காஷ்மீர்ல தாக்குதல் நடந்த இடத்துல தான் ஷூட்டிங் நடந்தது...



இந்திய சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தில் முதலிடம் பாலிவுட் எனில் இரண்டாம் இடம் டோலிவுட்டிற்குதான். ஆனால், அங்கும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்துடன் தன்னிச்சையாக பாக்ஸ் ஆபிஸை கலக்கி வருகிறார் நேச்சுரல் ஸ்டார் நானி. 
தமிழில் ‘நான் ஈ’, ‘வெப்பம்’ தவிர நேரடி தமிழ் படங்கள் இல்லை என்றாலும் இவர் நடித்த தெலுங்கு படங்களே இங்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை சந்தித்திருக்கின்றன. இதோ இப்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ‘ஹிட்: த தேர்ட் கேஸ்’ திரைப்படம் கொடுக்க இருக்கிறார்.

தயாரிப்பாளராக ‘கோர்ட்’ தெலுங்கு திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள்... எப்படி இந்தக் கதையைத் தேர்வு செய்தீர்கள்..?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. மொழி கடந்து ஒரு படம் ஜெயிக்க நல்ல கதை, திரைக்கதை இருந்தாலே போதும்னு திரும்பவும் நிரூபணம் ஆகியிருக்கு. இத்தனைக்கும் அந்தப் படத்தில் பெரிய ஸ்டார் நடிகர்கள் கிடையாது. 
ஆனால், இந்தியா முழுக்க அந்தப் படத்தைப் பற்றி பேசிட்டு இருக்காங்க. போக்ஸோ என்கிற மைனர் வழக்கு வந்தபிறகு ஆண்கள் மேல பதியப்பட்ட போலி வழக்குகள் மட்டும் இந்திய நீதிமன்றங்களில் அவ்வளவு இருக்கு. அதை எடுத்து பேசணும்னு நினைச்சேன். அதுதான் ‘கோர்ட்’ (Court vs A Nobody) திரைப்படம்.

வால்போஸ்டர் சினிமாஸ் தயாரிப்பு..?

எத்தனை டீசர், டிரெய்லர் வரட்டும்... ஒரு படத்துக்கு முதல் அறிமுகம் இந்த வால் போஸ்டர்ஸ்தான். ஸ்கூல், காலேஜ், வேலைக்கு இப்படி கடந்து போகும்போது நமக்கு சின்ன பொழுதுபோக்காகவே இருக்கும் விஷயம் சினிமா வால் போஸ்டர்கள்தான். என்னவோ மத்த ப்ரொமோஷன்களில் இல்லாத ஒரு சர்ப்ரைஸ் இந்த வால் போஸ்டர்கள்ல இருக்கும். நாம் பார்த்து அனுபவிச்ச சினிமா வால்போஸ்டர் பெயரையே என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு வைக்கணும்னு வச்சுட்டேன்.

என்னால் நடிக்க முடியாத கதைகள்ல மற்ற நடிகர்களை வைத்து படம் தயாரிக்கணும் என்கிற நோக்கத்தில் உருவானதுதான் ‘வால் போஸ்டர்ஸ் சினிமாஸ்’. குறிப்பா என்னுடைய தயாரிப்பானாலும் இந்த ஹிட் படங்களின் சீரிஸ்களில் நான் நடிக்கவே கூடாதுன்னுதான் உறுதியா இருந்தேன். ஆனால், இயக்குநர் சைலேஷ் கொலனு இந்தக் கதைக்கு நான் தேவை அப்படின்னு கறாரா சொல்லிட்டார்.

‘ஹிட்: த தேர்ட் கேஸ்’..?

முதல் இரண்டு படங்கள் நீங்க பார்க்கவே இல்லைனாலும் இந்தப் படம் நல்லாவே புரியும். முதல்  இரண்டு படங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனால், ஹிட் போலீஸ் யுனிவர்சில் இந்தப் படமும் அடக்கம். முதல் இரண்டு படங்களில் யார் என்கிற கேள்வி படம் முழுக்க இருக்கும். இந்தப் படத்தில் எப்படி அப்படிங்கற கேள்விய மையமாக வைத்துதான் கதை நகரும். அதாவது குற்றவாளி யாருன்னு தெரிஞ்சிடும். ஆனா, எப்படி அந்தக் குற்றம் நடந்துச்சு என்கிற கேள்விக்கான பதிலாக இருக்கும்.

எஸ்பி அர்ஜுன் சர்க்கார்... முதல் போலீஸ் திரைப்படம்... அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?

