நவீன சிகிச்சையில் வலியில்லா மகப்பேறு!



குழந்தைப் பேறு ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட வேண்டிய ஒரு நிகழ்வு. இன்றைய சூழலில் பெருகி வரும் செயற்கை கருத்தரிப்பு, அறுவை சிகிச்சை, குடும்பத்தினர் நண்பர்கள் கேள்விகள், குழந்தையின் கட்டாயம்... என குழந்தைப்பேறு மகிழ்வான தருணத்தைக் கடந்து கட்டாயமான கடமையாகிக் கொண்டிருக்கிறது. 
இதனாலேயே ஒரு காலத்தில் தேவைக்காக மட்டுமே செய்து கொண்டிருந்த அறுவை சிகிச்சை முறையை குழந்தை பிறப்பின் போது ஏற்படும் வலிக்கு பயந்து பெண்களே சிசேரியன் முறைக்கு ஆர்வம் காட்டத் துவங்கி வருகிறார்கள்.

ஆனால், இப்போதைய நவீன தொழில்நுட்பத்தில் வலியே இல்லாமல் சுகப்பிரசவம் செய்து கொள்ளும் முறையும் வந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கேள்வி பதில் வடிவில் விளக்குகிறார் சென்னை பிரசாந்த் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சம்ஹிதா மோடூரி.

எதனால் இன்று சிசேரியன் அறுவை சிகிச்சை முறை அதிகரித்து விட்டது?

இன்று தனிக்குடித்தனம், வேலைக்குச் செல்லும் கணவன் மனைவி, பெரியவர்கள் அருகில் இல்லாமை... இப்படி பல காரணங்களால் மகப்பேறு குறித்த போதிய ஆலோசனைகளும், நம்பிக்கைகளும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. 

குறிப்பாக முதல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்கள் இந்த மகப்பேறு வலிக்கு அதிகமாகவே பயப்படுகின்றனர். மேலும் சுகப்பிரசவத்தால் உண்டாகும் வாழ்நாள் முழுவதுமான நன்மைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களைத் தயார்படுத்தவும் இன்று பெரியவர்கள் வீடுகளில் இல்லாததும் ஒரு காரணம்.

வலியின் காரணமாக பல பெண்கள் சிசேரியனை தேர்வு செய்கின்றனர் என்ற சூழலில் வலியில்லாத சுகப்பிரசவம் சாத்தியமா?

நிச்சயம் முடியும். நவீன முறையில் அதற்கு நிறையவே சிகிச்சை முறைகள் வந்து விட்டன. வலியில்லா பிரசவத்தில் (Painless delivery ) எபிடோரியல் கொடுப்போம். அதாவது முதுகுத் தண்டைச் சுற்றி மூன்று சுவர்கள் இருக்கும். அதில் வெளிப்புறத்தில் இருப்பதுதான் எபிடோரியல் பகுதி. அதிலே ஊசி மூலம் மயக்க மருந்து கொடுப்போம். பிரசவ வலியைப் பொருத்தவரை நான்கு நிலைகளில் வரும். முதல் நிலையில்தான் மேலிருந்து கீழ்ப் பகுதி வரை வலி செல்லும்.

இந்நிலையில் மகப்பேறியல் நிபுணர் சொன்னபின் மயக்க மருந்து நிபுணரால் எபிடூரல் வலி நிவாரணி வழங்கப்படுகிறது. 4 செமீ கர்ப்பப்பை வாய் திறந்தவுடன் இந்த மருந்து கொடுக்கப்படும்.

இதனால் வலி இல்லாமல் பிரசவத்தை மகிழ்வாக அனுபவிக்கத் துவங்கி விடுவார்கள். இதனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இன்னொரு முறையில் நைட்ரஸ் ஆக்சைடை பிரசவிக்கும் பெண்ணுக்கு மாஸ்க் வழியாக கையாலேயே பிடித்து சுவாசிக்க கொடுப்பதாலும் அவர்களுக்கு வலி தெரியாது. பெரும்பாலும் சிசேரியன் முறையில்தானே முதுகுத்தண்டில் ஊசி போடுவார்கள்...

