டீன் ஏஜ் டுடே! எச்சரிக்கை ரிப்போர்ட்



ஆமாம். சர்வதேச அளவில் மட்டுமல்ல... இந்திய அளவிலும் இதுதான் இன்று ஹாட் டாபிக்.பதின்வயதினருக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன? அதனைச் சரிசெய்வது எப்படி?உளவியல் மருத்துவர்கள் முதல் சமூகவியல் ஆய்வாளர்கள் வரை இன்று இந்த சப்ஜெக்ட்டைத் தான் அக்கு  வேறு ஆணி  வேறாக அலசிக் கொண்டிருக்கிறார்கள். 
பல பிரச்னைகள் காரணமாக இளம் வயதினர் பலரும் இன்று யாருடனும் மனம்விட்டு சரியாகப் பேசுவதில்லை. வீட்டில் தனித்தே இருக்கின்றனர். ஒருவிதக் குழப்பத்துடனும் நம்பிக்கையின்றியும் காணப்படுகின்றனர். மனநிலையில் அதிக மாற்றங்கள் ஏற்படும் வயது என்பதால் மனரீதியாகவும் பல பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்று குழந்தைகள், பதின்வயதினர் மன அழுத்தத்தில் இருப்பது முதல் தவறான குற்றச்செயல்களில் ஈடுபடுவது வரை நடக்கிறது.எனவே, டீன்-ஏஜ் எனும் இந்த பதின்ம வயது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் கடின காலம்தான். 
இந்தக் காலகட்டத்தில் அவர்கள் குழப்பம், தன்னைப் பற்றிய சந்தேகங்கள், மன அழுத்தம், சமூகத்தில் பல எதிர்பார்ப்புகள் என உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.

பதின்ம வயதினருக்கு இன்று மொபைல்போன்தான் பொழுதுபோக்கே. எனவே இளம் வயதினர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி நிபுணர்கள் பலரும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மனச்சோர்வு மற்றும் பதற்றம்

எரிச்சல், தூக்கத்தில் மாற்றம், பொழுதுபோக்குகளில் ஆர்வமின்மை ஆகியவையே இதற்கான சிம்ப்டம்ஸ். இதற்கு எதிர்மறை எண்ணங்களைப் போக்கவைக்கும் சிபிடி எனும் அறிவுசார்ந்த சிகிச்சை அளிக்கலாம். குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசுவதற்கு பெற்றோருக்கு பயிற்சி அளிக்கலாம்.

ஆபத்தான நடத்தைகள்

ரகசியமாக யாருக்கும் தெரியாமல் இருப்பது, திடீர் நண்பர்கள் குழு, உடலில் காயங்கள்... ஆகியவை இதற்கான அறிகுறிகள்.உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய டிபிடி (DBT) எனும் சிகிச்சையை இதற்கு அளிக்கலாம். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனைச் சரிசெய்ய பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உளவியல் சிகிச்சை தரலாம்.

பள்ளிக்குச் செல்ல மறுப்பது மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலை

வகுப்புகளைத் தவிர்ப்பது, தேர்வினால் ஏற்படும் பீதி... எல்லாம் இந்த வகைதான். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்துடன் இணைந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுப்பதன் காரணம் என்னவென்று கண்டறிந்து சரிசெய்ய பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக பள்ளிகளில் யாரேனும் தொந்தரவு செய்கிறார்களா? உடல்ரீதியாக பிரச்னை இருக்கிறதா எனக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமை.

சமூக ஊடகங்கள் மற்றும் உடல்சார்ந்த பிரச்னைகள்

மற்றவர்களுடன் ஒப்பிடுவது, அதிகமாக டயட்டில் இருப்பது... ஆகியவை இதன் வெளிப்பாடுகள். சமூகம் பற்றிய பதற்றத்தைக் குறைக்கவும் உடல்சார்ந்த தாழ்வு மனப்பான்மையைக் களையவும் குழந்தைகளிடம் பெற்றோர் மனம்திறந்து பேச வேண்டும்.

குடும்பத்தில் சண்டை மற்றும் தகவல் தொடர்பு இல்லாதது

சண்டையில் எப்போதும் வாதம் செய்வது, அமைதியாக இருப்பது ஆகியவை இதன் தாக்கத்தால் விளைபவை. குழந்தைகளின் கோபத்திற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு அதை முதலில் சரிசெய்தபின்னர் அவர்களின் கோபத்தைக் குறைக்க பெற்றோர்கள் பயிற்சி வழங்கலாம்.

