6 வருடங்களில் 45% பெண்கள் சிங்கிளாக இருப்பார்கள்!



பிரபல சர்வே தரும் அதிர்ச்சி !

2030ம் ஆண்டில் 22 முதல் 44 வயதுள்ள பெண்களில் 45 சதவீதத்தினர் சிங்கிள்களாக இருப்பார்களாம். கனவு, வாழ்க்கை லட்சியம், தனக்கான அடையாளம், சமூகத்தில் அங்கீகாரம் இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆண்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. அனைவருக்கும் கல்வி என்கிற நிலை இன்று அடைபட்டுக் கிடந்த பெண்களையும் சிந்திக்கத் தூண்டிவிட்டது.

திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றாலும் கூட தனக்கென தனி வருமானம், அங்கீகாரம் வேண்டும் என்கிற ரீதியில் இன்று சுயதொழில் செய்து சாதித்து வரும் பெண்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பத்து பெண்கள் இணைந்த ஒரு குழு இருக்கிறது எனில் அதில் குறைந்தபட்சம் மூன்று பெண்களாவது திருமணம் ஆகி பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் அல்லது திருமணமே ஆகாமல் 30களைக் கடந்தும் தனக்கான கரியரை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள்.

இன்று பெண்கள் தம்மு டைய சுய முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி விட்டார்கள். இந்த நிலை நீடித்தால் இன்னும் ஆறு வருடங்களில் சுமார் 45% பெண்கள் சிங்கிள்களாக இருப்பார்கள் எனவும் அவர்கள் வயது 25 முதல் 44 வயது உள்ளவர்களாக இருப்பார்கள் எனவும் அமெரிக்காவின் பிரபல சர்வே தளமான மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை எச்சரித்திருக்கிறது.

1937ம் ஆண்டிலிருந்து கார்ப்பரேட், பொருளாதாரம், மனித வாழ்க்கை, நாடுகளின் வளர்ச்சி, உலக மதிப்பீடுகள் என இருக்கும் அத்தனை துறையிலும் ஆய்வுகள் மற்றும் சிறப்புக் கட்டுரைகளை வெளியிடுவது... உலகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஆலோசனை கட்டுரைகள் ஆய்வு அறிக்கைகள் கொடுப்பது... என மோர்கன் ஸ்டான்லி அமெரிக்காவின் பிரபல தளமாக இயங்கி வருகிறது. தற்போது இவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த சர்வே முடிவுதான் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

ஏற்கனவே பெண் குழந்தைகள் பிறப்பதற்கான X மற்றும் ஆண் குழந்தைகள் பிறப்பதற்கான Y என்னும் இரண்டு குரோமோசோம்களில் Y குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு Y குரோமோசோம்களின் எண்ணிக்கை முற்றிலுமாகக் குறைந்து ஆண்களின் பிறப்பே இல்லாமல் போகும் எனவும் எச்சரித்திருக்கிறது பிரபல மரபணு அறிவியலாளர் மற்றும் விரிவுரையாளர் ஜெனிபர் ஏ மார்ஷல் கிரேவ்ஸின் ஆய்வுக் குழு.

இந்நிலையில் மிகச் சில வருடங்களிலேயே, அதாவது மோர்கன் ஸ்டான்லியின் ஆய்வறிக்கையின்படி வெறும் ஆறு வருடங்களில் சிங்கிள் பெண்களின் எண்ணிக்கை 45% ஐ தொடப் போகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

*பெண் என்கிற மதிப்பீடு

பெண் பெண்ணாக இருப்பதை எப்படி ஆண்கள் விரும்புகிறார்களோ அப்படி பெண்ணும், தான் பெண்ணாக கொண்டாடப்படுவதை விரும்புபவள். அப்படி இருக்கும்பொழுது திருமணம் ஆகிவிட்டது, குழந்தை பெற்று விட்டாய் என்பதற்காகவே சமூகத்தில் அதுவரை தனக்கு கிடைத்துக் கொண்டிருந்த தனித்துவமும், சிறப்புத் தன்மையும் இல்லாமல் போகும் பொழுது அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலை வேலை செய்யும் இடத்தில் துவங்கி பொதுவெளிகளிலும் தொடர்கிறது. அதாவது திருமணமாகாத பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.ஆனால், ஆண்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்கள் ஆண்கள் என்கிற நிலையிலிருந்து  எந்த மாற்றத்தையும் பெண்கள் கொடுப்பதில்லை. குணரீதியாகவும் , திறமை  ரீதியாகவும்தான் பெண்கள் ஆண்களை மதிப்பிடுகிறார்கள்.

