
சினிமாவில் வில்லனாக விரும்பும் ஜிம்பாய் விக்ரம், சினிமாவிலும் நிஜத்திலும் ஹீரோவாகும் கதை. இதை நில அபகரிப்பு உள்ளிட்ட 'ஹாட் டாபிக்’குகளோடு கலந்து ஜாலியாகவும் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார் விக்ரம். ஒருபக்கம் எளியவர்களை மிரட்டியும், கொன்றும் அவர்களது சொத்துகளைப் பிடுங்கும் கும்பலின் அட்டகாசம் தாங்காமல் ஒருவர், ‘‘இதையெல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்...’’ என்றதும் இன்னொருபக்கம் விக்ரம் வாளை ஓங்கி ஒருவனைப் போட்டுத் தள்ளுகிறார். ஆனால் இது நிஜக்காட்சியாக இல்லாமல் சினிமாவில் எடுக்கப்படும் ஸ்டன்ட் காட்சியாக இருப்பதோடு, அதிலும் நடிக்கத் தெரியாமல் சொதப்பும் வில்லனைப் பார்த்து... தான் அதில் நடிப்பதாக விக்ரம் கற்பனையில் காணும் காட்சி. இத்தனை கிண்டலோடு ஆரம்பிக்கும் படம் அமளிதுமளிப்படப் போகிறது என்றுதான் எதிர்பார்க்கிறோம்.
தன் ராஜபாட்டையில் எப்போதும்போல் அர்ப்பணிப்புடன் வலம் வருகிறார் விக்ரம். படத்துக்குப் படம் ஏற்றியும், இறக்கியும் காட்டும் அவரது உடல் தகுதியில் இதில் ஏறுமுகம். மசாலாப்படமோ, கலைப்படமோ... தன் பங்களிப்பு சரியாக இருக்க வேண்டுமென்பதில் கவனமாக இருக்கும் அவர் ஜிம்பாயின் உடற்கட்டு வேண்டி நரம்பு தெறிக்கும் புஜங்களுடன் பலவானாக வருகிறார். கண்ணைக் கவரும் உடைகளும், கலர்ஃபுல் ஹேர்ஸ்டைலுமாக வந்து ‘அனல் முருகன்’ பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பிற நடிகர்கள் ஏற்கும் வேடங்களில் தான் நடித்தால் எப்படி இருக்கும் என்கிற ஏக்க கற்பனையில், பாடல் காட்சியில் பல தோற்றங்களில் வருவதா கட்டும், வில்லன் பிரதீப் ராவத்திடமிருந்து உண்மையை வரவழைக்க உளவுத்துறை அதிகாரியாக பல கெட்டப்புகளில் நிஜத்தில் வருவதாகட்டும்... அத்தனை தோற்றங்களும் அவரது ரசிகர்களுக்கு ரஸமலாய்.
எல்லா சீரியஸ் பிரபலங்களையும் கலகலப்புக்காகவே பயன்படுத்த வேண்டும் என்று இயக்குநர் முடிவு செய்துவிட்டபடியால், சீரியஸ் இயக்குநர் கே.விஸ்வநாத்தையும் கொஞ்சம் இறுக்கமும், நிறைய கலகலப்புமாகப் பயன்படுத்தியிருக்கிறார். காதலிக்கத் தெரியாத விக்ரமுக்கு காதலிப்பது எப்படி என்று கே.விஸ்வநாத் கற்றுத்தரும் காட்சிகளில் நம்பகத்தன்மையைத் தாண்டி சிரிக்க முடிகிறது.
துடிப்பான உடல்வாகுள்ள தீக்ஷா சேத்தை இப்படியொரு கமர்ஷியல் படத்தில் எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்க முடியும்..? ஆனால் விருந்தினர் வீட்டுக்கு வந்த பெண் போல ஆடை கசங்காமல் நான்கைந்து காட்சிகளிலும், பாடல்களிலும் வந்து போகிறார் அவர்.
விக்ரம் தங்கள் அறையில் தங்க வைத்திருக்கும் கே.விஸ்வநாத்தை, டைரக்டராகத் துடிக்கும் தம்பி ராமையா தனக்கு அட்டென்டர் போல பயன்படுத்திக்கொள்வதும், அவர் கோடீஸ்வரர் என்று தெரிந்ததும் பணிவிடைகள் செய்ய ஆரம்பிப்பதும் கலகல காட்சிகள்.
ரியல் எஸ்டேட் மாஃபியாவாக வரும் பெண் அரசியல்வாதி சனாவின் அடாவடிகள் பயமுறுத்தும் அளவுக்கு அவர் பயமுறுத்தாமல் அழகாக வந்து போகிறார். எப்பேர்ப்பட்ட ஆட்களையும் பணியவைத்து விடும் சக்திபடைத்த அவர், வயதான கே.விஸ்வநாத்தின் கையெழுத்துக்காக படம் முழுவதும் விரட்டிக்கொண்டிருப்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அதிலும் கே.விஸ்வநாத்தின் மகன் அவினாஷும் சனாவின் கையாளாக இருப்பது அதிகபட்ச சறுக்கல்.
யுவனும் மிரண்டு போனதைப் போல ஒரு பாடலைத் தவிர்த்து அதிக டெஸிபல் களுடன் இசைத் திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு ஓ.கே. ஸ்ரேயாவும், ரீமாவும் இடம் பெறும் லட்டு லட்டான பாடலை படம் முடிந்து ஸ்க்ரோலிங் டைட்டில் போடும்போது பயன்படுத்தியிருப்பதை எப்படியும் நியாயப்படுத்த முடியாது.
ராஜா மட்டுமே நடந்துபோகக்கூடிய ராஜபாட்டை போல, விக்ரமுக்கு மட்டும் பெருமை சேர்க்கும் படம்.
குங்குமம் விமர்சனக்குழு