திருப்புமுனை



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

               வெற்றியின் பாதையில் தங்களை திருப்பிவிட்ட தருணங்களை, ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர்
 டாக்டர் நாராயண ரெட்டி

அகம், புறம் என்று பிரிகிறது தமிழர் வாழ்வு. ‘காமம்’ என்கிற வார்த்தையைக் கொண்டாடுகின்றன சங்க இலக்கியங்கள். அறம் போற்றிய வள்ளுவரும் ‘காமத்துப் பால்’ பாடுகிறார். நம் கோயில்களின் அழகிய சிற்பங்களில், ஓவியங்களில் காமம் கலையாகி இருக்கிறது. இது தமிழரின் கடந்த கால வாழ்வு. நிகழ்காலத்தில் ஓர் இளைஞன் தன்னுடைய பாலியல் ஐயங்களுக்கு விளக்கம் பெறுவதற்கு, பொதுக் கழிப்பிடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மருத்துவர்களின் எண்களைக் குறித்துக்கொள்ள வேண்டிய அவலம் இருக்கிறது. ‘காமம் புதிரா? புனிதமா?’ என்கிற கேள்விக்கு, பல மருத்துவர்கள் இரவு பதினோரு மணிக்கு மேல் தொலைக்காட்சிகளில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

‘‘காமம் புதிரும் இல்லை. புனிதமும் இல்லை. அது மனித வாழ்வின் அங்கம்’’ என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. காமம் என்கிற உயிரின் தேவை, மறைத்து ஒளித்துப் பேச வேண்டிய அந்தரங்கமாகிவிட்ட சமூகத்தில், காமத்தை அறிவியலாகவும் வாழ்வியலாகவும் பார்க்கிற செக்ஸாலஜிஸ்ட். மக்களின் அறியாமையைக் காசாக்கும் எண்ணம் இல்லாத, செக்ஸை ‘லேகியம்’ விற்கிற வியாபாரம் ஆக்காத, மருத்துவ ரீதியாக அணுகும் பாலியல் நிபுணர் என்பதே டாக்டர் நாராயண ரெட்டியின் பெருமிதம்.

‘‘முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து வந்திருந்தாலும், என் பிறப்பும் வளர்ப்பும் சென்னை தி.நகர்தான். அம்மாவுக்கு எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே கல்யாணம் ஆகிடுச்சு. ‘பெண் வேலைக்குப் போக வேண்டாம்’ என்று நினைக்கிற குடும்பத்திலிருந்து, அவரால் டாக்டர் ஆகமுடியவில்லை. தன்னுடைய குழந்தைகளில் ஒருத்தரையாவது டாக்டர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார் அம்மா. மூத்த பிள்ளையான என் மீது அம்மாவுக்கு எதிர்பார்ப்பு வந்தது. எனக்கு எம்.பி.பி.எஸ் படிக்கிற விருப்பமும் இல்லை; படிக்கக் கூடாது என்கிற எண்ணமும் இல்லை.

அப்பா வங்கிப் பணியில் இருந்ததால் அடிக்கடி மாறுதல் வந்து கொண்டே இருக்கும். அதனால் நான் அம்மா வழி தாத்தா பாட்டி வீட்டில் வளர்ந்தேன். எந்த வேலை செய்தாலும் அதில் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தார்கள் அவர்கள். ‘பாஸா, ஃபெயிலா’ என்று எப்போதும் கேட்க மாட்டார்கள். ‘ஃபர்ஸ்ட்டா, செகண்டா’ என்று கேட்கிற சூழலில் வளர்ந்தேன். அப்பா, தாய் மாமா எல்லோரும் புத்தகப் பிரியர்கள். தேடித்தேடி படிப்பார்கள். எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஒரே இரவில் படித்து முடித்த நாவல்களின் பட்டியல் பெரியது.

நம்முடைய பாரம்பரிய நூல்கள் முதல், நவீன புத்தகங்கள் வரை தேடித்தேடி சேகரித்து வைத்திருக்கிறேன். பதின்ம வயதுகளில் எல்லோருக்கும் இருப்பதுபோல, வயது வந்தோருக்கான புத்தகங்கள் மேல் ஆர்வம் ஏற்பட்டது. ‘தி லைஃப் ஆஃப் செக்ஸாலஜிஸ்ட்’ என்ற புத்தகத்தைப் படித்தபோதுதான், எனக்கு ‘செக்ஸாலஜிஸ்ட்’ என்கிற வார்த்தையே அறிமுகமானது. செக்ஸை ஒரு மருத்துவர் அணுகும் முறை பற்றி சுவாரஸ்யமாக எழுதப்பட்ட நூல் அது.

