தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மற்ற மாநிலங்களுடன் அல்ல... மற்ற நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும்!
சமீபத்தில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்து அசத்தியிருக்கிறது. கடந்த 2024 - 25 நிதியாண்டில் 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.  இது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாகும். கடந்த 2023 - 24 நிதியாண்டில் இதே மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 9.56 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்திருந்தது.  அப்போது கர்நாடகா, உத்தரபிரதேசம் மாநிலங்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. அதாவது கடந்த 2023 - 24 நிதியாண்டில் கர்நாடகா 4.60 பில்லியன் டாலராகவும், உத்தரபிரதேசம் 4.46 பில்லியன் டாலராகவும் இருந்தன. அப்போதே தமிழ்நாடு 9.56 பில்லியன் டாலராக ஜொலித்தது. இப்போது தமிழ்நாடு 14.65 பில்லியன் டாலராக மேலும் உயர்ந்து புதிய சாதனையைச் செய்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 41.23%.
 அதுமட்டுமல்ல. தமிழ்நாடு கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் மின்னணு ஏற்றுமதியில் 53% அதிகமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனை பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.இத்துடன் அவர், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இது சாத்தியமாகி இருக்கிறது. விரைவில் மின்னணு ஏற்றுமதியில் 100 பில்லியன் டாலர் என்கிற இலக்கை தமிழகம் எட்டும்’ எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
 பொதுவாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு, ‘டெட்ராய்ட் ஆஃப் ஆசியா’ என்ற பெயருண்டு. இதற்குக் காரணம், இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் முன்னணியில் இருப்பதுதான்.இப்போது அரசின் முன்னெடுப்பால் தமிழகம் மின்னணு துறையிலும் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது. ஆசிய அளவிலும் மின்னணு உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணியில் உருவாக்கும் முயற்சியில் அரசு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
 அப்படியாக அமெரிக்க நிறுவனங்களான சிஸ்கோ, ஜேபில், தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான், இந்தியாவின் டாடா உள்ளிட்ட பல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன.2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் கனவோடு செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுக்கு இதுவொரு மைல்கல் எனலாம்.
‘‘தொழில்துறையில் நல்லதொரு முன்னேற்றம் இது. ஏற்கனவே தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைகளுக்கான ஹப்பாக விளங்கி வருகிறது. இப்போது மின்னணு துறையிலும் இந்திய அளவில் முன்னணியில் வந்திருக்கிறது...’’ என உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் பொருளாதார பேராசிரியரும், நிபுணருமான ஜோதி சிவஞானம்.
‘‘ஆட்டோமொபைல் உற்பத்தியின்போதே மின்னணு பொருட்களின் முக்கியத்துவமும் புரிந்திருந்தது. தவிர, மின்னணு பொருட்களின் தேவையும் அதிகரித்ததால் அதன் உற்பத்தியை அரசு அதிகரித்தது. இப்போது பல நிறுவனங்களின் முதலீடுகளைக் கொண்டுவந்து இன்னும் அதிகரித்து வருகிறது.
இதனால் முதல்கட்டமாக நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகம் பெருகும். ஏற்றுமதி அதிகரிக்கும். அந்நிய செலவாணி உயரும். தவிர, வேலை, வருமானம் உள்ளிட்டவை தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க பயன்படும்...’’ என்கிறவரிடம், ‘தமிழ்நாட்டில் மின்னணு துறை வளர்ந்து வருவதற்கு என்ன காரணம்’ என்றோம். ‘‘தற்போதைய தமிழ்நாடு அரசு தொழில் துறையில் நிறைய கவனம் செலுத்தி வருகிறது. இதில் ஒன்றாக மின்னணு துறை அபரிமிதமான வளர்ச்சியை எட்டி வருகிறது. இங்கே மின்னணு நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்ய முன்வருவதற்குக் காரணம் நம்முடைய சூழல் காரணிகள்தான். முதலாவதாகத் தமிழகத்தில் வேகமாக வேலையை முடிக்கும் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.
