இந்தியாவின் முதல் அகழ்வாராய்ச்சி ஆவணப்படம்!
‘‘என்னையும் என் இசையையும் என் தமிழ் ஆர்வத்தையும் எந்த கேள்வியும் இல்லாமல் தமிழ் மக்களும் தமிழ் மண்ணும் ஏத்துக்கிட்டாங்க. இன்னைக்கு நான் இருக்கும் இந்த நிலைக்குக் காரணம் தமிழ் மொழிதான்.  அதன் வளர்ச்சியிலும், அடையாளப்படுத்துதலிலும் என்னை நான் சேர்த்துக்க விரும்பினேன். அதுதான் இந்த ‘பொருநை’ ஆவணப்படம்...’’ பெருமையுடன் பேசத் துவங்கினார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. 
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி 2019ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ‘பொருநை’ ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.  இந்த ஆவண படத்திற்கு முழுமையான தயாரிப்பு பொறுப்பு ஹிப் ஹாப் தமிழா ஆதி. இந்த ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார்கள் அவருடைய ‘தமிழன்டா’ டீம் பிரதீப் குமார் மற்றும் இளங்கோ சம்பத்குமார். இந்த டாக்குமென்டரியை ஹிப் ஹாப் தமிழா என்டர்டைன்மென்ட் தயாரித்து வெளியிடுவதில் உற்சாகமாக இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ‘பொருநை’..?
நாம வாழ்ற மண் இது. நம் முன்னோர்கள் துவங்கி நமக்கு அடுத்த சந்ததி வரை பாதுகாப்பாகவும், ஆடிப் பாடி மகிழ்ச்சியாக... நினைத்ததை சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம். அந்த மண்ணுக்கு நாம என்ன செய்தோம், செய்கிறோம் என்கிற கேள்விதான் இந்த ஆவணப்படம் உருவாகக் காரணம்.
பொருநை... இந்த அகழ்வாராய்ச்சி முழுவதும் நடந்தது தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்திதான். ஒரு நாகரீகம் உருவாக முதல் மூலதனம் நதிதான். இந்த இரும்பு நாகரீகம் உருவானது தாமிர பரணி நதிக்கரையில். தாமிரபரணி நதியின் சங்க கால பெயரான பொருநை இந்த ஆவணப் படத்துக்கு சிறப்பான பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதனால்தான் பொருநை. மொத்த ஆவணப் படத்தையும் முழு உழைப்பு கொடுத்து உருவாக்கி இருக்காங்க இயக்குநர்கள் பிரதீப் மற்றும் இளங்கோ.
எத்தனை வருட உழைப்பு இந்த ஆவணப்படத்துக்காக கொடுத்திருக்கீங்க?
எங்களுடைய ‘தமிழி’ ஆவணத்தொடர் வேலைகள் முடிஞ்சது 2018ல. அந்த வருஷமே நாங்க இந்த இரும்பு நாகரீகம் குறித்த அகழ்வாராய்ச்சி அத்தனையிலும் கலந்துகிட்டோம். நேரடியாக லைவ் ரெக்கார்டு செய்தோம். இந்தியாவிலேயே முதல் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்ட ஆவணப்படம் இதுதான்.
யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு ஏன் என கேள்விகள் வரவில்லையா?
இப்போ வரையிலும் வரலை. எல்லோரும் பாராட்டதான் செய்யறாங்க. ஒரு சிலர் தன்னையும் இந்த ப்ராஜெக்ட்டில் எந்த சம்பளமும் இல்லாமல் இணைச்சுக்க விரும்புறாங்க. ஆனா, ஏற்கனவே எங்ககிட்ட ‘தமிழன்டா’ என்கிற இயக்கம் இருக்கு. அந்த இயக்கம்தான் முழுமையா இதில் இறங்கி அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் எல்லோரோடும் சேர்ந்து பயணித்து இதை ஆவணப்படுத்தி இருக்கோம்.
மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு இந்த ப்ராஜெக்ட்டுக்கு எந்த அளவிற்கு கிடைத்தது?
