டார்க்நெட்22. டார்க்நெட் பாராளுமன்றம்

ஆமாம். நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். டார்க்நெட்டில் ஒரு பாராளுமன்றம் இயங்குகிறது. ஆனால், இது ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பாராளுமன்றம் அல்ல. சில சைபர் கிரிமினல்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாக்கிய பாராளுமன்றம்.இந்த சைபர் கிரிமினல்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என தங்கள் திட்டங்களைப் பற்றி விவாதித்து முடிவு செய்வார்கள்.  

என்ன மாதிரியான வங்கிகளை ஹேக் செய்ய வேண்டும்... யாருடைய இணையதளங்களை முடக்க வேண்டும்... புதிதாக என்ன மாதிரியான சைபர் கிரிமினல் தொழில்நுட்பங்கள் வந்துள்ளன... டார்க்நெட்டில் உலாவும் போலீசாரிடமிருந்து எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும்... என்பதைப் பற்றி எல்லாம் விவாதிப்பார்கள்.
இந்தக் குழுக்களுக்கும் ஒருவிதக் கொள்கைகள் உண்டு. ஒரு சில நேரத்தில் இவர்கள் ஒரு நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த நாட்டின் நலனுக்காக மற்ற நாடுகளின் மீது சைபர் தாக்குதல்களை மேற்கொள்வார்கள். அல்லது ஒரு கொள்கை சார்ந்தவர்களாக இருப்பார்கள். அந்தக் கொள்கைக்காக சைபர் தாக்குதல்கள் மேற்கொள்வார்கள்.  

இறுதியாக முழுக்க முழுக்க கிரிமினல் காரணங்களுக்காகவே எப்படியெல்லாம் தங்களை பாதுகாத்துக் கொண்டு சைபர் தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்பார்கள்.

டார்க்நெட்டில் உருவான இன்னொரு வினோதம் வார்ம்ஜிபிடி அல்லது ஃபிராடுஜிபிடி.இந்த ஆண்டு இணையத்தை உலுக்கிய மிக முக்கியமான கண்டுபிடிப்பு சாட் ஜிபிடி என்ற மென்பொருளாகும். இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்பொருள்.  

இந்த மென்பொருளில் நீங்கள் உரையாடலின் மூலம் அதனை கேள்வி கேட்கலாம். உங்கள் கேள்விகளுக்கு தகுந்த பதிலை அது புதிதாக உருவாக்கிக் கொடுக்கும். செயற்கை நுண்ணறிவுடன் இயங்குவதால் அது கொடுக்கும் பதில் மிகத் துல்லியமானதாக இருக்கும். ஒரு மனிதனுடன் உரையாடுவது போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தாலும் மனிதர்களை விட மேம்பட்ட பல தகவல்களை ஒன்றிணைத்து உங்களுக்காக இது கொடுக்கும்.

சாட்ஜிபிடியை நீங்கள் ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் அது கட்டுரை எழுதிக் கொடுக்கும். ஒரு கவிதை எழுதச் சொன்னால் புதிதாக ஒரு கவிதையை உருவாக்கிக் கொடுக்கும்.  
கூகுள் போன்ற இணைய தளங்கள் ஒரு கவிதையைத் தேடச் சொன்னால் அது இருக்கும் பக்கத்தை சரியாக தேடிக் கொடுக்கும். ஆனால், சேட் ஜிபிடி அப்படி அல்ல. நீங்கள் ஒரு கவிதை எழுதச் சொன்னால் அதை உள்வாங்கி ஒரு கவிதையை புதியதாக எழுதிக் கொடுக்கும்.

சாட் ஜிபிடி-யின் பரபரப்பு இணையத்தைப் பற்றிக்கொண்டது. அதை பயன்படுத்திய மக்கள் வியந்தார்கள். சாட் ஜிபிடி-யிடம் கவிதை எழுதச் சொன்னார்கள்,  கணினி நிரல்களை எழுதச் சொன்னார்கள், ஒரு கணக்கைக் கொடுத்து அந்தக் கணக்கை தீர்க்கச் சொன்னார்கள்.  பிள்ளைகளின் வீட்டுப் பாடங்களை அழகாகச் செய்து கொடுத்தது. 

