தங்கத்தில் சுட்ட தோசை!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                    அந்த தோசையின் விலை 1011 ரூபாய். இது அரிசி, உளுந்து அரைத்துச் சுட்ட தோசை கிடையாது. தினம் தினம் விலையேறி, ஏழைகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கும் தங்கம் தேய்த்துச் சுட்ட தோசை!

அரிசி தோசை, ரவா தோசை, கோதுமை தோசை, ராகி தோசை எல்லாம் சாப்பிட்டிருப்போம். தங்க தோசை? சாப்பிட பெங்களூருவுக்கு வரலாமே! நகரின் பழமைவாய்ந்த இடங்களில் ஒன்றான மல்லேஸ்வரம் மர்கோசா சாலையிலுள்ள ராஜ்போக் என்ற ஹோட்டலில் கிடைக்கிறது இந்த தங்க தோசை!

ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரும், இந்தத் தோசையை வார்த்தவருமான சந்தன் லோகேஷிடம் இதுபற்றிக் கேட்டோம்...

“மன்னர் காலத்தில் இருந்தே தங்கத்தை ஒரு மருந்துபோல சாப்பிடுவது வழக்கம். தங்கத்தின் நற்பலன்களை சாதாரண மக்களுக்கும் ஏன் தரக்கூடாது என்று யோசித்தபோது உதித்ததுதான் கோல்டு தோசை ஐடியா. இப்போது ஸ்டார் ஹோட்டல்களில் தங்கம் அல்லது வெள்ளி மேற்பூச்சுடன் ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது. வட இந்தியர்கள் ஸ்வீட், பீடாக்களில் வெள்ளி சேர்த்தே சாப்பிடுகிறார்கள். ஆனால், தங்க தோசை இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் கிடைக்கிறது’’ என்கிறார் சந்தன் லோகேஷ்.

இதனால் உடல்நலப் பிரச்னை வருமே என்றால், ‘‘யார் சொன்னார்கள்? தங்கத்தை குறிப்பிட்ட அளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். மதுபானம் மீதான மோகம் குறையும். தங்கம் ஆன்டிபயாடிக்காகவும் பயன்படுகிறது. சரும அல்சரை குணமாக்கும் தன்மையும் தங்கத்துக்கு உண்டு. ஆயுர்வேதத்தில் இதெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்றார் லோகேஷ்.

மசால் தோசை தயாரிக்கும் முறையிலேயே தங்க தோசையும் சுடப்படுகிறது. நல்லெண்ணெய்க்கு பதில் ஆலிவ் ஆயில் ஊற்றப்படுகிறது. தோசையை கல்லில் இருந்து இறக்கியதும், 0.1 மில்லிகிராம் எடையுள்ள தங்கத் தகடை தோசை மீது படர விடுகிறார்கள். பத்தே நிமிடத்தில் சுவையான தங்க தோசை தயார்!

அறிமுகமான இரண்டே வாரங்களில் 32 தங்க தோசைகள் விற்பனையாகியுள்ளன. புத்தாண்டு அன்றும் அட்வான்ஸ் புக்கிங் செய்து நிறைய பேர் தங்க தோசை சாப்பிட்டு புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். ராஜ்போக் ஹோட்டலில் தங்க தோசையோடு, வெள்ளி தோசை உள்பட 101 வகை தோசைகள் தயாரிக்கப்படுகின்றன. வெள்ளி தோசையின் விலை 151 ரூபாய்!
ஐ.வீரக்குமாரன்
படம்: வி.வெங்கடேசன்