தமிழ்நாடு அகழ்வாராய்ச்சி துறை மட்டுமல்ல, இந்தியா முழுக்க இது சார்ந்து எங்கே எல்லாம் ஆராய்ச்சிகள் நடந்ததோ அங்கே எல்லாம் இருந்து எங்களுக்கு புகைப்படங்கள்,
வீடியோக்கள் கிடைத்தன. இரும்பு நாகரீக அகழ்வாராய்ச்சி மூலாதாரங்கள் கிடைக்க ஆரம்பிச்ச முதல் புகைப்படத்தில் இருந்து எங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அத்தனையும் சேர்த்து தொகுத்து இதை உருவாக்கியிருக்கோம். இது தமிழ் வரலாறு என்கிறதைத் தாண்டி உலகுக்கே பொதுவான ஒரு வரலாறு. அதனால் உலகம் முழுக்க இருக்கும் இது சார்ந்த தொல்லியல் துறை அத்தனையும் எங்களுக்கு உதவி செய்தார்கள்.
இரும்பு நாகரீகத்தின் பூர்வீகம் தமிழ்நாடுதான் என்பதற்கான ஆதாரங்களையும் இதில் இணைத்திருக்கிறீர்களா?
எல்லாமே இந்த டாக்குமென்டரியில இருக்கு. அங்கே கிடைத்த இரும்பு பாகங்களுக்கும் தமிழகத்தில் கிடைத்த இரும்பு உதிரிகளுக்கும் கூட எத்தனையோ வருடங்கள் வித்தியாசப்படுது.
அதையெல்லாம் சேர்த்துதான் இந்த டாகுமென்டரியில் நாங்க பதிவு செய்திருக்கோம். இதற்காக திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர், சென்னைக்கு அருகிலுள்ள பெரம்பூர், கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலத்தின் மலபாரிலுள்ள தலைச்சேரி, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மாங்காடு கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை வரையிலும் பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. ஏன் இரும்பு நாகரீகம்..?
தமிழ் மொழியின் தொன்மையை அடையாளப்படுத்தவும் ஆவணப்படுத்தவும்தான் இன்னைக்கு அவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்துகிட்டு இருக்கு. கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் கால நாகரீகங்கள்தான் மனித இனம் தோன்றி வளர்ந்த அதன் தொன்மையை முழுமையாகக் காட்டும். இதற்கு முன்பு வரை இருந்த மொத்த வரலாறை... அதாவது உலகம் நமக்கு போதித்த ஒன்றே இந்த இரும்பு நாகரீக அகழ்வாராய்ச்சியின் மூலம் மாறி இருக்கு.
எனில் நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் வரலாறுதான் உலகின் தொன்மையான மொழிகளில் முக்கியமானது என்கிறதுக்கு இன்னொரு சான்று இது. அதனால்தான் இரும்பு நாகரீகம் அகழ்வாராய்ச்சியை ஆவணப்படமாக உருவாக்க நினைத்தோம். எங்களுடைய இந்த முயற்சிக்கு தொல்லியல் துறையும் முழுமையா சப்போர்ட் செய்தாங்க.
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
உலகம் முழுக்க நடக்கும் அத்தனை திரைப்பட விழாக்களிலும் இதை திரையிட முடிவு செய்திருக்கோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இப்போதைக்கு உருவாகி இருக்கு. தொடர்ந்து இன்னும் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கலாம் என்கிறது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கு. ஆனால், உலக பொது மொழியான ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் உருவாக்கி இருக்கோம். மேலும் தமிழை பிரதானமாக வைத்து இந்த ஆவணப்படம் நகரும்.
உங்களுடைய சினிமா மற்றும் இசைப் பயணம் எப்படி போகுது?