அந்தக் காலத்தில் நாலே படிப்புதான் நல்ல படிப்பு. மருத்துவம், பொறியியல், சட்டம், சி.ஏ! என் ஆர்வத்திற்கும் விருப்பத்திற்கும் இலக்கியம் படித்திருக்க வேண்டியவன். நல்ல மதிப்பெண் கிடைத்ததால் எம்.பி.பி.எஸ். சேர்ந்தேன். படிக்கும்போது ஒரு நாள் வகுப்பறையில் கேட்ட ஒரு கேள்விக்காக வெளியேற்றப்பட்டேன். பெண்களின் மாதவிடாய் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் பெண் பேராசிரியர். ‘மாதவிடாய் நேரத்தில் தாம்பத்ய உறவு கொண்டால் ஜன்னி வந்துவிடும்’ என்றான் நண்பன். அது உண்மையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், எழுந்து கேள்வி கேட்டேன். ‘பெண் பேராசிரியரிடம் இந்த மாதிரி கேள்வியெல்லாமா கேட்பாய்’ என கோபத்தில் கண் சிவந்தவர், திட்டி வகுப்பிலிருந்து வெளியேற்றினார்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineகொஞ்சம் அவமானமாக இருந்தது. நான் மருத்துவம் பயிலும் மாணவன். மருத்துவப் பேராசிரியரிடம் உடல்ரீதியான சந்தேகம் கேட்டால், அவருக்கு ஏன் கோபம் வந்தது என்று எனக்குப் புரியவில்லை. இந்தத் துறையில் நான் சந்தித்த முதல் அவமானம் அது. அதற்குப் பிறகு தடைகள் வரிசை கட்டி வந்தன. ‘செக்ஸ்’ என்கிற வார்த்தை மருத்துவர்களுக்கே ஏன் கெட்ட வார்த்தையாக இருந்தது என்று மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. ஆணும் பெண்ணும் தாம்பத்ய உறவு கொண்டால் குழந்தை எப்படிப் பிறக்கிறது என்பது பற்றி அறிவியல்ரீதியான பாடம் நடத்தினார்கள். ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த உறவின்போது நிகழும் உடல், மனநிலை மாற்றங்களைப் பற்றிப் பேசுவதற்கு யாரும் தயாராக இல்லை. பாடமாக இருந்த சில விஷயங்களை விளக்கி வகுப்பெடுக்க மாட்டார்கள். மனப்பாடம் செய்து படித்து மதிப்பெண் எடுத்து அப்படியே மறந்துவிட வேண்டும். நான் மருத்துவம் படித்த காலத்தில் மட்டுமல்ல...

இப்போதுவரை அதுதான் பரிதாபமான நிலை.

மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். நான் படித்து பயிற்சி செய்த இடத்தில் அதிர்ஷ்டவசமாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. மூன்றாம் பாலினம் என்று சொல்லக்கூடிய அரவாணிகள் பற்றி ஆராய்ச்சி செய்கிற ‘சைக்கோ நியூரோ என்டோக்ரைனாலஜி’ என்கிற துறையில் பயிற்சியும் வேலையும் அமைந்தது. நாம் அலட்சியமாக ஒதுக்கும் பாலினம் பற்றிய அறிவியல்ரீதியான ஆய்வுகளை நுணுக்கமாகச் செய்வதைப் பார்த்தேன். 

மற்ற மருத்துவர்களுக்கும், பாலியல் துறையில் பணியாற்றுகிற மருத்துவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. செக்ஸாலஜிஸ்ட்டுகளுக்கு மருத்துவ அறிவு மட்டுமின்றி, பண்பாடு, சமூகவியல், மானுடவியல் என பல துறைகளின் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். ஆணும் பெண்ணும் மட்டுமே சம்பந்தப்பட வேண்டிய விஷயத்தில், குடும்பம், கௌரவம், அடக்கம், அழகு, அறியாமை, அச்சம், சமூகம், சட்டம் என பல விஷயங்கள் சங்கிலியைப் போல பிணைந்து கிடக்கின்றன. இந்த எல்லாம் பற்றிய புரிதல் இல்லாமல், வெறுமனே சிகிச்சை தந்து எதையும் சரிசெய்துவிட முடியாது.