பெண்களின் நிலை வேறு. சினிமா நடிகையே ஆனாலும் கூட திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டால் ‘நீ இப்படித்தான் இருக்கவேண்டும்... நீ இப்படி இருப்பதுதான் உனது கடமை’ என்கிற ரீதியில் பார்ப்பதாலேயே பல பெண்கள் திருமணத்திற்கு விருப்பம் காட்ட மறுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் வேண்டாம் என்கிற நிலை மாறி, பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம், பின்னர் விவாகரத்து என முடிவு எடுத்துக் கொள்கிறார்கள்.  

*உடல் ஆரோக்கியம்

திருமணமாகி குழந்தைகள் பெற்றுக் கொள்ளும்பொழுது என்னதான் அவர்கள் ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி என கட்டுக்கோப்பாக இருந்தாலும் உடல் மாற்றங்களைத் தவிர்க்க இயலாது. இதனால் வேலை மற்றும் தனக்கான அங்கீகாரத்தை நோக்கி முன்னேறும் பாதையில் தடை உருவாவதாக நினைக்கிறார்கள்.

குறிப்பாக பால் கொடுக்கும் தாய்மார்களின் கால்ஷியம் அளவு குறையும் தருவாயில் அவர்களின் எலும்பு, நகம், முடி... என இவை அனைத்திலும் குறைபாடுகள் ஏற்படத்துவங்கி நாளடைவில் சாதாரணமாக ஆண்கள் செய்யும் வேலைகளைக் கூட அவர்கள் செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். வேலையிலும் உற்பத்தி அல்லது கற்பனைத் திறன் சக்தி குறைந்து மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனை ஒரு காரணமாகக் கொண்டே பல பெண்கள் இன்று குழந்தைப் பேறுகளையும் கூட தவிர்க்கத் துவங்கிவிட்டனர்.

*குடும்ப அமைப்பு

உலகின் பல நாடுகளில் பெரும்பாலும் திருமணத்திற்குப்பின் பெண்கள் தனது கணவனின் வீட்டிற்குத்தான் வரவேண்டும். இதனால் அவளது பெற்றோருக்கு அவள் ஒரே மகளாக இருந்தால் அவர்களை யார் பார்ப்பது என்னும் நிலை உருவாகிவிடுகிறது. பெண்ணைப் பெற்றவர்களும் தன் மகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவதால் அவர்களின் வயதான காலத்திற்கான சேமிப்பை யோசிப்பதில்லை. 

இன்னமும் வரதட்சணை வாங்கும் கலாசாரம் இருப்பதும் இன்னொரு காரணம். படிக்கவும் வைத்து தனக்கு வரதட்சணையும் கொடுத்து அனுப்பி வைக்கும் தன் பெற்றோருக்கு தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற நிலையில் பல பெண்களின் வாழ்க்கை இருமனதாகவே செல்கிறது.

இதுவும் ஒரு காரணமாக மாற பெண்கள் அதிகபட்சம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஆனால், ஆண், தான் ஆணாக இருப்பதாலேயே தன் பெற்றோருடன்தான் இருப்பேன் என்று தீர்க்கமாக முடிவெடுக்கிறான். பெண்களின் எதிர்ப்பு தவிடு பொடியாகிறது. பின்னர், ‘ஏன் நான் உன்னிடம் போராடி வாழ்க்கையைக் கழிக்க வேண்டும். என் சம்பாத்தியம், என் வாழ்க்கை, என் பெற்றோர் என இருந்துவிடுகிறேன்’ என சிங்கிளாக இருக்க முடிவு செய்துவிடுகிறார்கள்.

குழந்தைகள் என்பது சமீப காலமாகவே செலவுகள் பட்டியலில்தான் இடம் பெறுகின்றன என்கையில் சம்பாதித்து சேர்த்து என்றோ பிறக்கப் போகும் ஒரு குழந்தைக்காக என் இன்றைய வாழ்க்கையை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என பெண்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள்.

*தீர்வு என்ன?

ஆண்களும், ஆண்களைப் பெற்றவர்களும் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் இது. இன்னமும் என் வீடு, என் அம்மா அப்பா என்கிற நிலையைக் கடந்து ‘உனக்காக அவள் வருகிறாள்; அவளுக்காக நீ செல்ல வேண்டும்’ என்கிற நிலைக்கு வந்தால் மட்டுமே சமூகம் தழைக்கும். 

என்னதான் ஆராய்ச்சிகள் அறிவியல் முன்னேற்றப் பாதையில் சென்றாலும் இன்றும் மனித இனம் தழைக்கும் பொறுப்பு பெண்களிடம் இருப்பதுதான் அவர்களின் முதல் வலிமை. ஏற்கனவே ஆண்களால் பெண்களுக்கு உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ஆபத்துகளும் இணைந்து பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும்பொழுது திருமணம் என்கிற பந்தமும் அவர்களுக்கு வெறும் அழுத்தமாக இருக்கக் கூடாது.