ஆபத்தான அறிகுறிகள்

உங்கள் பிள்ளைகளின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தாலோ அல்லது ஏதாவது ஒரு செயலில் இருந்து திடீரென பின்வாங்கினாலோ அல்லது பொழுதுபோக்குகளில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ அலட்சியப்படுத்தாதீர்கள். இதை உடனடியாக கவனித்து சரிசெய்ய வேண்டும்.அதேபோல திடீரென தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தாலோ அல்லது தேர்வைத் தவிர்த்தாலோ அல்லது பள்ளிக்குச் செல்வதைத் தவிர்த்தாலோ கவனம் செலுத்த வேண்டும்.

உடலில் காயங்கள் இருந்தால், தூக்கத்தில் மாற்றம் (இரவில் விழித்திருப்பது, ஆழ்ந்த தூக்கம் இல்லாதது), உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல்,நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பெற்றோருக்குத் தெரியாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது அல்லது இணைய பயன்பாடு ஆகியவை எல்லாம் ஆபத்தான நண்பர்கள் குழுவினருடன் நம் பிள்ளைகள் தொடர்பில் இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கைகள்.

உடனடி நடவடிக்கை தேவை. அதுவும் அன்பாக, அரவணைப்பாக இருக்க வேண்டும்.அடிக்கடி அல்லது திடீரென அழுவது, கோபம், தனிமையில் இருத்தல் என உணர்ச்சி ரீதியான மாற்றங்களை தயவுசெய்து அலட்சியப்படுத்தாதீர்கள்.

என்னென்ன சிகிச்சை அளிக்கலாம்?

சிபிடி எனும் அறிவாற்றல் சார்ந்த நடத்தை சிகிச்சை (Cognitive Behavioral Therapy) எதிர்மறை எண்ணங்களை சரிசெய்ய உதவுகிறது. டிபிடி எனும் இயக்கவியல் நடத்தை சிகிச்சை (Dialectical Behavioral Therapy) மன அழுத்தத்தைக் குறைக்கவும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் அல்லது காயப்படுத்திக் கொள்ளுதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகியவற்றை இவை குறைக்கும். பெற்றோர் மற்றும் இளம்வயதினருக்கு இடையேயான பிரச்னையை சரிசெய்வது அனைத்துக்கும் மேலாக முக்கியம்.

பெற்றோர்களும் காரணமாக இருக்கலாம்!

தங்களுடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும், ஏதேனும் ஒரு துறையில் அல்லது கலையில் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்து பெற்றோர்களே குழந்தைகளுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக உளவியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பிள்ளைகள் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள் என்றால் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என எப்போதும் படித்துக்கொண்டே இருக்க கட்டாயப்படுத்தும் பெற்ரோரே அதிகம். இதற்காக வீட்டிலேயே பல விதிமுறைகளை விதிக்கின்றனர். தாங்கள் நினைக்கும் மதிப்பெண் வரவில்லை என்றால் தண்டனை வழங்கும் அளவுக்குச் செல்கின்றனர்.

அதேநேரத்தில் இன்னொரு தரப்பு பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு எந்த கஷ்டமும் வராமல் பாதுகாத்து வளர்க்கின்றனர். அவர்களுக்கு வரும் பிரச்னைகளை தாங்களே முன்நின்று சமாளிக்கின்றனர். இந்த இரண்டு வளர்ப்பு முறையுமே தவறு என்கிறார்கள் மருத்துவர்கள். டீன்- ஏஜ் என்பது சாதாரணமானதுதான். 

குழந்தைகளுக்கு அழுத்தம் தராதவண்ணம் அதேநேரத்தில் அவர்களுக்கு பிரச்னைகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். பதின்மவயது குழந்தைகளுக்கு உடல், மனரீதியாக பிரச்னை இருந்தது தெரிந்தால் அவர்களிடம் பேசி காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் கண்டிப்பாக ஒரு உளவியல் நிபுணரை அணுகுவது நல்லது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி உலக அளவில் 10 - 19 வயதுடையோரில் 7ல் ஒருவர் மன அழுத்தம், பதற்றம், நடத்தைகளில் மாற்றங்கள் என மன ரீதியாக பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

எனவே, பதின்மவயதினரிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்கள் பொதுவானதுதான். என்றாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டறிந்தால் பிரச்னை அதிகமாவதற்கு முன் அதனைச் சரிசெய்வது நல்லது.இதைத்தான் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஜான்சி