கார்த்திகாவின் கனவுகளில் காதல் இல்லை





இரண்டே அறைகள் கொண்ட அந்த வீடு முழுக்க நிசப்தம். கண்மூடித்தனமான காதலுக்காக வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு மத்தியில், ‘இது தப்பான காதல்’ என பெற்றோர் சொன்னதைப் புரிந்து அவர்கள் பக்கம் வந்த மகள்; பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 90% மதிப்பெண்கள் பெற்று, கேம்பஸ் இண்டர்வியூ மூலமே முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த தங்கள் பெருமைக்குரிய மகள், 21 வயதில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை எந்தப் பெற்றோர்தான் தாங்கிக்கொள்வார்கள்? சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில், பரபரப்பான காலைப் பொழுதில், காதலித்தவனால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கார்த்திகாவின் தாயும் தகப்பனும் இன்னும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை!

‘அறுத்துக் கொடுக்க ரெண்டு நாள் ஆக்குனாங்க. கட்டி அழக்கூட நேரங் கிடைக்காம இப்படியாய்யா சாவு வரணும் என் பொண்ணுக்கு?’’ என வார்த்தையும் அழுகையுமாக அந்தத் தாய் கேட்
கிறபோது மனம் கனக்கிறது.

‘‘சின்ன வயசுல இருந்தே அவ்வளவு பொறுப்பா வளர்ந்தா. பிஸ்கட், ரொட்டின்னு வீட்டுல செய்து பக்கத்துக் கடைகளுக்கு எடுத்துட்டுப் போய் மொத்தமா போடற வியாபாரம் பண்ணிட்டிருந்தோம். பள்ளிக்கூடம் விட்டு வந்து எத்தனையோ நாள் எங்கூட அடுப்புச் சூட்டுல நின்னு வேலை செஞ்சிருக்கா. ஆனாலும், ‘உங்க பொண்ணு நல்லா படிக்கிறாம்மா’ன்னு பள்ளிக்கூடத்துல சொல்லுவாங்க. கேக்கறப்ப சந்தோஷமா இருக்கும். மகளைப் பெரிய படிப்பு படிக்க வைக்கணும்னு கனவோட இருந்தார் அவங்கப்பா. பிளஸ் 2 முடிச்சப்ப அவ கலெக்டராகணும்னு ஆசைப்பட்டா. டாக்டருக்குப் படிக்க வைக்கலாம்ங்கிறது எங்க ஆசை. ஏழைகளோட ஆசை என்னிக்கு நிறைவேறுச்சு? ரெண்டும் நடக்கலை. ஆனா, அதைப் பக்குவமா எடுத்துக்கிட்டு, ‘கம்ப்யூட்டரும் நல்ல படிப்புதாம்மா; இதைப் படிச்சிக்கிட்டே கலெக்டருக்கும் படிக்கலாம்மா’ன்னு போய்ச் சேர்ந்தா. ஆண்டவர் என் குடும்பத்தை நல்லாத்தான்யா வச்சிருந்தார், அந்தப் பாவியை நாங்க பாக்கற வரைக்கும்’’ - கண்ணீர் முட்ட, மேற்கொண்டு பேசமுடியாமல் தேம்புகிறார் தாய் ஆக்னஸ்.

‘‘இப்ப அழுது என்ன பிரயோஜனம்? ‘வெளுத்ததெல்லாம் பால்’னு நீ நம்புனதுக்கு இப்ப பொண்ணையே பலி கொடுத்துட்டோம்’’ - அப்பா செந்தமிழ்ச்செல்வனுக்கு மனைவி மீதும் கோபம் குறையவில்லை.

‘‘அந்தப் பையன்... ராஜரத்தினம், நாங்க குடியிருந்த வீட்டுல மேல் போர்ஷனுக்கு வாடகைக்கு வந்தான். கன்னியாகுமரி பக்கம் சொந்த ஊரு. பத்தாவது கூட முடிக்கலை. மெக்கானிக் ஷாப் வேலை. ‘அக்கா’ன்னு வந்து நிப்பான். அப்பா இல்லை... அம்மாவுக்கும் மனநிலை சரியில்லைனு பரிதாபமான சூழ்நிலையில வளர்ந்ததா சொல்லுவான். ஓட்டல்ல சாப்பிட்டுத் திரிஞ்சவனுக்கு பண்டிகை நாள்னா இவ பலகாரம் கொடுத்து விடுவா. மத்த எந்த எண்ணமும் எங்களுக்கு இல்ல. ஆனா, அவனுக்குள்ள வேற எண்ணம் இருந்ததை நான் கூட ஆரம்பத்துலயே கவனிக்காம விட்டுட்டேன்’’ என்று செந்தமிழ்ச்செல்வன் கலங்க, ஆக்னஸ் தொடர்கிறார்...

