அரசின் கவனத்திற்கும் சென்றது. தமிழ்நாடு அரசின் டான்சிம் பாராட்டினாங்க. அவங்க இதுமாதிரி புதுசா வர்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு போக நிறைய முதலீடு செய்றாங்க. அப்படியாக டான்சிம் எங்க நிறுவனத்துல 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்காங்க...’’ என்கிறவர் தன்னுடைய கனவு பற்றி விவரித்தார்.  

‘‘இப்ப எங்க பிசினஸை இன்னும் விரிவுபடுத்த இருக்கோம். முதல்கட்டமாக ஈரோட்டுல டெக்ஸ்வேலினு ஒரு மால் இருக்கு. இந்தியாவுல அதை பெரிய ஷாப்பிங் மால்னு சொல்றாங்க. அங்க கடை திறக்க இருக்கோம். அடுத்து கோவையில் திறக்க பிளான் வச்சிருக்கோம்.

இதுதவிர குழம்பு, கிரேவி, தொக்கு எல்லாம் ரெடிமேடாகத் தயாரிக்கப் போறோம். இந்த ரெடிமேட் ஐட்டங்களை ஒரு வருடம் வரை வச்சிக்கலாம். இப்ப என் கனவுனா உலகம் முழுவதும் என் தயாரிப்புகளைக் கொண்டு போகணும் என்பதுதான். எனக்கு டர்ன்ஓவர் கணக்கெல்லாம் வேண்டாம். என்னிடம் வாங்குற கஸ்டமர்கள் ஒரு நல்ல தயாரிப்பை வாங்கியிருக்கோம்னு திருப்திப்பட்டாலே போதும். அதுவே என் பிசினஸிற்கு கிடைச்ச வெற்றிதான்...’’ ஆத்மார்த்தமாகச் சொல்கிறார் கலை கதிரவன்.  

பேராச்சி கண்ணன்