ஆனால், அதே நேரம் டார்க்நெட்டில் ஃபிராடு ஜிபிடி என்று ஒன்றை சைபர் கிரிமினல்கள் உருவாக்கி விட்டார்கள்.நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சாட் ஜிபிடி-யில் சைபர் கிரிமினல்களைப் பற்றி ஏதேனும் கேள்விகளைக் கேட்டால் தகவல்கள் கொடுக்குமே ஒழிய வேறு எந்த உதவியும் செய்யாது.  

உதாரணத்திற்கு ஒரு கணினியை எப்படி ஹேக் செய்ய வேண்டும் என்று கேட்டால் சாட் ஜிபிடி அதற்கு பதில் தராது. ஆனால், ஃபிராடு ஜிபிடி அந்த பதிலைக் கொடுக்கும்.
சாட் ஜிபிடி-யை உருவாக்க பயன்படுத்தப்பட்ட அடிப்படையான செயற்கை நுண்ணறிவு அல்காரிதங்களையே அடிப்படையாக எடுத்துக் கொண்டு யாரோ ஒரு சைபர் ஆர்வலர் இந்த ஃபிராடு ஜிபிடி-யை உருவாக்கி விட்டார். அதை டார்க் நெட்டில் அறிமுகமும் செய்துவிட்டார்.

ஃபிராடு ஜிபிடி-யிடம் நீங்கள் போய் எப்படி ஒரு கணினியை ஹேக் செய்வது எனக் கேட்டால் அது அழகாக என்ன செய்ய வேண்டும் என்பதை ஒன்றன் பின் ஒன்றாகப் பட்டியலிடும். ‘நான் ஒருவரை ஏமாற்ற வேண்டும்... அவர்கள் ஏமாறத் தகுந்த மனிதர்களைப் போலவே ஒரு மின்னஞ்சலை உருவாக்கிக் கொடு’ என நீங்கள் கேட்டால் அது உருவாக்கிக் கொடுத்து விடும். அந்த மின்னஞ்சலை நீங்கள் யாருக்கேனும் அனுப்பினால் அவரும் உண்மையான நபர்தான் அனுப்பி இருக்கிறார் என்று ஏமாந்து விட வாய்ப்புள்ளது.

இதைப் பற்றி ஆய்வு செய்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், இது வைரஸ்களை உருவாக்கும் கணினி நிரல்களை எழுதுமா எனத் தெரியவில்லை... ஆனால், அப்படி ஏற்கனவே இருக்கும் நிரல்களை இது எடுத்துக் கொடுக்கிறது என்பதை மட்டும் உறுதி செய்தார்கள்.சாதாரணமாகவே சைபர் கிரிமினல்களை டார்க்நெட்டில் பிடிப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. அவர்கள் தொடர்ந்து உலகம் முழுவதும் பலவிதமான சைபர் தாக்குதல்களை மேற்கொண்டு நிதி குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

அப்படியிருக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அவர்களுக்கு கை கொடுத்தது என்றால் போலீசாரால் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும்.இதனாலேயே பல்வேறு சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு 24 மணி நேரமும் டார்க்நெட்டை சுற்றிச் சுற்றி வலம் வருகிறார்கள். 

 டார்க்நெட்டின் நடவடிக்கைகளைக்  கண்காணிப்பதன் மூலம் மட்டுமே அவர்களால் ஓரளவு சைபர் கிரிமினல்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். மேலும் போலீசார் டார்க்நெட்டைச் சுற்றி உளவு பார்ப்பதன் மூலம் சைபர் கிரிமினல்கள் அண்மைய காலம் என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி ஓரளவு கணிக்க முடியும்.  

இப்போது போலீசாருக்கு இந்த ஃபிராடு ஜிபிடி மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது. இதற்கான தீர்வு இப்போது - இந்த நிமிடம் வரை - யாரிடமும் இல்லை.  
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்ன தெரியுமா..?
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டார்க்நெட்டில் உள்ள சைபர் கிரிமினல்களிடம் போகக்கூடாது என்பதுதான்.

உண்மையாகவே செயற்கை நுண்ணறிவுடன் பொருந்திய சைபர் கிரிமினல்ஸ் என்பது நம் சமூகத்துக்கு இருக்கும் பெரிய சவால். இந்த நொடி வரை விவாதங்கள் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கின்றன. பெரிய அளவு தீர்வுகள் இல்லை. நல்ல தீர்வு கிடைக்கும் என நாம் நம்புவோம்.

(தொடரும்)

- வினோத் ஆறுமுகம்