நிழல்கள் நடந்த பாதை



சிரிப்பு என்னும் ஆயுதம்


இன்றைய இந்திய அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் மிகவும் புத்திசாலிகள்; திறமையானவர்கள். எத்தகைய குற்றத்தையும் செய்துவிட்டு சாதுர்யமாக சமாளிக்கக் கூடியவர்கள். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் இவர்களுக்கு சாத்தியமா என்று அடிக்கடி யோசித்துப் பார்த்திருக்கிறேன். அவர்களால் சிரிக்க முடியுமா என்பதுதான் அது!

மன்மோகன் சிங், நரேந்திர மோடி, அன்னா ஹஸாரே, சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், பிரணாப் முகர்ஜி, மம்தா பானர்ஜி என ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு சிறந்த ஜோக் என்னிடம் இருக்கிறது. அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் அதைச் சொல்லி, அவர்கள் எப்படி புரிந்துகொண்டு சிரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும் என்பதுதான் என் லட்சியம். இதில் தமிழகத் தலைவர்களைச் சேர்க்காததற்குக் காரணம், அவர்கள் ஒவ்வொருவரும் விடுக்கக்கூடிய அறிக்கைகள் எந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்பவை; அவர்களிடம் ஜோக்கடிப்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்பதுதான்.

நமது தலைவர்கள் சிரிப்பதை மறந்துவிட்டார்கள் என்பது மட்டுமல்ல, சிரிப்பவர்களைக் கண்டு பயப்படுகிறார்கள். ஏன் கார்ட்டூனிஸ்டுகள் தொடர்ந்து ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஏன் பிரதமரைக் கேலி செய்யும் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்படுகின்றன? இன்னும் சொல்லப்போனால் ட்விட்டரையே தடை செய்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். நமது கார்ட்டூனிஸ்டுகளைவிட கடுமையான அரசியல் விமர்சனங்கள் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ட்விட்டரில் எழுதுவதைவிட காட்டமான விமர்சனங்கள் நமது தொலைக்காட்சி விவாதங்களில் இடம்பெறுகின்றன. ஆனால் கார்ட்டூனிஸ்டுகளும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் எழுதுபவர்களும் ஆட்சியாளர்களின் வெறுப்பை ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார்கள்?

ஒரே விஷயம், அவர்கள் சிரிக்கிறார்கள் என்பது தான்! கோபமான எதிர்ப்பை விட கேலி அவர்களைப் பதற்றமடைய வைக்கிறது. தன்னம்பிக்கையும் நேர்மையும் பெருந்தன்மையும் உள்ள ஒருவரால்தான் தன்னைப் பற்றிய கேலிக்கு சிரிக்க முடியும். மற்றவர்கள் அதைத் தங்கள்மேல் தொடுக்கப்பட்ட வன்முறைத் தாக்குதலாகத்தான் கருதுவார்கள். கார்ட்டூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருக்கும் கோமாளிகளை அம்மணமாக தெருவில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அவர்கள்முன் ஒரு நிலைக்கண்ணாடியைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். கார்ட்டூனிஸ்டுகளைப் பார்த்து அலறுபவர்கள், உண்மையில் தங்கள் பிம்பத்தைக் கண்டுதான் அலறுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகாரக் கோமாளிகளைப் பற்றிய பொதுமக்களின் சிரிப்பு காட்டுத்தீயாக பரவுகிறது. இதுவரை மக்களின் சிரிப்பைக் கேட்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சந்தர்ப்பமே வந்ததில்லை. அந்தச் சிரிப்பொலி காதைத் துளைப்பதாக இருக்கிறது. தங்களைச் சுற்றி ஆயுதம் தாங்கிய எவ்வளவு பாதுகாவலர்களை நிறுத்தியபோதும் அந்தச் சிரிப்பிலிருந்து அவர்களால் தப்பி ஒளிய முடியவில்லை. அதிகாரம் கொடுக்கும் மமதையும் பெருமிதமும் இந்தச் சிரிப்பில் கலகலத்துப் போகிறது. அதிகார செருக்குள்ள ஒருவரை நீங்கள் வசை பாடினாலும் அவர் உங்களைப் பெருந்தன்மையாக மன்னித்துவிடக் கூடும்; அல்லது தனது கிரீடத்தில் அதையும் ஒரு மயிலிறகாக வைத்துக் கொள்ளக்கூடும். ஆனால் நீங்கள் அவரைப் பார்த்து சிரித்தால் அவர் தனது தன்னம்பிக்கையை முற்றாக இழந்துவிடுவார்.

அன்னா ஹசாரே ஒரு முறை மக்களை, இரவு 8 மணிக்கு விளக்கை அணைத்துப் போராட்டம் நடத்தும்படி அறிக்கை விடுத்தார். நான் எனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினேன். ‘‘நைட் எட்டு மணிக்கே விளக்கை அணைக்கணுமா? சீ... வெட்கமா இருக்கு!’’ என்று. ஆயிரம் வார்த்தைகள் எழுதினாலும் இதுபோன்ற அபத்தமான போராட்டங்களை இத்தகைய கேலிகளால் தோலுரிப்பதுபோல அம்பலப்
படுத்த முடியாது.

