இது பழிவாங்கும் பேய் கதை கிடையாது!



அரண்மனை 4 சீக்ரெட்ஸ்

பிரம்மாண்ட அரண்மனை, கலர்ஃபுல் கதாநாயகிகள், கலக்கல் காமெடி... இதற்கிடையில் பயமுறுத்தும் பேய் என ‘அரண்மனை’ படத்தின் பாகங்களுக்கு எப்போதும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அந்த வகையில் ‘அரண்மனை 4’ம் பாகம் கொடுக்கப் போகும் உற்சாகத்துடன் வரவேற்கிறார் சுந்தர் சி.

‘அரண்மனை’க்கும் உங்களுக்கும் அப்படி என்ன பந்தம்?

வெற்றிதான் முதல் காரணம். இதில் சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. சாதகம் ஏற்கனவே மக்கள் மனதில் ஆழமாக பதிந்த ஒரு பெயர், நிச்சயம் ஒரு ஆர்வம் இருந்தே தீரும். பாதகம் என்றால் படத்தின் மேலே அதீத எதிர்பார்ப்பு இருக்கும். அதை நிச்சயம் பூர்த்தி செய்தாகணும். முந்தைய பாகத்தின் வியாபாரத்தையும் வெற்றியையும் ஈடு செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கும். ரொம்ப சுலபமா ‘அரண்மனை’ படங்கள் எடுத்திடுறார் சுந்தர் சி அப்படின்னு சொல்லிடுவாங்க.

ஆனால், மற்ற படங்கள் செய்வதைக் காட்டிலும் இதில்தான் அதிக சவால் இருக்கு. அதேபோல் ஒவ்வொரு பிரான்சைஸுக்கும் ஒரு அடிப்படையான ஃபார்முலா இருக்கும். அந்த ஃபார்முலாவையும் விட முடியாது அதே சமயம் முந்தைய பாகங்கள் போலவே அப்படியே டெம்ப்ளேட் ஆக இருந்திடவும் கூடாது.

ரொம்ப காலமா குழந்தைகள், பெண்கள் ஹாரர் பார்க்க மாட்டாங்க என்கிற தவறான எண்ணம் இருந்துச்சு. ஆனால், விடுமுறை நாட்களில் எதாவது படம் பார்க்கலாம் என குடும்பமா உட்கார்ந்தா அவங்க சாய்ஸ் பெரும்பாலும் ஹாரரா இருக்கறதை உணர்ந்தேன். அந்த பாயிண்ட்டில்தான் குடும்ப ஹாரர் கொடுக்கலாம்ன்னு தோணுச்சு.

இந்த 4ம் பாகத்தின் கதை என்ன?

எல்லா கதைகளிலும் ஒரு பேய்... அதில் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம்... அப்படித்தான் இந்த 4ம் பாகத்தின் கதையும். ஆனால், முந்தைய மூன்று பாகங்களுக்கும் இந்த நான்காம் பாகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. முந்தைய பாகங்களின் கதைகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட நபர், அவரின் பழிவாங்கும் பேய் கதையாகத்தான் இருக்கும். 

இது பழிவாங்கும் பேய் கதை கிடையாது. அதற்குப் பதிலாக வேறு ஒரு களத்தில் கதையை உருவாக்கி இருக்கேன். நான்காம் பாகம் இப்ப எடுக்கணும் என்கிற எண்ணமே எனக்கு கிடையாது. ஒரு கதைக்கான சின்ன ஐடியா ஒன்று கிடைத்தது. அதிலிருந்து உருவானதுதான் இந்த நான்காம் பாகம்.

உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?

‘அரண்மனை’ பாகங்களைப் பொருத்தவரை கதாநாயகிகள்தான் படத்தின் மிகப்பெரும் பலம். அந்த வகையில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா இருவருமே இதற்கு முன்பு என்னுடன் இணைந்து வேலை செய்திருக்காங்க. 

ரெண்டு பேருமே என்னுடைய இயக்கத்தையும் கதையையும் நம்பி டெடிகேஷன் உடன் வேலை செய்யும் நடிகைகள்.தமன்னாவை இதுவரையிலும் பார்த்திராத ஒரு கேரக்டரில் இந்தப் படத்தில் பார்க்கலாம். இதுல நான் நடிக்கணும் என்கிற எண்ணமே இல்லை. இயக்கமும், நடிப்பும் ஒரே நேரத்தில் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருக்கணும். ஆனா, இயக்குநராக இருக்கும்போது அப்படி ஒரு ஓரத்தில் உட்கார முடியாது. அதனாலேயே பெரும்பாலும் நான் நடிக்கணும் என யோசிக்கவே மாட்டேன்.ஆனா, நான் நடிக்க வேண்டிய சூழல் அமைஞ்சிடுச்சு. இப்பவும் அப்படித்தான். என்னைத் தவிர சந்தோஷ் பிரதாப் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

‘கே ஜி எஃப்’ படத்தின் வில்லன் ‘கருடன்’ ராம், இந்தப் படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் பண்றார். ‘அரண்மனை’ மூன்றாம் பாகத்தில் கோவை சரளா அம்மாவை நான் ரொம்ப மிஸ் செய்தேன். 

