கவிதைக்காரர்கள் வீதி






யார் என்று
நினைவில் கொள்ளத் தேவையில்லை
என் கவிதைப் பக்கங்களை
நிரப்பிவிட்டுக் கடந்துபோகும்
அழகுப்பெண்களை...


அடுக்குப் பானைகளை
உருட்டும் பூனையின்
திருட்டுத்தனம்,
எல்லோரும் இருக்கும்போதே
நான் கேட்டுப்
பெற்ற முத்தம்


பந்து போல்
உதைபட்டுக் கிடக்கும்
என் காதல்,
உன் பார்வையின்
எல்லைக் கோட்டைத் தாண்டும்போது
தோற்றுவிடுகிறேன்


காக்காய் கடி கடித்த
மிட்டாய் தந்தால் சமாதானமாகிவிடும்
குழந்தையாய் நீ தெரிவாய்
அடம்பிடிக்கும் நேரங்களில்,
நிறைய கற்பனை மிட்டாய்களை
பத்திரப்படுத்தி வைத்திருப்பேன்
நம் சந்திப்புகளுக்காக!
முழங்கால் தெரிய
தூக்கிச் செருகி
கரையை நீ கடப்பதற்குள்
நான் மூழ்கி விடுகிறேன்


பிரியும் நேரம் வந்தாயிற்று
என்ற நினைப்புக்குப் பின்னே
நிலவும் மௌனங்களின் பாறைகளை
மோதிச் சிதைகிறேன்
கடலலைகளாய்!
- இளங்கீரன், சென்னை-101.