விஐய் கொளுத்தும் சரவெடி!





தீபாவளி எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் புதிய பரிமாணம் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இப்போதைக்கு ‘துப்பாக்கி’யாக இருக்கும் படத்தின் தலைப்பு, சர்ச்சைகள் தொடர்ந்தால் விரைவில் மாறக்கூடும் என்கிறார்கள். ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கு, படம் மீதான கவனத்தை வேறுதிசையில் திருப்பி விட்டிருப்பதில் விஜய் உட்பட படக்குழுவில் எல்லோருக்குமே வருத்தம் இருக்கிறது. தீபாவளிக்கு ரிலீஸ் எனத் திட்டமிட்டு வேலைகள் போய்க் கொண்டிருக்க, இந்தப் பிரச்னையால் அதில் எந்தத் தடங்கலும் வந்துவிடாமல் இருப்பதற்காக தலைப்பைக் கூட மாற்ற ஒரு யோசனை நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் ஆரம்பகட்டத்தில் ‘சரவெடி’ என ஒரு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது. அதன்
பிறகே ‘துப்பாக்கி’ என முடிவானது. இப்போது அந்தத் தலைப்பை திரும்பவும் யோசிக்கிறார்கள். ‘சரவெடி’ என்ற தலைப்பை வைத்து டிசைனிங் வேலைகளும் ஒருபக்கம் வேகமாக நடந்து வருகிறது. ‘துப்பாக்கி’, ‘சரவெடி’ - எதுவாக இருந்தாலும் தீபாவளிக்கு வெடிப்பது மட்டும் உறுதி. படத்தில் விஜய்யும் ஒரு பாடல் பாடியிருப்பது இளையதளபதியின் ரசிகர்களுக்கு தீபாவளி போனஸ்.

இந்தப் படம்  முடிந்த கையோடு கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த விஜய்யின் கால்ஷீட் டைரியில் இப்போது சின்ன திருத்தம். கதை, கால்ஷீட் உள்ளிட்ட விஷயங்களில் முட்டிக்கொண்டதால், அந்தப் படத்திலிருந்து விலகிக்கொண்டார் விஜய். அடுத்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கிறார். தலைப்புகூட கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ‘தலைவன்’ என்ற அந்தத் தலைப்பே ரசிக சிகாமணிகளை குஷிப்படுத்தப் போகிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தலைப்பை வைத்தே, ‘அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த விஜய், மக்கள் செல்வாக்கால் அரசியல்வாதியாக மாறி ஆட்சியைப் பிடிக்கும் கதையாக இருக்குமா?’ என்ற உங்களின் கற்பனைக்கு ஸ்டாப் போர்டு காட்டுகிறது இயக்குனர் விஜய்யின் வட்டாரம். ‘படத்தில் அரசியல் துளியும் இல்லை’ என்று சொல்லும் அவர்கள், வழக்கம்போலவே கதைபற்றி சஸ்பென்ஸ் காக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே பெயர்கள் அடிபடுகிறது. படத்தைத் தயாரிப்பது சந்திரபிரகாஷ் ஜெயின். தீபாவளிக்குப் பிறகு ஷூட்டிங் ஆரம்பம். விஜய் படத்தை முடித்ததும், வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க முடிவு செய்திருக்கும் விஜய், இயக்குனர் பாலாவிடம் பேசத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
- அமலன்