இந்தப் பாகத்தில் சரளாம்மா போர்ஷன் ரொம்ப நல்லா வந்திருக்கு. யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், விடிவி. கணேஷ் கெட்டப்பெல்லாம் போட்டு நடிச்சிருக்கார். சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத்... இப்படி என் படங்களுக்கே உரிய பெரிய நடிகர்கள் பட்டாளம் இந்தப் படத்திலும் இருக்காங்க.

படத்தில் மொத்தம் நாலு பாடல்கள் இருக்கு. திரும்பவும் ஹிப்ஹாப் ஆதி காம்போ கிடைச்சிருக்கு. இடையில் அவர் ஹீரோவாக ரொம்ப பிசியா இருந்தார். திடீரென ஒரு நாள் பார்க்கும் பொழுது ‘‘அரண்மனை 4’ம் பாகம் ஆரம்பிக்கப் போறேன், மியூசிக் செய்றீங்களா’ன்னு கேட்டேன்.‘உங்களுக்கு பண்ணாமலா அண்ணா’னு கேட்டார். பாடல்கள் ரொம்ப நல்லா வந்திருக்கு. அதைக் காட்டிலும் பேக்ரவுண்ட் மியூசிக் பிரம்மாண்டமாக வந்திருக்கு.

என்னுடைய முந்தைய படங்களில் வேலை செய்த இ. கிருஷ்ணசாமி சினிமாட்டோகிராபி, எடிட்டர் ஃபென்னி ஆலிவர் இவரும் என் கூட தொடர்ந்து வேலை செய்கிறவர்தான். பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் அருண்குமார் மற்றும் ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் என் மனைவி குஷ்பு சுந்தர் ரெண்டு பேரும் படத்தை தயாரிச்சிருக்காங்க.  
படத்தின் நாயகன்..?

அரண்மனைதான்! முதல் இரண்டு பாகங்களுக்கும் அரண்மனை செட் போட்டுதான் படமாக்கினோம். மூன்றாம் பாகத்துக்கு குஜராத்தில் இருந்த ஒரு பிரம்மாண்ட அரண்மனையை தேர்வு செய்தோம். பொதுவாகவே என்னுடைய அரண்மனை பேய் படங்களுக்கே உரிய பாழடைந்த அல்லது மர்மமான அரண்மனைகளா இல்லாம கலர்ஃபுல்லா பளிச்சென இருக்கும்.
பேய் படங்களின் பங்களாக்கள் என்றாலே பாழடைந்த, கருப்படைந்த... இப்படித்தான் நாம் பார்க்கிறோம். ஏன் சுத்தமா பளிச்னு இருக்கும் பங்களாவில் ஒரு பேய் கதை சொல்லக் கூடாதுனு முடிவு செய்துதான் இதற்கு முந்தைய பாகங்களின் அரண்மனைகளைத் தேர்வு செய்தேன்.

ஆனா, இந்த 4ம் பாகத்தில் அரண்மனையைப் பார்த்தவுடன் பயம் வரக்கூடிய, கொஞ்சம் கலர் மங்கிய பங்களாவாகவே தேடிப் பிடிச்சோம். அந்த பங்களாவின் தேடல் கேரளாவில் போய் முடிஞ்சது. 85 நாட்கள் படப்பிடிப்பு. இந்தப் படத்தில் கதை மட்டுமல்ல அரண்மனையும் வித்தியாசமா இருக்கும்.

சிரிக்க வைப்பது எப்படிக் கடினமோ அதேபோல் பயமுறுத்துவதும் கடினம்... எந்த அளவிற்கு அது சவாலாக உள்ளது?

ரொம்ப சரியா சொன்னீங்க. ஒரு கைதேர்ந்த நடிகனால் மட்டுமே நகைச்சுவை நடிகனாக இருக்க முடியும். சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அதேபோல பயமுறுத்துவதும் ரொம்பவே கஷ்டம். அதிலும் என் நிலைமை இன்னும் மோசம். சுந்தர் சி படம் என்றாலே காமெடி இருக்கும்... 

