சிறுகதை - புன்னகை வணக்கம்



நகரின் மையப்பகுதியில்தான் அந்த மருத்துவ மனை இருந்தது. சென்னையில் இல்லாமல் ஏதோ வெளிமாநிலத்தில் இருப்பது போல் இருந்தது அஷ்வினுக்கு.எல்லோரும் ஏதோ ஒரு மொழி பேசிக்கொண்டு இருந்தார்கள். அனைவரிடமும் பணச் செழுமை தவிர வேறில்லை.அந்த ஆஸ்பத்திரியில்தான் அஷ்வின் அப்பா சங்கரன் படுத்திருந்தார்.

ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி. நிர்வாண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். இவர் லஞ்சம் வாங்கமாட்டேன் என்ற கோவணத்தைக் கட்டிக்கொண்டு வேலைபார்த்தார். அதனாலேயே பலரது வயிற்றெரிச்சலுக்கு ஆளானார்.‘அந்த சங்கரன்தான்யா செக்‌ஷன் இன்சார்ஜ். லஞ்சம் வேண்டாம்னு சொன்னப்பவே தெரியும் இந்தக் காரியம் நடக்காதுன்னு’ பலரின் புலம்பலும் சாபமும் கூட காரணமாயிருக்கலாம், இப்படி விழுந்ததற்கு.

ஒரு குடி, புகை, வெற்றிலை பாக்கு கூட கிடையாது.ஆனால், திடீரென்று இரத்த வாந்தி எடுத்தார்.‘நோய்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. எல்லாம் ஏற்கெனவே கடவுளால் எழுதப்பட்டுவிட்ட விஷயங்கள். கடவுளைப் பொறுத்தவரை இதெல்லாம் ஆக்‌ஷன் ரீப்ளேதான்...’இன்ஷூரன்சை நம்பி எமெர்ஜென்சி அட்மிஷன்.

அஷ்வின் பலவாறு யோசனையில் இருக்கும்போது “இங்க சங்கரன் அட்டெண்டர் யாரு?’’ என்ற குரல்.எவ்வளவு கேட்கப் போகிறார்களோ தெரியவில்லையே.அவ்வப்போது பில்லிற்கு உயிர்த்தண்ணி ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.திரும்பினான்.ஏதோ ஒரு இனம்புரியாத  நறுமணத்துடன் ஸிஸ்டர் நின்று கொண்டிருந்தார்.

‘வினோலியா’ என்றது வெண் ப்ளாஸ்டிக் பட்டை.லேசாகப் புன்னகைத்தார்.பயங்கர எரிச்சல் வந்தது அவனுக்கு.‘என் அப்பா பல நாட்களாக படுத்த படுக்கையாக இருக்கிறார். என்ன சிரிப்பு வேண்டியிருக்கு உனக்கு’ என்று கோபத் தீ கொப்பளிக்க, அடக்கிக்கொண்டு அவரைப் பார்த்து -“நான்தான் சிஸ்டர்...” என்றான்.“பார்மசில போய் இத வாங்கிட்டு வாங்க...’’“ஹாய் அஷ்...” திரும்பினான். சாதனா.

சிவப்பு காட்டன் புடவை, அதே கலரில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், கைகளில் வெண்சங்கை இழைத்துச் செய்யப்பட்ட வளையல்கள் என்று அழகாக நின்று கொண்டிருந்தாள்.
கல்கத்தா அழகுக் கன்னி. காதலோடிய கண்கள்.‘நல்லி’ கடையில் இருந்து ஒரு பொம்மையைக் கிள்ளி எடுத்து வந்த மாதிரி முகத்து ஏரியாவில் முடங்காத புன்னகை.
கவலையையும் எரிச்சலையும் க்ஷண நேரம் மறந்தான்.

கவலைகள், துயர்கள் இவற்றுக்கு நடுவில் இனிமையான பாதை சாதனா, அவனுக்கு!கடந்த ஒரு வாரமாகத்தான் பழக்கம்.“ஹாய் சாதனா...” என்றான்.“என்ன முழிச்சிட்டு இருக்கே... அப்பா எப்படி இருக்கார்?’’ என்பதை ஆங்கிலத்தில் கேட்டாள்.“இருக்கார்...”‘‘கவலைப்படாதே அஷ்... சரியாப் போகும்...”“உன் அப்பா எங்கே? கூடவே வருவாரே? ஸ்டைலா கோட் போட்டுக் கொண்டு..?’’“அப்படீங்கிற?” என்றாள். லேசாகச் சிரித்தாள்.