அரசியல் தலைவர்களின் சகிப்பின்மை காரணமாக கார்ட்டூன் என்ற வடிவமே படிப்படியாக இந்தியப் பத்திரிகைகளில் அழிந்து வருகிறது. சுதந்திரமான, புத்திசாலித்தனமான உரையாடலுக்குத் தகுதியான சமூகத்தில்தான் கார்ட்டூன் என்ற வடிவம் நீடித்திருக்க முடியும். கார்ட்டூன் மட்டுமல்ல, அரசியல் அங்கதம் எழுதக்கூடிய எழுத்தாளர்களும் இன்று அருகி வருகிறார்கள். வலைத்தளங்கள்தான் சமூக அரசியல் அங்கதத்திற்கான ஒரே இடமாக இருக்கின்றன.

மனிதர்கள் தலைவர்களைப் பார்த்து மட்டுமல்ல, தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்க முடியாவிட்டால் மனமுடைந்து போகவேண்டியிருக்கும். இந்த சிரிப்பு தான் அன்றாட வாழ்க்கையில் பெரிய வன்முறையில் இறங்கவிடாமல் நம்மைக் காப்பாற்றி வருகிறது. ஒவ்வொரு நாளும் நமக்கு நடப்பவைகளைக் கண்டு நாம் சிரிக்க முடியாமல் போனால் ஒரு நாளைக்கு ஒருவரையாவது கொலை செய்ய வேண்டியிருக்கும்; அல்லது நாமே ஒருநாள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிவரும். இந்தச் சமூகம் சிரிப்பினால்தான் இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெண், அவள் கணவன் அடிக்க கையை ஓங்கும்போது சிரிக்கத் தொடங்குவாள். முதல் அடிக்கு சிரிப்பு ஜாஸ்தி யாகும். இரண்டாவது அடிக்கு இன்னும் ஜாஸ்தியாகும். ‘‘அடிக்கிற கையை கண்ணீர் வலிமைப்
படுத்திடும். சிரிக்கிற ஒருத்தியை அடிக்கிற ஆளுக்கு ‘தான் பைத்தியமோ’ன்னு தோணிடும்’’ என்றாள் சிரித்துக்கொண்டே.

ஒரு பேட்டியில் என்னை, ‘‘உங்களுக்குப் பிடித்த தமிழ் ஹீரோ யார்?’’ என்று கேட்டார்கள். நான் ‘‘வடிவேலு’’ என்றேன். ‘‘சார், காமெடியன் இல்ல... ஹீரோ சொல்லுங்க’’ என்றார்கள். திரும்பவும் ‘‘வடிவேலு’’ என்றேன். தமிழ் வாழ்க்கையின் உண்மையான கதாநாயகர்கள் நமது நகைச்சுவை நடிகர்கள்தான். நமது கதாநாயகர்களும் கதாநாயகிகளும் உருவாக்கும் மனநோய்க்கூறும் கற்பனாவாதமும் கொண்ட தீவிர அசட்டு உணர்ச்சிக் கோளங்களிலிருந்து தமிழ்ச் சமூகத்தைக் கொஞ்சமாவது காப்பாற்றி வருபவர்களும் நமது நகைச்சுவை நடிகர்கள்தான்.

எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி சந்தானம் வரை, தமிழர்களின் குணாதிசயங்களையும் கோளாறுகளையும் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் நமது நகைச்சுவை நடிகர்கள் அளவிற்கு வேறு யாரும்  உட்படுத்தியதில்லை. கவுண்டமணியும், செந்திலும், விவேக்கும், வடிவேலுவும் தமிழ் மனதின் அசலான பிரதிநிதிகள். வடிவேலு படங்களில் பேசிய வசனங்களில் பெரும்பகுதி இன்று தமிழ்ப் பேச்சு வழக்கின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றால் அதற்குக் காரணம் அவை வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவை என்பதால்தான். சினிமா வசனகர்த்தாக்களின் மூளையிலிருந்து உதித்த ஹீரோக்களுக்கான ‘பஞ்ச்’ டயலாக்குகள் ஆறு மாதம் கூட உயிர் வாழ்வதில்லை.

ஒரு சிறந்த நகைச்சுவையாளன் பிறரை மட்டுமல்ல; தன்னைத் தானேயும் கேலிக்கு உள்ளாக்கிக்கொள்கிறான். பிறரது பிம்பங்களைக் கலைப்பதுபோலவே, தன்னைத் தானேயும் தெருவில் போட்டு உடைத்துக்கொள்கிறான். தன்னை ஒளித்து வைத்துக்கொண்டு பிறரைச் செய்யும் கேலி என்பது வெறும் வன்முறை. அத்தகைய ஒருவனின் நகைச்சுவைக்கு நான் ஒருபோதும் சிரிக்க மாட்டேன்.
நாம் நம்மைக் கொல்ல வேண்டுமானாலும் அனுமதிக்கலாமே தவிர, நமது சிரிப்பைக் கொல்ல ஒருபோதும் அனுமதிக்கலாகாது.

