மன்மோகன் சிங் இடத்தில் சோனியா காந்தி!



மாநிலங்களவையில் 33 ஆண்டு சேவையை முடித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரத்தில் ஓய்வு பெற்றிருக்கிறார்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 1991ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். 
அப்போது பிரதமராக இருந்த நரசிம்மராவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங், பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கை, அவர் நிதி அமைச்சராக இருந்தபோதுதான் அமல்படுத்தப்பட்டது. அவர் அமல்படுத்திய பல்வேறு திட்டங்களால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.

இதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை அவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலகட்டத்திலும் அவர் தேர்தலில் நிற்காமல் மாநிலங்களவை எம்பியாக செயல்பட்டு வந்தார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு சென்றார்.

அந்த வகையில் 1991ம் ஆண்டு முதல் இப்போது வரை 33 ஆண்டுகள் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்தச் சூழலில், கடந்த வாரம் அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார்.

அந்த வகையில், சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பாராளுமன்றம் செல்லவிருக்கிறார். ஓய்வு பெறும் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங், 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்குள் நீங்கள் செல்லும்போது, இந்திய யூனியனுக்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பின் மூலம் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

 திமுக சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவு மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜான்சி