அவள் ஆயுதமே சிரிப்புதான்..
வெகு லாவகமாக பயன்படுத்துவாள்!

“வா கேண்டீன் போகலாம்...”

“வேண்டாம் சாதனா... அப்பா இப்படி விழுந்ததில் இருந்து எனக்கு பசியே எடுக்கல... நீ போய்ட்டு வா...”“ச்சூ... இதுதான் எனக்குப் பிடிக்காது. மனுசனுக்கு உடம்புக்கு வரது சகஜம் அஷ்..! அதுக்காக உன் உடம்ப கெடுத்துக்கக் கூடாது. உனக்கு அம்மா வேற இல்ல... உன்னை நல்லபடியா பார்த்துட்டு இருக்கிற அப்பாவும் கவலைப் பட்டுட்டு இருப்பார்... நீ சாப்பிடாம இருக்கலாமா... கமான்...” என்றாள் ஆங்கிலத்தில்.

அவன் கையைப் பிடித்து உரிமையோடு இழுத்தாள்.அவனுக்கு கூச்சமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது.“நான் வரல. பார்மஸி போறேன்...”திடீரென அழுகைச்சத்தம்.“டேய் என்னடா ஆச்சு அப்பாவிற்கு... நல்லாத்தானேடா இருந்தார்...”லட்சுமி அத்தை.“அத்தை... அத என்னன்னு சொல்லுவேன்...”அஷ்வினும் விம்ம ஆரம்பிக்க மொழி தெரியாத சாதனாவிற்கோ கோபம் வந்து விட்டது.அழுகைக்கு பாஷை தேவையில்லையே.

“அஷ்வின்... வாட் இஸ் திஸ்! நான்சென்ஸ்... இது ஆஸ்பத்ரி. இப்படி ஆன்ட்டிதான் அழுதாங்கன்னா நீங்களுமா அழணும்..? தைரியம் வேணாம்...”சாதனாவின் குரலைக் கேட்பதைவிட அவள் முகத்தைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டியது அங்கு அமர்ந்திருந்த சொற்ப கும்பல்.“டேய் இது யாருடா... சைனா பொம்மையாட்டம் இருக்கா..? உடம்பல்லாம் பேட்டரி! ஒங்கிட்ட இவ்வளவு உரிமை எடுத்துக்கிறா?’’அத்தை முகவாயில் விரல் வைத்து சாதனாவை வியப்புடன் பார்த்தாள்.

“கமான் அஷ்! ஆன்ட்டி வந்தது நல்லதாப் போயிற்று... யாரும் கூப்பிட்டா அவங்க பார்த்துக்குவாங்க. வா கேண்டீனுக்கு போய் காஃபி குடிச்சுட்டு அப்படியே பார்மஸிக்கு போய் வந்துரலாம்...’’அஷ்வினை பலியாட்டை இழுத்துச் செல்வதுபோல் இழுத்துச் சென்றாள்.கேண்டீனில் செம கூட்டம்.சாதனா அவனை நகரவிடவில்லை.அவளே டோக்கனை வாங்கினாள். இரண்டு கப் காஃபியுடன் வந்தாள்.

அந்தக் காஃபி நுரையில் ஒரு கப்பில் ஆங்கில எழுத்து ‘எஸ்’ இருந்தது. மற்றொரு கப்பில் ‘ஏ’ இருந்தது.அவனுக்கு விளங்கிற்று.ஆனாலும் எரிச்சல் வந்தது. இதையெல்லாம் ரசிக்கும் மூடில் அவன் இல்லை. அவனுடைய எழுத்தான ‘ஏ’ கப்பை வேகமாக இழுத்தான்.“வெயிட் டியர்....” என்று சிரித்தவள், ‘‘நீ ‘எஸ்’ உறியணும். நான் ‘ஏ’ஐ உறிஞ்சுவேனாம். திரில்லா இருக்கும்ல?’’அவனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை.

அடப் பாவி. இரயில் ஸ்னேகம் போல் இது ஆஸ்பத்ரி ஸ்னேகம்டி.பத்து நாள் நட்பு என்னவோ கவலையையும் மீறி சேற்றில் மிதக்கும் தாமரைமொட்டு போல் அழகாகத்தானிருந்தது.
ஆனால் இதென்ன ‘ரொமாண்டிக்’ விளையாட்டு?அதுக்கு இதுவா நேரம்?அங்கு அப்பாவிற்கு திரவ உணவு டிரிப்ஸ் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறது.

இங்கு ஃப்ரென்ச் காஃபி வாழுதா?இவளுக்கு கவலையே கிடையாதா?

