இந்திரா காந்திக்கே இல்லை!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                     வாங்கினால் திருப்பித் தருகிற வழக்கமில்லை சில பேருக்கு. ஒன்வே டிராஃபிக் என்பார்களே, அதுமாதிரி ஒருவழிப் பாதை.

‘தில்லை வெளியில் கலந்துவிட்டால் திரும்பியும் வருவாரோ’ என்பதும் ஒருவழிப் பாதைதான். உண்மையான பக்தர்கள் அதை வரவேற்பார்கள். ‘மறுபடியும் மறுபடியும் என்னைக் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்தவேண்டாம்’ என்று இறைவனை வேண்டிக்கொள்வார்கள். வேதாந்த விஷயத்துக்கு சரிதான்!

ஆனால் லௌகீகத்தில் & அதாவது உலகாயத நடைமுறையில் & வாங்கியதைத் திருப்பித் தருவதே நல்ல பழக்கம். ஆனால் ஏன் சிலர் மறந்துவிடுகிறார்கள். அவர்களது மூளை அமைப்பே அப்படி ஏற்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. ஐந்து, பத்து கைமாத்து வாங்குவதிலிருந்து ஐம்பதாயிரம், லட்சம் வரையில்கூட மறதிதான்.

ஆனால் சில பேருக்கு & முக்கியமாக பெண் வர்க்கத்துக்கு & அபார நினைவாற்றல். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து போகும்போது எதையாவது மறந்து விட்டுப் போனால் கவலையே படவேண்டியதில்லை. இரண்டு வருடம் கழித்து அவர்கள் வீட்டுக்கு அந்த விருந்தாளி போனால்கூட அந்த வீட்டு அம்மாள், ‘‘போன தடவை வந்தபோது உங்கள் பனியனை கொடியிலேயே விட்டு விட்டுப் போய்விட்டீர்களே’’ என்று சாணிச் சுருணை போன்ற ஒரு பார்சலைக் கொடுப்பார். பிறத்தியாருக்குச் சொந்தமான எந்தப் பொருளும் & அது சின்ன ஜட்டியாய் இருந்தாலும் சரி & தங்கள் வீட்டில் ஒரு நிமிடம்கூட இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். (அதை அவர்கள் பத்திரப்படுத்தி வைக்கும் இடம்தான் சற்று வெறுப்படிக்கும்.)

வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பது ஒரு நல்ல பழக்கம். அதே சமயம் தனக்குச் சொந்தமில்லாத பொருளை பிறத்தியாரிடம் கொடுப்பதும் அவ்வளவு வரவேற்கத்தக்கது அல்ல.

விவரமானவர்களை (வேறு யார், மனைவியிடம்தான்) கேட்டுக்கொண்டு திருப்பித் தருவது நல்லது.

‘‘ஐயய்யோ... அந்தக் குடையா! அது நம்ம வீட்டுதுதானே. மெனக்கெட்டு அதைக் கொண்டு கோபு வீட்டில் கொடுத்து விட்டு வந்திருக்கிறீர்களே. நான் வீட்டில் இல்லையென்றால் வீட்டையே தூக்கிக்கூட யாருக்காவது கொடுத்துவிடுவீர்கள்’’ என்று இல்லத்தரசி கூக்குரல் இடக்கூடும்.

எனது நண்பர் கே.ஜி.ஜவஹர் (பத்திரிகையாளர், எழுத்தாளர், வங்கி அதிகாரி, புல்புல்தாரா வாசிப்பவர்) ஒரு சுவாரசியமான மனிதர். அவர் கொச்சியில் பணிபுரிந்தபோது கடைத் தெருவிலிருந்த புகைப்பட ஸ்டுடியோவின் ஷோகேஸில் ஒரு வித்தியாசமான புகைப் படத்தைப் பார்த்தார்.

அது ஒரு சிறுமியின் புகைப்படம். இந்திரா காந்தி அம்மையார் போல மேக்கப் போட்டிருந்த சிறுமி. முன் தலையில் கோடு போட்ட நரைத்த முடி, கூர்மையான நாசி, அகன்ற கண்களும் சிறு உதடுகளின் சிரிப்பும்... அச்சாக மினி இந்திரா காந்தி மாதிரியே தோற்றம். அதைப் பார்த்ததும் ஜவஹரின் பத்திரிகைக்கார மூளை துறுதுறுத்தது. இந்தப் புகைப்படத்தை பிரதமர் இந்திரா பார்த்தால் எவ்வளவு ஆச்சரியப்படுவார்!