இவர்கள் எல்லா துறைகளிலும் தங்கள் பங்களிப்பை சிறப்புடன் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சேவைத் துறையும் அதிகம் உள்ளது. High-end Manufacturing எனச் சொல்லப்படுகிற உயர்நிலை உற்பத்தியும் அதிகமாக இருக்கிறது.
உயர்நிலை உற்பத்தி என்பது மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உயர்தரமான பொருட்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்துவது. நம்மிடம் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் இருப்பதால் இந்த உயர்நிலை உற்பத்தியில் சிறப்பாக இருக்கிறோம். அதனால், உற்பத்தி துறையில் இந்திய அளவில் ஒப்பிடும்போது நாம் ஜிஎஸ்டிபியில் (GSDP) அதிகமாகவே உள்ளோம். ஜிஎஸ்டிபி என்பது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.
தற்போது இந்தியாவின் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தி துறையின் பங்கு என்பது 17%. இது கடந்த பத்து ஆண்டுகளாகவே அப்படியேதான் உள்ளது.
மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் வழியாக இதை அதிகப்படுத்த வேண்டும் என நினைத்தார்கள். தனியார் நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை எல்லாம் கொடுத்தார்கள்.
அப்படியாக உற்பத்தியின் பங்கை ஜிடிபியில் உயர்த்த கடந்த பத்து ஆண்டுகளாகவே பல முயற்சிகளை எடுத்தார்கள். இருந்தபோதும் அது இந்திய அளவில் 17 சதவீதத்தைத் தாண்டவில்லை.
ஆனால், தமிழகத்தின் ஜிஎஸ்டிபியில் உற்பத்தி துறையின் பங்கு 25% உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் திறன்வாய்ந்த தொழிலாளர்கள். திறன்வாய்ந்த தொழிலாளர்கள் இங்கே இருக்கக் காரணம் 1960களில் இருந்தே திராவிட கழக அரசுகள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்காக நிறைய செலவுகள் செய்து வருவதே! இன்றும் அரசு நிறைய செலவு செய்கிறது. அதனால், உயர்கல்வியில், முக்கியமாக பொறியியல் கல்வி பெற்ற திறன்வாய்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை நம்மிடம் சிறப்பாக உள்ளது. இதனால் வளர்ச்சியும் அதிகமாக இருக்கிறது. இதில் மற்றொரு விஷயம் நம் தொழிலாளர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்களாகவும் உள்ளனர். நமது இருமொழிக் கொள்கையினால் பாரம்பரியமாகவே நமக்கு இது வந்துகொண்டிருக்கிறது. அந்த அட்வான்டேஜ் நமக்கு கைகொடுக்கிறது.
அதேபோல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும்போது அவர்களைவிட குறைவான சம்பளத்திற்கு வேலை செய்ய நம்மவர்கள் தயாராகவும் உள்ளனர். இதனால், தமிழகத்தில் நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்புகின்றன. இரண்டாவதாக நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இங்கே சிறப்பாக உள்ளன.
மூன்றாவதாக அரசு ப்ரோ ஆக்டிவ்வாக முன்னெடுத்து செயல்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தமிழகத்தின் தலைமையை எளிதாக அணுக முடியவில்லை என்கிற பிரச்னை நிறுவனங்களுக்கு இருந்தன. இப்போது அது முற்றிலும் மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதல்வரே நேரடியாக வெளிநாட்டுக்குச் சென்று நிறுவனங்களை ஊக்கப்படுத்தி முதலீடுகளை ஈர்க்கும் வழிவகைகளைச் செய்கிறார். இது சம்பந்தமான துறைகளை மேம்படுத்தியும், துறைகளுக்குச் சிறந்த செயலாளர்களை நியமித்தும், தொழில்துறைக்கு இளம் அமைச்சர்களைக் கொண்டு வந்தும் பல முன்னெடுப்புகளை அரசு செய்துள்ளது.