“அஷ்... உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா... எப்படிடா நாம ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்? கிளம்பறதுக்குள்ள நம்ம கல்யாணம் ஆகிரும்னு நினைக்கிறேன்!” சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தாள். கண்ணாடிக் கோப்பைகள் தரையில் ஒரே நேரத்தில் விழுந்து சிதறிய மாதிரி.அந்த ‘எஸ்’ காஃபியை மெள்ள உறிஞ்சினான்.உறிஞ்சிய மறுவினாடியே அந்த ஆஸ்பத்ரி கேண்டீனே ஒரு பெரிய பூங்காவனமாக மாறியது.

ஊழியர்கள் இறக்கை கட்டிய வெள்ளுடை தேவதைகளாக மாறி சாதனாவையும் இவனையும் சுற்றி ‘லல்லல்லா’ பாட ஆரம்பிக்க, ‘அடச்சீ. இதென்ன கற்பனை... நானென்ன பாரதிராஜாவா...’‘நங்’ என்று கோப்பையை வைத்தான். காஃபி தளும்பி மேஜையில் லேசாகச் சிதறியது.“ஏய்... கொஞ்சம்  கவலையில்லாமல் இரு அஷ்வின். அப்பாவிற்குச் சரியாகிடும்பா...”அவள் அவனுக்கு ஆறுதல் சொல்ல முயன்றாள்.

அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை.சாதனா அவனுக்காக பார்மஸியில் மருந்து வாங்கி வந்தாள்.இவள் ஏன் இப்படி நட்பு பாராட்டுகிறாள் என்று தெரியவில்லை. இது எந்தவகையான நட்பு என்றும் தெரியவில்லை. அதே சமயம் எல்லோருடனும் அவள்  இப்படி இருப்பது மாதிரியும் தெரியவில்லை.அவள் அப்பாவிற்கு ஏதோ பிரச்னைக்காக வந்திருக்கிறாள். மனுஷிக்கு அதைப்பற்றி ஒரு கவலை இருக்கிறதா!அத்தை கோபமாகக் கேட்டாள்.‘‘ஏண்டா யாருடா அவ... உன்னையே சுத்திச் சுத்தி வரா... கடுகெண்ண நாத்தம் குடல புடுங்குது.

நீயும் பல்ல பல்ல காண்பிச்சுட்டு நிக்கிறே...”“எனக்கே தெரியல அத்த! அவ அப்பா இங்க ஏதோ வியாதின்னு அட்மிட் ஆகியிருக்காரு... கல்கத்தாகாரியாம்...”‘‘அதான பார்த்தேன்... சங்கு வளையும் மோதிரமும் போட்டிருக்கும்போதே யோசித்தேன்... சரி... சரி... நீ ரொம்ப அசடு மாதிரி இருக்காதே... போ போய் அப்பாவைக் கவனி. இந்தா சஷ்டி கவசம்... அப்பப்போ படி... அப்பாவிற்கு...’’“ஹாய் மேன்... ஹவ் ஆர் யூ...”சர்க்கார்தான்.

சாதனா அப்பா. வழக்கம் போல் கோட் சூட். முகத்தில் புன்னகை.அவனுக்கு எரிச்சலும் ஆத்திரமும் ஒருசேர வந்தன. இந்த மனுஷனுக்கு உடம்புக்கு அப்படி என்னதான் பிரச்சனை. பார்த்தா திண்ணுனு பாலிவுட் ஸ்டாராட்டம் இருக்கார். எப்ப பார்த்தாலும் இளிப்பு.வந்து பல நாட்கள் ஆகி விட்டதாக லிஃப்ட் ஆபரேட்டர் சொன்னார்.
“அப்பா எப்படி இருக்கார்..?” என்றார் ஆங்கிலத்தில்.

“ஃபைன் சார்...”“சாதனா சொன்னா... ரொம்பக் கவலைப்படறியாமே அப்பாவை நினைத்து..? நத்திங் மேன்... ஜஸ்ட் அக்யூட் அல்சர். சரியாயிரும்...’’அவர் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.‘அடப்போய்யா. உனக்கு என்னய்யா தெரியும் என் அப்பாவைப் பற்றி. என்னை ராப்பகலா கண்விழிச்சு வளர்த்தார்யா. எனக்கு பிடிச்ச உணவு, பிடிச்ச உடை... பிடிச்ச படிப்பு... எல்லாம் அவரால்யா. இப்ப இப்படி கிடக்கார்யா...’அவர் போவதை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அத்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கீழே லைப்ரரிக்கு போய்விட்டு வரலாம் என்று மெயின்வாசலைக் கடந்தவன் அங்கு ஓர் உயரமான ஆள் டைட் குர்தா பைஜாமா அணிந்து குனிந்து நிமிர்ந்து புன்னகை வணக்கம் சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்து செம காண்டாகி, ‘‘யோவ். உனக்கு ஏதாவது இருக்கா... வரவங்க ஒவ்வொருத்தரும் ஒரு டென்ஷன்ல இரு பாங்க. நீ வேற ஏன்யா பல்ல காட்டி கும்பிட்டுட்டு இருக்கே...’’ காதுபடவே திட்டும்போது சாதனா வந்து கொண்டிருந்தாள்.கொதித்துப் போய்விட்டாள்.

