சாம் அமலா பால் இன் லவ்...



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            போன படத்து சொந்தம் கூட இல்லாமல் சமீரா ரெட்டியும், அமலா பாலும் ஒரே படத்தில் போன ஜென்ம சொந்தம் போலாகி விட்டார்கள். கை பிடித்துக் குலுக்குவதென்ன, கட்டிப் பிடித்து ‘வார்ம்’ வெல்கம் கொடுப்பதென்ன... நிஜ அக்கா, தங்கை கூட கெட்டார்கள். மிஸ்.ரெட்டிக்கும், மிஸ்.பாலுக்குமான இந்த உறவு ரொட்டியும், பாலும் போல உறுதிப்பட்டது யுவிடி மோஷன் பிக்சர்ஸுக்காக லிங்குசாமி இயக்கும் ‘வேட்டை’ படத்தில்.

‘‘இந்த ஷெட்யூல்ல சாம் இருக்காங்களான்னு கேட்டுட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நான் நடிக்கவே வருவேன். சாம் இல்லாத ஷெட்யூல்களில் அழுகை அழுகையாக வந்தது...’’ என்றது அமலா பாலேதான். அவர் சொன்ன சாம், சமீரா ரெட்டி. ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடித்தால், படம் முடிவதற்குள் இயக்குநர் முடியைப் பிய்த்துக் கொள்ள நேரும் சினிமாவுலகில் எப்படி நேர்ந்தது இந்த சொந்தம்..? அமலாவே அழகான வாய் திறந்தார்.

‘‘இந்தப் படம் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு சீனியர் நடிகைன்னு மட்டும்தான் சாமைத் தெரியும். அவங்க படம் ஒண்ணுகூட பார்த்ததில்லை. ஆனா படம் முடியும்போது இந்த சொந்தம் இப்போதைக்கு முடிவடையும்னு தோணவே இல்லை. அதுக்குக் காரணம் சாமோட குணம்தான். கொஞ்சம் கூட சீனியர்ங்கிற ஈகோவோ, பகட்டோ இல்லாம ஒரு ஃபிரண்ட் கூட பழகற மாதிரி இயல்பா பழகினாங்க. இன்னும் கேட்டா, ஒரு நடிகை போலவே சாமோட பழக்கவழக்கங்கள் இல்லாம... ஒரு சகோதரி போலத்தான் இருந்தது.

நாங்க ஒரே ரூம்லதான் தங்கினோம். ஒண்ணா நடிச்சோம். ஒண்ணா ஜாகிங் போனோம்... சாப்பிட்டோம். போகாத பொழுதுகள்ல கார்ட்ஸ் விளையாடினோம். இப்படியொரு கோ ஸ்டாரை என் சின்ன அனுபவத்துல இதுவரை பார்க்கலை. குற்றாலம், தூத்துக்குடின்னு தொடர்ந்த எங்க சொந்தம் வாவ்... எ கிரேட் எக்ஸ்பீரியன்ஸ்!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஇதுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. மேடி, ஆர்யா, சாம், நான் உள்ளிட்ட எங்க டீமை ஒரு ஃபேமிலி போலவே நடத்தினார் டைரக்டர் லிங்குசாமி. யாருக்கும் எந்தக் குறையும் அவர் வைக்கலை. படத்துல எங்க கேரக்டரைப் புரிய வைக்கிறது ஆகட்டும், நடிச்சுக் கண்பிக்கிறது ஆகட்டும் அவரே ஒரு நண்பர்போல ஆனதால அந்த நேசம் எங்ககிட்டயும் தொடர்ந்தது. செட்லயே அவரை மாதிரி நடிச்சுக் காட்டி நான் கலாய்ப்பேன். அதைத்தான் அன்னைக்கு ஆடியோ லாஞ்ச் மேடையிலயும் இமிடேட் பண்ணிக் காண்பிச்சேன். முதல்ல அவரைப் போல நான் நடிச்சுக் காண்பிச்சதுல அவருக்குப் பெரிய ஷாக். ஆனா சாம் இதை எல்லாம் என்ஜாய் பண்ணி ரசிச்சாங்க.

சாமுக்கும், டைரக்டருக்கும் சின்னதா மொழிப் பிரச்னை இருந்தப்ப, செட்லேர்ந்த நான் அதுக்கு உதவியிருக்கேன். படத்துல சாமும் நானும் அக்கா, தங்கையா... அறுந்த வாலா வர்றோம். நிஜத்துலயே நாங்க அக்கா, தங்கை போல பழகி பாசமா நெருங்கிட்டதால, சினிமான்னே உணராம நடிச்சோம். ஒரு சீன்படி சாம் புல்லட் ஓட்ட, நான் பில்லியன்ல உக்காந்து வரணும். எனக்கு பைக் ஓட்டத் தெரியும்; ஆனா புல்லட் ஓட்ட நம்மால ஆகாது. சாம் அதுலயும் போல்டான பெண்தான். ஸ்டைலா ஏறி கான்ஃபிடன்ஸோட அவங்க புல்லட் ஓட்ட, யூனிட்டே அசந்தது. சாமால புல்லட் ஓட்ட முடியுமா, முடியாதான்னெல்லாம் கேட்காம நானும் பைக்ல ஏறி உக்காந்த தைரியத்தை எல்லாரும் பார்த்து வாய்பிளந்தாங்க.

அது என்னோட தைரியம் இல்லை. சாமோட தைரியத்து மேல நான் வச்ச நம்பிக்கை. ஒரு ஏரோபிளேனைக் கொடுத்து என்னையும், சாமையும் தனியா அனுப்பினாலும் நான் சாமை நம்பி ஏறி உக்காருவேன். அதுதான் சாம். அதுதான் நான். படம் முடிஞ்சும் இன்னும் எங்க ரிலேஷன்ஷிப் எஸ்.எம்.எஸ், போன்கால்னு தொடருது. இனி நேர்ல எப்ப சாமைப் பார்ப்பேனோ..?’’
அழாக்குறையாக அலுத்துக்கொண்ட அமலாவிடம், ‘நீங்க சமீராவை சாம்னு கூப்பிடறீங்க. சமீரா உங்களை எப்படிக் கூப்பிடுவாங்க..?’ என்று கேட்டால் கொஞ்சம் நாணத்துடன் சிரித்து, ‘‘அமலா பால் இன் லவ்...’னு கூப்பிடுவாங்க. சாம் மட்டுமில்லை... யூனிட்ல எல்லோரும் என்னை அப்படித்தான் கூப்பிட்டாங்க. அதுக்குக் காரணத்தை வெளியே சொல்ல முடியாது. விட்ருங்க ப்ளீஸ்..!’’ என்றார்.

அமலா கேட்டு மறுக்க முடியுமா... விட்டுட்டோம்!

வேற யாராவது காரணம் கண்டுபிடிங்க...
வேணுஜி
அட்டை  மற்றும் படங்கள்: புதூர் சரவணன்