நாங்கள் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் எனச் சொல்லி தமிழகத்தில் தொழில்வளத்தை முன்னேற்றுகின்றனர். இதனால், இயற்கையாகவே வெளிப்படையான முதலீடுகள் நிறைய வருகின்றன. இதுபோன்ற முதலீடுகள் வரும்போது அதுசார்ந்த மற்ற முதலீடுகளும் அதாவது துணை நிறுவன முதலீடுகளும் உள்ளே நிறைய வரும்.
உதாரணத்திற்கு ஆட்டோமொபைல் துறை இருக்கிறது என்றால் அதுசம்பந்தமான ஸ்பேர் பார்ட்ஸ் நிறுவனங்கள் நிறைய வளர்ந்துள்ளன. அதுபோல் இனி மின்னணு சார்ந்துள்ள மற்ற நிறுவனங்களும் உருவாகி வேகமெடுக்கும். நான்காவதாக குளோபல் கேபபிலிட்டி சென்டர் எனும் உலகளாவிய திறன் மையங்களைத் தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிறது. இதில் சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் அலுவலகங்களை திறக்கின்றனர்.
அவர்களின் பேக் ஆஃபீஸ் வேலைகளைக்கூட இங்குள்ள திறன்வாய்ந்த தொழிலாளர்கள் மூலம் செய்கின்றனர். சாஃப்ட்வேரோ, தொழில்நுட்பமோ, உற்பத்தியோ எல்லாவற்றின் சேவைத் துறைக்கும் சப்போர்ட் தருவது இந்தத் திறன் மையங்கள்தான். இந்த சூழலால் அனைத்து நிறுவனங்களாலும் சிறப்பாக செயல்படமுடிகிறது...’’ என்கிறவர், தற்போது செமி கண்டக்டர் உற்பத்தியும் பெரியளவில் எழுச்சி கண்டு வருவதாகக் குறிப்பிடுகிறார்.
‘‘இன்றைக்கு மின்னணு உற்பத்தி கருவிகள் எல்லாம் மேம்பட்டதாக மாறிவிட்டன. மின்னணுவில் அடிப்படையான, அத்தியாவசியமான ஒரு பொருள் செமி கண்டக்டர். இதில் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.
தற்போது இதன் உற்பத்தியையும் தமிழகம் பெரியளவில் தொடங்கியிருக்கிறது. முன்பு மைக்ரோ சிப்கள் அமெரிக்காவிலிருந்து வாங்க வேண்டும். ஆனால், இப்போது சீனாவே அமெரிக்காவைவிட மலிவு விலையில் உற்பத்தி செய்கிறது. நாமும் அதை நோக்கிச் செல்கிறோம். டாடா ஆப்பிள் ஐபோன் உற்பத்தி எல்லாம் தமிழகத்தில் நிறுவி இருக்கிறார்கள். இங்கே உற்பத்தி செய்யப்பட்டவை எல்லாம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நம்முடைய ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவை எடுத்துக்கொள்ளும்போது பாரம்பரியமாகவே மும்பை நிதித் தலைநகரமாகவும் வணிக மையமாகவும் திகழ்கிறது. ஆனால், தமிழகத்தைப் போன்ற உயர்நிலை உற்பத்தி அங்கே அவ்வளவாகக் கிடையாது.
இதேபோல் குஜராத்திலும் கெமிக்கல் உள்ளிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட செக்டர்கள்தான் அதிகம். ஆனால், தமிழகத்தில்தான் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், எஞ்சினியரிங் பொருட்கள், கெமிக்கல்ஸ், லெதர், டெக்ஸ்டைல் என பலதரப்பட்ட தொழில்நிறுவனங்கள் உள்ளன. இப்போது மின்னணு துறை எழுச்சி பெற்று வருகிறது.
தற்போது தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தைவிட அதிகமாக உள்ளது. அதனால், சமீபத்திய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் சொன்னதுபோல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மற்ற நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டியிருக்கிறது...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் பேராசிரியர் ஜோதி சிவஞானம்.
பேராச்சி கண்ணன்
|