7 லட்சம் கூடுகளைக் கட்டிய மனிதர்!
நீங்கள் வசிக்கும் நகர்ப்பகுதிகளில் எங்கேயாவது பறவையின் கூட்டைப் பார்த்தால், அந்த கூட்டுக்கும், ராகேஷ் காத்ரிக்கும் தொடர்பு இருக்கலாம். ஆம்; கடந்த 14 வருடங்களாக இந்தியாவின் நகர்ப் பகுதிகளில் பறவைகள் வந்து தங்குவதற்காக செயற்கையான கூடுகளைக் கட்டி வருகிறார் ராகேஷ்.  சணல், கயிறு, தேங்காய் தொட்டிகளைக் கொண்டு இந்த கூடுகளைக் கட்டுகிறார். நகர்ப்புறங்களில் இருக்கும் வீடுகள், மரங்கள் மற்றும் பறவைகள் வரும் இடங்களை மையமாக வைத்து கூடுகளை அமைக்கிறார் ராகேஷ்.
இதுவரை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 7.3 லட்சம் கூடுகளை அமைத்திருக்கிறார். ‘இந்தியாவின் கூடு மனிதன்’ என்று அவரை மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
‘‘சிட்டுக்குருவிகளின் இழப்பு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கே கேடு விளைவிக்கக்கூடியது. சிட்டுக்குருவிகளின் இழப்புக்கு செல்போன் டவர்கள் முக்கிய காரணமாக இருந்தாலும், அவற்றின் கூடுகளை அழித்ததும், கூடுகளின் பற்றாக்குறையும் சிட்டுக்குருவிகள் அழிந்து வர இன்னொரு காரணம்...’’ என்கின்றனர் நிபுணர்கள். இந்நிலையில் ராகேஷின் செயல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
யார் இந்த ராகேஷ் காத்ரி?
தில்லியில் பிறந்து, வளர்ந்தவர், ராகேஷ். சிறு வயதில் மற்ற குழந்தைகளைப் போலவே சிட்டுக்குருவிகளைப் பிடித்து, விளையாடுவது ராகேஷின் வழக்கம். குறிப்பாக அவருடைய வீட்டில் இருந்த மின்விசிறிக்கு மேல் பகுதியில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. மின்விசிறியை போட்டால் அந்தக் கூட்டுக்குப் பாதிப்பு ஏற்படும்.  அதனால் ராகேஷின் தாத்தா மின்விசிறியைப் போட வேண்டாம் என்று அவரை எச்சரிக்கை செய்வார். ஆனால், மின்விசிறியை போட்டு, தாத்தாவிடம் திட்டு வாங்குவார் ராகேஷ். சிட்டுக்குருவியின் சிறப்புகளைப் பற்றியும், பறவைகளின் வாழ்விடங்கள் பற்றியும் ராகேஷுக்குச் சொல்லிக் கொடுத்து, அவருக்குப் பறவைகளின் மீதான அக்கறையும், காதலையும் வளர்த்தார் தாத்தா. பறவைகளின் மீதான பார்வையே ராகேஷுக்கு மாறியது. அதற்குப் பிறகு சிட்டுக்குருவி கூடு கட்டியிருக்கும் அந்த மின்விசிறியை அவர் போடவே இல்லை.ராகேஷின் வீட்டுக்கு அருகில் ஒரு தோட்டம் இருந்தது. அந்த இடம் சிறுவன் ராகேஷுக்கு மிகவும் பிடித்தமானது. அந்த தோட்டத்தில் எப்போதும் சிட்டுக்குருவிகளும், அணில்களும் நிறைந்திருக்கும். அவற்றைப் பார்த்தாலே போதும், ராகேஷுக்கு மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும்.
காலங்கள் வேகமாக மாறின. பள்ளிமுடிந்து, கல்லூரிக்குச் சென்றார் ராகேஷ். அவர் வசித்து வந்த கிராமப் பகுதி நகரமாக மாறியது. கல்லூரிப் படிப்பும் முடிந்து, வேலைக்குச் சென்றார். சிட்டுக்குருவியை மட்டுமல்லாமல், பறவைகளைப் பார்ப்பதும் அரிதானது. நகரங்களும், கான்கிரீட் வீடுகளும் பறவைகளின் வாழ்விடங்களைப் பறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அவற்றை அழித்துவிட்டன; துரத்திவிட்டன என்பதை உணர்ந்தார் ராகேஷ்.