எனக்குப் படிக்கவும், மனிதர்களின் செயல்பாடுகள் பற்றி அறியவும் ஆர்வம் அதிகம் இருந்தது. ‘அலர்ஜி’ துறையில் மேற்படிப்பை முடித்த நான், செக்ஸாலஜிஸ்ட் ஆவது என்று முடிவெடுத்தேன். பணம் சம்பாதிக்கும் நல்ல படிப்பை விட்டுவிட்டு, மற்றவர்கள் பேசத் தயங்குகிற துறையைத் தேர்ந்தெடுத்த என்னை பைத்தியம் என்றே பலர் நினைத்திருப்பார்கள். என் குடும்பத்திற்கு நான் எந்தத் துறை எடுத்தாலும் முதன்மையாக பெயர் சொல்லும் இடத்தில் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புதான் இருந்தது. ‘உங்க பையன் என்ன பண்றார்’ என்று அம்மாவிடம் கேட்டால், கொஞ்சமும் தயங்காமல் ‘டாக்டர், செக்ஸாலஜிஸ்ட்’ என்று சொல்லுவார். என்னுடைய பேட்டிகள் பத்திரிகைகளில் வந்தால் அதைப் பெருமிதமாக அடுத்தவர்களிடம் காட்டுவார். விருப்பத்திற்கு வேலை செய்ய என்னை வீடு அனுமதித்தது. ஆனால் மருத்துவ நண்பர்கள் என் மேல் இருக்கிற அக்கறையில், ‘அதெல்லாம் வேணாம்பா.

ஆளுங்க வரமாட்டாங்க. சம்பாதிக்க முடியாது’ என்று அறிவுரை கூறினார்கள். அன்றைய சூழல் அப்படித்தான் இருந்தது.

இப்போதுகூட ‘செக்ஸ்’ என்பது கிசுகிசுத்துப் பேசுகிற ‘சமாச்சாரமாக’ இருக்கிறது. அளவோடு இருந்தால் அந்தரங்கமாகவும், அத்துமீறும்போது குற்றமாகவும் இருக்கிறது. ‘செக்ஸ்’ பாவமாகப் பார்க்கப்படுகிற அபத்தமும் இன்றைய சூழலில் இருக்கிறது. எனில், முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை விளக்க வேண்டியது இல்லை. காமம் என்பது உடலும் உணர்வும் தொடர்பான உயிர் இயற்கை என்பதைப் புரிந்து கொள்வதற்கும், புரிய வைப்பதற்கும் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டிவரும் என்று துணிந்தே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 1982ல் ‘செக்ஸாலஜி’ என்கிற துறையை முழுநேர வாழ்க்கையாக்கிக் கொண்டேன்.

உயர்படிப்பு படித்து ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டுமானால், அந்தத் துறையில் மேற்படிப்பு எதுவும் இல்லை. அரசு மருத்துவமனையில் ‘சிறப்பு செக்ஸாலஜிஸ்ட்’ என்கிற அந்தஸ்தில் சம்பளமே இல்லாமல் வேலை பார்க்க அனுமதி வாங்கினேன். என் சொந்தப் பணத்தைப் போட்டு, இலவசமாக வேலை பார்த்த பிறகும் என்னை சிறப்பு மருத்துவர் என்று அறிவிக்காமல், ‘பயிற்சி பெறுபவர்’ என்ற சான்றிதழே வழங்க முடியும் என்றார்கள். அங்குதான் எனக்கு உச்சபட்ச வருத்தம் ஏற்பட்டது.

மேற்படிப்பு இல்லாமல் ஸ்பெஷலிஸ்ட் ஆக முடியாது. அதனால் பிஎச்.டி முடித்துவிடலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தேன். ‘செக்ஸ் துறையில் எப்படி ஆராய்ச்சி செய்யமுடியும்’ என்று தயங்கினார்கள். நான்கு ஆண்டுகள் விடாமல் நடையாய் நடந்தேன். நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி அவர்கள், நான் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பதைக் கவனித்து விசாரித்தார். ‘உண்டு, இல்லை என்று உடனடியாகச் சொல்லுங்களேன்’ என கடுமையாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டார். அவரது உதவியால் எனக்கு பிஎச்.டி ஆராய்ச்சிக்கு இடம் தர பல்கலைக்கழகம் முன்வந்தது. இடம் கிடைத்தாலும், வழிகாட்டும் பேராசிரியர்கள் இல்லை. பிஎச்.டி படிப்பிற்கு வழிகாட்ட வேண்டுமென்றால், அந்தப் பேராசிரியர் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று விதி. மருத்துவத் துறையில் இருவர் மட்டுமே அந்தத் தகுதியோடு இருந்தனர். ‘செக்ஸ் பற்றி ஆராய்ச்சியா... என்னால வழிகாட்ட முடியாதுப்பா’ என்று சொல்லி ஆராய்ச்சிக்கான கதவை அவர்கள் அடைத்தார்கள்.
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்