பயன் தரும் பன்ச் கிராஃப்ட்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               குட்டிக்குட்டியாக வெட்டி ஒட்டப்பட்ட ரோஜாப்பூ, அழகழகான இலைகள், கார்ட்டூன் உருவங்கள்...

& கிரீட்டிங் கார்டு, அன்பளிப்புப் பெட்டி என எல்லாவற்றிலும் இன்று இவைதான் ஃபேஷன். ‘எப்படித்தான் இவ்ளோ குட்டியா, அழகா வெட்டி ஒட்டுவாங்களோ’ எனப் பலரையும் திகைக்க வைக்கிற அந்த வேலைப்பாட்டுக்குப் பெயர் பன்ச் கிராஃப்ட்.

‘‘பன்ச் கிராஃப்ட் பண்றதுக்கு ஜாலியான விஷயம். கைநிறைய காசு கொடுக்கிற ஒரு கலையும்கூட’’ என்கிறார் கல்லூரி மாணவி அபிநயா.

‘‘பொழுதுபோக்கா நிறைய விஷயங்கள் கத்துக்கறேன். அதுல பன்ச் கிராஃப்ட் ரொம்ப வித்தியாசமா இருக்கறதோட, அன்பளிப்பு கொடுக்கறப்ப ரொம்ப உபயோகமா இருக்கு. பகுதி நேரமா சம்பாதிக்கவும் கை கொடுக்குது’’ என்கிற அபிநயா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பன்ச்சிங் மெஷின் (ஒவ்வொரு டிசைனுக்கும் ஒரு மெஷின் வேணும். குறைஞ்சது 2&3 மெஷின்களோட ஆரம்பிக்கிறது நல்லது), பன்ச் கிராஃப்ட் பேப்பர், பசை, வேஸ்ட் துணி... குறைஞ்ச பட்ச முதலீடு ஆயிரம் ரூபாய் அவசியம்.’’

என்னவெல்லாம் செய்யலாம்?

‘‘பன்ச் கிராஃப்ட் டெக்னிக்கை பயன்படுத்தி கிரீட்டிங் கார்டு பண்ணலாம். போட்டோக்களை சுத்தி பன்ச் கிராஃப்ட்டால அழகுப்படுத்தி, அதுக்கு மேல ஃபிரேம் போடலாம். வெறுமனே பன்ச் கிராஃப்ட் மட்டும் பண்ணிட்டு, அதையே ஃபிரேம் போட்டு, மாட்டலாம். அன்பளிப்பா கொடுக்கற எந்தப் பொருள் மேலயும் ஒட்டித் தரலாம். குழந்தைங்களோட ஸ்கூல் புராஜெக்ட்களுக்கு ரொம்பவே உபயோகமா இருக்கும்.’’

ஒரு நாளைக்கு எத்தனை? லாபம்?

‘‘50 ரோஜாப் பூக்கள் பண்ணலாம். 3 முதல் 5 ஃபிரேம் பண்ணலாம். வேகம் கூடக்கூட எண்ணிக்கை அதிகமாகும். கிரீட்டிங் கார்டுகளை 50 ரூபாய்லேருந்தும், ஃபிரேம் அட்டைகளை 250 ரூபாய்லேருந்தும் விற்கலாம். 50 சதவீத லாபம் நிச்சயம்!’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சிக்கு, தேவையான பொருள்களோட சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்