இந்நிலையில் 2008ம் வருடம் புதிதாக ஒரு அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்றார். அவரது அலுவலகத்தின் ஒரு மூலையில் பறவையின் கூடு ஒன்று இருந்தது. அதில் பறவைகளும் வசித்தன. அந்தக் கூட்டில் பறவைகளைப் பார்த்ததும் ராகேஷுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
கூடு இருந்தால் பறவைகள் வந்து தங்கும் என்பதை உணர்ந்த ராகேஷ், 2008ம் வருடத்திலிருந்து கூடுகளை அமைக்கத் தொடங்கினார். தில்லியில் உள்ள மயூர் விஹார் எனும் பகுதியில் முதல் கூட்டை அமைத்தார். ‘‘சிட்டுக்குருவிகள் தானாகவே கூட்டை அமைத்துக்கொள்ளும். நீ அமைத்த கூட்டில் அவை எப்படி வந்து தங்கும்..?’’ என்று முதல் கூட்டுக்கே விமர்சனங்கள் எழுந்தன.
உற்சாகமாக கூட்டை அமைத்த ராகேஷ் மனதுக்குள் சந்தேகங்கள் எழுந்தன. ‘‘கூடுகள் அமைப்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதே. ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகளிடமிருந்து நாம் பறித்துக்கொண்டதைத்தான், நீ இப்போது திருப்பிக்கொடுக்கிறாய்.
நிச்சயமாக அந்த கூட்டுக்கு சிட்டுக்குருவிகள் வரும்...’’ என்று ஒரு தோட்டக்காரர் ராகேஷிடம் சொல்லியிருக்கிறார்.
தோட்டக்காரரின் வார்த்தைகள் தான் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு. ராகேஷ் தொடந்து செயல்பட உதவியிருக்கிறது. அடுத்த சில தினங்களில் அந்த சந்தேகங்கள் எல்லாம் காணாமல் போயின. தோட்டக்காரர் சொன்னது நிஜமானது.
ஆம்; ராகேஷ் அமைத்த கூட்டில் சிட்டுக்குருவிகளின் கீச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பித்தன.முதலில் பெரு நகரங்களை இலக்காக வைத்து இயங்க ஆரம்பித்தார். தன்னால் மட்டுமே எல்லா இடங்களிலும் கூடுகளை அமைக்க முடியாது என்ற எதார்த்தம் அவருக்குப் புரிந்திருந்தது.
தன்னைப் போலவே சூழலியலில் ஆர்வமுடையவர்களை இணைத்து, ஓர் அமைப்பை உருவாக்கினார். சிட்டுக்குருவிகள் அழிந்து வரும் பெங்களூரு, சென்னை, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் கூடுகளை அமைத்தார். பல பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களின் மத்தியில் பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு கூடுகள் அமைப்பது பற்றியும் கற்றுக்கொடுத்தார். ராகேஷைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளில் கூடுகளை அமைத்துக்கொடுக்கும்படி ராகேஷை நாடினார்கள். அந்தளவுக்கு அவரது செயல்பாட்டுக்கு வரவேற்பு கிடைத்தது.
‘‘சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவைச் சேர்ந்த 85 வயதான மகப்பேறு மருத்துவர் ஒருவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘நான் நிறைய பெண்களுக்குப் பிரசவம் பார்த்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால், பறவைகளுக்காக ஒரு வீடு அமைத்தபோது கிடைத்த மகிழ்ச்சி அலாதியானது’ என்று குறிப்பிட்டிருந்தார்...’’ என்கிற ராகேஷ் அமைத்த கூடுகளில் மேக்பை, ராபின், சிட்டுக்குருவிகள், புல்புல் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வசிக்கின்றன.
‘‘இந்த நகரம் நம்மைவிட, அதிகமாக பறவைகளுக்குத்தான் சொந்தமானது...’’ என்கிற ராகேஷ், ‘நேஷனல் சயின்ஸ் விருது’, ‘இண்டர்நேஷனல் கிரீன் ஆப்பிள் விருது’, ‘இயர்த் டே நெட்வொர்க் ஸ்டார்’, ‘இயர்த் சாம்பியன்’... என சுற்றுச்சூழல் சார்ந்த நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பறவைகளுக்காக அதிக கூடுகளை அமைத்து, ‘லிம்கா’வின் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார். இப்போது அவரது வயது 63.
த.சக்திவேல்
|