அந்த சமயத்தில் ஒரு காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க இந்திரா காந்தி அம்மையார் கொச்சிக்கு வந்திருந்தார். கூட்டம் நடைபெறும் இடத்துக்கு புகைப்படத்துடன் நண்பர் ஆஜரானார். மேடையில் பல பிரமுகர்களும் குழுமியிருந்தனர். விழா இன்னும் தொடங்கவில்லை. மேடைக்கு சற்று தூரத்தில் ஒரு கேரளப் பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்தார் பிரதமர். பொதுமக்கள் யாரும் மேடையை நெருங்கமுடியாதபடி சிறு தடுப்பு போட்டிருந்தது.

நண்பர் ஜவஹருக்கு பிரதமரை நெருங்கி தான் கொண்டு வந்த புகைப்படத்தைக் காட்ட அனுமதி கிடைக்க வில்லை. ஆனால் படத்தை கையில் பிடித்த வாறே, தூரத்திலிருந்தே பிரதமருக்குக் காட்டியவாறு ‘ஜவஹர்... ஜவஹர்...’ எனறு உரக்கக் கத்தினார். பலரது கவனம் அவர்மேல் சென்றது. அவரை உட்காரும்படி சைகை காட்டினர். ஆனால் ஜவஹர் உட்காருவதாக இல்லை. அவர் நோக்கம் பிரதமரின் காதில் தன் கத்தல் விழ வேண்டும், தன் பக்கம் அவர் திரும்பவேண்டும் என்பதுதான்.

அது நிறைவேறியது. பிரதமர் அவரது திசையை நோக்கித் திரும்பினார். அவ்வளவுதான்... நண்பர் தாண்டிக் குதித்து புகைப்படத்துடன் அவரை நெருங்கினார். வழியிலிருந்தவர்கள் தடுக்க முயற்சிக்கும் போதே சடுகுடு ஆட்டக்காரர் போல எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்து விட்டு பிரதமர் அருகில் சென்று விட்டார். அந்தப் படத்தைக் காட்டினார். அதை ஆச்சரியத்துடன் கையில் வாங்கிப் பார்த்தார் பிரதமர். ஓரிரு வினாடி பார்த்ததும் புன்னகைத்துவிட்டு, ‘‘வாட் டூ யூ வான்ட்’’ என்றார்.

‘‘இதை நீங்கள் பார்க்கணும். அவ்வளவே’’ என்றார் ஜவஹர்.

பிரதமர், ‘‘கேன் ஐ ஹாவ் இட்’’ என்றார்.

ஜவஹர், ‘‘ஸாரி, நோ. அப்புறம் அனுப்புகிறேன்’’ என்று அவரிடமிருந்து புகைப்படத்தை திரும்ப வாங்கிக்கொண்டு தன் இடத்துக்கு ஓடிவிட்டார்.

பிரதமர் கேட்டும் ஜவஹர் படத்தைக் கொடுக்காமல் வந்ததற்குக் காரணங்கள் இரண்டு.

1. அது அவருக்குச் சொந்தமான படம் அல்ல. 2. ஸ்டுடியோகாரரின் அனுமதியும் பெறவில்லை.

நாட்டின் பிரதமரே கேட்டுவிட்டார் என்று பதற்றத்திலோ மரியாதையிலோ, மகிழ்ச்சியாக அதைத் தந்துவிடவில்லை. ‘பிறத்தியார் சொத்து. அதை வழங்க தனக்கு உரிமை இல்லை’ என்பதை நன்கு உணர்ந்திருந்தார்.

பிரதமரின் ஆசையை சில தினங்களில் ஜவஹர் நிறைவேற்றிவிட்டார். ஸ்டுடியோகாரரிடமும், படத்திலிருந்த சிறுமியின் குடும்பத்தினரிடமும் அனுமதி பெற்று, படத்தின் ஒரு பிரதியை பிரதமருக்குத் தபாலில் அனுப்பி வைத்துவிட்டார்.

திருப்பித் தருவதில் எவ்வளவோ நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பாக்கியம் ராமசாமி