வந்தாச்சு





‘உலகெங்கும் பிரிந்து வாழும் தமிழ் பேசும் நண்பர்களை இணையத்தின் மூலம் இணையச் செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு சிறு முயற்சி. தமிழால் இணைவோம்!’ என்று அழைக்கிறது, ww.tamilnanbargal.com.  ஏதோ டைரிக் கிறுக்கல்கள் போல தரமும் வரையறைகளும் இன்றி பயணிக்கும் தமிழ்ப் பதிவுலகத்தை கொஞ்சம் ஆற்றுப்படுத்தும் விதமாக இத்தளத்தில் மாதம்தோறும் ‘பதிவுப் போட்டி’ நடத்தப்படுகிறது. அதில் முதல் பரிசு வெல்பவருக்கு இலவசமாக இணையதளம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. போட்டியிட்ட படைப்புகளைக் கொண்டு மாதம் ஒரு மின் இதழும் பி.டி.எஃப் வடிவில் கொண்டுவரப்படுகிறது. இந்தச் செயல்பாடுகளோடு, இந்தத் தளத்தில் இணையும் தமிழ் ஆர்வலர்கள் மூலம் மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்வதால் நிச்சயம் இப்படியொரு தளத்தை வரவேற்கலாம்!


வெற்றிப்படிக்கட்டு : - ஹெச்.வசந்தகுமார்

தமிழில் தன்னம்பிக்கை நூல்கள் பல வந்துகொண்டிருக்கும் காலம் இது. ஆனால், ஒரு வெற்றியாளரே தம் அனுபவங்கள் வாயிலாக வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வது உளப்பூர்வமானது. சாதாரண குடும்பத்தில் பிறந்து, இன்று தொழிலதிபராக வளர்ந்துள்ள ஹெச்.வசந்தகுமார், புராணம், இதிகாசம், சமகால வாழ்க்கையில் இருந்து குட்டிக்குட்டிக் கதைகளைச் சொல்லி, அதன் வழியாக வாழ்வின் யதார்த்தத்தையும் வெற்றிக்கான சூத்திரங்களையும் உணர்த்தும் இந்த நூல், தனித்துவம் பெறுகிறது. பல கதைகள் நாம் அறிந்ததாக இருந்தாலும், அதன் வழியாகச் சொல்ல வருகிற நீதி ஒரு கணம் நம் விழி உயர்த்துகிறது. வழுவழு காகிதத்தில் ஓவியர் ஸ்யாமின் பொருத்தமான ஓவியங்களோடு புத்தகத்தின் கட்டமைப்பே ஈர்க்கிறது.
(விலை: ரூ.150/-, வெளியீடு: வெற்றி பவுண்டேஷன், எண் 14, ரயில்வே பார்டர் முதல் தெரு, காவேரி நகர், சைதாப்பேட்டை, சென்னை-15, பேச: 98400 33350.)

கனவு

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனை ஆசிரியராகக் கொண்டு திருப்பூரிலிருந்து வெளிவருகிறது. கவிதை, சிறுகதை, திரைப்படம், ஆவணப்படம், விமர்சனங்கள், எதிர்வினைகள், இலக்கியச் செய்திகள் என எல்லாத் தளங்களையும் தொட்டு காத்திரமான இலக்கிய இதழாக மலர்ந்திருக்கிறது. ‘கனத்த கருவாட்டு மாரியாயி’ சிறுகதையில் ம.காமுத்துரையின் தேனி வட்டார மொழிநடை கிறங்கடிக்கிறது. அய்யன் எழுதிய உரைநடைக் கவிதைகள், புதியதொரு வடிவத்தை பரிசீலனைக்கு முன்வைக்கின்றன. சூர்யநிலா, கிரி, ஆல்பாவின் கவிதைகளும் குறிப்பிடத்தகுந்தவை.
(ஆசிரியர்: சுப்ரபாரதி மணியன், தனி இதழ்: ரூ.10/-, ஆண்டுச்சந்தா: ரூ.100/-, முகவரி: 8/2635, பாண்டியன் நகர், திருப்பூர்-641602, பேச: 94861 01003.)

பீட்சா

புதியவர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படத்தில் அனைத்து பாடல்களிலும் அடிக்கிறது ஆல்பம் வாடை. பிரதீப் பாடியுள்ள ‘மோகத்திரை’ மட்டும் மெலடி. மற்ற அனைத்துப் பாடல்களிலும் சப்தங்களின் ஆக்கிரமிப்பு. அதிலும் ‘ராத்திரி...’ பாடல் மட்டும் டீசண்ட், அராத், ராப் என மூன்று வெர்ஷன்களில் அலுப்பூட்டுகிறது. ‘பாடும் வானம்பாடி’ படத்தில் வரும் பப்பிலஹரியின் கம்போஸிங் சாயல் பல இடங்களில் வருகிறது. காட்டுக் கத்தலாய் இருக்கும் கோரஸ், அடுத்த பாடலை பார்வர்டு செய்ய வைக்கிறது. ‘பீட்சா’ தீம் மியூசிக் நைஸ்! கானா பாலா பாடியுள்ள ‘தினக்குதா...’ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் சோதிக்கிறது. ஒருவேளை படத்துடன் பார்க்கும்போது புரியுமோ என்னவோ! ‘மோகத்திரை...’ பாடலில் ‘மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும்’ என காமத்துப் பாலை நனைத்தெடுத்த கபிலனின் வரிகளை ரசிக்க முடிகிறது.