‘‘பொண்ணுகிட்ட என்னவோ பேசுறான்னு கேள்விப்பட்டு இவகிட்ட கேட்டேன். ‘கொஞ்சநாளா என்னை லவ் பண்றதா சொல்லிட்டிருக்கான்மா. நாம வீட்டை மாத்திட்டுப் போயிடலாம்’னா. இவளை நினைச்சு பெருமையா இருந்துச்சு. ஆனாலும், என்ன ஏதுன்னு விசாரிக்கணுமேன்னு அவன்கிட்டயும் பேசினேன். ‘பொண்ணைக் கொடுங்க... மகனா இருந்து உங்களைப் பார்த்துக்கறேன்’னான். இவ பேரையும் அவன் பேரையும் சேர்த்து நெஞ்சுல பச்சை குத்தியிருந்தான். எம்பொண்ணுக்கு அவன்மேல எந்த அபிப்ராயமும் அதுவரைக்கும் இல்ல. ‘நீங்க சொல்றதைக் கேக்கறேன்’னா. நானும் அவரும் காதலிச்சு கல்யாணம் செஞ்சோம்ங்கிறதால இவளோட படிப்பு, வேலை, ஜாதி, மதம்னு எதையும் பார்க்கலை. ‘வீட்டுல இருந்து பெரியவங்களைப் பேசச் சொல்லுப்பா’ன்னு சொன்னேன். வெளிநாட்டுல இருக்கற அவனோட அண்ணனும், ‘அடுத்தமுறை வரும்போது பேசி முடிச்சுக்கலாம்’னார்’’ என்கிறார் ஆக்னஸ்.

இப்படி முடிவு செய்திருந்த சமயத்தில்தான் கார்த்திகாவின் பெற்றோருக்கு ராஜரத்தினம் பற்றித் தாறுமாறான தகவல்கள் வந்திருக்கின்றன. ‘‘எல்லா கெட்ட பழக்கமும் அவனுக்கு இருப்பதா கேள்விப்பட்டோம்’’ என்கிறார்கள். அதுபற்றி ராஜரத்தினத்திடம் கார்த்திகா கேட்டதும் இருவருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில் கார்த்திகாவின் பெற்றோரே முந்தைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு வீட்டை மாற்றியிருக்கிறார்கள். ஆனாலும் கார்த்திகாவை பின்தொடர்ந்து வந்திருக்கிறார் ராஜரத்தினம்.

‘‘பொய் சொல்லி, நடிச்சு, எங்களை ரொம்பவே ஏமாத்திட்டான். அதனால, நேராவே அவன்கிட்ட ‘இது சரிப்பட்டு வராது’ன்னு சொல்லிட்டோம். ஆனா, இவளை டார்ச்சர் பண்றதை அவன் நிறுத்தல. அதனால போலீஸ்ல புகார் கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். அதுக்குள்ள இப்படிப் பண்ணுவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கலையே!
‘ரெண்டு வருஷம் போகட்டும்பா... சின்னதா பேக்கரி வைக்கலாம்’னா. காலேஜ்ல படிக்கிறப்ப நிறைய பப்ளிக் சர்வீஸ் பண்ணுனதுக்காக பரிசு வாங்கியிருந்தா. ‘படிக்க கஷ்டப்படற பசங்களுக்கு உதவணும்’னா. இன்னும் என்னென்ன கனவுகள்லாம் இருந்துச்சோ? எல்லாம் ஒரு செகண்டுல முடிஞ்சுடுச்சுங்க!’’ - செந்தமிழ்ச்செல்வன் கண்களும் ததும்புகின்றன. கார்த்திகாவின் சமீபத்திய புகைப்படம் எதுவும் வீட்டில் இல்லாததால், கார்த்திகாவின் கம்ப்யூட்டரிலிருந்து அதை எடுத்துத் தரச் சொல்லி நம்மிடம் வேண்டி நிற்கிறார்கள் அந்தத்தாய்-தகப்பன். இவர்களின் கண்ணீர், நிச்சயம் காதலை விட கனமானது.
- அய்யனார் ராஜன்
படங்கள்: பால்துரை