“உனக்கு கொஞ்சமாவது இருக்கா... நீ என்ன லூசா?

அவன் கடமைய செய்யறான். நான் வந்ததில் இருந்து பார்க்கிறேன்... ஏன் இப்படி இருக்க? ஆஸ்பத்ரில எத்தனை உயிர்கள் காப்பாற்றப் படுகிறது தெரியுமா?
வாசல்ல இருக்கிற அந்த வழிவிடு வினாயகர் கோயில்ல போய்ப் பார். சிதறு தேங்காய்கள் உடையும் சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. உனக்கு உன் அப்பா... கவலை.கவலைப்படு வேணாங்கல. ஆனா, சந்தோஷமா இருப்பவங்களப் பார்த்து ஏன் பொறாமைப் படறே? மகிழ்ச்சியோட மகிமை தெரியுமா உனக்கு?”

பொறிந்து தள்ளிக் கொண்டிருக்கும் போது சர்க்கார் வந்தார் சிரித்துக் கொண்டே வந்தார். ‘‘பாரு என் அப்பாவை. கடந்த நாலு மாசமா இருக்கோம்... அப்பா கோட்டைக் கழட்டுங்கப்பா...”
சற்று ஓரமாக அவரை கோபமாக அழைத்துச் சென்றாள். அந்தக் கோபம் அவன் மேல் வந்தது.அவர் கோட்டை மெள்ள  கழற்றினார். அதற்கு அவள் உதவி புரிந்தாள்.

‘பார்... அவர் வலது கையை...’அதைப் பார்த்த அஷ்வின் தலை பயங்கரமாகச் சுற்றியது.கண்கள் நிலை குத்தின.அவரது வலது கை அவர் வயிற்றிற்குள் இருந்தது!
வயிற்றைக் கீறி உள்ளே வைத்திருந்தார்கள்.

“யெஸ் அஷ்வின்! பயப்படாதே! அப்பா மிகப் பெரிய ஓவியர். தேசிய அளவில் விருதுகள் வாங்கியவர். ஓவியம் வரைந்த கை விபத்தில் சிக்கி விட்டது. தொடையில் இருந்து தோல் எடுத்து கையில் சுற்றி அது வளர வயிற்றினுள் வைக்கப்பட்டிருக்கிறது... தோல் வளர்ந்ததும் மீண்டும் வயிற்றைக் கீறி அவர் வலது கை வெளியே எடுக்கப்
படும்...”“கடவுளே...”“பார்த்தேல்ல? ஆஸ்பத்ரி என்றால் பலதும் இருக்கும். மனதை நீ தைரியமாய் வெச்சிக்கணும். அதுக்கு தேவை புன்னகை!
அழுகையல்ல...’’அஷ்வின் வாயடைத்து நின்றான்.

கூசிப்போனான்.எத்தனை உண்மை!இவ்வளவு பெரிய பிரச்னை, மன வேதனையை வைத்துக் கொண்டா சாதனாவும் சர்க்காரும் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள்?
தன் செய்கையை நினைத்து வருத்தப்பட்டான்.திரும்பிப் பார்த்தான்.

என்ன நினைத்தானோ?

அந்த உயரமான ஆசாமி வாசலில் நுழைபவர்களைப் பார்த்து  குனிந்து புன்னகை வணக்கம் போட்டு வரவேற்றுக் கொண்டிருந்தான்.ஓடிச் சென்று அந்த ஆளிடம் போய் கை குலுக்கிவிட்டு வந்தான்!அவனுக்கு இப்பொழுதே அப்பா எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டதாகத் தோன்றியது!மறுநாள் ரிசப்ஷனில் சர்க்காரும் சாதனாவும் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள்!அதைக் கேட்டதும் ‘சொல்லாமல் போய்விட்டாளே’ என்று கோபம் வரவில்லை!புன்னகைதான் துளிர்த்தது.சாதனாவைப் போல!

 - கே.ஜி.ஜவஹர்