இப்படி நினைத்து வருவாங்க. மத்த படங்களில் படம் சீரியஸாக போகும் தருவாயில் ஏதோ ஓர் இடத்தில் எதிர்பாராத காமெடி வரும் பொழுது தன்னை மறந்து சிரிச்சிடுவாங்க. ஆனால், என் படத்தைப் பொருத்தவரை ‘எங்கே சிரிக்க வை பார்க்கலாம்’னு நமக்கு டாஸ்க்கை அதிகப்படுத்துவாங்க. இதற்கிடையில் பயமுறுத்தவும் செய்யணும்.

ஒரு பெரிய காமெடி சீன் முடிஞ்சு சிரிச்சு முடிச்சிருப்பாங்க... அடுத்த மொமண்ட் அவங்களுக்கு ஹாரர் உணர்வு கொடுக்கணும். இல்லை ஹாரர் கொடுத்து முடித்தவுடன் காமெடி கொடுக்கணும். இது இல்லாம ஹாரருக்கு இடையில் காமெடியையும் கலவை செய்யணும்.இது பெரிய டாஸ்க்தான். அதிர்ஷ்டவசமா எனக்கு அமைகிற நடிகர்கள் அந்த வேலையை சுலபமாக்கிடறாங்க. 

என்ன, நிறைய காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக ப்ரமோஷன் வாங்கிட்டாங்க... ஓடிடி மார்க்கெட் பெரிதாகிடுச்சு. அதனால் ஏற்கனவே பழகிய முகங்கள்
அதிகம் தேவைப்படுறதால காமெடி நடிகர்கள் ஹீரோக்களா அடுத்த கட்டம் போக ஆரம்பிச்சிட்டாங்க. இது ஒரு நல்ல முன்னேற்றம். என்னை மாதிரியான இயக்குநர்கள்தான் காமெடி நடிகர்கள் இல்லாமல் பஞ்சத்தில் இருக்கோம்.

நடிகைகளை கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதற்கு விமர்சனங்கள் வருகின்றதே..?

கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. என்னுடைய படங்களில் கவர்ச்சி இருக்கும்; ஆபாசம் நிச்சயம் இருக்காது. காலம் காலமாக சினிமா இப்படித்தான் இருந்திருக்கு. இப்ப நிறைய மாற்றங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. எனினும் கவர்ச்சி என்கிறது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும். கவர்ச்சி ஆபாசமாக மாறும்பொழுது தான் எதிர்மறை விமர்சனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பும்.

என் படத்திற்கு இதுவரை எதிர்ப்புகள் கிளம்பியதே கிடையாது. இன்னும் அந்தக் காலத்து படங்களை எடுத்துப் பார்த்தால் இதைவிட அதிகமாகவே நாயகிகள் கவர்ச்சியாக காண்பிக்கப்பட்டார்கள். இன்னைக்கு சூழல் மாறி இருக்கு. நாட்கள் செல்லச் செல்ல இதற்கான தேவையும் குறையும்போது நிச்சயம் படங்களில் நடிகைகளின் கவர்ச்சியும் முழுமையாகக் குறைஞ்சிடும்.

‘அரண்மனை 5’ உண்டா?

‘ எத்தனையோ படங்கள் இயக்கி இருக்கேன். ஆனால், ‘அரண்மனை’ பாகங்கள் வெளியாகும் போது மட்டும் எனக்குள் ஒரு பயம் உண்டாகிடும். காரணம், அதே வியாபாரத்தையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யணும். ஆனா, பட்ட கஷ்டம் எல்லாம் வெற்றி கிடைக்கும்போது காணாமல் போயிடும். அந்த வகையில் இந்த ‘அரண்மனை 4’ம் பாகத்தை வெளியிடலாமா வேண்டாமா என்பதை உறுதி செய்தது ‘அரண்மனை 3’. அப்படித்தான் இதற்கு முந்தைய பாகங்களும்.

அதேபோல் ‘அரண்மனை 4’தான் அடுத்த பாகங்கள் வரணுமா வேண்டாமா என்பதை உறுதி செய்யும். டிக்கெட் எடுத்துட்டு தியேட்டருக்குள் வரும் ஆடியன்ஸ் தன்னை மறந்து ஒரு இரண்டரை மணி நேரம் சிரிச்சிட்டு வெளியே போகணும். அதை மட்டும்தான் பிரதானமாக நான் யோசிப்பேன். இந்த ‘அரண்மனை 4’ படமும் நிச்சயம் நல்ல பொழுதுபோக்கு திரைப்
படமா இருக்கும்.

ஷாலினி நியூட்டன்