இந்த ஊசியால் வாழ்நாள் முழுவதும் வலி இருப்பதாக பெண்கள் புகார் சொல்கிறார்களே?

இது ஒரு மாயையான வலிதான். அறுவை சிகிச்சை முறையிலும் சரி, சுகப்பிரசவத்திலும் சரி பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போதுமான அளவிற்கு உடற்பயிற்சியும் தேவையான அளவிற்கு கால்சியம் நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். 

பிரசவத்திற்குப் பின் எலும்புத் தேய்மானம் ஏற்படும். மேலும் குழந்தைக்கு பால் கொடுப்பதால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு அதிகம் ஏற்படும். இதனாலேயே அறுவை சிகிச்சையின்போது முதுகில் போடப்படும் ஊசி காரணமாக வலியை உணர்கிறார்கள். மேலும் சுகப் பிரசவத்திற்காக போடப்படும் ஊசியும் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் ஊசியும் முற்றிலுமாக வேறு வேறு.

சுகப்பிரசவத்தின் போது போடப்படும் ஊசி முதுகுத்தண்டின் எபிடோரியல் பகுதியின் மேல்புறத்தில் போடுவோம். வலி ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும். அறுவை சிகிச்சை ஊசியும் ஓரிரு வாரங்கள் அல்லது மாதத்தில் சரியாகிவிடும். 

இந்த வலி பல நாட்கள் இருப்பதாக உணர்வதற்குக் காரணம் இந்த கால்சியம் குறைபாடும், போதுமான உடற்பயிற்சி இல்லாமையும்தான்.  வலியில்லாமல் குழந்தையை எப்படி உந்தித் தள்ள முடியும்? வலியில்லா பிரசவத்திற்கு பிரசாந்த் மருத்துவமனையில் என்னென்ன நவீன சிகிச்சை முறைகள் உள்ளன?

வலியால்தான் குழந்தையை தாய் வெளியே தள்ளுகிறார் என காலம் காலமாக நம்பப் படுகிறது. ஆனால், உண்மையில் குழந்தைப் பேறுக்கான காலம் வந்தவுடனேயே குழந்தை வெளியேற முற்படத் துவங்கிவிடும். தாயும், மருத்துவர்களும் அந்தக் குழந்தைக்கு உதவி செய்துதான் வெளியே தள்ளுகிறோம். வலியில்லா நிலையில் உந்தித்தள்ளும்போது ஏற்படும் மயக்கங்களும் தவிர்க்கப்படும். தாய் முழுமையாக குழந்தையை வெளியே தள்ளும் வேலையை மட்டும் செய்வார். வலியின் மீது கவனம் செல்லாது.

முதலில் சிறுநீர் மூலம் வீட்டிலேயே சோதனை செய்து கருத்தரிப்பு உறுதி செய்த நாள் முதல் அவர்களை சுகப் பிரசவத்திற்காக தயார்படுத்தத் துவங்கிவிடுவோம். பிரசவத்தின்போது சுகப் பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி வகுப்புகள், உடல் மற்றும் மனதளவில் அவர்களை தயார் படுத்துவதற்கான ஆலோசனைகளும் கொடுப்போம்.

தாய்க்கு ஒருவேளை ஃபிட்ஸ் வந்தால் அல்லது குழந்தை கழுத்தில் கொடி சுற்றினால் அல்லது அவசர காலங்கள் தவிர கூடுமானவரை சுகப் பிரசவத்திற்குத்தான் நாங்கள் முயற்சிப்போம்.
தாய்க்கு மட்டுமின்றி கணவன் மற்றும் தாயின் குடும்பத்தாருக்கும் கூட ஆலோசனையும் பயிற்சிகளும் கொடுப்பதால், குழந்தைப்பேறு என்பது கருத்தரித்த நாள் முதலே ஆனந்தமாக இருக்கும்.       

ஷாலினி நியூட்டன்