வெளிநாட்டில் படித்த சகோதரர்கள் கொரோனாவுக்குப் பின் விவசாயிகளானார்கள்...



இன்று வருட டர்ன் ஓவர் ரூ.7.5 கோடி!

உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட  ஒரு நோய், கொரோனா தொற்று. கொரோனா தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். மட்டுமல்ல, நோய் பரவுவதைத் தடுப்பதற்காக போடப்பட்ட லாக்டவுனாலும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. அதே நேரத்தில் கொரோனா லாக்டவுன் சிலரது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு உதாரணம், ஆயுஷும், ரிஷப்பும்.

சகோதரர்களான ஆயுஷ் மற்றும் ரிஷப்பின் சொந்த ஊர் தில்லி. இவர்களது தந்தையும், தாத்தாவும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக இவர்களது தந்தைக்கு பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்பது கனவு. அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டார். 

ஆனால், அவரால் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்ய முடியவில்லை. தந்தையின் முயற்சியைப் பார்த்த சிறுவர்களான ஆயுஷுக்கும், ரிஷப்பிற்கும் பசுமைக்குடில் மீது தணியாத ஆர்வம் உண்டானது. தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களது சிறு வயது லட்சியமாகவே மாறியது. 2014ம் வருடம் தில்லியிலிருந்து ஆக்ராவிற்குக் குடிபெயர்ந்தது ஆயுஷின் குடும்பம். வருடங்கள் வேகமாக ஓடின.

பிபிஏ படிப்பதற்காக லண்டனுக்குச் சென்றுவிட்டார் ஆயுஷ். துபாயில் மேற்படிப்பு படித்து வந்தார் ரிஷப். சகோதரர்கள் இருவருக்கும் நன்றாகப் படித்து, அது சம்பந்தமான வேலைக்குச் செல்லவேண்டும் அல்லது பிசினஸில் ஈடுபட வேண்டும் என்பதுதான் நோக்கம். விவசாயம் செய்வது குறித்து அவர்கள் யோசிக்கக்கூட இல்லை. அத்துடன் இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இல்லை.

அந்தளவுக்கு லண்டனும், துபாயும் அவர்களைத் தம்வசம் ஈர்த்து வைத்திருந்தன. எதிர்பாராத நேரத்தில் கொரோனா பரவ ஆரம்பித்தது. உலகின் முக்கிய இடங்களில் எல்லாம் லாக்
டவுன் போடப்பட்டது. இந்த லாக்டவுனுக்கு துபாயும், லண்டனும் தப்பிக்கவில்லை. லாக்டவுன் தாக்கத்தால் சகோதரர்களின் வாழ்க்கை வேறு திசைக்கு முற்றிலுமாக மாறியது.
ஆம்; 2020ல் லாக்டவுன் காரணமாக லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார் ஆயுஷ்.

கொரோனா காரணமாக துபாயில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக லாக்டவுன் காலத்தில் துபாயிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப முடியாமல் அங்கேயே சில நாட்கள் சிக்கிக்கொண்டார் ரிஷப். அந்த நாட்களில் மிகுந்த தனிமைக்கு உள்ளானார். ரிஷப்பின் அருகில் தெரிந்தவர்கள் என்று யாருமில்லை. உடனடியாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அதற்கான வழிகள் ஏதுமில்லை.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்ந்தபிறகு, 2020ம் வருடத்தின் இறுதியில் இந்தியாவுக்குத் திரும்பி ஆயுஷுடன் இணைந்தார் ரிஷப். இந்த கொரோனா லாக்டவுன், சகோதரர்களின் மனதை முற்றிலுமாக மாற்றியிருந்தது. இனிமேல் துபாய்க்கோ, லண்டனுக்கோ செல்லப்போவதில்லை; ஆக்ராவிலேயே இருக்கப்போகிறோம்; குடும்பம்தான் முக்கியம் என்று சகோதரர்கள் இருவரும் ஒரு மனதாக முடிவு செய்தனர்.