ரொம்ப வருஷமாவே போலீஸ் கதைகள் வரும்போது எல்லாம் எஸ்கேப் ஆகிட்டே இருந்தேன். இப்ப முதல் காவல்துறை அதிகாரி கேரக்டர். அர்ஜுன் சர்க்கார் கேரக்டர் கொஞ்சம் கோவக்காரன்தான். ஆனால், அவனுடைய கோபம் நியாயமா இருக்கும். போலீஸ் அதிகாரி என்பதற்காக படம் முழுக்க யூனிஃபார்மிலும் வரமாட்டேன். கொஞ்சம் வித்தியாசமான ஆக்‌ஷன் கதையா இருக்கும்.

அதீத வன்முறை இருக்கும் போலவே... இவ்வளவு வன்முறை அவசியமா ?

இரண்டு விதமான வயலன்ஸ் இருக்கு. ஒன்னு முகத்தை சுழிக்க வைத்து கண்ண மூட வச்சுடும். இன்னொரு விதமான வயலன்ஸ் இருக்கு. திரையில் தீ பறக்கும்னு சொல்லுவாங்க... அதுதான் கமர்ஷியல் ஆக்‌ஷன். அந்த வயலன்ஸ் நியாயமா இருக்கும். அப்படிப்பட்ட வயலன்ஸ்தான் இந்தப் படத்தில் நீங்க பார்ப்பீங்க.

நீங்க படப்பிடிப்பு நடத்தின அதே காஷ்மீர் பகுதியில் தற்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருக்கே..?

ரொம்ப சுலபமா சினிமாவில் தீவிரவாதிகளை அழிக்கிற ஹீரோக்களை காண்பிக்கிறோம். ஆனால், ரியல் வாழ்க்கை அப்படி கிடையாது. இன்னைக்கு நிறைய அப்பாவி மக்களை இழந்திருக்கோம். நாங்க எஸ்கேப் ஆகிட்டோம்னு நினைக்கிறதா இல்ல இனிமே அந்த இடத்தில் திரும்ப எந்தப் படப்பிடிப்பும் நடத்த முடியாதுனு வருத்தப்படவா தெரியல.

‘அமரன்’ திரைப்படம் கூட அங்கேதான் ஷூட் செய்தாங்க. அடுத்து குறைந்தபட்சம் ஒரு அஞ்சு வருஷம் ஆகும் இயல்புநிலை திரும்ப. ரொம்ப அழகான சுற்றுலாத்தலமா மாறி இருந்துச்சு. குழந்தைகள் கூட ரத்தம் சிந்தற வீடியோக்கள் பார்க்கும்பொழுது மனசு ரொம்ப கனமா இருக்கு.

இத பத்தி என்ன சொன்னாலும் ஆறுதல் அடையவே முடியாது. சீக்கிரம் போர் இல்லாம ஏதாவது நல்ல தீர்வு வரணும். சினிமாவில் வயலன்ஸ் இருந்தா ரசிக்கலாம், கை தட்டலாம். ஆனால், ரியல் வாழ்க்கையில் அது வலி.

உங்க நாயகி நிதி ஷெட்டி பற்றி சொல்லுங்க... மற்ற நடிகர்கள் யார் யார் இருக்காங்க ?

ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் ‘கே.ஜி.எஃப்’ கேர்ள் இப்போ எனக்கு ஹீரோயின். அதே ‘கே.ஜி.எஃப்’ லக் எனக்கும் கிடைச்சா ரொம்ப நல்லா இருக்கும். கிடைக்கும் அத்தனை படங்கள்லயும் நடிக்கும் நடிகை கிடையாது. பொறுமையா கதை கேட்டுதான் ஓகே சொன்னாங்க. இந்தக் கதைக்கு நிறைய நடிகர்கள் தேவைப்படலை. சூர்யா னிவாஸ், பிராமஜி இப்படி அளவான நடிகர்கள்தான் படத்தில் இருப்பாங்க.

தயாரிப்பாளர் மற்றும் நடிகராக உங்க அடுத்தடுத்த படங்கள்..?

தயாரிப்பாளர் மற்றும் நடிகராக அடுத்து ‘ஹிட்: 3’ ரிலீஸ் ஆகப்போகுது. பார்த்துட்டு சொல்லுங்க. தொடர்ந்து என்னுடைய நடிப்பில் ‘த பேரடைஸ்’ திரைப்படம் பிரம்மாண்டமா உருவாகிட்டு இருக்கு. தயாரிப்பில் சில இளம் இயக்குநர்கள் கதை சொல்லி இருக்காங்க. கூடிய சீக்கிரம் அறிவிப்பு வரும்.

ஷாலினி நியூட்டன்