களைகட்டும் Refurbished ஸ்மார்ட்போன் சந்தை!
சமீபகாலமாக இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களின் சந்தையைவிட, புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருவதாக ஆய்வுகளின் வழியே தெரிய வந்துள்ளது.  குறிப்பாக, விற்பனை செய்யப்படும் ஐந்து ஸ்மார்ட்போன்களில் ஒன்று புதுப்பிக்கப்பட்டது என்கின்றன தகவல்கள். இதில் ஸ்மார்ட்போன்கள் என்றில்லை. கேஜெட்டுகள், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் அடங்கும். இவற்றின் விலை உயர்வால் இதன் புதுப்பிக்கப்பட்ட சந்தையும் ஏற்றம் கண்டுவருவதாக தெரிவிக்கிறது மற்றொரு ஆய்வு. ஸ்மார்ட்போன்கள் அதிகம்பேர் பயன்படுத்துவதால் அதன் ஏற்றம் பெரியளவில் தெரிய வருகிறது. அதென்ன புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தை?

இதனை ஆங்கிலத்தில் Refurbished என்கின்றனர். அதாவது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஃப்ரெஷ்ஷாக சந்தைகளில் விற்கப்படுவது. இது ஒரு டெக்னிக்கல் வார்த்தையென சொல்லப்படுகிறது. ‘இவை பயன்படுத்தப்பட்ட பொருள் எனக் குறிப்பிடப்பட்டாலும் அப்படியானதல்ல’ என்கின்றனர் புதுப்பிக்கப்பட்ட சந்தையில் ஜொலிக்கும் நிறுவனங்கள்.
காரணம், இவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு, தேவையான திருத்தங்கள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு குவாலிட்டியாகவே சந்தைகளுக்குக் கொண்டு வரப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர் அவர்கள்.
இதனால் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பது புதிய ஸ்மார்ட்போன் போல அதே தரம் மற்றும் செயல்திறனுடன் இருக்கும் என்கின்றனர். அதனாலேயே புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தை, புதிய ஸ்மார்ட்போன் சந்தையைவிட ஏற்றம் கண்டு வருகின்றது.குறிப்பாக கொரோனா காலத்திற்கு பிறகே இந்தச் சந்தை வேகமெடுத்துள்ளது.
2021ம் ஆண்டு 12 சதவீதமாக இருந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தை 2022ம் ஆண்டில் 14 சதவீதமாகவும், 2023ம் ஆண்டில் 17 - 18 சதவீதமாகவும் உயர்ந்து கடந்த 2024ம் ஆண்டு 19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வுக்கு முதல் காரணம் கொரோனா காலத்தில் பலரிடமும் பணத்தட்டுப்பாடு இருந்ததுதான். இதனால் விலைகுறைவான அதேநேரம் தரமான ஸ்மார்ட்போன் வாங்க பலரும் முற்பட்டனர். அது புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தது.குறிப்பாக ஆறு மாதமே பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஒன்று 40 சதவீத அளவில் குறைந்த விலைக்கு அதே தரத்துடன கிடைக்கிறது என்பதால் அதனை மக்கள் நாடிச் செல்ல ஆரம்பித்தனர். அது ஐபோன்கள் வாங்கும் அளவிற்குச் சென்றது.
இன்று பலர் பயன்படுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட ஐபோன்களை அதிகளவில் உபயோகிக்கும் போக்கு வந்துள்ளதற்கு புதுப்பிக்கப்பட்ட சந்தையே காரணம். இதுகுறித்து பேசும் நிபுணர்கள், ‘இப்போது பலரும் 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அடிப்படை ஸ்மார்ட்போன் மாடலைவிட 4ஜி கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கவே முன்னுரிமை அளிக்கின்றனர்.
ஆனால், 20 ஆயிரம் ரூபாய் உள்ள புதிய 4ஜி மாடல் ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக, அதே மாடலை 15 ஆயிரம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக வாங்குகின்றனர்.
இதற்கென Cashify, ControlZ, Grest உள்ளிட்ட பல்வேறு தளங்களும் வந்துவிட்டன. இவை தரமாக, சிறந்த செயல்திறனுள்ள ஸ்மார்ட்போன்களைத் தருவதால் அதனை நோக்கி மக்கள் நகர்கின்றனர்’ எனத் தரவுகளுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேபோல் மொபைல் நிறுவனங்களும் விற்பனை நிறுவனங்களிடம் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை தரத்துடன் விற்பனைக்குக் கொண்டு வரும்படி கேட்டுக் கொள்கின்றன. இந்த ஆதரவினால், இதன் ஒட்டுமொத்த சந்தையும் மேலெழுந்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை 19 சதவீதமாக அதிகரித்தபோது புது ஸ்மார்ட்போன்களின் விற்பனை 9 சதவீதமாக குறைந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் குறைந்துவருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இதனால் வரும் 2026ம் ஆண்டு இந்த ஸ்மார்ட்போன் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சந்தையின் மதிப்பு மட்டும் 11 பில்லியன் டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 93 ஆயிரத்து 687 கோடி ரூபாயாக இருக்குமென கணித்துள்ளது ரெட்ஸீர் ஸ்டிராட்டஜி கன்சல்டன்ஸ் என்கிற நிறுவனம்.
பேராச்சி கண்ணன்
|