 ‘‘நானும், ரிஷப்பும் அடிக்கடி பிசினஸ் பற்றி பேசிக்கொள்வோம். அப்போது என்ன மாதிரியான பிசினஸ் செய்யலாம் என்பதுதான் எங்களுடைய முக்கியமான கேள்வியாக இருக்கும். இதற்கு பதிலாக விவசாயம் சார்ந்த பிசினஸை இருவரும் தேர்வு செய்வோம். அப்பாவின் கனவான பசுமைக்குடில் விவசாயத்தை நாம் செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தோம்...’’ என்கிற சகோதரர்களின் விவசாய விருப்பத்தை அவரது குடும்பத்தினர் ஏற்கவில்லை.

கொரோனா சரியான பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்குச் சென்று தங்களின் படிப்பைத் தொடர்வார்கள்; நல்ல வேலைக்குச் செல்வார்கள் என்று குடும்பத்தினர் நினைத்திருந்தனர்.
அதனால், ‘‘இவ்வளவு செலவு பண்ணி வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தது, விவசாயம் செய்யவா...’’ என்று ஆயுஷையும், ரிஷப்பையும் குடும்பத்தினர் சாடினார்கள். இது அவர்களை நிலைகுலைய வைத்தது.

இன்னொரு பக்கம், ‘‘யார் சொல்வதையும் கேட்க வேண்டாம். உங்களுக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்யுங்கள்...’’ என்று தந்தை மட்டுமே ஆயுஷுக்கும், ரிஷப்பிற்கும் ஊக்கமளித்தார்.  

ஆயுஷும், ரிஷப்பும் தங்களிடமிருந்த சேமிப்பு மற்றும் கடன் வாங்கி பசுமைக்குடில் அமைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். தொடக்கத்தில் வெள்ளரிக்காயைப் பயிரிட்டனர். அடுத்த ஐந்து மாதங்களிலே அறுவடை செய்து, சந்தையில் வெள்ளரிக்காயை விற்பனை செய்தனர்.

ஆனால், வெள்ளரிக்காய் விவசாயத்தில் பெரிதாக வருமானம் கிடைக்கவில்லை.  இந்நிலையில் ஆயுஷுக்கு காளான் பிசினஸ் செய்ததைக் குறித்த நினைவு வந்தது. தில்லியில் இருந்தபோது சிறிய அளவில் காளான் வியாபாரம் செய்து வந்திருக்கிறார் ஆயுஷ். அதாவது விவசாயிகளிடமிருந்து காளான்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அதை பேக்கிங் செய்து, கடைகளிலும், தனி நபர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார். இதில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. இதுபோக தில்லியிலும், ஆக்ராவிலும் காளான்களுக்கான தேவை அதிகம் என்பதை அவர் அறிந்திருந்தார். இந்த நினைவு காளான் பக்கம் ஆயுஷைத் திருப்பியது. காளான் விவசாயம் செய்யலாம் என்ற ஆயுஷின் முடிவுக்கு, ரிஷப்பும் பச்சைக்கொடி காட்டினார்.

 2022ம் வருடம் ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு உட்பட 16 வகையான காய்கறிகளையும், 2 ஏக்கர் நிலத்தில் காளானையும் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். ‘குப்தா ஆர்கானிக் ஃபார்ம்ஸ்’ மற்றும் ‘ஏ3ஆர் மஷ்ரூம் ஃபார்ம்ஸ்’ என்று இரண்டு பிராண்டுகளை உருவாக்கி காய்கறிகளையும், காளானையும் விற்பனை செய்தனர்.

ஒரே மாதிரி அளவுள்ள காளான்களைத் தனியாக பேக்கிங் செய்து சூப்பர் மார்க்கெட் முதல் சிறு கடைகள் வரை விநியோகம் செய்தனர். வெவ்வேறு வடிவங்களில் இருக்கும் காளான்களை உணவு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தனர். அத்துடன் தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று மாதத்துக்கு 40 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான காளானை அறுவடை செய்கின்றனர். காய்கறிகளின் உற்பத்தி மாதத்துக்கு 45 ஆயிரம் கிலோவுக்கு எகிறிவிட்டது. ‘குப்தா ஆர்கானிக் ஃபார்மஸ்’ மற்றும் ‘ஏ3ஆர் மஷ்ரூம் ஃபார்ம்ஸி’ன் தினசரி விற்பனை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டிவிட்டது. வருட டர்ன் ஓவர் 7.5 கோடி ரூபாய்.

த.சக்திவேல்