எப்படி ஆண்களுக்கு அவர்களைப் பெற்றவர்கள் முக்கியமோ அதே அளவு பெண்களுக்கும் அவர்களைப் பெற்றவர்கள் முக்கியம்தான். அவரவர் பெற்றோரைஅவரவர் சம்பாத்தியத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற உடன்படிக்கை மட்டுமே இப்போதைக்கு சரியான தீர்வு. வரதட்சணை என்கிற பெயரில் பெண் வீட்டாரை நசுக்காமல் அவர்கள் சேமிப்பை பெண்ணின் பெற்றோரிடமே விட்டுவிட்டால் பெண்களைப் பெற்றவர்கள் எந்த இடையூறும் செய்யாமல் அவர்களின் வயோதிக காலத்தில் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

இன்று பெண்களும் படிக்கத் துவங்கி விட்டார்கள். வேலை செய்யும் திறன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அத்தனை கணக்கெடுப்புகளின்படி ஆண்களை விட பெண்களின் வேலை நேரமும் சரி உற்பத்தியும் சரி அதிகமாகவே இருக்கிறது.எனவே, ஆண்கள்தான் தங்களின் நிலை உணர்ந்து சமநிலை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.

*உலகப் பொருளாதாரத்தில் எப்படி மாற்றங்கள் நிகழும்?

குழந்தைகளையும், பெண்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் உலகப் பொருளாதாரம் வடிவமைக்கப்படுகின்றது. ஏன், இயற்கைச் சீற்றம் என்றாலும் கூட முதலில் காப்பாற்றப்படுபவர்கள் குழந்தைகளும், பெண்களும்தான். காரணம் அவர்கள்தான் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி மற்றும் மனித இனத்தைப் பாதுகாக்கும் கருவி.

மனித இனத்தில் மட்டுமல்ல இந்த உலகில் வாழ்வதற்கு பிறந்த அத்தனை உயிரினமும் இயற்கைப் பேரழிவு எனில் முதலில் தங்கள் இனத்தில் இருக்கும் பெண்களையும், குழந்தைகளையும்தான் மீட்டெடுக்கும். எதிர்காலத்தில் சிங்கிள் பெண்களின் எண்ணிக்கை அதிகமானால் உடன் பாதிக்கப்படுவது குழந்தைகளின் பிறப்பும்தான். குழந்தைகளின் பிறப்பு குறையும் தருவாயில் ஒரு நாட்டின் உற்பத்தியும் குறையத் துவங்கும், பொருளாதாரம் பின் தங்கும்.

இன்று ஜப்பானில் குழந்தை பெற்றுக் கொள்ள ஆணுக்கும் விடுமுறை கொடுத்து சம்பளமும் கொடுப்பதற்கு காரணம் இதுதான். பெண்களுக்கான உரிமையும் இடமும் ஆணுக்கு நிகராக பல நாடுகளில் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னமும் இந்த ஆபத்தை உணராமல் இந்தியா போன்ற நாடுகள் கலாசாரம், பண்பாடு என விவாதத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது.

உலகப் பொருளாதாரம் மட்டுமல்ல உலகில் மனித இனமும் தழைக்க வேண்டுமெனில் ஈகோ மறந்து ஆணும் பெண்ணும் சரிசமமாக இணைந்தால் மட்டுமே மனித இனம் தப்பிக்கும் என எச்சரிக்கிறது மோர்கன் ஸ்டான்லி ஆய்வு அறிக்கை.

இந்த சிங்கிள் பெண்களால் தற்சமயம் பொருளாதார மாற்றங்களில் சில நல்ல நிகழ்வும் நடந்திருக்கிறது. அதாவது 1980களில் ஆண்கள் ஒரு ரூபாய் சம்பாதித்த அதே வேளையில் பெண்கள் வெறும் 0.07 காசுகளே சம்பாதித்தனர். அதுவே 1990ம் ஆண்டிலிருந்து தொழிலாளர் பங்கேற்பில் பெண் - ஆண் விகிதம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. இதனால் வருமானம் ஈட்டும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

விளைவு- ஆண்கள் சம்பாதிக்கும் ஒரு ரூபாய்க்கு பெண்கள் இன்று 0.75 காசுகள் சம்பாதிக்கிறார்கள். ஆண் - பெண் பணப்பரிவர்த்தனை நிலையில் 2030ம் ஆண்டை நெருங்கும்போது இது இன்னும் அதிகரிக்கும். இதனை ‘The Rise of the SHEconomy’ என வரையறுக்கிறார்கள். புத்தியுள்ள ஆண்கள் உலகைப் பிழைக்க வைப்பார்கள் என நம்புவோமாக!

ஷாலினி நியூட்டன்