ஏழு புதிய பாவங்கள் ‘‘தூக்கி எறியுங்கள் உங்கள் பழைய சட்டி பானைகளை’’ என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் காலத்தில் ‘பழசு’ என்று சொல்லி எவ்வளவோ விஷயங்களைத் தூக்கி எறியும்போது பாவங்களை மட்டும் விட்டு வைக்க முடியுமா?

கிறிஸ்துவ மரபு ஏழு கொடிய பாவங்கள் என்று சொல்லும் தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விருப்பம், பொறாமை, சோம்பல் எல்லாம் இப்போது காலாவதியாகிவிட்டது என்கிறார்கள். மாறாக, லண்டனின் சிஙிஷி ஸிமீணீறீவீtஹ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இன்றைய நவீன யுகத்தின் ஏழு புதிய பாவங்கள் எவை என்று அறிவித்திருக்கிறது. மொடாக்குடி, குடும்ப வன்முறை, வரி ஏய்ப்பு, இனவெறி, பயங்கரவாதம், வன்செயல், சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றை வரையறுக்கிறது. கடவுள்கள், தீர்க்கதரிசிகளின் இடத்தை இன்றைய ஊடகங்கள் எடுத்துக்கொண்டன என்பதற்கு ஒரு அடையாளமே இன்றைய உலகின் பாவங்களை ஒரு தொலைக்காட்சி அறிவிப்பது. இதில் சொல்லப்பட்ட பெரும்பாலான பாவங்கள் இந்திய சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது தான். நம்மில் ஒவ்வொருவரும் இந்தப் பாவங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர்களாகவோ அல்லது அதனால் பாதிக்கப்படுபவர்களாகவோ இருக்கிறோம்.

நம்மை மன்னிப்பதற்குத்தான் இந்த உலகில் யாருமே இல்லை. மறதி என்னும் மருந்து ‘‘போபார்ஸ் ஊழலைப் போலவே நிலக்கரி ஊழலையும் மக்கள் மறந்துவிடுவார்கள்’’ என்று அண்மையில் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தியர்கள் சாப்பாட்டினால் வாழவில்லை. மருந்து களால் வாழவில்லை. உண்மையில் மறதியினால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நமக்கு மறந்து போவது ஒருபுறம் இருக்கட்டும், தான் செய்த ஊழல் தனக்கே மறந்துவிட்டது என்று சுரேஷ் கல்மாடி ஒருமுறை நீதிமன்றத்தில் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் இயர் புக் போடுவதுபோல அந்தந்த ஆண்டு நாம் மறந்துவிட்ட விஷயங்களைப் பற்றி ஒரு புத்தகம் போடலாம்.
    (இன்னும் நடக்கலாம்...)



எனக்குப் பிடித்த கவிதை


உருமாற்றம்

ஒவ்வொரு ஊரிலும்
அதேபோல ஒருத்தியை பார்க்க நேர்கிறது
ஏற்கனவே பார்த்ததுபோல
ஒரு கணம் அதிரும் மனம்
பின்னோக்கிப் போகும்
ஏற்கனவே போன
பேருந்து போல
போகும்
பேருந்து.
அதே போல ஒரு சிகரெட் கடை
அப்படியே ஒரு பையன்
சில சமயம் ஆள்
அதே போல ஒரு ஒன்று
அதே போல ஒரு இன்னொன்று
ஏற்கனவே பார்த்ததுபோல
- லஷ்மி மணிவண்ணன்


நான் படித்த புத்தகம்


அரவாணியம் முனைவர் கி.அய்யப்பன்
கடந்த சில ஆண்டுகளில் அரவாணிகள் பற்றிய பார்வைகளும் புரிதல்களும் பெருமளவுக்கு விரிவடைந்துள்ளன. காலகாலமாக சமூகத்தினால் குரூரமாக நடத்தப்பட்ட அரவாணிகளின் குரல்களும் நியாயங்களும் இன்று உரத்து ஒலிக்கின்றன. விளிம்பு நிலை மனிதர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அரவாணிகளின் இருப்பும் மாறிவிட்டது. அந்த வகையில் அரவாணிகள் குறித்த ஆய்வுகளும், அவர்களே எழுதும் தன் வரலாறுகளும் தமிழில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அய்யப்பனின் இந்த நூல் அரவாணிகள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளையும் இலக்கியத்திலும் ஊடகங்களிலும் அவர்களைப் பற்றிய சித்தரிப்புகளையும் விரிவாகத் தொகுத்தளிக்கிறது. மேலும் அரவாணிகளின் பண்பாடு குறித்தும், சமூகத்தில் அவர்களது இடம் குறித்தும் ஆசிரியர் விரிவாக விவாதிக்கிறார். அரவாணிகள் குறித்த பொதுப்படையான கற்பிதங்களைக் களைய இதுபோன்ற நூல்கள் பெரிதும் பயன்படும்.
(விலை: ரூ.180/-, வெளியீடு: விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம். அ.கு. எண்: 605701. தொடர்புக்கு: 9962660279.)