பிர்லா கஷ்டத்தில் இருக்கிறாரா?Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

நானும் ‘நிழல்’ திருநாவுக்கரசும் ஒரு தேனீர்ப் பொழுதில் சந்தித்துக் கொண்டோம். ‘நிழல்’ அவர் நடத்தும் பத்திரிகை. நல்ல சினிமாவைத் தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்கென்று பத்து வருடங்களாகப் போராடி நடத்துகிறார். சிம்ரன் புடவை, சந்திரமுகி புடவை, குஷ்பு இட்லி தெரிந்த அளவுக்கு இவரது பத்திரிகையைத் தெரியாது.

அரசியலில் மட்டுமல்ல; உடையிலும் உணவிலும் கூட சினிமாவின் ரசனையும் சுவையும் நம்மை பாதித்திருப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது எதைச் சொல்லி விற்றால் தமிழக மக்கள் வாங்குவார்கள், உண்ணுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் வணிகக் கவர்ச்சியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

சினிமா முழுக்க முழுக்க வியாபாரமான சூழலில் திருநாவுக்கரசு இந்தப் பத்து வருடங்களில் 25 மாவட்டங்களில் ‘குறும்படப் பயிற்சிப் பட்டறை’ மூலம் 5000 பேருக்கு நல்ல குறும்படத்தைப் பற்றியும் ஆவணப் படத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஸீவீக்ஷ்லீணீறீ.வீஸீ என்கிற இணைய தளத்தில் வாரம் இரண்டு குறும்படங்களை வெளியிடுகிறார்.
எங்கள் இருவருக்கும் சுடச்சுட தேனீர் வந்தது. எனது நண்பர் குறிஞ்சிச்செல்வன் ஜப்பானிலிருந்து எனக்கு வாங்கி வந்த தேயிலையைப் பற்றி சொன்னேன். அந்தத் தேயிலை நிறுவனம் சிங்கப்பூரில் 1837ல் தொடங்கப்பட்டது. உலகெங்கும் இன்று அதன் கிளைகள் இருக்கின்றன. ‘ஜிகீநி ஜிமீணீ’ என்கிற அந்த நிறுவனம் கடந்த 174 ஆண்டுகளாக அந்தத் தேயிலையின் புகழ் மணத்தோடு விளங்குகிறது.

திருநாவுக்கரசிடம் இதை நான் சொன்னபோது, ‘பச்சை ரத்தம்’ என்ற ஆவணப் படத்தின் சி.டி ஒன்றை என்னிடம் கொடுத்தார். ‘‘174 ஆண்டு&தேனீரின் சுவை இருக்கட்டும்; இதைப் பாருங்கள். இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையிலும் தமிழகத்திலும் துயருறும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கண்ணீரை உணர முடியும்’’ என்றார்.

75 நிமிடப் படம். எழுத்து & இயக்கம் தவமுதல்வன். விடியலின் அடையாளமாகத் தேனீர் குடிக்கும் மக்களின் முகங்களிலிருந்து தொடங்குகிறது படம். 200 வருடங்களுக்கு முன் இலங்கையும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தபோது மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, வடாற்காடு பகுதிகளிலிருந்து தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அங்கே பட்ட அல்லல்களுக்கு அளவே இல்லை.

பலர் ராமநாதபுரம் வரை நடந்தே சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து கப்பல் பயணம். ஆதிலட்சுமி என்கிற கப்பல் ஆயிரம் பேருடன் மூழ்கியும் போயிருக்கிறது. எல்லாம் கடந்து அங்கே சென்ற அந்தத் தமிழர்களின் வியர்வைதான் இலங்கையின் கட்டுமானத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தியிருக்கிறது. ஆனால் அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்பட்டார்கள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineகாடுகளிலும் மலைகளிலும் கடுங்குளிரிலும் மழையிலும் கொள்ளை நோய்களிலும் உழைத்து உழைத்துச் செத்தவர்களின் எலும்புகள் நொறுங்கி நொறுங்கி, தேயிலைத் தோட்டங்களுக்குப் போகிற வழிகள் சுண்ணாம்புப் பாதைகளாக மாறியிருக்கின்றன. மாட்டுக் கொட்டகைகளிலும் தகரக் கொட்டகைகளிலும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 25 காசு அதிகம் கூலி கேட்டால் அங்கேயும் தங்க முடியாது. 1948ல் இவர்களது குடியுரிமை பறிக்கப்பட்டது. அதன்பிறகு வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. பறைத்தமிழர், கள்ளத்தோணி என்று ஏளனம் செய்யப்பட்ட இந்தத் தமிழர்கள் 1800களிலிருந்தே ‘திறந்தவெளி சிறைச்சாலை’யில்தான் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இங்கே தாயகம் திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர் களின் கதை அதைவிட துயரம். ரசாயன உரப் பையைத் தன் தோளில் தொட்டில் போல கட்டிக் கொண்டு கோத்தகிரியில் ஒரு பெரியவா¢ தேயிலைச் செடிகளுக்கு வெறுங்கையால் உரத்தை அள்ளியள்ளித் தூவுகிறார். அவரது கண்கள், வாய், மூக்கு எல்லாவற்றிலும் ரசாயனம் படிந்திருக்கிறது. ‘‘இது உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தவில்லையா?’’ என்று கேட்டால், ‘‘போய்க் குளிக்கணும்’’ என்கிறார் சாதாரணமாக. இந்தப் பாமரத்தனம்தான் தேயிலைத் தோட்ட அதிபர்களுக்குப் பணத்தை அறுவடை செய்து கொடுக்கிறது.

ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகள், பாம்புகள்... ஆபத்துக்கு ஆம்புலன்சை அழைத்தால் இரண்டு மணிநேரம் கழித்துத்தான் வரும்; அதற்கு முன் மரணம் வந்துவிடும். சாலை வசதி இல்லை; வாகன வசதி இல்லை; அதையும் தாண்டி மருத்துவமனைக்குப¢ போனால் அங்கே மருந்துகள் இல்லை. என்ன வாழ்க்கை இது?

உழைத்துக் களைத்து வீடு திரும்பினால் அங்கேயும் நிம்மதியாக இருக்க முடியாது. இடிந்து ஒழுகும் வீடுகளில¢ மழையும் பனியும் கொட்டுகிறது. கழிவறைகள் இல்லை. பெண்கள் காட்டுக்குள் இயற்கை உபாதையைக் கழிக்கப் போனால் யானைகள் வருகின்றன.

‘‘யானை மிதிச்சு செத்தா 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு அரசியல்வாதிங்க அப்படியே போயிடுறாங்க. அவங்களுக்கு ஜெயிக்கிறதும் ஆட்சியிலிருக்கிறதும்தான் முக்கியம். யாருமே எங்களப் பத்தி கவலப்படறதில்ல’’ என்று கூடலூரில் சரஸ்வதி என்கிற பெண் அரசியல்வாதிகள் மீது அனல் அள்ளி வீசுகிறார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineபடத்தின் இடையில் சில சினிமா பாடல்கள் வருகின்றன.

‘தேயிலைத் தோட்டம் - நீ
தேவதையாட்டம்
அள்ளுவதென்ன -
    நெஞ்சைக்
கிள்ளுவதென்ன...’
என்று ரஜினி ஸ்ரீப்ரியாவை கொஞ்சுகிறார்.

‘ஆதரிக்க நல்ல இளைஞன்          - மனம் விட்டுக்
காதலிக்க நல்ல கவிஞன்’
என்று ரேவதி கமலஹாசனைத் தாலாட்டுகிறார். எல்லாமும் தேயிலைத் தோட்டங்களுக்கிடையில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள்.

‘‘நமக்குத் தெரிந்தவரை தேயிலைத் தோட்டங்கள் இப்படித்தான் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. உண்மையிலே தேயிலைத் தோட்டங்கள்& கதாநாயகனும் கதாநாயகியும் ஆடிப்பாடும் உல்லாசபுரியா?’’ என்று தவமுதல்வன் கேட்கிற கேள்வி நெஞ்சைச் சுடுகிறது.

இந்தத் தொழிலாளர்கள் ஊட்டியில் நடக்கும் மலர்க் கண்காட்சியைக்கூட பார்த்ததில்லை என்கிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு இவர்களுக்கு மூன்று ரூபாய் கூலி. ஆறு மாதம் வரையில் சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்படும் இவர்கள், ‘முதலாளி கஷ்டத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால் நம்புகிறார்கள். இந்தத் தொழிலாளிகள் இப்படி நம்பும் நிறுவனம், இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரரான பிர்லா குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதையும் அந்தத் தோட்டத்தில் பணியாற்றும் ராமையா மேஸ்திரியே சொல்லுகிறார்.

‘‘இனிவரும் காலங்களில் உங்கள் தேனீர்ச் சந்திப்பின் இடைவெளிகளில் இவர்களைப் பற்றியும் பேசுங்கள். ஏனெனில் நீங்கள் பருகும் ஒவ்வொரு தேனீர்க் கோப்பையிலும் யாரோ ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் ரத்தம் தேனீராக நிறம் மாறியிருக்கிறது’’ என்று படத்தை நிறைவு செய்திருக்கிறார் தவமுதல்வன். இந்த வருடத்தின் மிகச் சிறந்த ஆவணப்படத்தைத் தந்திருக்கும் தவமுதல்வனுக்கு என் தனி வணக்கம்.

தேயிலைத் தோட்ட அதிபர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல்கட்சித் தலைவர்கள் எல்லோருமே இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாயில்லை; வயிறில்லை என்றே நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்குக் கைகள் இருக்கின்றன. அதை அவர்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளுவதற்கும் ஓட்டு போடுவதற்கும்தான் பயன்படுத்த வேண்டும் என்று யாராலும் சட்டம் போட முடியாது. சட்டம் போட்டாலும் நம்மால் எதுவும் செய்துவிட முடியாது.
(சலசலக்கும்)
பழநிபாரதி