‘ஜோ’ பட இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் படத்துல நடிக்க இருக்கிறேன். அது பற்றிய அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும். ‘வேர்ல்டு டூரு’க்கு இடையில இந்தப் படத்தோட ஷூட்டிங்கை ஆரம்பிச்சு அடுத்த வருஷம் வெளியிடலாம்னு திட்டம்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் இசை அமைப்பும் ஒரு பக்கம் போய்ட்டு இருக்கு. லைவ் கான்செப்ட்டிலும் எங்களுடைய வேர்ல்ட் டூர் இதுவரையிலும் எட்டு நாடுகளில் முடிஞ்சிடுச்சு. இன்னும் ஆறு நாடுகள் பேலன்ஸ். கடைசியா சென்னையில் முடிக்க பிளான் செய்திருக்கோம். தமிழகத்தின் இரும்பு நாகரீகம்
தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் இரும்பு நாகரீகம் (Iron Age) மிக முக்கியமான கட்டமாக கருதப்படுகிறது. இது சுமார் கிமு 1500 முதல் கிமு 500 வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது. இரும்புக்கு முதலிடம் என வரலாறுகள் இருந்த நிலையில் அதை முற்றிலுமாக மாற்றும் விதமாக இரும்பு உருவானதும் தமிழக வரலாற்றில்தான் என்பதற்கான அகழ்வாராய்ச்சி முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
இந்நகர்களில் இரும்பு உதிரிகளும், போர்க் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வியலில் இரும்புக் கருவிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. விவசாயம், போர் மற்றும் அன்றாடக் கருவிகளில் இரும்பு பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆதிச்சநல்லூர், பொற்குடி, கொடுமணல், அரிக்கமேடு போன்ற பல தொல்லியல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் இரும்புக்காலத்திற்கு உரிய பானைகள், ஆயுதங்கள், மனித எலும்புக்கூடுகள் மற்றும் பல பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட வட்ட வடிவச் சிதைந்த புதைபடிவங்கள், அந்தக் கால மக்களின் இறுதிச் சடங்குகளையும், சமூக அமைப்புகளையும் சுட்டிக்காட்டுகின்றன. இக்காலத்தில் இரும்பு பரவலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இக்கால மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, உலோகம் சார்ந்த தொழில், வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். குடியிருப்பு அமைப்புகள், சமுதாய அடுக்குகள், சிறிய அரசமைப்புகள் போன்ற சமூக அமைப்புகளும் இந்த அகழ்வாராய்ச்சியின் ஒரு பகுதியாக கிடைத்திருக்கின்றன.
பூமியுடன் சார்ந்த பழக்கவழக்கங்கள், இயற்கையை தெய்வங்களாக வணங்கும் முறைகள், குறிஞ்சி, முல்லை போன்ற புவியியல் அடிப்படையிலான மரபுகள் தோன்றியதற்கான அடித்தளம் இந்த இரும்பு நாகரீக பகுதிகளில்தான் உருவாகி இருக்கிறது.
தமிழகத்தின் இரும்பு நாகரீகம், தென்னிந்திய நாகரீக வளர்ச்சியின் முக்கியமான அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான தொல்லியல் ஆதாரங்களும், தமிழர்களின் பண்டைய அறிவும் பாரம்பரியமும் பெருமிதத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்பதற்கு மற்றும் ஒரு சான்றாகவே இந்த இரும்பு நாகரீக கண்டுபிடிப்பு தற்போது உலக அடையாளமாக மாறி இருக்கிறது.
ஆதிச்சநல்லூரில் இரும்பு ஆயுதங்கள், சிறிய வேல்கள், மட்பாண்டங்கள், பொன் அணிகலன்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மயிலாடும்பாறையில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு கலைப்பொருட்கள் கிமு 2172ம் ஆண்டிற்கு முந்தையவை. தமிழகத்தில் இரும்புக் காலத்தின் தொடக்கம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பது தெரிய வந்துள்ளது.
எனில் இது உலகின் இரும்பு நாகரீகத்தின் வரலாற்றையே முழுமையாக மாற்றி இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த அகழ்வாராய்ச்சியின் காரணமாக இரும்பு நாகரீகம் என இணையத்தில் தேடினாலே தற்போது இந்தியா, தமிழ்நாடுதான் வருகிறது.
ஷாலினி நியூட்டன்
|