புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்..?
உலகம் முழுவதும் அறிந்த ஒரு நபர், போப் ஆண்டவர். விளையாட்டுப் பிரபலங்களையோ அல்லது சினிமா, அரசியல் பிரபலங்களையோ குறிப்பிட்ட நாட்டில் உள்ளவர்களுக்கும், அவர்களின் ரசிகர்களுக்கும் மட்டுமே தெரியும். ஆனால், போப்பை மட்டுமே உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் அறிவார்கள். காரணம், உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரே இவர்தான்.

மட்டுமல்ல, கலாசார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் 130 கோடிக்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் மீதும், கத்தோலிக்கர் அல்லாதவர்கள் மீதும் செல்வாக்கு செலுத்துபவராகவும் இருக்கிறார் போப். அரசாங்கத்துக்குப் பிறகு கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்து இயங்கிவரும் பெரும் தொண்டு நிறுவனங்களின் தலைவரும் இவர்தான். வாடிகன் நகரத்தின் தலைவரும் இவரே. கடந்த 2000 வருடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட போப் ஆண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
சமீபத்தில் 266வது போப்பான ஃப்ரான்சிஸ் மரணமடைந்தார். இதுவரை போப் பதவியிலிருந்த சிறந்தவர்களைப் பட்டியலிட்டால் ஃபிரான்சிஸுக்கும் நிச்சயமாக ஓர் இடம் இருக்கும். அந்தளவுக்கு மக்களுடன் பிணைந்திருந்தார்; நிறைய சேவைகளையும் செய்திருக்கிறார். அவரைப் பற்றிய சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அது தனிக்கதை.

ஒரு பக்கம் போப் ஃப்ரான்சிஸின் மரணத்துக்கு இரங்கல் கூட்டங்கள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புதிய போப் யார் என்பதற்கான ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆனால், புதிதாக போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக பல நடைமுறைகள் உள்ளன. போப் இறந்துவிட்டாலோ அல்லது பதவியை ராஜினாமா செய்துவிட்டாலோ போப் பதவிக்கான இருக்கை காலியாகும். இப்படி இருக்கை காலியான 15 முதல் 20 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி, புதிய போப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது முதல் விதி.
இவர்தான் அடுத்த அதிபர், அடுத்த பிரதமர் என்று நாட்டின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களைக் கூட கணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இவர்தான் அடுத்த போப் என்று முன்கூட்டியே கணிக்க முடியாத ஒரு தேர்வு முறை இது. இதுவே இதன் தனிச்சிறப்பு. அதனால்தான் போப் தேர்வு முறையை ஒரு தேர்தல் போல இல்லாமல் ஓர் ஆன்மிக நிகழ்வு போலவே மக்கள் பார்க்கின்றனர்.
அரசியல் தேர்தல்களைப் போல குறைந்த வருட இடைவெளியில் நடப்பதில்லை என்பதால் போப் தேர்வு முறை உலகின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வாடிகனில் உள்ள போப்பின் இருப்பிடமான சிஸ்டைன் தேவாலயத்தில் இந்த தேர்தல் நடக்கும். கத்தோலிக்க தேவாலயத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் கார்டினல்களுக்கு மட்டுமே புதிய போப்பைத் தேர்வு செய்வதற்கான வாக்குரிமை உள்ளது.
போப்புடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களாகவும், அவருக்கு ஆலோசனை சொல்கிறவர்களாகவும் கார்டினல்கள் இருப்பார்கள். கடந்த ஏப்ரல் 21ம் தேதி வரையிலான நிலவரப்படி, உலகமெங்கும் 252 கார்டினல்கள் இருக்கின்றனர். இவர்களில் 135 பேருக்கு மட்டுமே புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கைச் செலுத்தும் உரிமை உள்ளது. ஆம்; கார்டினல்களுக்கும் வாக்களிப்பதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
தேர்தல் நடக்கும் இடம் ஓர் ரகசியம் போல முழுமையாக அடைக்கப்பட்டுவிடும். உள்ளே நடப்பது எதுவும் கசியாது. முக்கியமாக போன் அல்லது கம்ப்யூட்டர் என எதன் வழியாகவும் கார்டினல்களால் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாது.
முக்கியமாக 80 வயதுக்குக் குறைவானவர்களாக கார்டினல்கள் இருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைப்பவர்தான் புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். போப்பிற்காக போட்டியிடுபவர் இரண்டு பங்கு வாக்குகள் பெறும் வரை திரும்பத் திரும்ப வாக்கெடுப்புகள் நடந்துகொண்டே இருக்கும்.
இந்த தேர்தல் முடிந்த பிறகு வாக்குச் சீட்டை எரித்து கரும்புகையோ அல்லது வெண்புகையோ வெளியேற்றப்படும். வெண் புகை வெளியேறினால் புதிய போப் தேர்வாகிவிட்டார் என்று அர்த்தம்.
கரும்புகை என்றால் போப் தேர்வாகவில்லை என்று அர்த்தம். இதற்குப் பிறகும் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவரிடம் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கையை வைப்பார்கள். அந்த கோரிக்கையை அவர் ஏற்ற பிறகே, உலகுக்கு புதிய போப்பைப் பற்றி அறிவிப்பு வரும். மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதிலிருந்து தனது பணியை ஆரம்பிப்பார் புதிய போப்.
த.சக்திவேல்
|